balachandran eelamதங்கள் விடுதலைக்காக 60 ஆண்டுகளாக போராடிய ஈழத்மிழர்களை 2009இல் இனப்படுகொலை இலங்கை அரசோடு சேர்ந்துக் கொண்டு இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இனப்படுகொலை செய்தது. இதற்கு நீதி கேட்டு தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்திய, அமெரிக்க அரசுகள் இலங்கையோடு சேர்ந்துக் கொண்டு தமிழர்களுக்கான நீதியை மறுத்து வருகிறது.

ஆண்டுதோறும் ஐநாவில் போலியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதும், அந்த தீர்மானத்தை இலங்கையே ஆதரிப்பதும், அதில் தங்கள் நாட்டு நலன்களை முன் நிறுத்துவதுமாக சூழ்ச்சிகள் தொடர்கிறது. இறுதியாக இந்த ஆண்டு 2021 மார்ச் மாதம் மேலும் 10 ஆண்டுகள் அவகாசத்தை தரும் மிக பலவீனமான தீர்மானத்தையும் இந்திய அரசு விரும்பாமல் தனது சிங்கள தேசத்தின் அரசியல் நட்பிற்காக தோற்கடித்தது.

போர் முடிந்த இந்த 12 ஆண்டுகளில் தமிழர்களுக்கான மீள்குடியேற்றம் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்பதோடு, அவர்களின் நிலங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களான கோயில்களில் புத்த விகாரங்களை நிறுவுவதும், அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் இரவோடு இரவாக தமிழர் பகுதிகளில் சிங்கள பண்பாட்டு அடையாளங்களை புகுத்தி தமிழர்களின் பூர்வீக தன்மையையே மாற்றும் வேலையை சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்து வருகிறது.

தமிழர்களை அழித்து முடித்த கையோடு இப்போது இலங்கையில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியர்களையும் பௌத்த பேரினவாத சிங்கள அரசு ஒடுக்கி வருகிறது. அவர்களின் மத அடையாளங்களை அழிப்பதும், அவர்களின் பழக்கவழக்கங்களில் சட்டத்தின் மூலம் கைவைப்பதுமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசு நகர்கிறது.

இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய சர்வதேச சமூகம் அமைதியாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா இலங்கையில் தங்களது கூட்டாளிகளான அதானி அம்பானிகளுக்கு பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக, தமிழர்களுக்கான தீர்வை முற்றுமுழுதாக மறுத்து வருகிறது.

2009 மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் போர்சூழல் பகுதியில் வாழும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சிறப்பு கண்காணிப்பு ஐநா அதிகாரி குழந்தைகள் ஈழத்தில் சாவின் விளிம்பில் இருப்பதாக அறிக்கை கொடுத்தார்.

அதே போல இனப்படுகொலை தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியும் இனப்படுகொலை நடக்கும் வாய்ப்பிருப்பதாக அறிக்கையை வெளியிட்டும் இப்படுகொலைகளை நிறைவேற அன்றைய ஐநா தலைவர் பான்-கீ-மூனும், துணை அதிகாரியான விஜய் நம்பியாரும் சிங்களப்படைக்கு சாதகமாக நடந்துக் கொண்டதால் 70,000 தமிழர்கள் போரின் இறுதி நாட்களான மே17, 18,19 இல் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டதட்ட 30,000 குழந்தைகள் படுகொலையாகினர், 90,000 பெண்கள் கணவரை இழந்தனர்.

பல பெண்கள் பாலியலாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை இசைப்பிரியாவின் படுகொலை காணொளி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு பாலகன் பாலச்சந்திரன் படுகொலைச் செய்யப்பட்ட படங்கள் வெளியாகின. இது போன்ற பல தகவல்கள் வெளியான பின்னரும் சர்வதேச விசாரணைகள் துவங்கவில்லை எனும் குற்றச்சாட்டை மே17 இயக்கம் தொடர்ந்து முன் வைக்கிறது.

இந்த சூழ்நிலையிலேயே நாம் இந்த 12 வது ஆண்டு நினைவேந்தலை நடத்த வேண்டியது மிக கட்டாயமாகும்.1915ஆம் ஆண்டு துருக்கி அரசு ஆர்மீனியர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்மீனியர்கள் போராடியதன் விளைவே கடந்த மாதம் அமெரிக்க அரசு ஆர்மினியர்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்று ஏற்று இருக்கிறது. இன்று அவர்கள் அந்த இனப்படுகொலைக்கான தீர்வு நோக்கி நகர்ந்து விட்டார்கள். அதுபோல தொடர்ந்து நாம் போராடும் பொழுது தான் நமக்கான நீதி கிடைக்கும்.

ஆகவே நமது கோரிக்கையான தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதும், இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரியும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் இந்த பன்னிரண்டாம் ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை குடும்பத்தோடு வரும் மே மாதம் 18ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வீடுகளிலிருந்தே மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூறுவோம்.

- மே பதினேழு இயக்கம்