Bhagat Singhபோராளிகள் நான் என்கிற சுயநலமில்லாமல் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் நாட்டுக்காகவே மடிந்தவர்கள். அவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்திவிடலாம் அவர்கள் கையிலெடுக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் என்னவென்று பார்க்க வேண்டும்.

தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக உயிர் விடுபவர்கள் மகாத்மாக்களை விடவும் மேலானவர்கள். ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒட்டுமொத்தக் குரலாகத்தான் அவன் குரல் ஒலிக்கிறது. எதிரிகளின் பலமே அவனை ஆயுதம் ஏந்த வைக்கிறது. தனது லட்சியத்துக்காக திருமண பந்தத்தைக் கூட வைராக்கியமாக துறந்து விடுகிறான்.

பதினெட்டு இருபது வயதில் தாய்நாட்டுக்காக உயிரையே அர்ப்பணிக்கும் துணிச்சல் யாருக்கு வரும். போராளிகள் என்பவர்கள் எரிமலையாக உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருப்பவர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் மரணத்தை முத்தமிட தயாராய் இருப்பவர்கள்.

பிரிட்டிஷ் ராணுவத்துக்கு சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் ராணுவ ரீதியாக நெருக்கடிகள் தரவில்லையென்றால் அரை நூற்றாண்டுகள் கழித்தே இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கும்.

1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தைத்தான் சாவர்க்கர் முதல் இந்திய சுதந்திரப் போராக அடையாளப்படுத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1857 முதல் 1931 வரை தீவிரவாதம் அசுர வளர்ச்சி கண்டது.

துப்பாக்கி ஏந்தியிருக்கும் பிரிட்டிஷ் வீரர்களுக்கு முன்னால் நீதி, நேர்மை, நியாயம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? நீங்கள் குருவி சுடுவது போல் சுட்டுப் பழகுவதற்கு இந்தியர்கள் தானா கிடைத்தார்கள்.

இந்த கூற்று நியாயமானது தானே. 1885ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களால் காங்கிரஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வெள்ளைக்காரர்களுக்கு ஒத்துஊதுவது தான் அந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக இருந்தது.

இந்தியர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டுவிட்டனர் என்கிறபோது இனியும் இந்த மண்ணை நாம் சொந்த கொண்டாட முடியாது என தீர்மானித்தனர். ஆனாலும் அவர்கள் அதிகாரத்தை இந்தியர்கள் கையில் அளித்துவிட்டுப் போகவும் தயாராக இல்லை.

பிரிட்டிஷார் இந்திய மக்களை பிளவுபடுத்த முயற்சித்தனர். அதற்கு மூளையாக கர்சன் பிரபு செயல்பட்டார். வங்கப் பிரிவினை உண்டானது. இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதி மேற்குவங்கம் என்றும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதி கிழக்கு வங்கம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1906ல் யுகாந்தர் என்ற வங்கப் பத்திரிகை இந்திய விடுதலைக்கு ஆயுதத்தை கையிலெடுப்பதைவிட வேறு தீர்வு இல்லை என்றது. இந்தியாவில் தீவிரவாதக் குழுக்கள் 1902ல் இருந்து வலுப்பெற ஆரம்பித்தன. சுசீந்திரசன்யாள் என்பவர் இந்துஸ்தான் ரிபப்ளிக் ஆர்மி என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

அந்த இயக்கத்தைச் சேர்ந்த ராஜ்பிஹாரிபாசு டில்லியில் வைத்தே வைஸ்ராயை தாக்க முயன்றான். இப்படி நாட்டில் தீவிரவாதம் தலையெடுக்க ஆரம்பித்தது. தீவிரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியினரை கட்சியிலிருந்து கட்டம் கட்டும் வேலை காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளேயே நடந்தது.

வங்கத்தைப் போல் காங்கிரஸ் கட்சியும் தீவிரவாதிகள் மிதவாதிகள் என இரண்டாகப் பிளவுபட்டது. அத்தகைய சூழலில் தான் காந்தி காங்கிரஸின் தலைமை ஏற்றார். 1919ல் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தான் முதல்முறையாக பனிரெண்டு வயதேயான பகத்சிங்க கலந்து கொள்கிறான்.

மகாத்மா என்பற்காக அவர் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எங்களால் கருத முடியாது என்பது தான் பகத்சிங்கின் கொள்கையாக இருந்தது. 1920-21ல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மக்கள் புரட்சியாக வெடித்தது.

