rajiniஉலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துக்கிடந்த அந்த அதிசய நிகழ்வு நடந்தேவிட்டது. இனி உலக நடப்பை எண்ணி உறங்காமல் இருந்தவர்களும், உண்ணாமல் இருந்தவர்கள் ஏன் பல் விலக்காமல், குளிக்காமல் இருந்தவர்களும் கூட மன தைரியம் அடைந்து தங்களின் வழக்கமான பணிகளை துவங்குவார்கள். அடிக்க மறந்த அலைகளும், வீச மறந்த காற்றும், பறக்க மறந்த பறவைகளும் கூட தற்போதுதான் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.

உலகில் உள்ள அத்துனை பிரச்சினைகளும் வரிசையாக நீ முந்தி, நா முந்தி என முந்திக்கொண்டு தங்களுக்கு முத்தி கொடுக்குமாறு தலைவரின் முன் இனி மூச்சுவாங்க நிற்கும்.

இப்படி ஒரு தலைவனின் வருகைக்காகத்தான் இந்த நூற்றாண்டே காத்துக்கிடந்ததா என சொல்லும் வகையில் அவரின் அரசியல் நுழைவு நடந்திருக்கின்றது. அவர் பட்டவர்த்தனமாக அறிவித்திருக்கின்றார். “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று.

எதை மனதில் வைத்து தலைவர் அப்படியான வார்த்தையை உதிர்த்தார் என்று தெரியவில்லை. ‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என்ற வார்த்தைக்குப் பொருள் இந்த முறை தனக்கு தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை தரவில்லை என்றால் தான் அடுத்த தேர்தல் வரை உயிரோடு இருக்க மாட்டேன் என்பதாலா இல்லை தன்னை ஆதரிக்கும் கூட்டமே தனக்கு சங்கு ஊதிவிடும் என்பதாலா என்று தெரியவில்லை. தலைவர் எதைச் சொன்னாலும் அதில் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும் என்பதால் நாம் அதை கடந்துப் போய்விடலாம்.

ஆனால் கடந்துச் செல்ல முடியாத கேள்வி சிஸ்டத்தைச் சரி செய்ய ஏன் தலைவர் 70 வயது வரை காத்துக் கிடந்தார் என்பதுதான். நமக்குத் தெரிந்து இவ்வளவு முதிய வயதில் அதாவது காடு வா வா என்கின்றது வீடு போ போ என்கின்றது என்று சொல்லும் வயதில் கட்சி ஆரம்பித்து சிஸ்டத்தை சரி செய்ய கிளம்பிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும்.

உண்மையில் ரஜினி அரசியலுக்கு வர இங்கே எந்த தடையும் எப்போதுமே இருந்தது இல்லை. அவரை கன்னடன், மராத்தியன் என்று எதிர்க்கும் சீமான் வகையாறாக்கள் கூட கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக பேசி வருகின்றார்கள். ஆனால் ரஜினியின் அரசியல் வருகை பற்றிய ஆருடம் தொடங்கி ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த 25 ஆண்டுகளில் பல முறை ரஜினி தனது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்த போது அந்த கூட்டணிக்கு தலைவர் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார். “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.

1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தலைவர் ஆதரவு கொடுத்தார். ஆனால் இந்த முறை ஏனோ தலைவரின் ஆதரவை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன்பின்னர் தலைவர் அரசியல் பேச்சை குறைத்துக் கொண்டார்.

2004-ம் ஆண்டு பாமகவுக்கும் தலைவரின் விசிறிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்ட போது பாபா திரைப்படத்தை திரையிடவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராகவேந்திரா மண்டபத்தில், பாமகவை எதிர்த்து வாக்களியுங்கள் என விசிறிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் தலைவர் நினைத்தது போல நடக்கவில்லை. ஒரு வேளை பாமகவை விட தலைவரின் விசிறிகளின் எண்ணிக்கை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று தனது அரசியல் வருகையை தலைவர் உறுதி செய்தார். 2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் தன் கட்சி பதவி விலகும் எனவும் அறிவித்தார்.

இதற்கு முன்பும் பலமுறை ‘ஆண்டவன் கட்டளையிட்டால் வருவேன்’ என்று சொல்லி வந்தாலும் இந்த முறை ‘இப்ப இல்லை என்றால் எப்பவுமே இல்லை’ என்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் வேறு வழியில்லாமல் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

பிம்ப அரசியலை சுற்றியே மையம் கொண்டிருக்கும் தமிழக அரசியல் களம் 70 வயதில் சிஸ்டத்தை மாற்ற கிளம்பி இருக்கும் தலைவரை ஏற்றுக் கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்க இதுவரை ரஜினி என்ற பிம்பம் தமிழக மக்களால் எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது மிக முக்கியம்.

ரஜினி முன்வைக்கும் ஆன்மீக அரசியல் என்பது சங்கிகளின் இந்து மதவாத பார்ப்பன, முதலாளித்துவ அடிவருடி அரசியலின் மாற்று வடிவம் கூட இல்லை அது நேரடியாகவே அதைத்தான் விதந்தோதுகின்றது.

சாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் என்று பிஜேபியிடம் இருந்து தன்னை பிரித்துக் காட்ட ரஜினி சொல்லிக் கொண்டாலும் அவர் தன் வாழ்நாளில் இதுவரை ஒரு முறைக்கூட தமிழ்நாட்டில் நடந்த எந்த ஒரு சாதிக் கலவரத்தையோ, சாதி ஆணவப் படுகொலையையோ, இல்லை ஆர்எஸ்எஸ் காலிகள் அரங்கேற்றிய கலவரங்களையோ கண்டித்து கருத்து சொன்னதில்லை என்பதோடு அப்படியான செயல்களை ஆதரிக்கும் கடும் பிற்போக்கு கும்பலுடன் தன்னை அடையாளப்படுத்தியே வந்திருக்கின்றார்.

ஸ்டெரிலைட் ஆலைக்காக தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட போது போராடும் நபர்களை தீவிரவாதிகள் என்று சொன்னதோடு ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும்’ என தனது முதலாளித்துவ அடிவருடித்தனத்தை அவரே அம்பலப்படுத்திக் கொண்டார்

இன்று ஆரம்பிக்கப்படாத தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினி அறிவித்திருக்கும் அர்ஜுனமூர்த்தி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர். தற்போது ரஜினியின் ட்விட்டர் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் இவர் தலைமையிலான குழுதான் கவனித்து வருகிறது.

மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பார்ப்பன விஷக்கிருமிகள் தான் ரஜினியின் அரசியல் ஆலோசகராக இன்றுவரை உள்ளனர். இதுவெல்லாம் ரஜினியை பின்நின்று இயக்குவது ஆர்.எஸ்எஸ் சங்கி கும்பல்தான் என்பதற்கு சான்றுகளாகும்.

அடுத்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினி நியமித்திருக்கும் தமிழருவி மணியனை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. இவரை அரசியல் தரகன் என்பதைவிட அரசியல் விபச்சாரன் என்று சொன்னால்கூட அது குறைத்து சொன்னதாகவே இருக்கும். இவர் தன்னை சங்கி என்று சொல்லிக் கொள்ளாமலேயே சங்கிகளே கூச்சப்படும் அளவுக்கு பார்ப்பன அடிவருடித்தனத்தை காட்டுபவர்.

மணியன் அவர்களின் அரசியல் பாரம்பரியம் மிக நெடியது. காங்கிரஸ் கட்சியின் நேர்மையையும், உண்மையையும் பார்த்து அதில் ஆரம்பத்தில் இருந்த மணியன் அவர்கள், பின்னால் காங்கிரஸ் கட்சியில் நேர்மையும், உண்மையும் குறைந்த போது ஜனதா தளத்திற்கு மாறினார். பின்னர் ஜனதா தளத்திலும் அவர் எதிர்ப்பார்த்த நேர்மையும் உண்மையும் சற்று குறைந்த போது தன்னுடைய அரசியல் நேர்மையயையும், உண்மையும் காப்பாற்றிக் கொள்ள ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்ற கட்சியை ஆரம்பித்த இராமகிருட்டிண ஹெக்டே அவர்களின் கட்சியில் தமிழ்நாட்டு தலைவராக பொறுப்பேற்றார்.

பின்னால் அந்தக் கட்சியிலும் நேர்மையும் உண்மையும் குறைந்த போது திரும்ப அந்தச் சமயத்தில் தன்னுடைய பழைய நேர்மையும், உண்மையும் மீட்டெடுத்த காங்கிரசில் மறுபடியும் சேர்ந்தார். பின்னர் 2008 ஈழப்போர் நடந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உண்மையும், நேர்மையும் குறைந்த போது திருவாளர் மணியன் அவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேராமல் காந்திய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

பின் தேர்தலில் போட்டியிட்ட மணியனை மக்கள் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தததால் “இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” என வீரமாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து ஓடிப் போனார்.

தமிழ்நாட்டில் அதிமுகவையும், திமுகவையும் அரசியலில் இருந்தே அகற்றாமல் விடமாட்டேன் என்று சொல்லி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காவி பயங்கரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்க இங்கிருந்த கழிசடைக் கட்சிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மானங்கெட்ட கூட்டணியை உருவாக்கினார். ஆனால் அதுவும் ஊத்திக்கொண்டது.

இப்போது கடைசியாக அண்ட இடமில்லாமல் இந்த அரசியல் விபச்சாரன் ரஜினியுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார்.

இவர்தான் ரஜினிக்கு 25 சதவீத ஓட்டுவங்கி இருப்பதாகவும் தமிழக மக்கள் ரஜினியின் பின் உள்ளதாகவும் சொல்லி வருகின்றார்.தேர்தல் முடிந்தால் தெரியும் 25 சதவீதமா இல்லை 2.5 சதவீதமா என்று.

அதனால் ரஜினி ஊதவே தேவையில்லை என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. சங்கிகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை கண்டுபிடித்து ஓட ஓட விரட்டி அடிப்பதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள்.

எப்படி பிஜேபி தமிழக மக்களால் அரசியல் அனாதையாக ஆக்கப்பட்டதோ அதே போல பிஜேபியை தமிழ்நாட்டில் வளர்க்க துடிக்கும் அதிமுக அடிமை கும்பலும், பிஜேபியின் பினாமியாக செயல்படும் ரஜினி கும்பலும் அரசியல் அனாதை ஆக்கப்பட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

- செ.கார்கி