பாட்டாளி வர்க்க தொழிலாளர்களுக்கான பகுதி:

தோழமையுடன் புஜதொமு சங்கத் தோழர்களுக்கு,

பொதுவாக சாதியக் கட்டமைப்பில் ஊறிய நம் தமிழ் சமூகத்தில், ஒருவர் கூறும் கருத்தை விட, அந்த கருத்தை சொல்ல அவருக்குத் தகுதி இருக்கிறதா எனப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக ஊறியிருக்கிறது. அது நம் சாபக்கேடு.

சுப. தங்கராசின் 100 கோடி ரூபாய் ஊழல் மோசடி பற்றி நக்கீரன் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை, அதற்கு சுமார் பத்து நாட்கள் கழித்து அவர் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பான தன்னிலை விளக்கம் இரண்டும் எங்கள் கைகளுக்கு கிடைக்கப் பெற்றது. இதில் இருந்து எங்களுக்கு சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளது. அதை பாட்டாளி வர்க்கத்தின் முன் சமர்பிப்பது எங்கள் கடமை என்பதால் இந்த சுருக்கமான கட்டுரையை எழுதுகிறோம். எங்கள் கேள்விகளை முன்வைப்பதற்கு முன் இந்த ஊழல் விசாரணையின் பயணத்தை சுருக்கமாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 11, 2019 அன்று பெல் சங்கம் சார்பாக தங்கராசின் மீது புஜதொமு-விடம் புகார் கொடுக்கப்படுகிறது. அதற்கு (Show Cause Notice-க்கான) தன்னுடைய விளக்கத்தையும் வெறும் மூன்று நாட்களுக்குள் தங்கராசும் புஜதொமு-விடம் ஒப்படைத்து விடுகிறார். அதற்குப் பிறகு சுமார் 10 நாட்களுக்குப் பின்பு தான் புஜதொமு இந்த பிரச்சனையில் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க முடிவு செய்கிறது. அந்த விசாரணைக் குழு விசாரணையைத் தொடங்கவே 18 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. புஜதொமு-வின் விசாரணைக் குழுவும் விசாரணை முடிந்து சுமார் 8 நாட்களுக்குப் பின்பு தான் தலைமையிடம் அறிக்கையை ஒப்படைக்கிறது. அந்த விசாரணை அறிக்கையின் மீது முடிவெடுத்து தங்கராசிற்கு குற்றப் பத்திரிக்கை (Charge Sheet) கொடுப்பதற்கு புஜதொமு தலைமை சுமார் 42 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த குற்றப் பத்திரிக்கையின் மீது வெறும் 6 நாட்களில் சுப. தங்கராசு பதில் கொடுத்து விடுகிறார். அவர் கடைசியாக தன் மீதான குற்றப் பத்திரிக்கைக்கு பதில் கொடுத்த தேதி ஜனவரி 12, 2020. கொரோனா பாதிப்பு தொடர்பான ஊரடங்கு துவங்கிய தேதி மார்ச் 23, 2020. சுப.தங்கராசின் மீது நக்கீரன் பத்திரிக்கை எழுதிய கட்டுரையின் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட தேதி ஜீலை 29, 2020.

எங்கள் கேள்விகள், சந்தேகங்கள்:

“புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக் குழு உறுதியாக நின்றது.”

என்று புஜதொமு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எல்லா சட்ட திட்டங்களையும் விட பாட்டாளி வர்க்க சோசலிச சட்ட திட்டங்களே மிகவும் சரியானது, முற்போக்கானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. எல்லா காலத்திற்கும், சூழலிற்கும் நிலையான சட்ட திட்டம் என்று ஒன்று இல்லை. இது அடிப்படையான மார்க்சிய விளக்கம். அப்படி இருக்கும் பொழுது 'இயற்கை நீதிக் கோட்பாடு' என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? இதை எளிமையாகப் புரிந்து கொள்வது எப்படி?

தொழிலாளர்களாகிய நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு வகையில் நாம் வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் நடத்திய விசாரணையையோ அல்லது தொழிலாளர் நலத் துறை அதிகாரி சார்பாக நடத்தப்பட்ட விசாரணையையோ அல்லது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டிருப்போம். ஒரே நாளில் சொல்ல வேண்டிய தீர்ப்பை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து நம் வாழ்க்கையை நாசமாக்கும் வேலையை இந்த மூன்று தரப்பினரும் செய்வதை நாம் நேரடியாக அனுபவித்திருப்போம்.

