இந்த நாட்டின் அனைத்து குடிமக்களின் ஓட்டுக்கும் ஒரே மதிப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கின்றது. ஆனால் சட்டத்தில் ஏற்பட்ட சமத்துவம் சமூகத்தில் இன்னும் எட்டப்படாததால் அது சட்டத்தை சமூகத்தின் அசமத்துவத்திற்கு ஏற்றாற்போல ஆட்டுவிக்கும் கைப்பாவையாக, எப்போது வேண்டுமானாலும் அடித்து நொறுக்கப்பட காத்திருக்கும் கண்ணாடி மாளிகையாக மாற்றி வைத்திருக்கின்றது.

chennai slumசுதந்திரத்திற்குப் பிந்தைய இத்தனை ஆண்டுகளில் நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் அசமத்துவத்தைக் குறைப்பதற்குப் பதில் அதைப் பன்மடங்கு அதிகப்படுத்தி வைத்திருக்கின்றன. ஒரு சிறு கூட்டம் தன்னை எல்லா வகையிலும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்திக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அப்படிப்பட்ட வர்க்கங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் சமூகத்தின் அசமத்துவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை உள்நாட்டிலேயே அகதிகளாக, நாடற்றவர்களாக மாற்றி வைத்திருக்கின்றது.

எதிர்த்துக் கேட்க ஓர் அமைப்பாய் இல்லாத, ஓட்டுப் போடுவதற்காக மட்டுமே உயிர்வாழ அனுமதிக்கப்பட்ட மக்கள்தான் இன்றைய அதிகார வர்க்கத்தின் முதல் இலக்கு. இவர்களைத் தொடர்ச்சியாக வறுமையிலேயே வைத்துக் கொள்வதன் மூலம் பணக்கார வர்க்கத்தின் சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான கூலி அடிமைகளை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்கின்றது.

நகர்ப்புறங்களுக்குத் தேவையான கூலி அடிமைகள் பற்றாக்குறையைப் போக்க திட்டமிட்டு விவசாய உற்பத்தியை சிதைப்பதும், கனிம வள கொள்ளைக்காக காடுகளை அழித்து பழங்குடியின மக்களை விரட்டி அடிப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு செயல்திட்டமாகவே உள்ளது. அதே கொள்கையைத்தான் மாநில அரசுகளும் அட்சரம் பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகத்தான் சென்னையின் பல்வேறு இடங்களில் குறிப்பாக கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களில் 15 ஆயிரத்து 300 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுவரை 12 ஆயிரத்து 395 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும், 2,905 ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலையை தீவிரமாகச் செய்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த, 93 குடிசை வீடுகளை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் அகற்றினார்கள். அகற்றப்பட்டவர்கள், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கே ஆக்கிரமிப்பாளர்கள் என்று அரசு யாரை சொல்கின்றதோ அவர்கள் எல்லாம் ஏதோ நேற்று வந்து ஆக்கிரமித்தவர்கள் கிடையாது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வருபவர்கள் ஆவார்கள். அவர்களின் வேர்கள் அனைத்தும் இந்த மண்ணில்தான் நிலைகொண்டிருக்கின்றன.

பொதுவாக இப்படி ஆக்கிரமிப்பாளர்கள் என்று பெயர் சூட்டப்பட்டு அதிகார வர்க்கத்தால் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டப்படுவர்கள் அனைவரும் குறைந்த ஊதியத்திற்கு சென்னையில் வீட்டு வேலை, கட்டுமானப் பணிகள், துப்புரவுப் பணிகள் என பல்வேறு பணிகளைச் செய்பவர்கள். இவர்கள் இல்லை என்றால் இன்று சென்னையே இல்லை என்று சொல்லிவிட முடியும்.

ஆனால் அப்படிப்பட்டவர்கள் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற சூழலற்ற பகுதிகளில் சாலை, குடிநீர், கழிப்பறை, மின்சாரம், வெளிச்சம், காற்றோட்டம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத குடிசைகளில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் குடிசைகள்தான் தொடர்ச்சியாக ஆளும்வர்க்கத்தின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றது

ஏதோ இதுபோன்ற எளிய மக்கள் திட்டமிட்டு அரசு நிலங்களை ஆக்கிரமித்து வாழ்வதாக ஆளும்வர்க்கத்தால் கருத்து உருவாக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் மிக மலிவான கூலிக்கு தங்களின் உழைப்பை விற்கும் அந்த மக்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை கொடுத்து வாழ முடியாது என்பதுதான் உண்மை. தினம் 100க்கும் 200க்கும் வேலை செய்யும் மக்களால் எப்படி 5000 ரூபாய், 10000 ரூபாய் வாடகை கொடுத்து வாழ முடியும்? அதனால்தான் தாங்கள் பணி செய்யும் இடங்களுக்கு அருகிலேயே தங்கிவிட முடிவு செய்து வாழ்க்கையில் எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டு, உயிர் வாழ்ந்தால் போதும் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற, சுகாதாரக்கேடான இதுபோன்ற இடங்களிலேயே தங்கி விடுகின்றார்கள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுபவர்களாக இருப்பதால் இந்தப் பஞ்சை பராரிக் கூட்டத்தை நிரந்தரமாக அதே நிலையில் வைத்திருக்கவே விரும்புகின்றன.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் என சென்னையின் பல இடங்களிலும் சேரிகள் அமைந்துள்ளன. 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் முக்கிய பணி சேரிகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்துவதுதான். இந்த வாரியம் உடனடியாக 1202 சேரிகள் இருப்பதாக அறிவித்தது. 1985 வாக்கில் மேலும் 17 சேரிகளும், 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் 444 அங்கீகரிக்கப்படாத சேரிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

