“சொன்னா கேளுடா..இன்னும் மூணு நாளைக்கு அம்மாகிட்ட தூங்க கூடாது.”

“ஏன் பாட்டி?”

"அவ தீட்டுடா..கிட்ட போனா உன் துணியிலயும் ஒட்டிக்கும். நீ வேற வீடு பூரா அலைவ.."

"அவ்ளோ தான" என்று மடமடவென்று ஆடைகளை களைந்து விட்டு ஓடிச் சென்று சித்தியை கட்டிப் பிடித்துக் கொண்டான் என்னுடைய மூன்று வயது சகோதரன். இது சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வாகும். ஏன் சித்தி தனியாக தூங்க வேண்டும் என்று எட்டு வயதில் எனக்குப் புரியவில்லை. சற்று வளர்ந்த பிறகு, பெண்களின் புனித நீராட்டு விழா சடங்குகளின் வாயிலாக சிறிது புரிந்து கொண்டேன். பன்னிரெண்டாம் வகுப்பில், எங்கள் விலங்கியல் ஆசிரியை இதைப் பற்றி தெளிவாகக் கூறும் வரை, மாத விடாய் என்பது பெண்களின் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு நடக்கிறதென்பதும், பெண்கள் எவ்வளவு முயன்றாலும் இந்த நிகழ்வை கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மை புரிந்தது.

mensuration feminism 700ஏதாவது முக்கிய நாட்களில் பெண்கள் தூரமாகி விட்டால் அவ்வளவு தான், "சனியன்.. வீட்டுல ஒரு பூஜை புனஸ்காரத்தை நடக்க விடாதே.." என்று வசை பாடுவார்கள். இந்த நாட்களில் இயல்பாகவே பெண்களுக்கு தலை சுற்றல், அடிவயிற்று வலி போன்றவை ஏற்படுகின்றன. நான் உணர்ந்த வரை, பெண்களுக்கு ஒய்வு என்பது அரிதான விஷயமாகவே இருக்கிறது. சில முன்னோர்கள், பெண்களுக்கு இந்த மூன்று நாட்களாவது ஒய்வு கிடைக்கட்டுமே என்று நினைத்திருப்பார்கள் போல. வீட்டு வேலைகளுக்கு ஒய்வு கிடைத்தாலும், ஆண்கள் பெண்களை விடுவது இல்லை. அதனாலேயே "இது போன்ற நாட்களில் பெண்களைத் தொந்திரவு செய்தால், தெய்வக் குற்றம் ஏற்படும்" என்று பயமுறுத்தியிருப்பார்கள். அதுவே நாளடைவில் "இந்த நாட்களில் பெண்கள் எதைத் தொட்டாலும் குற்றம்" என்று ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் பெண்களை அப்படி நடத்துவதில்லை என மறுப்பவர்கள், கீழே உள்ள கேள்விகளுக்கு முடிந்தவரை உண்மையாக பதில் கூறுங்கள்.

  1. பூஜையறை கதவோ இல்லை சாமி படங்கள் இருக்கும் சிறிய அலமாரியோ, குறிப்பிட்ட மூன்று நாட்கள் மூடி வைப்பீர்களா?
  2. குறிப்பிட்ட மூன்று நாட்கள் உங்கள் வீட்டுப் பெண்களுக்கு, ஒரு சில பாத்திரங்களையாவது தொட அனுமதி மறுக்கப்படுகிறதா?
  3. குறிப்பிட்ட மூன்று நாட்கள் உங்கள் மனைவியோ, சகோதரியோ அல்லது தாயோ, அவர்கள் அறைக்குள் கட்டில் இருந்தும் தரையில் தூங்குகிறார்களா?

இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு உங்களிடம் இருந்து 'ஆம்' என்ற பதில் வந்தால், நீங்களோ இல்லை உங்கள் வீட்டாரோ, பெண்களை சுயமரியாதையுடன் நடத்துவதில்லை என்று அர்த்தம்.