தொழிலாளிகளை ஏமாற்றுவதற்கும், பழி வாங்குவதற்கும், தங்கள் தவறுகளை மூடி மறைப்பதற்கும் கால தாமதம் செய்து நீதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் முதலாளித்துவ வழிமுறை. காலம் கடந்து வழங்கப்படும் நீதி அடிப்படையில் அநீதி என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் பாட்டாளி வர்க்கம் நாட்டுக்கு தலைமை ஏற்கும் போது 'மக்கள் நீதிமன்றங்களை' அமைத்து, தவறு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்படும் என்று சொல்கிறோம்.

ஆனால் அக்டோபர் 11, 2019 அன்று கொடுத்த புகார் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்க சுமார் 10 மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது புஜதொமு. அதுவும் பொதுவெளியில் ஊழல் மோசடி அம்பலமான பின்பு தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது முதலாளிகளின் தேர்ந்த கிரிமினல்தனமா? அல்லது பாட்டாளி வர்க்க வழிமுறையா? இதற்கு பதில் பெறுவது உங்கள் கடமை இல்லையா?

இந்த காலதாமதத்திற்கு புஜதொமு கூறும் காரணங்களும், அதற்கு அவர்கள் செய்து கொண்ட சுயவிமர்சனமும் சில சந்தேகங்களை எழுப்புகிறது, தொழிலாளத் தோழர்களே. அவை:

தங்கராசு மீது அக்டோபர் 11, 2019 அன்று கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்தி, குற்றம் நடந்திருக்கிறது என்று புஜதொமு முடிவுக்கு வந்த பின்பு தான் ஜனவரி 06, 2020 அன்று குற்றப் பத்திரிக்கையை வழங்குகிறது. இதன் பொருள் புஜதொமு தலைமை தங்கராசு குற்றம் செய்திருக்கிறார் என முடிவு செய்து அதற்கான Charge Sheet-யை தங்கராசிடம் கொடுத்திருக்கிறது என்பதாகும். அதற்கு தன்னுடைய இறுதிப் பதிலை தங்கராசு கொடுத்த தேதி ஜனவரி 12, 2020.

ஜனவரி 12, 2020-ல் துவங்கி மார்ச் 23, 2020 அன்று வரை சுமார் 71 நாட்கள் காலம் இருந்தும் தாங்கள் நடவடிக்கை எடுக்காததற்கு புஜதொமு தலைமை சொல்லும் விளக்கம்.

“மாநில நிர்வாகக் குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக் கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக் குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.”

தங்கராசின் 100 கோடி ரூபாய் நில மோசடி ஊழல் குறித்த புகார் மீது இரு தரப்பு வாதங்களையும் கேட்டு ஓர் இறுதி நடவடிக்கை எடுக்கும் நிலையை புஜதொமு அடைந்து விட்டது. இனி தீர்ப்பு அல்லது நடவடிக்கை என்பது தான் மீதம். இந்த இடத்தில் எங்களுக்கு எழும் கேள்விகளை எளிமையாக முன்வைக்கிறோம்.

ஒரு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மொத்த நிர்வாகக் குழுவில் ஒரு தோழருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மொத்த குழுவும் தீர்ப்பு வழங்காமல் முடங்கி விட்டது என்று சொல்வது நியாயமா?

ஒருவேளை அந்த தோழருக்கு உடல்நிலை சரியாக ஐந்தாண்டுகள் ஆகியிருந்தால் அதுவரை மாநில நிர்வாகக் குழு காத்திருந்திருக்குமா?

எப்பொழுதும் எந்த குழுவிலும் பெரும்பான்மை, சிறுபான்மை பார்த்து தான் இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்த தீர்ப்பு விசயத்திலும் அப்படி ஒரு முடிவை எடுத்து உடல்நிலை முடியாத அந்த தோழரிடம் கருத்து கேட்டிருக்கலாமே? அப்படி செய்யவிடாமல் தடுத்தது எது? பாட்டாளி வர்க்க அறவுணர்ச்சியா? முதலாளித்துவ கிரிமினல்தனமா?

குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை, அவரது அம்மா காலமாகி விட்டார் என்பதற்கும் மாநில நிர்வாகக் குழு தீர்ப்பு வழங்க முடியாமல் இருந்ததற்கும் என்ன உறவு? ஒரு குற்றம் சுமத்தப்பட்டவர் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் எந்த முதலாளித்துவ நீதிமன்றங்களும் தங்களது தீர்ப்பு குறித்த முடிவை காலம் தாழ்த்துவதில்லையே? இங்கு மட்டும் காலம் இழுத்தடிக்கப் பட்டிருக்கிறது என்றால், அது தெரியாமல் நடந்த தவறா? அல்லது தெரிந்தே செய்த சதியா?

