Antonyraj SJ

நல்லாரை அறிந்து போற்றிப் பாராட்ட வேண்டியது சமூகக் கடனே. கத்தோலிக்க அருட்தந்தை முனைவர் அந்தோணி ராஜ் அவர்கள் கடந்த மே 10 அன்று காற்றோடு கலந்த பேரோசையாய் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். இத்துயர்மிகு நேரத்தில் அன்னாரின் போற்றுதலுக்குரிய வாழ்க்கையை நெஞ்சில் நிறுத்தி மெச்சுகிறேன்.

என் இதயத்திலிருந்து எழுதுகிறேன். நான் என்னுடைய பத்தொன்பது வயதில் திருச்சி - செயின்ட் ஜோசப் கல்லூரி விடுதியில், அறை எண் 101- இல் தங்கியிருந்தேன், என் கல்லூரி நாட்களில் என்னைத் திசைப்படுத்திய வழிகாட்டிகளாய் இருந்தோர் அருட்தந்தை பி. செராக், அருட்தந்தை கிளாட் டிசோசா, அருட்தந்தை மனு, அருட்தந்தை ஜார்ஜ் ஜோசப், அருட்தந்தை செல்வராஜ், அருட்சகோதரி ஜீன் டெவோஸ் ஆகியோர் ஆவர். இவர்களுக்கு இணையாய் அவர் என் சிந்தனைப் போக்கில் செல்வாக்குச் செலுத்திய சமூகப்போராளி என்றால் மிகையன்று.

பெரும்பாலானோரைத் தன் அலாதி அன்பால் ஈர்க்கும் டோனியுடன், என் இளமைக்கால மதிப்புமிகு நேரங்களில் அளவளாவிய உணர்வலைகள் எம்முன் நிழலாடுகின்றன. நீள் இரவின் கமுக்க உரையாடல்களின் உணர்வுகளில், உண்மைகள் வெளிச்சம் பாய்ச்சின. அதை இப்போது நான் வெளிப்படுத்துகிறேன், கத்தோலிக்கத் திருச்சபையில் சாதி என்றால் என்ன என்பதையும், ஒரு இளம் கத்தோலிக்கப் பாதிரியாரை எந்த அளவீடுகளில் சேர்க்கிறார்கள் என்பதையும் அறிய நேர்ந்தபோது பேரதிர்ச்சியில் சிக்குண்டேன்.

இந்த உரையாடல்கள் யாவும் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு நிகழ்த்தப்பெறும். டோனி என் அறைக்கு வர, விடுதி வளாகத்தின் சாலிடாரிட்டி சேப்பல் சாலையில் உள்ள சிறிய வாயிலைப் பயன்படுத்தினார். எங்கள் நட்பின் நேர்கோட்டில் ஒரு புள்ளி இருவரையும் இணைத்தது. அப்புள்ளி வேறு எதுவுதுமல்ல.

அவர் பிறந்த சாதியும், எனக்குத் தெரியாத என் சாதியும் ஆகும். திருச்சபைக் கூட சாதியப் பாகுபாட்டுடன் அவரைத் தீண்டியது. நான் தத்தெடுக்கப்பட்டவன். எனவே என்னுடைய சாதி எதுவென்று எனக்குத் தெரியாது. அப்போது அருட்தந்தை தாகூர் அவர்கள் எங்கள் விடுதிக் காப்பாளராக இருந்தார். திருச்சபையின் பொது மாண்பு கருதி , அங்கு அதிகாரத்தில் இருந்தோர் நிகழ்த்திய பல மீறல்களைப் பகிர்ந்து கொள்வதை நான் இங்கு தவிர்க்கிறேன்.

அன்று தீண்டாமையும், சாதியப் பாகுபாடும் திருச்சபையில் இரண்டறக் கலந்து புரையோடிக் காணப்பட்டது. அதைவிட மோசமான விடயம் யாதெனில், அன்று நிலவிய தீண்டாமையும், சாதியப் பாகுபாடும் இன்றும் திருச்சபைகளில் அமைதியாகத் தொடர்கிறது. அது அருவருப்பான சாதி ஆதிக்கமாகும்.

