ramar modi1ராமன் பிறந்த இடம் என்று சங்கிகளால் உரிமை கோரப்படும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தினம் தினம் ஆயிரக்கணக்கான பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் காலத்தில் கோயிலின் கட்டுமானப் பணி துவங்கப்பட்டது ஒன்றும் தற்செயலானதல்ல. அது ராம ராஜ்யம் துவங்கப் போவதற்கான அறிகுறியாகும்.

நாட்டில் வேலையின்மையும், பசி பட்டினியும் தலைவிரித்து ஆடுவது என்பது ஏதோ துர்சகுணமாக உங்களுக்குப் படலாம். ஆனால் ராம ராஜ்ஜியத்தைப் பற்றி உங்களுக்கு குறைந்த பட்சமேனும் தெரியும் என்றால் நீங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவீர்கள்.

ராமனின் மகத்துவத்தைப் பற்றி ஒரு சராசரி இந்தியனுக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் ஒரு சராசரி இந்து அதை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம் ஓர் இந்து என்பவன் சாதிகளால் பிணைக்கப்பட்டவன். அவனை தினம் தினம் இயக்குவது சாதிதான்.

சாதியை அவனிடமிருந்து பிரித்து விட்டால் அவன் ஒரு அவர்ணனாக மாறி விடுவான். அதாவது இயல்பான மனிதனாக மாறி விடுவான். அவன் அப்படி மாறாமல் தன்னை தினம் தினம் புத்தாக்கம் செய்து கொண்டு நல்ல இந்துவாக வாழ வேண்டும் என்றால் அவன் இந்து மதத்தின் சனாதன சிந்தனையில் மூழ்கித் திளைக்க வேண்டும்.

நமது பிரதமர் சொல்கின்றார் “வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் சின்னம் ராமர். அனைத்தும் ராமருக்கு உரியது. ராமர் அனைவருக்கும் உரியவர்” என்று. உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம் எப்படி ராமர் அனைவருக்கும் உரியவர் என்று.

இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராமனுக்கும் வருணனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், இருவருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுகின்றது. அதன் படி வருணனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை இராமன் தீர்த்து வைக்க வேண்டும்.

வருணன் ராமனிடம் "வடக்கே ஒரு தீவில் என் பகைவராகிய ஆயிர (மகா சூத்திர) சாதியினரான திருடர்கள் உள்ளனர். அவர்கள் என் தண்ணீரைத் தொட்டுக் குடிப்பது எனக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் மேல் அம்புவிட்டுக் கொல்" என்கின்றான்.

இராமனும் அவர்கள் மேல் அம்பை ஏவிக் கொல்கின்றான். மேலும் இராமனின் சாதிப் பற்றை சுட்டிக்காட்ட இன்றளவும் பலரால் சொல்லப்படும் மற்றொரு சம்பவம் சம்பூகன் வதம் என்பது. சூத்திரனான சம்பூகன் தவம் செய்ததால் இறந்துபோன பார்ப்பன சிறுவனின் உயிரைக் காப்பாற்ற நாரதரின் அறிவுரைப்படி சம்பூகனின் தலையை வெட்டி வீழ்த்தினான் ராமன்.

சங்கிகள் முன்னிறுத்தும் ராமனின் ‘வேற்றுமையில் ஒற்றுமையின்’ பேரழகு இதுதான். அயோத்தியில் ஒலித்த ஹர ஹர மகாதேவ், ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்கள் பல காலமாக ஒரு டெண்டில் தங்கி இருந்த ராம் லீலாவுக்கு, ஒரு பெரிய கோயில் கட்டப்படப் போகின்றது என்பதால் மட்டும் ஏற்பட்ட சாதாரண மகிழ்ச்சி அல்ல; அது இனி இந்தியா வெளிப்படையாகச் சனாதன ராம ராஜ்ஜியமாக மாறப் போவதால் ஏற்பட்ட ஆன்ம மகிழ்ச்சியாகும்.

இந்தியர்களாக நீங்கள் இருக்கின்றீர்களாக என்பதெல்லாம் இனி முக்கியமில்லை, நீங்கள் ராம பத்தர்களாக இருக்கின்றீர்களா என்பதுதான் மிக முக்கியம். நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருக்கலாம், கிருஸ்துவராக இருக்கலாம், சீக்கியராக இருக்கலாம் ஆனால் ராமனை ஒர் உயர்ந்த கடவுளாக ஏற்றுக் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப் படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை, மோடியே சொல்கின்றார் “நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மனித குலம் ராமரை நம்பிய போது, வளர்ச்சி இருந்தது. நாம் பாதை மாறிய போது, அழிவின் கதவுகள் திறந்தன. நாம் ஒவ்வொருவரின் உணர்வையும் மனதில் கொள்ள வேண்டும்”.

 2017 - 18 நிதி ஆண்டில் 4.6 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் 2018 - 19 நிதி ஆண்டில் 6.3 சதவீதமாகவும், 2019 - 20 நிதி ஆண்டில் 7.6 சதவீதமாகவும் உயர்ந்ததற்கும், தற்போது 11 சதவீதமாக இருப்பதற்கும் காரணம் கொரோனோதான் என்றோ, மோடிதான் என்றோ நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணம் நாம் ராமரை துதிக்க மறந்ததுதான்.

