leaders tamilnaduதேர்தல் திருவிழா கலைகட்டிக் கொண்டு இருக்கின்றது. ஊரெங்கும் வண்ண வண்ணக் கொடிகளும், கொள்கைகளைப் பரப்புரை செய்யும் வாகனங்களும் இடைவிடாமல் நம் கவனத்தைக் கோரிக்கொண்டு இருக்கின்றது.

சென்ற தேர்தலில் வாக்குக் கேட்க வந்த வேட்பாளரின் முகத்தை மீண்டும் இந்தத் தேர்தலில் பார்க்கும் பரவசத்தை பெரும்பாலான நபர்களிடம் பார்க்க முடிந்தது. நண்டு சிண்டுகள் எல்லாம் கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு, கழுத்தில் கட்சி துண்டை போட்டுக் கொண்டு அவரவர்களின் வெற்றி வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்கின்றனர்.

இன்னும் சில நாட்களுக்கு அவர்களுக்கு சரக்குக்கோ சைடிஸ்கோ பிரச்சினை இல்லை என்று விபரமறிந்தவர்கள் சொல்கின்றார்கள். ஜனநாயகத்தின் திருவிழா ‘குடிமகன்களுக்கு’ மட்டும் எப்போதும் மகிழ்ச்சியை வழங்கி விட்டு செல்வதைத் தனது வாடிக்கையாகவே வைத்திருக்கின்றது.

ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை இல்லாத ஏதோ ஒன்றைச் செய்யப் போவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. அவை ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி. அவை ஆட்சியில் இருந்த போது ஏன் அதை செய்யவில்லை என்று மக்கள் ஒரு போதும் கேட்பதில்லை.

அவர்களுக்கு நன்றாகத் தெரியும் வாக்குறுதிகள் எல்லாம் தங்களை ஏமாற்ற அரசியல் கோமாளிகள் செய்யும் தகிடு தத்தம் என்று. பல ஆண்டுத் தேர்தல் அரசியலில் இருந்து அவர்கள் பெற்ற பட்டறிவு இது.

அவர்கள் அரசியல்வாதிகளைப் போல சுற்றி வளைத்துப் பேச விரும்புதில்லை. நேரடியாகவே கேட்கின்றார்கள். ‘ஓட்டுக்கு எவ்வளவுப் பணம் தருவீர்கள்’ என்று. அப்படிப் பெறுகின்ற பணம் மட்டும் தான் ஜனநாயகத்தை வாழ வைப்பதன் மூலம் தாங்கள் அடையும் நேரடி ஆதாயமாக நினைக்கின்றார்கள்.

ஐந்தாண்டுக்கு ஒரு முறைக் கிடைக்கும் சில நூறுகளும் ஆயிரங்களும் எந்த வகையிலும் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவாது என்று எப்படி நம்புகின்றார்களோ அதே போலத்தான் வேட்பாளரையும் அவர்கள் நம்புகின்றார்கள்.

அவர்களை பொருத்தவரை வேட்பாளர் என்பவன் தங்களை கொள்ளையடிக்க உரிமைக் கோரும் ஒரு நபர். அதற்காகப் பணத்தை செலவு செய்து ஓட்டை வாங்குகின்றார். யார் அதிகம் பணத்தைத் தருகின்றார்களோ அவர்களுக்குத் தங்களைக் கொள்ளையடிக்கும் உரிமையை நேர்மையாக வழங்க வேண்டும் அவ்வளவுதான்.

நாம் தேர்தலில் பாசிசத்தைத் தோற்கடிப்பதப் பற்றி பேசிக் கொண்டு இருக்கின்றோம். அது உண்மையில் முக்கியமானதும் கூட. மக்களைச் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து, ஒற்றைப் பண்பாட்டை ஒட்டு மொத்த தேசத்தின் பண்பாடாகக் கட்டமைக்க முயலும் பாசிஸ்ட்களை தேர்தல் களத்தில் இருந்து மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்தும் நாம் விரட்டி அடித்தாக வேண்டும்.