1983-ம் ஆண்டு நடைபாதையில் வசிப்பவர்களை அரசாங்கம் பலவந்தமாக அகற்ற முயன்ற போது அவர்கள் சார்பில் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டது. அவ்வழக்கில் நடைபாதைவாசிகளுக்கும் வாழ்வுரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றம் 1984-ல் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளிலும் நடைபாதைகளிலும் வசிப்பவர்களை அகற்ற அரசு முயலும்போது மாற்று இருப்பிடங்களை அம்மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தும் நோக்கில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற பகுதிகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பிலேயே ஊருக்கு வெளியே பல மைல் தொலைவில் சேரிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

நகரின் மையப் பகுதியில் தலித்துகளும், மிகவும் பிற்பட்ட மக்களும் வாழ்வது மனுதர்மத்தின் படி தவறு என்பதால் அவர்கள் கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் குடி அமர்த்தப்பட்டனர்.

இதனால் அந்த மக்கள் மேலும் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள். தாங்கள் பணி செய்யும் இடங்களுக்குச் சென்று வரும் போக்குவரத்து செலவுக்கே அவர்களின் வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி இருந்தது. குழந்தைகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டு சென்னையில் பல அரசுப் பள்ளிகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

இது போன்று வறிய மக்கள் வாழும் சேரிகள் தமிழகம் மட்டுமல்ல மும்பை, டெல்லி என ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் உள்ளது. உலக மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால் அதில் பாதிப்பேர் நகரங்களில் வசிப்பவர்கள் ஆவார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்றும் சேரிகளில் தான் வசித்து வருகின்றார்கள்.

உலக முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவாக அதன் அசிங்கங்களை வெளிக்காட்டும் இடங்களாக சேரிகள் உள்ளன. ஒரு பக்கம் விண்ணை முட்டும் கட்டிடங்களும் அதன் அருகில் சாக்கடை கால்வாய்களின் கரைகளில் அந்த விண்னை முட்டும் கட்டிடங்களைக் கட்டியவர்களும் வசிப்பதுதான் முதலாளித்துவம்.

நகர்ப்புறங்கள் வறிய மக்களின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டு அவர்களை குப்பைகளைப் போல வீசி எறிகின்றன. அவர்களின் உழைப்பு மட்டும்தான் நகர்ப்புறங்களுக்குத் தேவை. மற்றபடி அவர்கள் அந்த நகரங்களில் வசிப்பது அவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்துகின்றது.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது அகமதாபாத் நகரில் உள்ள எந்தக் குடிசைப் பகுதியும் அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக 600 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் திமுக அரசு இன்னும் ஒருபடி மேலே போய் குடிசைகளை இடித்து சென்னைவாழ் பணக்காரர்களுக்கும், சென்னையில் தொழில் தொடங்கி கொள்ளையடிக்க வரும் பன்னாட்டு தொழிற்நிறுவனங்களும் சிங்காரச் சென்னையை கட்டியமைக்கின்றது.

சிங்காரச் சென்னையை ஒன்றியத்திலேயே பெரிய அக்கிரகாரமாக மாற்றும் முனைப்போடு இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. தலித்துகளும் பிற்பட்டவர்களும் வசிக்க சென்னையை விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இன்னும் பல சேரிகளை இந்த அரசு நிச்சயம் உருவாக்கும். அவர்கள் அங்கிருந்து தினம் சென்னைக்கு வந்த சிங்கார சென்னையின் மலங்களையும், குப்பைகளையும் அகற்றிவிட்டு, தங்கள் உடல் உழைப்பையும் கொடுத்துவிட்டு மீண்டும் சேரிகளுக்கே தங்களின் உழைத்துக் களைத்த உடலோடு திரும்பி விடுவார்கள்.

அரசின் அனுமதி இன்றி இடங்களை ஆக்கிரமித்த மனிதர்கள் விரட்டப்பட்ட பகுதிகளில் நாளை அரசின் அனுமதியோடு அவர்களின் புரோக்கர்கள் குடி அமர்வார்கள். சிங்காரச் சென்னையில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களில் வானுயர நிற்கும் அழகிய கட்டிடங்களைப் பார்த்தபடி வியர்வை நாற்றமெடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் கடந்து செல்வார்கள்.

(படம் நன்றி: விகடன்)

- செ.கார்கி