ஒரு வேளை நீங்கள் ராமரை மனதார நம்பி பூஜித்து இருந்தால் இந்நேரம் நாம் சீனர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் வேலை வாய்ப்பை பிச்சையாக போட்டிருக்கலாம்.

 2016 ஆம் ஆண்டு 8.3 விழுக்­கா­டாக இருந்­தது இந்­தி­யா­வின் உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி 2019 நிதி­யாண்டு 4.2 ஆகக் குறைந்­து தற்­போ­து 4.0 விழுக்­கா­டாக வீழ்ச்சி அடை­ந்தற்குக் காரணம் கூட நாம் எல்லாம் ராம பிரானை வணங்காததே ஆகும். ஒரு வேளை அந்தப் புனித கடமையை நாம் சரிவர செய்திருந்தால் இந்நேரம் நாடு வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்று உலக வல்லரசுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இருக்கலாம்.

இந்த நாட்டின் ஆன்மாவாக ராமன் விளங்குகின்றான். அவனை விட்டு விட்டு நீங்கள் எந்த ஒன்றையும் செய்ய இயலாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொல்கின்றார், "இந்த நாடு இந்து நாடு, இங்கே உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள். ஒருவர் முஸ்லீமாகவோ, கிறித்தவராகவோ இருக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இந்த நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே.. அவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்" என்று.

எனவே மோடியையும், மோகன் பகவத்தையும் மனதில் நிறுத்தி நாமும் ராமனின் ஒழுக்க வாழ்வை அறிந்து கடைபிடிப்போமானால் இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்ற உறுதியோடு, ராமனின் ஒழுக்கத்தைப் பற்றியும் அவன் செங்கோல் செலுத்திய திறத்தைப் பற்றியும் டாக்டர் அம்பேத்கர் சொல்வதைத் தெரிந்து கொள்வோம்.

 “இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது.

காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).

இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்கு தான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன; மது, மாமிசம், பழ வகைகள் உட்பட.

இராமன் மதுவை அறவே தொடாதவன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறார்.

அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமானவை அல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உரகா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து, கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம். வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறார் வால்மீகி. இவை இராமனின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை.

நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார்.

அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்”(ராமன் கிருஷ்ணன் பற்றிய புதிர்).

இராமனைப் பற்றி நீங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தவிர்க்க இயலாமல் பல பிஜேபியினரின் முகங்கள் நினைவுக்கு வந்து போகலாம். அதற்குக் காரணம் பிஜேபியினரின் ஆன்மீக சார்ந்த ஒழுக்க வாழ்க்கைதான். இப்படிப்பட்ட ஒழுக்க சீலர்கள் ஒன்று கூடிதான் இன்று ராமனுக்கு கோயில் கட்டுகின்றார்கள். அதனால் ஒவ்வொரு ராம பக்தனின் இதயமும் ஒளிர்கிறது. அவர்களுக்கு இது உணர்வுப்பூர்வமான தருணம்.

இராமனின் பிறப்பிடத்தை 1528-29 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பாபர் மசூதியில் சங்கிகள் கண்டுபிடித்தார்கள். ராமனின் பிறப்பிடத்தை அயோத்தியில் வேறு எங்கோ கண்டுபிடிப்பதைக் காட்டிலும் பாபர் மசூதியில் கண்டுபிடிப்பது தொலைநோக்குப் பார்வையில் ஆதாயம் தருவதாக இருக்கும் என்று அப்போதே அறிந்து வைத்திருந்தார்கள். அவர்களின் கனவை ராமன் பொய்யாக்கவில்லை.

இந்தக் கோயிலை கட்டுவதற்காக ராமனை வழிபடும் நேர்மையான இந்துக்களிடம் நிதி கோரப்படலாம். இல்லை என்றால், தினம் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே உழைக்கும் கோடான கோடி இந்திய மக்களின் வரிப்பணத்தில் அது கட்டப்படலாம். ஏற்கெனவே ‘இராம ஜன்ம பூமி சேவா சமிதி’ என்ற அமைப்பின் மூலம் சமிதியின் செயல்பாடுகளுக்காக ஏராளமான பணம் நன்கொடையாகத் திரட்டப்பட்டது.

இதனால் பணத்தைக் கையாள்வது குறித்து சமிதிக்குள் சண்டையும் வந்தது. மாற்றி, மாற்றிப் பண மோசடி புகார்களைக் கூறிக் கொண்டனர். ஆனால் ராமனைப் போலவே அவனின் வழித் தோன்றல்களும் ஒழுக்கமானவர்கள் என்பதால் அதை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை!.

எனவே கொத்துக் கொத்தாக பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் காலத்தில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம் என்று மோடியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் ஒரு வரலாற்றுக்கான தொடக்கம் என்பதை புரிந்துக் கொண்டு ராமனை மனத்தில் நிறுத்துங்கள், அவன் ஆட்சியின் புகழைப் பாடுங்கள். மோடியை ராமனாகவும், ராமனை மோடியாகவும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

செ.கார்கி