பிள்ளையார் பால் குடித்த கதை ஊரறிந்த ஒன்று. அன்று எங்கள் எதிர் வீட்டு அக்காவை, அவருடைய அம்மா தெருவே கேட்கும்படி வசை பாடினார். ஏனென்றால், அவர்கள் வீட்டில் அனைவரும் பிள்ளையாருக்கு பாலை ஸ்பூனில் கொடுத்து விட்டார்கள். இந்த அக்கா அன்று தீட்டு என்பதால் அவரை மட்டும் பால் கொடுக்க அனுமதிக்கவில்லை. இந்த புண்ணியம் அவர்களுக்கு முழுவதுமாக கிடைக்காமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் எங்கள் தெருவில், படித்து முடித்து முதலில் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றது, அந்த திட்டு வாங்கிய அக்கா தான்.

என் பள்ளி வகுப்பு நண்பனின் வீட்டில், அவன் பாட்டியும் அம்மாவும் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வீடு முழுவதும் துடைத்து வைக்க வேண்டும். பூக்கள் தனித்தனியே கட்டி வைக்கப்பட்டு, காலை நேர பூஜைக்குத் தயாராய் இருக்க வேண்டும். அனைத்து வியாழன் மற்றும் சனிக்கிழமை முக்கிய விரத நாட்களாகும். அவன் அப்பாவும் தாத்தாவும் ஏழு அல்லது எட்டு மணிக்கு எழுந்து குளித்து விட்டு, நேராக பூஜை அறைக்குச் சென்று பூஜை செய்வார்களாம். "பாட்டியையும் அம்மாவையும் பார்க்க பாவமாக இருக்கிறது.." என்பான். "தாத்தாவும் ஒரு நாள் வீட்டை துடைக்க வேண்டியது தான.." என்று இவன் கேட்டதற்கு, "டேய்.. தப்புடா..அவரு பக்தியில நெருப்புடா.." என்றாராம் அவன் பாட்டி. நெருப்பு, கடன் கொடுத்தவர் வந்தால் மட்டும் ஏன் தலையை சொரிந்து கொண்டு நிற்கிறது என்று தெரியவில்லை என்று சிரிப்பான்.

என் மற்றொரு நண்பர் சனிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருப்பவர். கோவிலுக்கு சென்று விட்டு வந்து மதியம் தான் உணவு எடுத்துக் கொள்வார். "எப்படிங்க பசி தாங்குறீங்க.." என்று கேட்டதற்கு, "அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க..” என்றார். அவர் மேலும் கூறியதாவது, "சனிக்கிழமை மட்டும் காலைல பத்து மணிக்கு மேல எழுந்திரிக்கணும்.. ஒரு பத்தரை மணி வாக்கில் ஒரு காபி.. பிறகு குளித்து முடித்து விட்டு பதினோரு மணி வாக்கில் இன்னொரு காபி.. சரியாக நாம் பதினொன்றரை மணிக்கு மேல் கோவிலுக்கு போனால் போதும். பன்னிரெண்டு மணிக்கு நடை சாற்றி விடுவதால், சிறிது நேரத்திலேயே தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பாடு ரெடியாக இருக்கும்.." என்று கண் சிமிட்டினார். இவருடைய இந்த ஐம்புலனையும் அடக்கும் விரதத்திற்காக, அவர் மனைவியும் வயதான தாயும் காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

என் தாயார் பின்பற்றும் சில சம்பிரதாயங்கள் அதிகமான எரிச்சலைத் தரும். ஏதாவது விருந்து விசேஷங்களில் வயதான பெரியவர்களைக் கண்டால், "டேய்.. இவங்க உன்னை தூக்கி வளர்த்தவங்க.. ஆசீர்வாதம் வாங்கிக்கோ.." என்று என் கையைப் பிடித்து இழுத்து, லேசாக என் தலையை அழுத்துவார். இதற்கு அர்த்தம், நான் அவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்பதே. அந்த பெரியவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், காலில் விழுந்து வணங்குவதை மனம் ஒப்பு கொள்ளாது. சிலமுறை என் தாயாரே முதலில் அவர்கள் காலில் விழுவார்கள். அவர்களும் இயேசுபிரானை போல் கையை உயர்த்தியவாறே, அடுத்தது நீ தானே என்பது போல் என்னைப் பார்ப்பார்கள். இதனாலேயே சில விசேஷங்களில் கலந்து கொள்வதை நான் தவிர்த்திருக்கிறேன்.