ஆனால் நாம் பேச மறுக்கும் மற்றொரு முக்கியமான பொருள் தேர்தல் அரசியலில் இருந்து சாமானிய மக்கள் திட்டமிட்டு கடைக் கோடிக்கு விரட்டப் படுவது. ஒவ்வொரு வேட்பாளரும் சாதி ரீதியாக, மத ரீதியாக அடையாளம் காணப்பட்டுச் சீட்டுக் கொடுக்கப் படுவதைப் போல, ஒவ்வொரு தொகுதிக்கும் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் பணம் செலவு செய்யப்படும் என்பதை பொறுத்தே சீட் கொடுக்கப் படுகின்றது.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு உங்களுக்கு நிறையப் பணம் தேவைப்படும் என்பதுதான் நம் ஜனநாயகத்தின் உன்னத நிலையாகும். உங்கள் சமூக அக்கறையை நீங்கள் காட்ட வேண்டும் என்றால் நீங்கள் பெரும் பண முதலையாக இருக்க வேண்டும். தினம் ஐம்பதுக்கும் நூறுக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் சாமானிய மனிதர்களுக்கு ஜனநாயகத்தில் கடைசி வரைக்கும் பார்வையாளர் பதவி மட்டுமே வழங்கப்படும்.

இன்று பல அமைப்புகள் குறிப்பாக நேற்று வரை தேர்தல் புறக்கணிப்பைப் பேசி பல பேரை ஓட்டுப்போடுவதில் இருந்து விலக்கி வைத்திருந்தவர்கள் இன்று பாசிசத்தைத் தோற்கடிக்க ஓட்டுப் போடச் சொல்லிப் பரப்புரை செய்கின்றார்கள். அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் விளக்கமாத்துக்குப் பட்டுகுஞ்சம் கட்டுவதைப் போன்று தான் உள்ளது.

பாசிசத்தை பற்றிய நம் பதற்றம் உண்மையில் நியாயமானதாக இருக்குமேயானால் சாமானிய மக்களைத் தேர்தலில் பங்கேற்பதில் இருந்து அடித்து விரட்டிவிட்டு அந்த இடத்தில் ரியல் எஸ்டேட் மாஃப்பியாக்களும், சாராய ஆலை அதிபர்களும், கல்விக் கொள்ளையர்களும் ஆக்கிரமிப்பதை எப்படி நம்மால் பார்த்துக்கொண்டு அதை விதந்தோத முடிகின்றது என்பதுதான்.

பார்ப்பனப் பாசிசம் மக்கள் சிந்தனை ரீதியாக மட்டுமேக் காயடிக்கின்றது. ஆனால் முதலாளித்துவப் பாசிசம் மக்களைத் தினம் தினம் வறுமையில் கொல்கின்றது. ஒன்றோடு ஒன்று இணைந்துத் தொழில் புரிகின்றது.

‘தேர்தல் பாதையைப் புறக்கணிப்புச் செய்யுங்கள்’ ‘தேர்தல் பாதைத் திருடர் பாதை’ எனப் பல ஆண்டுகள் வாய் கிழிய பேசி விட்டு இன்று பார்ப்பனப் பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி முதலாளித்துவப் பயங்கரவாதத்தை மக்களை ஏற்றுக் கொள்ள சொல்வது கடைந்தெடுத்தப் பிழைப்பு வாதமல்லாமல் வேறில்லை.

தேர்தல் பாதையை அங்கீகரிக்கும் அதே வேளையில் அது எப்படிச் சாமானிய மக்களுக்கு அந்நியமாக உள்ளது என்பதையும் பணக்கார வர்க்கம் மட்டுமே பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் ஜனநாயகம் நிச்சயமாகப் போலி ஜனநாயகமாகவே இருக்கும் என்பதையும்  பேசி இருக்க வேண்டும்.

நாமும் தேர்தல் பாதையை அங்கீகரிக்கின்றோம். ஆனால் அதன் சீரழிவை அம்பலப்படுத்துகின்றோம். அம்பலப்படுத்துதலும் அதற்கு எதிரான வலுவானப் போராட்டமுமே குறைந்தப் பட்சமாகவேனும் இந்த ஜனநாயகத்தை அதன் உண்மைத் தன்மைக்கு நெருக்கமாகக் கொண்டுச் செல்ல உதவும். அதை பேச மறுப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தை முற்றும் முழுதாகக் கைப்பற்றி வைத்திருக்கும் பெரு முதலாளிகளின் ஏவல் நாயாக நாம் மாறிவிட்டோம் என்பதை மட்டுமே காட்டிக் கொடுக்கும்.

2019 இல் நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில்  55000 கோடியில் இருந்து 60000 கோடி வரைச் செலவிடப்பட்டதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. தேர்தல் செலவினங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் இந்தத் தொகை என்பது தேர்தல் ஜனநாயகத்தின் விதிகளுக்கு முற்றிலும் சட்ட விரோதமாகும்.

மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ 50 லட்சம் முதல் 70 வரையிலும் சட்டமன்றத் தேதலில் 20 லட்சம் முதல் 28 லட்சம் வரையிலுமே செலவுச் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த இந்தத் தொகையை கணக்கிட்டால் அது ஏறக்குறைய 6640 கோடியைத் தாண்டுவதில்லை.