இன்னும் ஒரு வருடத்தில் இந்தியா விடுதலை அடைந்துவிடும் என்று முழங்கிய காந்தி செளரி செளராவில் போலீஸ் தடியடியை எதிர்த்து வெகுண்டு எழுந்த மக்கள் 22 காவலர்களை காவல் நிலையத்தில் வைத்து பூட்டி கொளுத்திய போது அதிர்ச்சியுற்ற காந்தி வன்முறை மேலும் பரவாமல் இருக்க ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிடுவதாக அறிவித்தார்.

இந்த முடிவை கடுமையாக எதிர்த்த ஜவர்ஹலால் நேரு இந்தியாவின் விடுதலை இந்த முடிவால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் தள்ளிப் போகும் என்றார். காந்தியின் செயல்பாடுகள் பிடிக்காமல் பலர் கட்சியிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். அப்படி வெளியேறிய கர்த்தார்சிங் என்பவன் இந்துஸ்தான் ரிபப்ளிக் ஆர்மியில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

புரட்சியாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி லாகூரில் திடீரென புரட்சி செய்ய திட்டமிட்டான் கர்த்தார்சிங். இதனை பிரிட்டிஷ் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. முதல் லாகூர் சதி வழக்கில் புரட்சியை தூண்டியதற்காக கர்த்தார்சிங்குக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

அவனை தூக்கிலிட்டபோது கர்த்தார்சிங்குக்கு வயது பதினெட்டு தான் ஆகியிருந்தது. இந்த கர்த்தார்சிங்கைத் தான் பகத்சிங் தனது நாயகனாக வரித்துக் கொண்டான். இதன் பிறகு லாகூரில் பகத்சிங் நவஜவான் பாரத சபையை ஏற்படுத்துகிறான்.

இந்த இயக்கமானது லாகூரை விட்டு இந்தியா முழுவதும் கிளை பரப்ப வேண்டும் என கருதி உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் என அங்குள்ள தீவிரவாதக் குழுக்களோடு பேச்சு நடத்துகிறான்.

முடிவில் 1928ல் நாடு முழுவதுமிருந்த தீவிரவாதக் குழுக்களிலிருந்து பத்து பேர் டெல்லி பெரோஸ்லா கோட்லா மைதானத்தில் ஒன்று கூடி இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மியை உருவாக்கினார்கள். இதனை மக்கள் இயக்கமாக மாற்ற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுதிரட்டுவது என்று முடிவுக்கு வருகிறார்கள்.

அமைப்புக்கு சந்திரசேகர ஆசாத் தான் மூளையாக செயல்படுகிறான். துப்பாக்கி, பிஸ்டல், ரிவால்வர் வாங்க பணத்துக்கு எங்கே போவது என்ற சவாலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். வெள்ளைக்கார்களால் பலன் பெறும் எந்த வியாபாரியும் நன்கொடை தர முன்வர மாட்டான் என்பது தெரிந்தது தான்.

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது இயக்கத்தின் கொள்கைக்கு விரோதமானது எனவே அரசாங்க பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் திட்டப்படி லக்னோவிலிருந்து சகரன்பூர் வரை செல்லும் பயணிகள் ரயிலில் ஒருவாரம் முழுவதும் ரயில்வேயின் மூலம் வசூலான பணம் டிரங்க் பெட்டியில் எடுத்து வரப்படும் அப்பணத்தை கொள்ளையடிக்க வேண்டும்.

இம்மியளவு கூட பிசகாமல் அந்த ஆப்ரேஷனை நடத்தி முடித்தார்கள். 1925ல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது ககோரி ரயில் கொள்ளை வழக்கு பதியப்பட்டது. சந்திரசேகர ஆசாத் தவிர அந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

இயக்கம் தனது பணிகளை முன்னெடுக்க தடைக்கல்லாக பணமே இருந்தது. மீண்டும் ஒரு திட்டம் உதிக்கவே லாகூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிப்பது என்று முடிவானது. திட்டம் பாதிக்கு மேல் நிறைவேறி விட்டது ஆனால் எதிர்பாராத நேரத்தில் வாடகைக்கு அமர்த்திய கார் பழுதாகி விட்டது எனவே அத்திட்டம் கைவிடப்பட்டது.

1928ல் இந்தியர்களுக்கு என்னென்ன உரிமைகள் தரலாம் என ஆய்வு செய்ய வந்த சைமன் கமிஷனில் ஒரு இந்தியர் கூட உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் டில்லி வருகை தரவிருந்த உறுப்பினர்களை அங்கேயே தீர்த்துக்கட்டுவது என்று இயக்கத்தினர் முடிவு செய்தனர்.