‘மக்கள் அதிகாரம்’ தொடர்பான வேலைகள் என்று பொதுவாக சொல்லும் மாநில நிர்வாகக் குழு ஏன் மாநாட்டுத் தேதி குறித்தோ, அதற்காக வேலை செய்த நாட்கள் குறித்தோ தெளிவாக விளக்கவில்லை?

ஜனவரி 12, 2020-ல் துவங்கி மார்ச் 23, 2020 அன்று வரையான 71 நாட்களில் ‘மக்கள் அதிகாரம்’ தொடர்பான வேலைகள் அல்லது புஜதொமு தொடர்பான வேலைகளை நிறைவேற்றுவதற்கு மாநில நிர்வாகக் குழு சந்திக்க கூட்டப்படவில்லையா? ஒருவேளை சந்தித்திருந்தால் அந்த கூட்டத்தில் ஏன் தங்கராசின் மீதான இறுதி நடவடிக்கை பற்றிய திட்டத்தை நிகழ்ச்சி நிரலில் (Agenda) சேர்க்கவில்லை? இது தெரியாமல் மறந்த பிழையா? அல்லது 100 கோடி ஊழலை மறைக்கச் செய்த சதிவலையா?

அடுத்து மார்ச் 23, 2020 முதல் ஜீலை 29, 2020 வரையான 130 நாட்கள் நடவடிக்கை எடுக்காதது குறித்து புஜதொமு தலைமை சொல்லும் விளக்கம் பற்றிய சந்தேகங்கள்.

“இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டு வரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில் கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்க ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச் சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.”

இந்த விளக்கத்தில் மாநிலக் குழு முடிவெடிக்காதது துவங்கி செயற்குழு, மாவட்டக் குழுக்களுக்கு ஊழல் மோசடி குறித்த விசயத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளனர். அதனால் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் முன்வைத்துள்ளனர். ஒரு அசாதாரணமான சூழல் நிலவியதாக சொல்கிறது மாநில நிர்வாகக் குழு.

எல்லா நடவடிக்கைகளையும், சூழலையும் மொத்தமாக ஒரே பெட்டியில் அடைப்பதால் நமக்கு இது நியாயமாக இருப்பதாகத் தோன்றலாம். “எல்லாவற்றையும் சந்தேகப்படு” என ஆசான் மார்க்ஸ் சொன்ன வார்த்தைகள் எங்களை முட்டாள்களைப் போல அமைதியாக கடந்து செல்லவிடாமல் தடுக்கிறதே! என்ன செய்ய??

முதலில் புஜதொமு-வின் மாநில நிர்வாகக் குழு தொடர்பான அம்சத்தை மட்டும் பார்ப்போம்.

கொரோனாவிற்குப் பின்பான அந்த 130 நாட்களில், சுமார் நான்கு மாதங்களில் எத்தனை முறை புஜதொமு இணையம் மூலமாக அணிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட்டங்களை நடத்தியது என்பதை நினைத்துப் பாருங்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் புஜதொமு மாநில நிர்வாகக் குழு மொத்தமாக முடங்கி விடவில்லையே? இணையம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு வேலைகளை முன்னெடுக்கத்தானே செய்தார்கள். அப்பொழுது எல்லாம் ஏன் தங்கராசு மீதான இறுதி நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியவில்லை? இது சுயவிமர்சனம் செய்து கொண்டால் தீர்ந்து விடும் தவறா? தெரிந்தே ஊழல் குற்றவாளியை தப்பிக்கச் செய்த குற்றமா?

இன்றைக்கு இருக்கும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகளை வைத்துக் கொண்டு முடிவெடுப்பதற்கு சந்திக்கக் கூட முடியவில்லை என்று மாநில நிர்வாகக் குழு கூறுவது ஏற்புடையதா? இதற்கு ஏதாவது மொக்கைக் காரணங்களை அவர்கள் சொல்லக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக, அவர்களின் செயல்பாட்டையே ஆதாரமாக முன்வைக்கிறோம்.

“இந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது... ... .... இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.”