1945 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்துள்ளி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அக்கிராமத்தில் அவர் சமூகச் சமத்துவக் கனவு கண்டார். அவர் சார்ந்த மதத்தினுள், அவரது சபையினுள், தேவாலயத்தினுள், அவர் பணி செய்ய நியமிக்கப்பட்ட திருச்சபையினுள் அக்கனவு மெய்ப்பட அவர் களங் கண்டார்.

களத்தில் காலூன்ற அவர் செய்த முயற்சிகள், அதனூடாக அவர் சந்தித்த சோதனைகள், இன்னல்கள் ஆகியவற்றின் மூலம் அவர் பெற்ற வளர்ச்சி புதிய பரிணாமம் பெற்றது. அவர் வாகை சூடினாரா? கடுங்கோபத்துடன் காணப்பட்டாரா? சாதிய ஒருங்கிணைப்பில் ஈடுபட்டாரா? நாம் கூட்டாகவும், தனியாகவும் சிந்திக்க இக்கேள்விகள் நம் முன் நிற்கின்றன.

டோனி எப்போதுமே அவரது கிராமத்தில் அவர் வாழ்ந்த சிறிய குடிசையைப் பற்றிக் கூறுவார், அவருடைய பெற்றோர், மூத்த சகோதரர், மூத்த சகோதரி ஆகியோருடன் அவர் வாழ்ந்த இடம் என்பதை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

மழை பெய்யும்போது நனையாமல் இருக்க அவரது தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் குடிசையின் மூலைப் பகுதியை ஆக்கிரமிக்கும் போது, டோனியும் அவரது தந்தையும் தேவாலய வராண்டாவில் தஞ்சமடைந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

டோனி 8 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி அடையாமால் தவறியபோது, வாழ்க்கையில் வேறு வழியில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் அவர் அதிலிருந்து தப்பி எழுந்தார். தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் மூலம் அவர் எழுப்பிய முதல் போர்க் குரல் அரசாங்கத்திடமிருந்து விடுதலை பெற அல்ல, தேவாலயத்திற்குள் நிலவும் சாதி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவே ஆகும். இந்த உண்மை உறுதியானது, தெளிவானது. இப்பொழுதில் இதைப் பேச வேண்டும், ஏனென்றால் இந்த உண்மை இன்றும் பொருத்தமானது ஆகும்.

ஆனால் இவை அனைத்திற்கும் பொருள் யாதெனில் அவர் ஒரு போராளி என்பதற்குப் பொருத்தமானவர். சுயம்பு போன்று தானாக உருவாகும் ஒரு போராளி, எவர்க்கும் இளைத்தோர் அல்ல என்ற உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அண்ணா நகரில் உள்ள எனது வீட்டில் நாங்கள் பலமுறை சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் 'தூய்மையான' அமெரிக்க ஆங்கில உச்சரிப்பை சிரத்தையுடன் கற்றுக் கொண்டதை பகிர்ந்துகொண்டார். அவர் எப்போதும் பெருமையுடன் 'நான் ஒரு தலித் என்று சொன்னால் என்ன' என்று குறிப்பிடுவார்.

டோனி ஒரு தனிப்பட்ட சக்தியாக பால் ராஜுக்கு இருந்தார், 1977 இல் திண்டுக்கல்லில் உள்ள அழகாபுரி அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வேடசேந்தூர் பாதிக்கப்பட்டது. பாதிப்புற்ற ஏழை எளியோர்க்கான நிவாரண நடவடிக்கைகளை தன்னார்வத்துடன் மேற்கொண்டார்.

1992 ஆம் ஆண்டில் அவர் தலித் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பை திருச்சபைகளில் ஏற்படுத்தினார். இதன் மூலம் திருச்சபைகளில் காணப்பெற்ற தீண்டாமைக்கு எதிராய்ப் போர்க்குரல் எழுப்பினார்.

