rajandra balaji copyசில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்த தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சற்று பின்னோக்கி போவாம்..

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலந்து விற்கிறார்கள். என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? நீங்கள் துறை அமைச்சர்தானே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு...

"அவர்களை அந்த ஆண்டவன் தண்டிப்பான்" என்று குழாயடி சண்டையில் பெண்கள் சாபமிடுவது போல் விட்டார். (நடவடிக்கை எடுக்க முனைந்திருந்தால் ஆதாரத்தை காட்ட வேண்டும் அல்லவா) தான் ஒரு அமைச்சர் என்பதை மறந்து இப்படியாக தான்தோன்றித்தனமாக வைத்தக் குற்றச்சாட்டை பார்த்து தனியார் பால் விற்பனையாளர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்? என்று நீதிமன்றம் வரை சென்று தங்கள் விநியோகிக்கும் பாலில் ரசாயனக்கலவை ஏதும் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள்.

அதன்பிறகு தான் சொன்ன அபாண்டமான குற்றச்சாட்டுக்கு அவர் எந்த மன்னிப்பும் கேட்கவே இல்லை. காரணம் அவர் அப்போதைக்கு அமைச்சர்... ஆகவே பக்குவம் அடைவதற்கு அமைச்சர் பதவி தடையாக இருந்திருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. தவிர திருத்தங்கலில் 2 வீட்டுமனைகளும் நிலமும் வாங்கியுள்ளார்.

தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இப்படி வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ உத்தரவிட்டனர். ஆனால் இந்த வழக்கில் ஒருமுறைகூட நேரில் ஆஜராகாமல் அமைச்சர் என்ற பதவியும் அவரே அடிக்கடி சொல்வாரே மோடி எங்கள் டாடி என்று அவரும் காப்பாற்றிவிட்டார்கள்...

இப்படி மக்களின் பணத்தில் இத்தனை ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளோமே... இது பாவமில்லையா? என்று அவர் பக்குவப்படவில்லை. காரணம் அமைச்சர் என்ற பதவி அதற்கு தடையாக இருந்தது...

தப்போதைய முதல்வரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். எழுதவே கூசும் வார்த்தைகள் அவை. அப்படியாகப்பட்ட வார்த்தைகளை சிறிதும் சங்கடமின்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அந்த வீடியோக்கள் இன்னும் இணையதளங்களில் சாட்சியாக உள்ளன.

தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த இரண்டு மாதங்கள் பக்குவப் பட்டிருக்கலாம். ஆனால் எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன.

ஆனால் இப்போது வந்து "உணர்ச்சி மிகுந்த தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகிறேன்" என்று கூறியிருக்கிறார் என்றால் அவரை பக்குவம் அடையச் செய்தது எது?

பால் வளத்துறையில் செய்த பல நூறு கோடி முறைகேடுகளா? அவைகளின் ஆதாரங்கள் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றனவே அந்த காகிதங்களா? சட்டமன்ற உறுப்பினர்கூட ஆக விடாமல் மக்கள் தோற்கடித்தார்களே அவர்கள் கூட பக்க பலமாக இருக்க மாட்டார்கள் என்ற பயமா? இனிமேலும் இவரை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று கட்சி நிர்வாகிகள் ஓரங்கட்டி விட்டார்களே அந்த ஏக்கமா?

இதில் ஏதாவது ஒன்றா? அல்லது அனைத்துமேவா?

அப்படி இந்த மனிதரை பக்குவப்படுத்தியது எதுவாய் இருக்கும்?

- சஞ்சய் சங்கையா