மாநில நிர்வாகக் குழு மீது குற்றம் சுமத்தப்பட்டு விடக்கூடாது, அணிகளுக்கு அவநம்பிக்கை, குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக அவசரமாகக் கூட்டிய கான்பரன்ஸ் அழைப்பை, ஏன் ஜனவரி 12, 2020 முதல் ஜூலை 29, 2020 வரை தங்கராசின் மீது இறுதித் தீர்ப்பை அறிவிப்பதற்காகக் கூட்டவில்லை? இங்கு புஜதொமு-வின் தலைமையில் இருப்பவர்களின் மனநிலை என்ன?

பல நூறு தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு பொறுப்பெடுத்துள்ளதாகவும், மொத்த இந்திய பாட்டாளி வர்க்கத்தையும் வழிநடத்தப் போவதாகவும் சொல்லிக் கொள்ளும் அமைப்பு, அதன் உச்சபட்ச பொறுப்பான மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவர் 100 கோடி ரூபாய் ஊழலில் சிக்கியுள்ளார். அதுவும் முதலாளித்துவ கிரிமினல் பேர்வழியின் தேர்ந்த திருடுட்டுத்தனத்துடன் ஒரு செயலைச் செய்திருக்கிறார். இந்த மாபெரும் குற்றத்தைத் தண்டித்து பாட்டாளி வர்க்கத் தலைமைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க வேண்டும் என்று அவர்களின் மனம் பதட்டப்படவில்லை. மாறாக, அணிகளிடம் அம்பலப்பட்டு விடக்கூடாது, அணிகளிடம் கேள்விகள் வந்து விடக்கூடாது, அணிகள் தெளிவாகி விடக்கூடாது என்பதில் தான் அவர்களது துடிதுடிப்பு இருந்திருக்கிறது. இந்த எளிய உண்மை பாட்டாளிகளான உங்களுக்குப் புரியவில்லையா தோழர்களே?

“நமக்கு நாமே வகுத்துக் கொண்டு, மாநில நிர்வாகக் குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்”

மேற்காணும் மாநில நிர்வாகக் குழுவின் விளக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளனர். தாங்கள் வகுத்த விதியை தாங்களே மீற வேண்டிய ஓர் இக்கட்டான 'கட்டமைப்பு நெருக்கடிக்கு' புஜதொமு வந்துவிட்டதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. ஆனால் சற்று உள்ளே ஆழமாகச் சென்று பரிசீலித்தால் சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை தொழிலாளத் தோழர்களே.

வழக்கறிஞர் ராஜூ குறித்தும், புஜதொமு-வின் 100 கோடி ஊழல் செயலாளர் தங்கராசு குறித்தும் கீற்று இணையதளத்தில் ‘ஆம்பள்ளி முனிராஜ் குழு’ சார்பாக ஒரு கட்டுரை வெளியிடப்படுகிறது. அந்தக் கட்டுரையில் ராஜு குறித்து எழுதப்பட்ட கருத்துக்களுக்கு மறுப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து புஜதொமு அங்கம் வகிக்கும் மக்கள் அதிகாரம் சார்பில் அறிக்கை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்க, தங்கராசு மீது குற்றம் சுமத்திய நக்கீரனுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையை ஏன் புஜதொமு கொடுக்கவில்லை?

நக்கீரனுக்கு எதிராக கண்டன அறிக்கை கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?

ஒன்று, தங்கராசு குற்றம் செய்யதிருக்கிறார் அல்லது குற்றம் செய்திருப்பதற்கான அடிப்படை உறுதியாகவே இருக்கிறது, அதைத் தான் நக்கீரனும் எழுதியிருக்கிறது என்ற கருத்தில் புஜதொமு தலைமை இருக்க வேண்டும்.

இதை அவர்களின் சுயவிளக்க அறிக்கையில் இருந்தே மேற்கோள் காட்டுகிறோம்.

“நக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக் குழுவின் விசாரணையின்போது தெரிய வந்தது. இந்த சட்ட விரோத, மக்கள் விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும் ...”