காலில் விழுந்து வணங்குவதை, அவர்களுக்கு செய்யும் மரியாதை என்று என் தாயார் நினைக்கிறார். ஆனால் எனக்கு அது என் சுயத்தை இழப்பது போல் இருக்கும். என் தாயார் ஒவ்வொரு அமாவாசையன்றும் தலைகுளித்து, மதியம் வரை விரதமிருந்து (நடுவில் இருமுறை காபி மட்டும் அருந்துவார்) பூஜை செய்வார். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகும் குறைந்தது ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு தலைவலி, சளி இருமல் இருக்கும். நான் அவசரமாக வெளியில் கிளம்பும் போது, இருப்பதிலேயே பெரிய சைஸ் கற்பூரத்தை ஏற்றி "சாமி கும்பிட்டுவிட்டு போ.." என்பார். கற்பூரம் அணைந்த பின் தான் வெளியே செல்ல அனுமதிப்பார். ஒரு சில வயதானவர்கள் தங்கள் மதிப்பை தக்க வைத்துக் கொள்ள உதவும் கருவியாக பயன்படுவது இந்த சம்பிரதாயங்கள் தான். என் அலுவலகத்தில் பணி புரியும் சிலர் (பெரும்பாலும் ஆண்கள் தான்) "என் பொண்டாட்டிய வேலை வாங்குறதுக்கும், குறை சொல்றதுக்கும் எங்க அம்மா இந்த விஷேச நாட்களை யூஸ் பண்ணிக்கிறாங்க.." என்று கூறுவார்கள்.

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், சமூகத்தில் பெரிய பதவியிலிருப்பவர். சடங்கு சம்பிரதாயங்களை அநியாயத்திற்கு நம்புகிறவர். தீபாவளிக்கு முன் வரும் வரலக்ஷ்மி நோன்பு அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் கணவரின் காலில் விழுந்து வணங்குவார். அது போன்ற நாட்களில், அவரின் கணவர் வேண்டுமென்றே மாலை வெகு நேரம் வீட்டிற்குள் வராமல், வாசலிலேயே நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருப்பார். குறிப்பிட்ட நேரத்திற்குள் விரதத்தை முடிக்க முடியாமல் அந்த பெண் படும்பாட்டை பார்க்க மிகவும் பாவமாக இருக்கும். அந்த பெண் அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்றால், அவரைப் பார்க்க மக்கள் கூட்டமாக காத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், முக்கியமாக பெண் என்பதாலும் இது போன்ற சம்பிரதாயங்களை வைத்து, மிக எளிதாக பெண்களை சிறுமைப் படுத்தி விட முடிகிறது.

அடுத்தது பெண்களுக்கு நடக்கும் தலைப் பிரசவம். "வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சூப்புவது ஒருத்தன்" என்ற பழமொழி இதற்கு சரியாகப் பொருந்தும். தலைப் பிரசவம் பெண் வீட்டில் நடக்க வேண்டும் என்ற முறையைக் கொண்டு வந்தது, கர்ப்பிணி பெண்ணிற்கு தாயின் அன்பும், இரத்த சொந்தங்களின் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்குத் தான். ஆனால் பிரசவத்திற்கு ஆகும் மொத்த செலவையும் பெண் வீட்டார் தலையில் கட்டுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.. மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனில் பாதி கூட கட்டியிருக்க மாட்டார்கள். திருமணம் முடிந்து அடுத்த பத்து மாதத்தில் வரும் பிரசவ செலவு, பிரசவத்திற்குப் பின் ஒரே மாதத்தில் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு ஆகும் செலவு என்று பெண் வீட்டாருக்கு இரத்த கண்ணீரே வந்து விடும். பேரக்குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக மாமனார் அலைவது எல்லாம் வெளியே தெரியாத கணக்கு.

