mobile phones 380பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை தயாரிப்பு குறைபாடுள்ள ஒரு பொருளை விற்பது தெரிந்தால் தயக்கமில்லாமல் திரும்பப் பெற்று மற்றொன்றை தருவதுதான் வழக்கம் .

இதுதான் ஆண்டாண்டு காலம் பின்பற்றப்படும் வணிகத்தின் நியதியும். உலகம் முழுக்க ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையும் கூட இதுதான்.

ஆனால் பெருமுதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் இதை கால்தூசு அளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு எனது அனுபவமே சாட்சி.

****

ஊரில் உள்ள வயதான - உடல்நலம் குன்றிய எனது அம்மாவிற்கு ஒரு மொபைல் வாங்க வேண்டியிருந்தது. அருகாமையில் உள்ள பிரியதர்ஷினியின் கடைக்குப் போனேன்.

(18 .6 .2021 வெள்ளிக்கிழமை, பாரதி சாலை, திருவல்லிக்கேணி) ஊரடங்கு காரணமாக பகல் இரண்டு மணிக்கு கடையை மூடிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் முகப்பு கதவை மூடிவிட்டு என்னை அனுமதித்து விற்பனையை தொடங்கினார்கள்.

கம்பெனி - மாடல் - விலை( Lava (PP) A7) எல்லாவற்றையும் நான் முன்னரே தீர்மானித்திருந்தேன். அதிக தாமதமில்லாமல் பில்லும் போடப்பட்டது.

"சார்.. அதை செக் பண்ணி கொடுங்க..!) இது நான்.

பிரித்தார்கள். ஆன் செய்தால் கொஞ்ச நேரம் கூட திரை ஒளிரவில்லை.

"சார்.. ஒரு நாலஞ்சு மணி நேரம் சார்ஜ் போட்டு ஆன் பண்ணுங்க பங்க்ஷன் ஆகும் !" இது கடை ஊழியர்.

"நம்பிக்கைதானே எல்லாம்!" என நமக்கு நிறைய விளம்பரங்களில் சொல்லப்பட்டிருப்பதால் அதிக நம்பிக்கையுடன் வாங்கி வந்தேன். அன்று மாலை ஆறு மாலை 6 மணிக்கு ஊருக்கு புறப்படுவதற்கு முன் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தேன்.

மொபைல் கண் விழிக்காமல் இருட்டிய படியே இருந்தது.

"இது என்னடா சோதனை!" என்று நினைத்தபடியே ஊருக்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.

"நம்பிக்கைதானே எல்லாம்..!"

****

அடுத்த நாள் 19-06-2021 சனிக்கிழமை. ஊரில் 4 மணி நேரம் 5 மணி நேரம் என பல மணி நேரம் சார்ஜ் செய்தோம் புத்தம் புதிய பிரியதர்ஷினி மொபைல் உயிர் பெறவே இல்லை.

"ஒரு போனைக் கூட சரியாக வாங்கி வர முடியாதாப்பா..?"

அவரது உடல் வலியை மீறி அம்மா அங்கலாய்த்தார்.

***

அடுத்த நாள் ஞாயிறு (20-06-2021) சென்னையில் இருந்தேன். காலையில் கடை திறக்கும்போது முதல் ஆளாய் உள் நுழைந்தேன். கோபத்தோடு நடந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தேன்.

"சார்.. நாங்க இங்க விக்கறது மட்டும் தான். நீங்க கஸ்டமர் கேர்ல தான் கேட்கணும்." கடை ஊழியர். "வேலை செய்யாத ஒரு போனை வித்ததே தப்பு.. இப்ப நான் எதுக்கு கஷ்டமர் கேர் நடக்கணும்..!"

"அதெல்லாம் தெரியாது சார்! இது தான் இந்த ரூல்ஸ் !"

உங்க ரூல்ஸ்லாம் உங்களோடவே இருக்கட்டும். ஒர்க் பண்ணாத போனை ஒன்னு மாத்தி தாங்க இல்ல பணத்தை ரிபண்ட் பண்ணுங்க..!"

"அப்படி எல்லாம் எங்களுக்கு ரூல்ஸ் இல்ல சார் ..!"

பரவாயில்லை. எதுக்கும் உதவாத போனை நான் எதுக்கு வச்சிருக்கணும் இங்கே உடைச்சுப் போட்டுட்டு போயிடுறேன்.!"

என் ஆத்திரத்தை கட்டுப் படுத்த முடியாத போது தான், பதறியடித்து ஓடிவந்தார் இன்னொரு கடை ஊழியர்.

"சார்.. கஸ்டமர் கேருக்கு நீங்க போக வேணாம் சார். நாங்களே கொண்டு போயி மாத்தி தர்றோம் சார்..!" வாங்கிக்கொண்டு வழியனுப்பினார் கடை ஊழியர்.

****

21 -6 -2021 திங்கட்கிழமை. Customer Care (8939308415) இருந்து அழைப்பு வந்தது. ஏதோ அதிகாரப் பீடத்தின் உச்சியில் உள்ளவரை போல அதிகாரத் தொனியுடன் அந்தப் பெண்மணி கேட்டார்.

"நீங்கதான் சரவணபவா .. வா..?"

"ஆமாம்!"

"ட்ரிப்ளிகேன்ல லாவா பேசிக் போன் வாங்கனீங்களா..?"

"ஆமாம் !"

"போன் பால்ட்டா தான் இருக்கு இன்னைக்கே Dy போட்டு ஹெட் ஆபீஸ்க்கு மெயில் பண்ணிடுவோம். ஒரு வாரத்துல வேற போன வாங்கிக்கலாம்.!"

"என்னது ஒரு வாரமா! என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது. ஒன்னு மொபைல் மாத்தி கொடுங்க. இல்ல பணத்தை ரிபண்ட் பண்ணுங்க..!" இது நான்.

"என்னது.. ரீபண்டா? அதை நீங்க ஷோரூமில் தான் கேட்கணும்?"

" உங்க ஓனரோட பேசமுடியுமா?"

"அவரு மீட்டிங்கில் இருக்காரு..!"

படக்கென்று போனை வைத்தார் சேவையகப் பெண்மணி.

ஆமாம் எல்லா முதலாளிகளும் எப்போதும் மீட்டிங்கில் தான் இருப்பார்கள். மக்களோடு மக்களாக இருந்தால் தானே அவர்களுக்கு வலியும் வேதனையும் தெரியும்.

****
பழுதான ஒரு போனை விற்றதற்கு சிறிய வருத்தமோ மன்னிப்போ கூட கேட்காமல், ஒரு வாடிக்கையாளர் மீது இவர்கள் காட்டும் அலட்சியம் - அவமதிப்பு - அலைகழிப்பு - தீராத மன உளைச்சல்களுக்கெல்லாம் தீர்வு தான் என்ன?

முதலாளிகளான உங்களுக்கு நகரில் நூறு - ஆயிரம் என கடைகள் பெருகி பெரும் செல்வந்தராக இருக்கலாம்.

ஆனால் ஒரு சராசரி இந்தியனுக்கு ஒரு மொபைல் போனும் பெரும் சொத்துதான்.

அதையும்கூட.!?

*****
பவா சமத்துவன்
நிறுவனர் - தலைவர்,
இந்திய சமூக நீதி ஊடக மையம் (பதிவு)