இந்த சுயவிளக்கத்தின் மூலம் தங்கராசு ஊழல் பேர்வழி தான் என்ற கருத்தில் புஜதொமு தீர்க்கமாக இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது. (ரியல் எஸ்டேட் பொறுக்கிகள், ஓட்டுப் பொறுக்கிகள், கார்ப்பரேட் கைக்கூலிகள் என்றெல்லாம் இதுநாள் வரை மற்றவர்களை விமர்சித்தவர்கள், மொத்த சுயவிளக்கத்திலும், எந்த ஒரு இடத்திலும் சுப. தங்கராசை ஊழல் பேர்வழி என்றோ, ரியல் எஸ்டேட் மாஃபியா என்றோ ஒரு முறை கூட அழைக்காததை நினைவில் கொள்ளுங்கள்)

அப்படி என்றால் தங்கராசு மீது இறுதி விசாரணை முடிந்து ஏழு மாதங்கள் ஆனபின்பும், நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்ததன் பொருள் என்ன? இது ஊழலுக்கு புஜதொமு தலைமை தெரிந்தே துணை போன குற்றமில்லையா? நக்கீரன் கட்டுரை வந்தபின் உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் நோக்கம் என்ன? அதுவும் குற்றவாளியை முழுவதுமாக நீக்காமல் வெறும் இடை நீக்கம் செய்வதன் பொருள் என்ன? ஊழல் மொத்தமாக அம்பலமாகி விட்டது; இனி அணிகளை ஏமாற்ற முடியாது என்பதற்காக செய்யும் நாடகம் தானே இது? தொகுப்பாக, புஜதொமு தலைமை தெரிந்தே ஊழலில் பங்கெடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

இரண்டு, ஒருவேளை நக்கீரன் எழுதிய கட்டுரை அடிப்படை இல்லாதது என்றோ அல்லது தங்கராசின் மீதான புகார் இன்னும் நிரூபக்கப் படாதது என்றோ புஜதொமு தலைமை கருதுகிறது என்றால், ஏன் நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் பதிவு செய்யவில்லை? தவறே செய்யாதவர் என்று நம்பப்படும் ‘அப்பாவி’ தங்கராசு மீது இடை நீக்கம் என்ற நடவடிக்கையை புஜதொமு ஏன் எடுக்க வேண்டும்? இது ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தெரியவில்லையா, தொழிலாளத் தோழர்களே? இது ஏமாற்றுப் பேர்வழிகள் செய்யும் தகிடுதித்த வேலை என்பது புரியவில்லையா உறவுகளே?

மேலே கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்களின் தொகுப்பாக இரண்டு கேள்விகளை முன்வைக்கிறோம்.

இந்த 100 கோடி ரூபாய் ஊழல் புஜதொமு-வின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தெரியாமல் நடந்திருக்கும், அவர்களுக்கு அதில் பங்கில்லை என்று நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்?

முதலாளிகள் போடும் எச்சில் துண்டுக்காக தொழிலாளரின் உரிமையை இவர்கள் அடமானம் வைக்க மாட்டார்கள் என்று உத்தரவாதமாக உங்களால் சொல்ல முடியுமா?

இவ்வளவு கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் புஜதொமு தலைமை சிரமப்பட்டால், அவர்களுக்கு உதவியாக ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வையுங்கள் தொழிலாளத் தோழர்களே. இந்த 100 கோடி ரூபாய் ஊழல் விசாரணை தொடர்பான அத்தனை ஆவணங்களையும், கடிதங்களையும், கூட்டக் குறிப்புகளையும் ஒரு வெள்ளை அறிக்கையாக, எல்லாவற்றையும் நகல் எடுத்து மக்களின் முன் வெளிப்படையாக முன்வைக்கச் சொல்லுங்கள். தீர்ப்பை மக்கள் சொல்லட்டும். அவர்களின் நேர்மையை வரலாறு உறுதிப்படுத்தட்டும்.

புஜதொமு-வின் அரசியல் அணிகளுக்கான கேள்விகள்:

1) புஜதொமு-வை பின்னிருந்து இயக்கும் அதன் கட்சியின் செயலாளரான திருவாளர் நம்பர் 01, இதே தங்கராசின் வீட்டில் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி வருகிறார். தங்கராசின் இந்த 100 கோடி ரூபாய் ஊழல் பற்றி முன்னமே அவருக்குத் தெரியாது என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?

2) ஒவ்வொரு அடிமட்ட ஊழியருக்கும் மாதந்தோறும், ஆண்டு முழுவதும், ஏன் வாழ்க்கை முழுவதும் பரிசீலிக்கப்படும் மூன்று துறை, நான்கு அம்சங்கள் தங்கராசிற்கு பரிசீலிக்கப் படவில்லையா? ஒவ்வொரு தோழரும் தன் குடும்பத்தை எப்படி நடத்துகிறார்? அரசியல்படுத்துகிறாரா இல்லையா? என்ற பரிசீலனையை தங்கராசிற்கு மட்டும் பரிசீலிக்க மறந்து விட்டதா தலைமை? அதனால் தான் தங்கராசு குறித்தும், ரியல் எஸ்டேட் அதிபரான அவரது மகன் குறித்தும் அமைப்பிற்கு பல ஆண்டுகளாகத் தெரியாமல் போய் விட்டதோ?