என் நண்பனின் அக்காவிற்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, வெள்ளியினால் செய்த அரைஞாண் கயிறு கட்டப் போகும் போது, "தங்கத்துல போடறதா இருந்தா போடுங்க.. இதெல்லாம் நாங்க தொட மாட்டோம்.." என்றனர் மாப்பிள்ளை வீட்டார். இதைக் கேட்டு பெண் வீட்டார் சபையில் கூனிக் குறுகி நின்றனர். திருமணம் செய்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, சில ஆண்கள் மனைவியிடம் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை "உன் அப்பன் வீட்டிலிருந்து இங்க ஒரு கிண்ணம் கூட வரக்கூடாது..". பிடுங்குவதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பின் வரும் வார்த்தை தான் இது. மாமனார் வீட்டிலிருந்து ஒன்றும் வேண்டாம் என்றால், முதலில் மனைவியை அல்லவா திருப்பி அனுப்ப வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு குழந்தையைப் பெற்று நல்லபடியாக வளர்க்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். ஒன்றுக்கொன்று பிற்காலத்தில் துணையாக இருக்கும் என்பார்கள். நான் என் அனுபவத்தில் ராம லட்சுமணர்களை சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்தவரை குறிப்பிட்ட வயதுக்கு மேல், பல சகோதரர்கள் பங்காளி சண்டை தான் போடுகிறார்கள். அப்படி இல்லை என்று மறுப்பவர்கள், அவர்களின் பிள்ளைகளிடம் யார் யாருக்கு எந்த சொத்து சேர வேண்டும் என்று தைரியமாக சொலக்ச் சொல்லுங்கள் பார்ப்போம்.. நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்வதைப் போல், சகோதரிகளின் நலனுக்காக வாக்கப்படாமலேயே சீரழியும் பல சகோதரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்று நான் இங்கு வலியுறுத்தவில்லை, குழந்தைகள் பெற்றுக் கொள்வதென்பது அந்த தம்பதியரின் சுய விருப்பமும், அதற்கேற்ற பொருளாதார வசதியும் இருப்பது மிக அவசியம் என்று கூறுகிறேன்.

என் நண்பர் ஒருவர், அவருடைய எதிர் வீட்டுக்காரர் சூரிய நமஸ்காரம் செய்யும் போதும், வீட்டு வாசலில் மாட்டியிருக்கும் சாமி படத்திற்கு பூ வைக்கும் போதும், இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வருவார் என்றார். இது அந்நேரம் வீட்டு வாசலில் கோலம் போடும் தன் மனைவி அல்லது மகளுக்கு சங்கடமாக இருப்பதாகக் கூறுவார். "மேலே ஒரு பனியன் அணிந்து கொண்டு வந்தால் ஆகாதா.." என்று வருத்தப்பட்டார். "பேசாமல் ஒரு அழகான கோலம் போட்ட ஸ்டிக்கர் வாங்கி தரையில் ஒட்டி விடுங்களேன்.." என்றேன் நான். "ஏற்கனேவே ஸ்டிக்கர் ஒட்டியாச்சு.. அதுக்கு மேல தான் இந்த கூத்தே நடக்குது.." என்றார். யோசித்துப் பார்த்தால் எங்கள் வீட்டிலும் இந்த ஸ்டிக்கர் கூத்து நடந்து கொண்டுதானிருக்கிறது.

இன்னொரு நண்பர் கூறியது நகைச்சுவையாக இருந்தது. “முதலில் எதிர் வீட்டில் இரண்டு விளக்குகளை வாசலில் ஏற்றினார்கள். இதைப் பார்த்து என் மனைவி ஐந்து முக விளக்கை வாசலில் வைத்தாள். பிறகு அவர்கள் துளசி மாலையை வாசலில் தொங்க விட்டார்கள். நாங்கள் சந்தன மாலையைத் தொங்க விட்டோம். பிறகு அவர்கள் பித்தளையால் ஆன மாலையைத் தொங்க விட்டார்கள். நாங்களும் ஒரு செம்பினால் ஆன சிலையை வீட்டின் கதவிற்கு மேல் பொருத்தினோம். விசேஷ நாட்களில் மாவிலைகளும் சாம்பிராணி புகை மண்டலமும் சேர்ந்து கொண்டு, விட்டலாச்சார்யா சினிமா செட்டைப் பார்த்தது போல் இருக்கும்” என்றார்.

