thiruvalluvarகி.மு ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். திருவள்ளுவர் அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்மக்களின் பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவற்றையும் களைந்தெறிய அறிவுரை கூறியுள்ளார்.

'புரட்சி’ என்பது மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போர் முழக்கம் செய்து மாற்றி அமைக்க முயல்வதே ஆகும். பழைமையைப் புரட்டிவிட்டு. அகற்றிவிட்டு - புதுமையைப் புகுத்துவதுதான் புரட்சி. புரட்சி என்றால் பூசலும் போரும், கொள்ளையும், கொலையும் தோன்றுமென்று கருதலாம். மேலைநாடுகளில் அவ்வாறுதான் புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால் திருவள்ளுவர் செய்துள்ளது எண்ணப் புரட்சியாகும். எண்ணமே செயலின் அடிப்படையாகும். அதனால் செயலின் தாய் எண்ணம் என்பர் மேனாட்டார்.

எண்ணம் திண்ணியதாக உருவானால் செயல்தானே தோன்றிவிடும். எண்ணம் தோன்றுமிடம் மனம், அம் மனம் தூய்மையாக இருக்க வேண்டு மென்று வள்ளுவர் கூறுவதே ஒரு புரட்சியாகும். மனம் தூய்மையாக இருத்தலே அறம் என்கின்றார். மனம் தூய்மையற்று என்ன நற்செயல்கள் செய்தாலும் அவை பயன்படா. வெறும் ஆர்ப்பரவ வேட்கைக்கு உரியனவாகிவிடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற(குறள் 34)

என்பதை நோக்குமின்.

எவ்வகையினும் சாதியாலோ நிறத்தாலோ பொருளாலோ வேறுபாடு அற்று வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் புகத்தொடங்கின. அச்சாதி வேறுபாடுகள் இன்றும் அகன்றுவிடவில்லை. மக்களை அலைக்கழித்து வருகின்றன. வள்ளுவர் அன்றே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார்.

தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு, மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக் கொண்டு அந்தணர் என்றும், ஐயர் என்றும் அழைத்துக்கொண்டனர். ஆனால் செயலில் வன்கண்மை பூண்டு தம் கூட்டத்தினர் அல்லாதவரை ஒடுக்கியும் இழித்தும் விலங்கினும் கீழாக நடத்தி வந்தனர். அதனால் வள்ளுவர் அந்தணர் யார் என்று விளக்கம் கொடுத்துப் போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழி கோலினார்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

என்று முழக்கம் விடுத்துள்ளமை காண்க.

ஒருவனுடைய ஏற்றத்தாழ்வு அவன் போன பிறவியில் செய்துள்ள புண்ணிய பாவங்களுக்கேற்பவே உண்டாகும். சிலர் பல்லக்கில் (அக்காலத்தில் மகிழுந்து இல்லை) ஏறிச் செல்கின்றனர் என்றால். அவர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்; அதனைச் சுமந்து செல்பவர்கள் போன பிறவியில் பாவம் செய்தவர்கள் ஆவார்கள் என்று கூறி வந்தனர். இக்கூற்று மிகமிகக் கொடியது; உண்மைக்கு மாறுபட்டது. இன்று காண்கின்றோம். அறஞ்சாரா நெறியில் அளவுகடந்து பொருளீட்டியவர் அழகார்ந்த வியன் உந்தில் ஆர்ப்பரவுடன் செல்கின்றனர். அறநெறி கோடாது வாழ்கின்றவர் அடக்கமாக நடக்கின்றார். வியன் உந்தில் வீறு தோன்றச் செல்லுகின்றவர் புண்ணியம் செய்தவர் என்றும், கால் நோவ நடந்து செல்லுகின்றவர் கடும் பாவம் செய்தவர் என்றும் கழறுதல் பொருந்துமா? பொருந்தாது அன்றோ?

ஆகவே திருவள்ளுவர்,

அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (குறள் 37)

எனச் சினந்து உரைத்தார். இதன் உண்மைப் பொருள்: பல்லக்கில் ஏறியிருப் பவரையும் அதனைச் சுமந்து செல்பவரையும் காட்டி இதுதான் அறவழியென்று கூறற்க என்பதாகும். பிற்காலத்தார் அவ்வுண்மைப் பொருளை மறைத்து வேறுவகையாகக் கூறி விட்டனர். ஏனெனில் உண்மைப் பொருளை அறிந்த மாந்தர் பல்லக்கில் செல்லுபவரை வாளாவிட்டுவிட மாட்டார் என்று அஞ்சியே அவ்வாறு கூறினார்.

உண்மைப் பொருளுணரின் பல்லக்கில் செல்லுபவரைக் கீழே இறக்கிப் பல்லக்கைச் சுக்குநூறாக உடைத்துத் தள்ளி விடுவரன்றோ.

கொடுத்தல் நன்றுதான். ஆனால் ஆளறிந்து கொடுக்க வேண்டும். சிலருக்குக் கொடுத்தால்தான் வீடுபேறு கிட்டும். வேறு சிலருக்குக் கொடுத்தால் நரகம்தான் கிட்டும் என்றனர். கொடுத்தலால் வீடுபேறு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடுபேறு அடையலாம் என்ற கொள்கை பரப்பப்பட்டு வந்தது. ஆனால், பழந்தமிழர் கொள்கையோ இதனின்றும் வேறுபட்டது.