டோனி பணியாற்றிய திருச்சபைகளில் எல்லாம் அவர் தசையைக் குத்திக் கொண்டிருக்கும் முள்ளைப் போல் அங்குள்ள மேலதிகாரிகள், ரெக்டர்கள் பேராயர்கள் ஆகியோர்க்கு இருந்திருக்க வேண்டும். இருப்பினும் அவர் அருட்தந்தை கசிமிர், அருட்தந்தை ரெக்ஸ் ஆகியோரிடம் முரண்பட்டதை மீறி, அவர்களுடன் ஒரு இலக்கை நோக்கி பயனப்பட்டதை எப்போதும் நினைவு கூர்ந்தார்.

அவருடைய பதவி அளிப்புக்குப் பின் மதுரை மாவட்டத்தில் உள்ள இராயப்பன்படி கிராமத்தில் பணியாற்ற திருச்சபையால் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் நடத்திய முதல் வழிபாட்டுக் கூட்டத்தில் அதில் பங்கேற்ற இளைஞர்கள் அவரைப்பார்த்து “ நீங்கள் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் டோனி பெரும் அதிர்ச்சி அடைந்தார். முதல் நாள் வழிபாட்டுக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை டோனி எதிர்பார்க்கவில்லை.

இதை எளிதாகக் கையாளும் நோக்கில் நான் ஆரஞ்சு வர்ணத்தைச் சேர்ந்தவன் என்று டோனி பதில் அளித்தார். சாதியப் பற்று மிகுந்த கத்தோலிக்க இளைஞர்கள் டோனியின் பதிலுரையால் திருப்தி அடையவில்லை. தேவாலயத்தில் காணப்பெறும் சாதி ஆதிக்கத்தை நன்குணர்ந்த கத்தோலிக்க இளைஞர்கள் டோனியிடம் நேரடியாக நீங்கள் என்ன சாதி? என்று கேட்டனர்.

நான் பள்ளர் சாதியைச் சேர்ந்தவன் என்று டோனி பதிலுரைத்தார்.(அந்நாட்களில் தலித் என்ற சொல்லாடல் உருவாகவில்லை) இத்தகைய இக்கட்டான சூழலில் பணிபுரிய வேண்டியதை உணர்ந்த டோனி தனக்குப் பணியிட மாறுதல் கோரினார். உடனே அவர் மல்லிகாபுரத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது ஐய்கப்(AICUF) மாணவனாக இருந்த நான், தன் விருப்பத்துடன் அருட்தந்தை செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் பணியாற்றினேன்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மார்கோஸ் ஆட்சியின் போது அங்குள்ள அருட்தந்தை முனைவர் பிராங்காய்ஸ் ஹூடார்ட் அவர்களால் டோனிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேவாலயத்தில் அளிக்கப்பட அனுபவத்தின் வெளிப்பாடு அவரைத் தேவாலயங்களில் காணப்பெறும் அநீதிகளுக்கெதிராய் கலகக் குரல் எழுப்ப வைத்தது. ஏழை, எளியோர்க்கு ஆதரவாய் தேவாலயம் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஒலிக்கச் செய்தது.

டோனி நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கானோருடன் வீதியில் இறங்கி போராடவும் கற்றுக்கொண்டார், இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவோம் என்பது போன்ற சிரமங்களை உணராமல் செயற்பட்டார். இதன் காரணமாக அருட் தந்தை செராக் அவர்களின் “ஆயிரம் கிணறுகள் திட்டத்தில்” பணிபுரிய டோனி மீண்டும் மானாமதுரைக்குத் திரும்பினார்.

