corona death in usகொரோனோ இராண்டாவது அலை ஆழிப்பேரலையாக இந்தியாவை தாக்கிக் கொண்டிருக்கின்றது. தன் முதுகுக்குப் பின்னால் மரணம் நின்று கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தே ஒவ்வொரு சாமானிய மனிதனும் தன் அன்றாட பிழைப்புக்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

யாரிடமும் எந்த மகிழ்ச்சியும் இல்லை. நூற்றுக்கணக்கில் பிணங்கள் எரியும் சுடுகாடுகளையும், மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ்களில் நீண்ட தூரம் வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளியில் காத்திருக்கும் நோயாளிகளையும், பூக்கள் அடித்துவரும் ஆறுகளில் கொரோனோவால் இறந்தவர்களின் அழுகிய பிணங்கள் அடித்துவருவதையும் தினம் தினம் பார்ப்பவர்கள் எப்படி, மகிழ்ச்சியாக இருக்க முடியும்?.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பதற்றமான மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் உறுதியாக பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதையே விரும்புகின்றார்கள். ஆனால் உழைத்தால் மட்டுமே சோறு என்று நிலையில் அவர்களை வைத்திருக்கும் அரசு அவர்களை பெரு முதலாளிகளின் தொழிற்சலைகளில் வேலை செய்து பிழைத்துக் கொள்ளவும், அது முடியாது போது தெருவில் பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளவும் நிர்பந்திக்கின்றது.

கொரோனோவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றாலும் அதன் நிலை வெட்கக் கேடாகவே இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியாவில் முதல் டோஸ் 9.7 சதவீதம் பேருக்கும் இரண்டாவது டோஸ் வெறும் 2.4 சதவீதம் பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசிகளையும், நோய் வந்தால் மருத்துவமனைகளில் படுக்கையையும், ஆக்சிஜனையும் வழங்க துப்பில்லாத அரசு தனது கையாலாக கார்ப்ரேட் அடிமை தனத்தை மூடி மறைக்க இறப்பு எண்ணிக்கையை குறைத்துக்காட்டுவதாக பல ஊடகங்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திவிட்டன.

கொரோனோ மரணங்களில் 80 சதவீத மரணங்கள் மறைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் இந்தியா ஒரு மில்லியன் கொரோனோ இறப்புக்களை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடுகின்றது.

ஆனால் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் கணித பாடத்திற்கான மூத்த விரிவுரையாளர் டாக்டர் முராத் பனாஜி இந்தியாவில் அந்த பேரழிவுகர எண்ணிக்கை ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டது என்கிறார்.

நாம் ஒரு மாய உலகத்தில் அமிழ்ந்திருக்க சங்கிகளால் கட்டாயப்படுத்தப் படுகின்றோம். அந்த மாய உலகில் இந்திய மக்கள் அனைவரும் செல்வச் செழிப்பாக, மற்ற நாட்டு மக்கள் எல்லாம் பொறாமைபடுமாறு வாழ்ந்து வருகின்றார்கள். நகர் வலம் வரும் மோடி தனது ராம ராஜ்ஜியத்தில் மக்கள் நோயின்றி வாழ்வதையும் பட்டு பீதாரம்பரங்கள் அணிந்து செருக்கோடு திரிவதையும் பார்த்தபடி பரவசத்தோடு செல்கின்றார்.

ஆனால் சங்களின் மூளைக்கு வெளியே இருக்கும் உலகமோ மரண ஓலமாக உள்ளது. எறியும் பிணங்களின் புகை மூட்டத்தில் கண்ணீரும், வலியும், கதறலும் கலந்து அவை இந்தியாவின் ஆன்மீக அரசின் மனத்தை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.

மோடி நினைத்திருந்தால் நிச்சயம் இந்நேரம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளித்திருக்க முடியும். ஆனால் எல்லாமே கைமீறிப் போய்விட்டது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தடுப்பூசி போட 60 ஆயிரம் கோடியில் இருந்து 65 ஆயிரம் கோடிகள் வரைதான் செலவாகும்.

இந்தியாவில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் நாட்டின் மொத்த சொத்துக்களில் 77 சதவீதத்தை வைத்திருக்கின்றார்கள். அதிலும் வெறும் 9 கோடீஸ்வரர்கள் 50 சதவீத சொத்துக்களை வைத்திருக்கின்றார்கள். ஆனால் ராமராஜ்ஜியத்தில் ஒரு தனி மனிதன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வது அவனது பொறுப்பு என்பதால் மோடி ராமனின் பெயரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அம்போ என விட்டுவிட்டார்.

இதுவரை நாட்டில் எங்கும் முற்று முழுதான பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை. மோடி பொதுமுடக்கம் என்பதை கடைசி வாய்ப்பாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார். அதாவது மொத்த மாநிலமும் சுடுகாடாக மாறியபின்தான் பொதுமுடக்கம் அறிவிக்க வேண்டும் என்பது மன்னரின் கட்டளையாக உள்ளது.