“வரவேற்பு பலமாக இருந்தால் தான் கடவுள் வருவார் என்றால், கடவுள் ஸ்டார் ஹோட்டலுக்குத் தான் முதலில் போவார். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள எதிரெதிர் வீட்டு வாசல்களில், ஏட்டிக்கு போட்டியாக போடும் கோலத்தை மிதிக்காமல் போக வேண்டுமென்றால், பிரபுதேவாவைப் போல் டான்ஸ் ஆட வேண்டியிருக்கும்” என்றார்.

என் பாட்டி, சிறு வயதிலேயே கணவரை இழந்தவர். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை செய்வது அவர் வழக்கம். ஒரு தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து வெந்நீர் வைக்கப் போனவர், மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் இருட்டில் தடுமாறி கிழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. மிகுந்த ஆச்சாரம் பார்க்கும் அவர், கடைசி வரை முறையான மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. சரியாக நடக்க முடியாமல், ஒரு நாற்காலியை வைத்து மெதுவாக தள்ளிக் கொண்டே கழிவறைக்குச் செல்வார். இதைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கும். தீபாவளியன்று மின்சாரம் வரும் வரை சற்று பொறுமையாக இருந்திருந்தால், அவருக்கு அந்த நிலைமை வந்திருக்காது. பூஜைக்கு நேரம் ஆகி விடுமே என்ற பயமே, அவரை அந்த நிலைக்குக் கொண்டு சென்றது.

கொரோனா தொற்று அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், என் தந்தை இறந்து விட்டார். இறந்த உடலை தூக்கும் முன், மூன்று பேர் தெரு முனையில் இருந்து ஊதுபத்தி கொண்டு வர வேண்டும் என்றார்கள். கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்த எனக்கு மூன்று குடம் தண்ணீரை தலையில் ஊற்றினார்கள். இந்த முறையைச் சொல்லி. தலைக்கு எழுநூறு என்று வாங்கிக் கொண்டார்கள். சங்கூதுபவர், ஆம்புலன்ஸ் ட்ரைவர், பந்தல் அமைப்பவர், பிணஞ்சுடுபவர் (வெட்டியான் என்று அழைப்பது கிராமத்து வழக்கம்) என்று அனைவரும் நன்றாக மது அருந்தியிருந்தார்கள். மீசையை வீட்டிலேயே மழித்து விடுகிறேன் என்றேன். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. சுடுகாட்டில் தான் எடுக்க வேண்டும் என்றார்கள். தந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு என்னால் எதிர்வாதம் செய்ய முடியவில்லை. கொள்ளி வைத்து விட்டு நூறு அடி வருவதற்குள், வாயில் நுழையாத சடங்குளையெல்லாம் செய்ததாகக் கூறி மேலும் பணம் கேட்டார்கள். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் போது என் பங்காளியிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் பாக்கி இருந்தது. ஏழாம் நாள் காரியம் என்று ஒரு பெரும்தொகை தனியாக செலவானது. ஆக இன்றைய கால கட்டத்தில், ஒரு மனிதன் குறைந்தது நாற்பதாயிரம் ரூபாய் இல்லாமல் நிம்மதியாக சாக முடியாது என்று, அன்று எனக்குப் புரிந்தது.

பெண்கள் மூக்குத்தி அணிவது முதல் புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பது வரை, அனைத்திற்கும் அறிவியல் ரீதியான காரண காரியங்களை அடுக்குகிறார்கள். பெண்களை சுயமரியாதையுடன் நடத்துவது, சக மனிதர்களிடம் ஜாதி பேதம் பார்க்காமல் தோழமையுடன் அணுகுவது, சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று பிறரை கசக்கிப் பிழியாமல் இருப்பது போன்ற செயல்களுக்கும் தகுந்த அறிவியல் காரணங்களை கற்பித்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

- ஆபுத்திரன்