“ஈயென இரத்தல் இழிந்தது; ஈயேன் என்றல் அதனினும் இழிந்ததாகும்; கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தது; கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்த தாகும்.” இவ்வாறு கூறி ஒழுகி வந்தனர் பழந்தமிழர்.

திருவள்ளுவர் இத் தமிழ்க் கொள்கையில் ஊறி முதிர்ந்தவர். ஆகவே அவர் கூறினார்,

நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. (குறள் 222)

பிறரிடம் ஒன்றைப் பெறுவது சிறந்த வாழ்வு நெறியாகும் (யாசகம் புருட இலட்சணம்) என்று சிலர் கூறினாலும் பிறரிடம் ஒன்றைக் கொள்ளுதல் கொடுங்குற்றமே. கொடுப்பதனால் வீடு கிட்டாது எனத் தெரிந்தாலும் கொடுத் தலே நல்ல செயலாகும்.

வீடு (மோட்சம்) கிட்டாது என்றாலும் கொடு; வீடு கிட்டுமென்றாலும் வாங்காதே என்பது எத்தகைய புரட்சிக் கொள்கையாகும் என்பதை எண்ணுமின்!

வேள்விகளைச் செய்து ஆற்றலைப் பெறலாம் - அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங் கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர். பல வேள்விகளைச் செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தோன் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பதே சான்றாகும்.

அவ்வேள்விகளில் ஆடு, மாடு, குதிரைகளைக் கொன்றனர். மக்கள் நலன் அடைய மக்களைக் கொல்லுதல் அறமாகுமா? பேரருளாளர் வள்ளுவர் தம் எதிர்ப்புக் குரலை எழுப்பினார். அரச சீற்றத்திற்கு ஆளாவோமே என்று அஞ்சினார் இலர்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (குறள் 259)

என ஓங்கி முழங்கினார். வேள்விகளைச் செய்யாதே; வீணில் உயிரைக் கொல்லாதே என்பது வியத்தகு புரட்சி அன்றோ? வேந்தரை எதிர்ப்பது அக்காலத்தில் சாகும் தண்டனைக்கு ஆட்படுத்துமே!

மகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கிய முதல் புரட்சியாளரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துகள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன. மனைவியை வாழ்க்கைத்துணை என முதன்முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண் மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியரே.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. (குறள் 974)

என்பதை நோக்குக. இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக் கூறினார். இவ்வாறு மகளிரை உயர்வுபடுத்தும் வள்ளுவர், மகளிரைச் சிறுமைப்படுத்தினால் வாளாயிருப்பாரா?

சிலர் தம் மனைவியின்பால் ஐயங்கொண்டு தாம் இல்லாத காலத்தில் கெட்டுவிடுவாள் என்று அஞ்சி, தன் இனிய நல்வாழ்வுத் துணையைக் காவலுக்கு ஆட்படுத்தினர். வீட்டினுள் பூட்டி வைத்தனர். மகளிர் விரும்பின் எக்காவலையும் கடந்து எதனையும் செய்யும் ஆற்றலுடையவர். இதனை அறியாது ஏன் அவர்களைச் சிறுமைப்படுத்திச் சிறையிட வேண்டும்? அவர்களே தம்மைக் காத்துக் கொள்வர். ஆதலின் திருவள்ளுவர் ஆடவரை நோக்கிச் சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்? “மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை” என்று கழறினார்.

மக்கட் பேறு ஏற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார் :

“புதல்வரைப் பெறுதல், அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலான் யாம் அல்லாது இறுகப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன் மக்களைப் பெறுதல். ஆகவே மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது.”

தென் புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டது கடவுட்சாதி. அவர்க்கிடம் தென்திசையாதலின் ‘தென் புலத்தார்’ என்றார். இவ்வாறு கூறுபவர் பரிமேலழகர்.

‘பிதிரர்’ என்பார் இறந்து போன முன்னோர் அல்லர் என்பது அவர் கருத்து. ஆனால், இன்று பெற்றோர் இறந்து போனால் அவரை நினைத்து அவர்தாம் பிதிரர் என்று கருதி அவர்தம் மக்கள் அவர் இறந்த நாளில் புரோகிதரை அழைத்துப் பொன்னும் பொருளும் கொடுக்கின்றனர். இதனை திதி, திவசம், சிரார்த்தம் என்றெல்லாம் அழைப்பர். மக்கள் தம் தந்தைக்குச் செய்யும் கடன் இதுதான் என்று இன்றும் பலர் கருதுகின்றனர்.

ஆனால் வள்ளுவரோ இதனை ஏற்றுக் கொண்டார் இலர். வெளிப்படையாகவே மறுத்துள்ளார்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல் (குறள் 70)

என்று முழங்கினார்.

மகன் தந்தைக்குச் செய்யும் கடனாவது எல்லா வகையாலும் சிறந்து விளங்கும் இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று உலகத்தார் சொல்லும் சொல்லை உண்டாக்குதல் ஆகும் என்பது இக் காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்துமன்றோ?

(1970)

- பேராசிரியர் சி. இலக்குவனார்