“குடும்பத்தை பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு நெறிமுறையுடன் வளர்க்கிறாரா என சோதித்து அறிவது” என மாதந்தோறும் பரிசீலித்த போது திரு. தங்கராசு ஏமாற்றி விட்டாரா? அல்லது இந்தியப் புரட்சிக்கு, இல்லை இல்லை உலகப் புரட்சிக்கே தலைமை தாங்கப் போவதாக சொல்லிக் கொண்டு அலைந்த மாபெரும் தலைமைப் புரட்சியாளர்கள் ஏமாந்து விட்டார்களா?

3) தங்கராசு பற்றி யார் கேள்வி எழுப்பினாலும், ஒரு நிறுவனம் என்றால் பல தரப்பட்ட நபர்களும் இருப்பது இயல்பு தான் என்று பதில் கொடுக்கும்படிக்கு கருத்துருவாக்கம் செய்து அணிகள் மத்தியில் பரப்பி விடும் ஆண்டவர்களிடம், அதன் பக்தர்கள் ஒரு கேள்வியை முக்கியமாக கேட்க வேண்டுகிறோம். ஒரு ரியல் எஸ்டேட் மாஃபியா, சாதாரண உறுப்பினராக கீழ்மட்டத்தில் இருப்பது என்பது வேறு, அவரே மொத்த பாட்டாளி வர்க்கப் படைக்கு தலைமை தாங்குகின்ற ஒரு அரங்கின் அதிஉயர் பதவிக்கு வளர்ந்து வந்திருப்பது என்பது வேறு. இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த நபர், அமைப்பின் தலைமைக்கு மிக மிக நெருக்கமாகவும், தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரப்பட்டவராகவும் மாறும் வரை தலைமையும், சக தலைமைக் குழுத் தோழர்களும் விரல் சூப்பிக் கொண்டிருந்தார்களா? அல்லது இதற்கும் ஏக வசனத்தில்… “மாவோ இருந்த கட்சியிலேயே எதிர்ப்புரட்சிகர சக்திகள் இருந்தன” என்று கதாகாலட்சேபம் நடத்தப் போகிறார்களா? அப்படியென்றால் ஒரு கேள்வி, ஊழல் பேர்வழிகள் அதிக எண்ணிக்கையில் பொறுப்புகளை அலங்கரிப்பது மாவோவின் செஞ்சீனத்திலா? இன்றைக்கு சந்தை சோசலிசமாக சீரழிந்த சீனத்திலா?

4) இந்த ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நாளில் இருந்து தங்கராசு எந்த அமைப்பு வேலைகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், தீவிரமான உடல் நிலைப் பிரச்சனை. ஒவ்வொரு நபரிடமும் ஒவ்வொரு வகையான உடல் நலக்குறை குறித்து விளக்கியுள்ளார். ஆனால் ’முக்கிய’ வட்டாரங்களில் இருந்து கீழ் மட்ட அணிகள் வரை பரவியுள்ள செய்தி என்னவென்றால், “2018 இருந்தே தங்கராசு ஒரு ரியல் எஸ்டேட் பிரச்சனையில் சிக்கியுள்ளார், அதனால் அவரை அப்பொழுதிருந்து தொழிற்சங்க வேலைகளில் இருந்து ஒதுங்கியிருக்க அமைப்பு வழிகாட்டியுள்ளது” என்பது தான். இதை வெறும் வதந்தி என்று கடந்து போக வேண்டுமா?

5) ஒரு பாட்டாளி வர்க்க அரங்கு, அதன் மாநிலப் பொதுச் செயலாளர் ஒரு மாபெரும் ஊழல் குற்றத்தில் ஈடுபடுகிறார். ஆனால் அவரை நீக்குவது பற்றி கட்சியின் பெயரில் ஏன் ஒரு சுற்றறிக்கை கூட அணிகளுக்கு கொடுக்கப்படவில்லை? கொரோனா என்று ஒற்றை வரியில் காதில் பூ சுற்றினால் ஏற்பீர்களா தோழர்களே?