ஆனால் செலவு செய்யப்படும் தொகை இதை விட பல மடங்கு உள்ளது. குறைந்த பட்சம் ஒவ்வொருத் தொகுதியிலும் 100 கோடி வரைச் செலவிடப்படுகின்றது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்தப் பட்சம் தலா ரூ 700 வழங்கப்படுகின்றது.

கடந்த தேர்தல்களில் இப்படிச் செலவிடப்பட்ட தொகையில் 45 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை பிஜேபியால் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரைச் செலவிட்டுள்ளது.

இப்படி செலவிடப்படும் தொகை முழுவதும் பெரும் கார்ப்ரேட்கள் மூலமே பெறப்படுகின்றது. இதற்காகவே பிஜேபி அரசால் கொண்டு வரப்பட்டது தான் தேர்தல் பத்திரங்கள் என்ற சூதாட்ட பத்திரங்கள். இதன் மூலம் எந்த அரசியல் கட்சி எந்த கார்ப்ரேட்டுகளிடம் இருந்து எவ்வளவு நிதிப் பெற்றார்கள் என்ற விபரத்தை நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூட பெற முடியாது.

கடந்த 2019 ஜனவரியில் இருந்து மே மாதம் வரையிலும் ரூ 4794 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதுச் சட்டப்படிக் குற்றமாக அறிவிக்கப்பட்டாலும் அது தொடர் கதையாக தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. கண் துடைப்புக்காகத் தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் இதுவரைப்  பணம் கொடுக்கும் எந்தக் கட்சியும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.

முறைகேடாகத் தேர்தல் நேரத்தில் கொண்டுச் செல்லப்பட்ட பணத்தை 2014 ஆண்டும் 1200 கோடி வரை கைப்பற்றிய தேர்தல் ஆணையம் 2019 ஆண்டு 3475.76 கோடி வரை கைப்பற்றியது. ஆனால் இதற்காக யாராவது இதுவரைத் தண்டிக்கப் பட்டார்கள் என்று நம்மால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாத படி சில விதிமுறைகளை வகுத்திருக்கின்றது அதன் படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதான வழக்குகள் குறித்து, பிரசாரக் காலத்தில் ஊடங்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.

குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளா்கள் வாக்குப் பதிவுக்கு முன்பாக மூன்று முறை அதுகுறித்த விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கெனப் படிவம் சி1 உள்ளது. இந்தப் படிவத்தில், நிலுவையில் உள்ள வழக்கு விவரம், எந்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது, குறைந்தப் பட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை விவரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். இந்தப் படிவத்தை பூா்த்திச் செய்து, அதனை அப்படியே பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இதுகுறித்த விவரத்தை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டுமெனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமும் பத்திரிகைப் படிக்கும் நபர்களுக்குத் தெரியும் அப்படியான எந்த ஒரு செய்தியும் பத்திரிகையில் வருவதில்லை என்று. பொறுக்கிகளும், ரவுடிகளும், மாஃபியாக்களும் வழக்கம் போலத் தேர்தல் பவனி வந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சிபிஐ வேட்பாளரான தளி ராமச்சந்திரன் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

ஒவ்வொருத் தேர்தலிலும் 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே வாக்குப் பதிவு நடை பெறுகின்றது. மீதமுள்ள 30 சதவீதம் பேர் எப்போதுமே இந்தத் தேர்தல் திருவிழாவில் பங்குப் பெறுவதில்லை. அவர்கள் பெரும்பாலுமே சாமானிய மக்களாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அவர்கள் ஒரு போதும் கவலைப்படுவதுக் கிடையாது. அன்றாடம் உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தேர்தல் என்பது ஏதோ அந்நியப்பட்ட மிகவும் காஸ்ட்லியான ஒன்றாகும்.

வயிற்று பசிக் காதை அடைக்க ஒரு வேளைச் சோறு கிடைக்காதா என வழி மீது விழி வைத்துக் காத்திருக்கும் கோடிக் கணக்கான மக்கள் ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவில் பிச்சைக்காரர்களாக வலம் வந்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வேட்பாளர்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகளைப் பொறுக்குவதற்காகத் தயார் நிலையில் உள்ளனர்.

உலகில் மாபெரும் ஜனநாயகம் அதன் அம்மணத்தை மூடி மறைக்க வழியற்று அம்மணத்தையே ஆடையாகப் பிரகடனம் செய்து விட்டது. வாழ்க ஜனநாயகம்!

- செ.கார்கி