ஆனால் அங்கு நடந்த பாதுகாப்பு கெடுபிடிகளால் அவர்களின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை அத்திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இது இயக்கத்தினரை யோசிக்க வைத்தது.

சைமன் கமிஷன் 1930 அக்டோபர் 30ஆம் தேதி லாகூர் வந்தபோது லாலாலஜபதிராய் தலைமையில் கறுப்புக் கொடியுடன் எதிர்ப்பு காட்ட திரண்டிருந்தனர். அங்கு நடந்த தடியடியில் லஜபதிராய் படு காயமடைந்து இருவாரங்களுக்கு பின் மரணமடைந்தார். இது இந்திய தேசத்தை கண்ணீர் விட வைத்தது.

தேசபந்து சி.ஆர். தாஸின் மனைவியான வசந்திதேவி இந்திய இளைஞர்கள் ஆண்மையற்றவர்களா பஞ்சாப் சிங்கத்தை தடியால் அடித்து உயிர் குடித்தானே அவனை என்ன செய்யப் போகின்றீர்கள். எதிர்க்கப் போகின்றீர்களா இல்லை சுயமரியாதையையும், சுயகெளரவத்தையும் இழக்கப் போகின்றீர்களா நீங்களே முடிவுகட்டுங்கள் என்றார்.

கொதித்தெழுந்த இயக்கத்தினர் தடியடிக்கு காரணமான சூப்பிரடெண்ட் ஆஃப் போலீஸ் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர். இந்த ஆப்ரேஷனில் ஈடுபட்டவர்கள் நால்வர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகரஆசாத் ஆகியோர். பகத்சிங்கும் அவனது கூட்டாளிகளும் தப்ப முடியாதபடி லாகூர் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப்பட்டது.

பகத்சிங் மாறுவேடத்தில் பகவதிசரண்வோரா என்கிற சமூகப்போராளியின் மனைவியை தன் துணைவியாகவும் மகளை தன் மகளாகவும் நடிக்க வைத்து லாகூர் ரயில் நிலையத்தில் கல்கத்தா செல்ல முதல்வகுப்பு டிக்கெட் வாங்கினான். கல்கத்தாவுக்கு தப்பினான்.

ராஜகுரு வேலைக்காரனைப் போல் வேடமிட்டு லாகூரிலிருந்து தப்பினான். கல்கத்தாவில் அப்போது காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பகத்சிங் அம்மாநாட்டில் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணரான யதீந்திரநாத்தாஸை சந்தித்தான்.

ஆக்ராவில் பகத்சிங்கின் சகாவான பகவத் சரண்வோராவின் இல்லத்தில் வெடிகுண்டு தயாரித்தும் அதை பரிசோதனை செய்தும் பார்த்தார்கள். ஜெயதேவ் கபூர் என்ற போராளியின் மூலம் காங்கிரஸ் உறுப்பினரிடமிருந்து காலரியில் அமர மூன்று பாஸ் வாங்கினார்கள்.

1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்ற பகத்சிங்கும், வி.கே.தத்தும் சேர்ந்து மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசினார்கள். அவர்கள் இருவரும் தப்பிக்க முயலவில்லை வரும்போதே ஒரு திட்டத்துடன் தான் வந்தார்கள். கைதாவது நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாதிட்டு அதை பத்திரிகை செய்தியாக்கி மக்களிடம் எழுச்சியை உருவாக்குவது.

அவர்கள் வாய் புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக, தொழிலாளர்கள் வர்க்கம் வாழ்க என கோஷமிட்டுக் கொண்டே இருந்தது. கையில் கொண்டுவந்திருந்த துண்டுப் பிரசுரங்களை அவையோர் முன் வீசியெறிந்தனர்.

அதில் ‘செவிடர்களைக் கேட்கச் செய்ய வேண்டுமானால் பலத்த சத்தம் அவசியமாகிறது’ என்று எழுதி இருந்தது. நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்ட பகத்சிங் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தான்.

தாயும், தாய்மண்ணும் எங்களுக்கு ஒன்றுதான் எப்படி அந்நியர் ஆள்வதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்போம். யாருக்கு யார் அடிமை இங்கே. வெள்ளை நிறத்தவர்களெல்லாம் பரலோகவாசிகள் என இயேசு வந்து சொன்னாரா. புரட்சியை ஏறெடுப்பவர்களெல்லாம் பைத்தியங்கள் என்று எந்த புனிதநூலாவது சொல்கிறதா.