6) புஜதொமு சங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் அறிக்கையில் தங்கராசுடன் யாரும் தொழிற்சங்க ரீதியாக எந்த நடவடிக்கையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், கட்சியில் இது பற்றி எந்த ஒரு சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்றால் இதன் பொருள் என்ன? கட்சி ரீதியாக சுப. தங்கராசுடன் உறவு வைத்துக் கொள்வதில் எந்தத் தடையுமில்லை என்று அனுமதிப்பதாக அர்த்தம் இல்லையா?

7) மகஇக-வின் பொருளாளராக இருந்த தோழர் சீனிவாசன் மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கை நினைவிருக்கிறதா? தான் ஏற்ற கொள்கைக்காக தன் சொந்த மகனின் திருமணத்தில் எந்த ஒரு பிற்போக்கு சடங்கிலும் கலந்து கொள்ளாமல் ஒரு அந்நியனைப் போல ஒதுங்கி நின்று பார்வையாளனாக கலந்து கொண்டதற்காக நடவடிக்கை எடுத்ததை அறிவீர்களா தோழர்களே?

வெறும் பார்வையாளனாகக்கூட அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று அமைப்பு உத்தரவு போட்டிருந்ததாம். அதை தோழர் சீனிவாசன் மீறி விட்டதாகச் சொல்லி, அவரை அமைப்பிலிருந்து நீக்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றறிக்கை அனுப்பி அவரை அவமானப்படுத்தியது மறந்து போய்விட்டதா தோழர்களே? அவரை மன ரீதியில் கொடுமைப்படுத்தி நோயாளியாக்கி சாகடிக்க முடிந்த உத்தமர்களால், இன்று ஏன் தங்கராசு பற்றி கட்சியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை கூட அனுப்ப முடியவில்லை என்று கேள்வி கேட்க உங்களிடம் நேர்மையின் மிச்ச சொச்சம் ஏதேனும் இருக்கிறதா தோழர்களே?

8) ஒருவேளை தங்கராசின் பெயரிலேயே தங்கம் இருப்பதால் இந்த ஊழல் எல்லாம் இயல்பானது என்று தலைமை சொன்னால் ஆட்டுமந்தையைப் போல தலையை ஆட்டுவீர்களா?

9) வழக்கறிஞர் ராஜு என்ற தனிநபர் தொடர்பாக கீற்றில் வெளியான ‘ஆம்பள்ளி முனிராஜ் குழு’ கட்டுரையின் ஒரு வரிக்காக ‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பின் சார்பாக விளக்கம் முன்வைக்கப் படுகிறது. ‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பாக இருந்த ராஜுவைப் பற்றி சொல்லப்பட்ட செய்திக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பெயரில் பதில் கொடுக்கப்படுகிறது. “யாரும் ராஜூ குறித்து பேசக்கூடாது, பின்னால் மக்கள் அதிகாரம் இருக்கிறது ஜாக்கிரதை” என்று மிரட்டும் நடவடிக்கை இல்லையா இது? ‘ஆம்பள்ளி முனிராஜ் குழு’ கட்டுரையை வெளியிட்டதற்காக ‘கீற்று’ இணையதளமும் அன்பு தடவிய வார்த்தைகளால் மறைமுகமாக மிரட்டப்படுகிறது. ‘ஆம்பள்ளி முனிராஜ் குழு’ கட்டுரையில் ராஜூ பற்றி குறிப்பிடப் பட்டுள்ளதன் சாரம் என்ன? ராஜூ மீதும் தங்கராசு போல் சொத்துக் குவிப்பு புகார் அளிக்கப்பட்டது, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைப்புத் தலைமை தட்டிக் கழித்தது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் ஆராய்ந்து பார்த்து செய்தி வெளியிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இதற்காக கீற்றை மறைமுகமாக எச்சரிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மிரட்டல் இல்லையா?

