PUCLஇந்த மாதத்தின் தொடக்கத்தில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த மூன்று கொலைகள் பொதுச் சமூகத்தின் கண்டனத்தை எதிர் கொண்டன. ஒன்று அரக்கோணம் இரட்டைப் படுகொலை; இன்னொன்று தேவியானந்தல் படுகொலை. இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், பட்டியலின இளைஞர்கள் அர்ச்சுனன் மற்றும் சூர்யா கொல்லப்பட்டார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவியானந்தல் கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்த இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைகள், சமூகத்தில் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் நடக்கும் ஒடுக்குமுறைகளை ஒழிக்க அரசும், சிவில் சமூகமும் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் 2017-19 காலகட்டத்தில் சராசரியாக 5717 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2019 புள்ளி விவரப்படி, இந்தக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 10% நபர்களே தண்டனை பெற்றுள்ளனர். மேலும், 2019 புள்ளி விவரத்தின் படி, கொலை செய்யப்பட்டவர்களில் 35% பேர் பெண்களாக இருக்கின்றனர்.

அதேபோல், 2019 புள்ளி விவரப்படி, தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 1144 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 52 வழக்குகள் கொலைக் குற்றங்களோடு தொடர்புடையவை. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில், நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற 967 வழக்குகளில், வெறும் 17 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

மேலும், ஜூன் 25, 2013 முதல் செப்.8, 2020 வரையிலான ஏழாண்டு காலகட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நடைமுறைப் படுத்தலைக் கண்காணிக்க வேண்டிய மாநில அளவிலான, முதலமைச்சர் தலைமையிலான உயரதிகாரக் குழு ஒருமுறை கூட கூடவில்லை என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில், இது போன்ற தமிழக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

தேவியானந்தல் சரஸ்வதி கொலை, மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பெண்கள் தங்கள் இணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையின்றி தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சமூகச் சூழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

திருமணத்தைப் பொருத்தவரை, பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோர் சமூக, சாதிய, கலாச்சார, அரசியல் காரணங்களுக்காக பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர். சில நேரங்களில் அவர்களின் உயிரும் பறிபோகும் அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இது பெண்களுக்கு சம உரிமை தர மறுக்கும் அப்பட்டமான ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே!

ஆணோ, பெண்ணோ ஒடுக்கப்பட்டச் சமூகம் என்றால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பதும், தான் காதலித்த பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கொலை வரை ஆண்கள் செல்வதும் கடும் கண்டனத்திற்குரிய செயல்கள்; மனித உரிமை மீறல்கள்.

அதேபோல், சாதிய உணர்வு கொண்ட ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சி அடைவதை மனதளவில் வெறுப்பவர்களாகவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்ப்பவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம். மனிதர்களை சக மனிதர்களாக நடத்த மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதையும், அதை ஒருபோதும் நாகரிகச் சமூகம் பொறுத்துக் கொள்ளாது என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, பியூசிஎல் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. அரக்கோணம் இரட்டைப் படுகொலை மற்றும் தேவியானந்தல் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தருவதில் தமிழகக் காவல்துறை மிகத் தீவிரமாகவும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.

2. இது போன்ற வழக்குகளில் காவல்துறையும், நீதிமன்றங்களும் கால தாமதமின்றி செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும்.

4. பள்ளி தொடங்கி கல்லூரி வரை, செயல் வழி கற்றல் பயிற்சிகள் மூலம், மாணவர்களுக்குச் சமூக மற்றும் பாலின சமத்துவம் குறித்து, உரிய பாடத்திட்டங்களின் வாயிலாகப் புரிதலை உருவாக்க வேண்டும். அதேபோல், அரசு அலுவலர்களுக்கும், காவல்துறையினருக்கும் கூட இது போன்ற பயிற்சிகளை வழங்குவது அவசியம்.

5. பெண்கள் மற்றும் பட்டியலின/ பட்டியல் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுப்பதையும், தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான உயரதிகாரக் கண்காணிப்புக் குழு, இது குறித்து ஆய்வு செய்து, புள்ளி விவரங்களையும், அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் பொது வெளியில் வைக்க வேண்டும்.

6. பாலின, சமூக சமத்துவம் என்ற இலக்கை எட்ட ஜனநாயக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.

(கண. குறிஞ்சி)                                                                               (க.சரவணன்)

மாநிலத் தலைவர்                                                                          மாநிலப் பொதுச் செயலர்