‘தமிழ்நாட்டில் தீண்டத்தகாதவர்களின் சமூக அடிப்படை’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற வேண்டிய முடிவான குறிக்கோளுடன் டோனி சிகாகோ சென்றார். தேவாலயத்தில் சாதி இல்லை என்ற பொய்மையை உடைத்து , தேவாலயத்தின் தொட்டிலில் இருந்து கல்லறைத் தோட்டம் வரை சாதியம் விரவிக் கிடக்கிறது என்ற மெய்மையை நிறுவ முயன்றார்.

1975 ஆம் ஆண்டு ஓர் இரவின் இருளில் ஒரு கடப்பாரையை நான் பெற டோனி உதவுங் கரமாய் இருந்தார். அந்த நள்ளிரவில் “அருட்தந்தையர் தாங்கும் விடுதிக்” காவலாளியின் கண்ணை மறைத்துத் தேவாலயத்தை அடைந்து 40 அடி உயர மதிற்சுவரைத் தாண்டி நான் பெருமிதம் கொள்ளும் ஒரு செயலைச் செய்ய டோனி உதவியது என்னை ஊக்கப்படுத்தியது.

அச்செயல் கத்தோலிக்கக் கல்லறைக்குச் சென்று அங்குள்ள ஆதிக்க சாதியினரின் கல்லறையையும், தலித் சமூகத்தினரின் கல்லறையையும் பிரிக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்தெறிவதாகும். 2016 இல் நான் பெர்லினில் இருந்தபோது, பெர்லின் சுவர் இடிப்புப் பற்றிக் கருத்துக் கூறுமாறு என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் பதிலுரைத்த போது பெர்லின் சுவரை உடைப்பது எளிதானது.

ஆனால் இந்திய சூழலில் புரையோடிக்கிடக்கும் சாதியப் பாகுபாடு, தீண்டாமைஆகியவற்றின் சுவரைத் திருச்சபைகளின் கிளைகள், குடும்பங்கள் ஆகியவற்றில் உடைக்க வேண்டும், இத்துடன் சபைகள், அதிகார நிலைகள், ப்ரொவின்சியல், ஜெனரல்கள், மதர் ஜெனரல்கள் போன்றவற்றுக்கான தேர்தல்களில் காணப்பெறும் சாதியச் சுவர் உடைக்கப்பெற வேண்டும் என்று கூறினேன். நான் உடைத்த தீண்டாமைச் சுவர் 15 நாட்களுக்குள் சிமென்ட் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.

இறுதியாக என் அனுபவத்தில் இப்போது நான் கூற விரும்புவது , இன்னும் பல ஆண்டுகள் என் நினைவில் நிற்கும். மதுரை அண்ணா நகர் எம்.ஐ.ஜி பிளாட்டில்உள்ள என் வீட்டிற்கு ஒரு சிறிய விருந்துக்கு நீங்கள் வந்து என் எளிய குடும்பத்தின் அன்பை அனுபவித்த நாட்களை நான் மறக்க மாட்டேன்.

ஆனால் டோனி, நான் உங்களிடம் சொல்லாத ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டிய நேரமிது. அருட்தந்தைகளுக்கும் இது தெரியாது. உங்களுடைய நெருங்கிய நண்பரும், கொடையாளருமான அருட்தந்தை செராக், எனது தாயின் (டாக்டர் திபேன் ) மிக நெருங்கிய நண்பரும், எனது வழிகாட்டியுமான, அவர் இறப்பதற்கு முன் ஒரு முறை அவருடைய வாகனத்தில் பயணம் செய்து மதுரையில் நிறுத்தும்போது, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுகிறீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையில் நான் எதிபார்த்ததை நீங்கள் இன்னும் செய்யவில்லை என்று கூறினார்.

நான் அவரிடம் சொன்னேன், உங்கள் கல்வித் திறன் இத்துடன் இனவெறி, பிற நாட்டினரிடம் வெறுப்பை உமிழ்தல், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தீண்டாமை ஆகியவை பற்றிய உங்கள் புரிதல் மேலும் உங்கள் அரசியல் உறவுகள் அனைத்தையும் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.