பஞ்சம் பிழைக்க வந்த நீங்கள் எங்களை ஆள்வீர்களா? ஏகாதிபத்திய வெறி பிடித்த விக்டோரியா மகாராணி இந்திய இளைஞர்களையெல்லாம் பேடிகள் எனவா நினைத்தார்கள். நான் ராஜநாகம் உங்கள் மகுடிக்கு மயங்க மாட்டேன். வார்த்தைகளில் விஷத்தை கக்குபவன் நான். உங்களிடம் இந்த நாட்டை ஆள்வதற்குள்ள அதிகாரத்தை யார் கொடுத்தது.

இந்தியா என்ன பக்கிங்காம் அரண்மனையா நீங்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதற்கு. விக்டோரியா இறுதித் தூதரா இல்லை பிரபஞ்சத்திற்கே அதிபதியா? வேதத்தை படிப்பவர்கள் யாராவது சாத்தான் வேலை பார்ப்பார்களா? நீங்கள் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு சாத்தானுக்கு தான் சேவகம் செய்கின்றீர்கள்.

எங்கே படித்தீர்கள் யார் பாடம் எடுத்தது அடுத்தவன் சுதந்திரத்தை பறிக்க வேண்டும் என்று. உங்கள் கொல்லைப்புற ஆட்டு மந்தையாய் எங்களை நீங்கள் நினைக்கும் போது உங்களை எங்கள் நாட்டை விட்டே விரட்டியடிக்க நாங்கள் ஏன் போராட மாட்டோம் என்று நீண்டது பகத்சிங்கின் வாதம்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூன்று பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. தூக்கு மேடைக்கு செல்லவிருந்த பகத்சிங்கிடம் தலைமை வார்டன் சர்தார்சிங் கடைசி நேரத்திலாவது இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யக் கூடாதா எனக் கேட்டான்.

அதற்கு பகத்சிங் என் தாய் நாட்டுக்கு பொன் விலங்கினை பூட்டியவனையா நீங்கள் கடவுள் என்கிறீர்கள். எங்களை அடிமை செய்ய வெள்ளைக்காரனை அனுப்பியவனுக்கு நாங்கள் சாமரம் வீச வேண்டுமா? பசி, பட்டினியால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது உங்கள் கடவுள் என்ன உறங்கிக் கொண்டிருந்தாரா? படைத்தவன் தன் படைப்பின் மீது பாரபட்சம் காட்டுவானா? இவன் அழகானவன் இவன் அவலட்சணமானவன் என்று.

விதியே என்று சும்மா இருந்தோமானால் எந்நாளும் விதைகூட மண்ணைப் பிளந்து முளைவிட முடியாது. எதிர்ப்பிலேயே வாழ்ந்தால் தான் அது மனிதகுலம் இல்லையேல் சவக்கிடங்கு தான்.

கண்பார்வையற்றவர்களும், உடல் ஊனமானவர்களும், புத்திபேதலித்தவர்களும் வாழும் இந்த பாழும் சிறையைத்தான் உங்கள் கடவுள் நிர்வாகம் செய்கிறானா? உங்கள் கடவுள் என்ற பதம் அதிகாரத்தை முன்நிறுத்துபவையாகத்தான் இருக்கின்றதே தவிர கருணைணை, இரக்கத்தை முன் நிறுத்தவில்லை.

எப்படி நீங்கள் உருவாக்கிய கடவுள் உங்களை விட அதிகாரம் மிக்கவனாக இருக்கிறான். இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை. நீங்கள் பகுத்தறிய முற்பட்டீர்களானால் கடவுளின் மகுடம் இங்கு காணாமல் போய் விடும். தண்டிப்பானானால் அவன் கடவுளல்ல.

தண்டிக்கும் யாரும் கடவுளுமல்ல. பகத்சிங்கை தூக்கிலிட சிறைக்காவலர்கள் அவனை அழைத்துச் செல்ல முற்பட்டபோது சிறை கம்பிகளுக்கு உள்ளேயிருந்து பகத்சிங் ஒரு புரட்சியாளன் ஒரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் கொஞ்சம் பொறுங்கள் என்றான். அவன் கைகளில் லெனினின் அரசும் புரட்சியும் என்ற புத்தகம் இருந்தது.

- ப.மதியழகன்