அதை தழுவியே மாநிலங்கள் சாமானிய மக்களை சாகடிக்கும் வழியிலான பொது முடக்கத்தை அறிவித்து வருகின்றன. சிறு குறு தொழிற்சாலைகளை எல்லாம் இழுத்து மூடச்சொல்லிவிட்டு பெரும் கார்ப்ரேட் கம்பெனிகளை எல்லாம் இயங்க அனுமதித்து இருக்கின்றன. அவர்களின் கார்ப்ரேட் மொழியில் செல்போன் தொழிற்சாலைகள் கூட அத்தியாவசியமாக இருக்கின்றன.

மனசாட்சி இல்லாத, கடவுளின் பெயரால் ஆட்சி பொறுப்பை ஏற்றவர்கள்தான் காட்டாட்சி செய்கின்றார்கள் என்றால் இங்கே தமிழகத்தில் ‘மனசாட்சி’ படி ஆட்சி செய்பவர்களும் அதே வழியில்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நாடே சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் கூட அவர்களால் தங்களுக்கு நிதியளித்த கார்ப்ரேட்டுகளின் நலனில் கைவைக்க ‘மனசாட்சி’ இடம் தரவில்லை.

ஆனாலும் அவர்கள் மனசாட்சி படியே ஆட்சி செய்கின்றார்கள். மனசாட்சியின் ஆட்சியில் மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, அவற்றின் மூலப் பொருட்களுக்கான கூறுகள் மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், உரங்கள், விவசாய இயந்திரங்கள், விவசாய உள்ளீடுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள், சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், சர்க்கரை ஆலைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்ததை புரிந்துக் கொள்ள முடிகின்றது.

ஆனால் மனசாட்சியின் அரசு “அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள் நிறுவனங்கள், ஏற்றுமதி பொறுப்புறுதிகள் அல்லது ஏற்றுமதி ஆணைகள் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எஃகு ஆலைகள், பெரிய சிமெண்ட் ஆலைகள், வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட தொடர் செயல்முறை வேதியியல் தொழிற்சாலைகள், மிதவை கண்ணாடி ஆலைகள், தொடர் செயல்முறையுடன் கூடிய பெரிய வார்ப்பாலைகள், டயர் உற்பத்தி தொழிற்சாலைகள், பெரிய காகித ஆலைகள், மொபைல் போன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்புகள் தொழிற்சாலைகள், பெயிண்ட் கடைகள் அல்லது பிற தொடர்ச்சியான செயல்முறைகளைக் கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் போன்ற நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி அளித்துதான் ஏன் என்று தெரியவில்லை.

மனசாட்சியின் அரசு அனுமதி கொடுத்த மேற்குரிய தொழிற்சாலைகள் எல்லாம் ஆயிரக்கணக்கான நபர்களை பணி அமர்த்தி உற்பத்தி நடைபெறும் தொழிற்சாலைகள் ஆகும். ஆனாலும் மனசாட்சியின் அரசு பொது முடக்கம் என்று அறிவித்துவிட்டு சிறு குறு தொழிற்சாலைகளையும் எல்லாம் மூடச் சொல்லிவிட்டு தனக்கு அதிகம் மனசாட்சி படி நிதிகொடுக்கும் பெரும் கார்ப்ரேட் கம்பெனிகளின் பொருட்களை எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து இயங்க அனுமதி கொடுத்திருப்பது மனசாட்சியின் அரசுக்கு மனசாட்சி இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

தமிழ்நாட்டின் ஒரு நாள் பாதிப்பு ஏறக்குறைய முப்பதாயிரத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. தினமும் 250க்கும் குறைவில்லாத மரணங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

ஆனாலும் மனசாட்சியின் அரசு நோய் தொற்று ஏற்பட்டு செத்தாலும் பரவாயில்லை கார்ப்ரேட்களின் நலனே முக்கியம் என புன்முறுவலோடு அவர்கள் தங்களின் உற்பத்தியை தொடர்ந்து நடத்த அனுமதித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனோ தொற்று அதிகம் ஏற்படும் மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டு இருக்கின்றது. இன்னும் இரண்டு வாரத்தில் தொற்று எண்ணிக்கை உச்சத்தை தொடும் என வல்லுநர்கள் சொல்கின்றார்கள். அப்படி என்றால் மரண எண்ணிகையும் உச்சத்தை தொடும் என்று தான் அர்த்தம்.

இனி வட மாநிலங்களை போல தமிழ்நட்டிலும் சுடுகாடுகள் விடிய விடிய எரிவதை நாம் பார்க்கலாம். ஆறுகளில் மிதந்துவரும் பிணங்களை பார்க்கலாம். மருத்துவமனைகளுக்கு வெளியே இடம் கிடைக்காமல் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள் அதைத்தான் கட்டியம் கூறுகின்றன.

அதனால் என்ன? நாம் வேலைக்கு செல்வோம். கார்ப்ரேட்களின் நலன் மிக முக்கியமானது. கார்ப்ரேட் நலனே நாட்டின் நலன். இந்த கொரோனோ காலத்தில் கூட இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்கள் ஒவ்வொரு நாளும் 5 பில்லியன் சேர்த்திருக்கிறார்கள்.

அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 75 சதவிகிதம் உயர்ந்திருக்கின்றது என்றால் சும்மாவா?.

கடவுளின் பெயரால் ஆட்சி செய்யும் அரசுக்கும் மனசாட்சி படி ஆட்சி செய்யும் அரசுக்கும் இடையிலான வித்தியாசத்தை இப்போதாவது நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.

- செ.கார்கி