2001 இல் இனவெறிக்கு எதிரான உலக மாநாட்டிற்கு தலித் தூதுக்குழுவை நீங்கள் வழிநடத்தியது வரலாற்றுச் சிறப்புடையது. டர்பன் பிரகடனம், டர்பன் மாநாடு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்தும் ஒரு நல்வாய்ப்பை இழந்துவிட்டன, ஆம் ....நீங்கள் அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களும், அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றை அறிந்து கொள்வார்கள், கற்றுணர்ந்த இறுமாப்புடன் போராடிய களப் போராளியாக ஒரு டோனி மட்டுமே இருக்க முடியும் என்று நம்புகிறேன். அவரது கனவுகள் மெய்ப்பட வேண்டுமெனில் அவர் வாழ்ந்த மண்டேலா நகரில் தனிச் சிறப்புடைய “தலித் பெண்கள் பல்கலைக்கழகம்” உருவாக இணைந்து செயற்படுவோம்.

அவருடைய பெருமைமிகு வாழ்க்கையைக் கொண்டாட வேண்டிய நேரமிது. ஆனால் திருச்சபையினுள் சாதியையும் தீண்டாமையையும் அனுமதித்தால், நாம் வெட்கித் தலையைக் குனிந்து தான் திருச்சபைக்குள் பணியாற்ற முடியும்.

தற்போது தலோஜா சிறையில் இருக்கும் அருட் தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களை 2019 இல் டோனியுடன் மதுரையில் உள்ள அவருடைய டாக்கா நிறுவனத்தில் சந்திக்கும் நல்வாய்ப்பு கிட்டியது. மதுரையிலுள்ள திருச்சபைகளில் அந்த இடத்தை அருட் தந்தை ஸ்டேன் சுவாமி மிகவும் நேசித்தார்.

ஏனெனில் அவர் டோனியை நேசித்தார். நான் மிகவும் மகிழ்வுடன் இருக்கிறேன். பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த என்னையும் டோனியையும் ஒன்று சேர்த்தார். நாங்கள் இருவரும் பல விவாதங்களில் பங்கேற்றோம்.

எங்கள் குடும்பத்தின் அன்புகெழுமிய உறுப்பினரை நாங்கள் இழந்து விட்டோம். ஆனால் அதிகாரத்தில் உள்ள அனைவர்க்கும், ஒன்றை நினைவு கூர்கிறேன், அவருடன் பல ஐய்கப்(AICUF) உறுப்பினர்கள் இருந்தார்கள். கத்தோலிக்கத் திருச்சபை மீண்டும் ஐய்கப் (AICUF) இல் முதலீடு செய்ய வேண்டிய முதன்மையான நேரமிது.

டோனி நீங்கள் புதைக்கப்படவில்லை, ஆனால் ஆண்டுதோறும் மே 10 ஆம் தேதி திரும்பி வருவதற்காக டாக்கா (DACA)வில் விதைக்கப்பட்டுள்ளீர்கள். நம்மை மதிப்பீடு செய்து நமக்குள் கேள்வி எழுப்ப " தேவாலத்தியற்குள் சாதியை அழித்தொழிக்க திருச்சபைகள் பங்களித்திருந்தால்". ”. உங்கள் தோழர்கள் அருட்தந்தை ஜேசுமரியான், அருட்தந்தை ஞானப்பிரகாசம், அருட்தந்தை வர்கீஸ் இவர்களுடன் டாக்கா (DACA) குழுவிநாரோடு உங்கள் பணி தொடரும்.

நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் உடன்படவில்லை, ஆனால் உங்கள் உயர் நோக்கத்தை நாங்கள் பெரிதும் இழக்க நேரிடும், குறிப்பாக நான் உட்பட. ஒன்றாக வாழ விதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் ஒன்றாக வருவார்கள். வெகுவிரைவில் சந்திப்போம்... டோனி!

- ஹென்றி திபேன்