10) பொதுவாக முதலாளித்துவ ஜனநாயகத் தேர்தலில் நிற்கும் MLA, MP-க்கான வேட்பாளர்கள் கூட தங்களின் மொத்த சொத்து மதிப்பையும், அதை சம்பாதித்தற்கான (Source of Income-யும்) வழிகளையும் வெளிப்படையாக மக்கள் முன் சமர்ப்பிப்பார்கள். இது அடிப்படைக் கடமை. “ஆள வருகிறது மக்கள் அதிகாரம்” என்று அமைப்பின் Letter Pad-ல் முழக்கத்தை வைத்திருக்கும் அமைப்பின் மாநிலத் தலைவரின் பொருளாதார யோக்கியதை குறித்து ஒரு விமர்சனம் வருகிறது எனில், அதை நிரூபிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது? புரட்சியை நடத்தி ஆட்சியைப் பிடித்து மக்கள் நீதிமன்றங்கள் அமைத்து, மக்கள் சொத்தை கொள்ளையடித்தவர்களைத் தண்டிப்பது தான் நோக்கம் என்று கொள்கை அறிக்கையில் எழுதியிருக்கும் ஒரு அமைப்புடைய தலைவரின் சொத்து மதிப்பு பற்றிய கேள்விக்கு, அவர் தான் தானாக முன்வந்து தன் மொத்த சொத்து மதிப்பையும், அதை சம்பாதித்தற்கான (Source of Income-யும்) வழிகளையும் வெளிப்படையாக மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா தோழர்களே?

11) "அமைப்பை பற்றி யார் விமர்சித்தாலும் காதில் வாங்காதே, அமைப்பு புனிதமானது, அமைப்பை மட்டும் முழுவதுமாக நம்பு" என்று உங்களுக்கு மனதில் பதிய வைக்கப்படுகிறதே, இது பகுத்தறிவா? மூடநம்பிக்கையா? யாராவது மாற்றுக் கருத்தை பேசினால் காதில் கூட கேட்காமல், “இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்” என்று கிளிப்பிள்ளைப் போல சொன்னதையே சொல்லும் பண்பு பகுத்தறிவா? தெய்வ நம்பிக்கையா?

“யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லியிருந்தாலும், உன் புத்திக்கு, பொது அறிவிற்கு பொருந்தாத எதையும் நம்பாதே” எனத் தந்தை பெரியார் சொன்னார். இது பகுத்தறிவு. “எல்லாவற்றையும் கேள்வி கேள், சந்தேகப்படு” என்று ஆசான் மார்க்ஸ் கூறியுள்ளார்.

ஆனால் எந்த தலைவருமே “எந்த விமர்சனத்தையும் காதில் வாங்காதே, எந்த விமர்சனத்தையும் படிக்காதே, வெறும் நம்பிக்கையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொள்” என்று சொல்லவில்லை. எதைப் பற்றியும் முடிவு சொல்ல இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்பது இயல்பான உலக நியதி.

விமர்சிப்பவர்கள் எல்லாம் அவதூறு தான் செய்கிறார்கள் என்று முடிவு செய்ய உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் குறைந்தபட்சம் எதையும் முழுவதுமாகப் படித்த பின் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

உங்கள் கைகளுக்கு கிடைக்கும் அமைப்பு பற்றிய விமர்சனங்களை, யாருக்கும் பகிர வேண்டாம் என்று அன்போடு வழிகாட்டுகிறது உங்கள் அமைப்புத் தலைமை. ஒருவேளை தலைமையில் இருப்பவர்கள் நேர்மையானவர்கள் என்று வைத்துக் கொள்வோம். நேர்மையானவர்கள் ஏன் அவதூறுகளுக்கு அஞ்ச வேண்டும்? கட்டுரைகளில் வெறும் அவதூறுகள் மட்டுமே நிரம்பியிருந்தால் சுய அறிவுள்ள கம்யூனிஸ்டுகளான அணிகள் அதை “குப்பை” என்று ஒதுக்கிவிடப் போகிறீர்கள். அமைப்பின் மீதான நம்பிக்கையும் பலப்படும். மேலும் இது போன்று வருங்காலங்களில் வரும் அவதூறுகளையும் எளிமையாகக் கடந்துவிட முடியும். ஆனால் யாருக்குமே பகிராதே, படிக்காதே என்று சொல்வது மனுநீதியா? கம்யூனிசமா? பதில் சொல்லுங்கள் தோழர்களே!! பாசிசம் நெருங்கி வரும் சூழலில் இது போன்ற ஊழல் தலைவர்களும், அவர்களைப் பாதுகாத்து அரவணைக்கும் தலைமையும் தான் நம்மை காப்பாற்றப் போகிறதா தோழர்களே?

விமர்சனம் எனும் நெருப்பாற்றில் அமைப்பை, தலைமையை அடித்து இறக்குங்கள் தோழர்களே! அது பாட்டாளி வர்க்க உறுதியுடைய எஃகு (Steel) என்றால், அது நம் போராட்ட ஆயுதமாகட்டும்! வெறும் தகரம் என்றால் நசுங்கி ஒழியட்டும்!! 

- செங்கனல் குழு