education act

சமூகத்தை ஆளும் வர்க்கம், தான் மேலாண்மை செலுத்தும் வர்க்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள எப்போதும் ஆயுங்களை மட்டுமே நம்பி இருப்பதில்லை. மக்களை முழுவதுமாக ஆயுத நீக்கம் செய்துவிட்டு நிராயுதபாணியாய் நிற்கும் அவர்களை மிரட்டிப் பணிய வைக்க மட்டுமே ஆயுதங்களாலும், அவற்றைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட வன்முறை அமைப்புகளாலும் முடியும்.

ஆனால் வரலாறு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்ட சமூக அமைப்புகள் அனைத்துமே அரசின் இந்த ஆயுதப் பூச்சாண்டியை முறியடித்தே நடந்துள்ளன. மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று களத்திற்கு வரும் போராளிகள் யாரும் இந்த ஆயுதங்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சுவதில்லை.

அதனால்தான் ஆளும் வர்க்கம் வாள்களையும், துப்பாக்கிகளையும் கொண்டு இந்தச் சமூகத்தை அடிமைப்படுத்தியதை விட மக்களின் மூளையில் அடிமைத்தனமான சிந்தனையைக் கருத்தியால் ரீதியாக ஏற்றுக் கொள்ள வைத்து, அவர்கள் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடாமல் பார்த்துக் கொண்டது. இதைத்தான் மார்க்ஸ் “கருத்து மக்களைப் பற்றிக் கொள்ளும் போது அது ஒரு பெளதீக சக்தியாக மாறி விடுகின்றது” என்றார்.

வேதங்களும், உபநிடதங்களும், புராண இதிகாசங்களும், மநு ஸ்மிருதிகளும், இந்த மண்ணில் விதைத்தது இந்த அடிமைத்தனத்தைதான். கோடான கோடி இந்திய மக்கள் இன்று தம்மீது திணிக்கப்பட்டிருக்கும் நெருக்கடிக்கு எதிராகப் போராடாமல் வாய் மூடி மெளனியாய் கடந்து போவதற்குக் காரணமாய் இருப்பது இந்த மண்ணில் பார்ப்பனியம் எப்போதோ வலுவாய் விதைத்துச் சென்ற இந்தக் கருத்தியல் குப்பைகள்தாம்.

துப்பாக்கிகள் தேவைப்படவில்லை, குண்டாந்தடிகள் தேவைப்படவில்லை - மக்கள் இயல்பாகப் பட்டினியையும் ஒடுக்குமுறையையும் கடந்து சென்றுகொண்டு இருக்கின்றார்கள். கோயில்கள் கூடப் பெரும்பாலும் திறக்கப்படவில்லை. ஆனாலும் அடிமைத்தனமான சிந்தனை இன்னும் நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று இந்த மக்களை எண்ண வைத்திருக்கின்றது. இது பார்ப்பனியத்தின் வெற்றி என்றும் சொல்லலாம்; உலகளாவிய போக்கில் இதை ஆளும் வர்க்கத்தின் வெற்றி என்றும் சொல்லலாம்.

உலகம் முழுவதும் முதலாளித்துவம் தோல்வியுற்று நிதியாதிக்கக் கும்பல்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து இருக்கின்றன. இந்தப் பெருமந்தத்தைக் கொரோனோவானது இன்னும் மோசமான நிலையை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாததோடு, இருக்கும் வேலை வாய்ப்புகளும் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன.

அதுவும் இந்தியா போன்ற பெரும்பான்மையாக இளைஞர்களைக் கொண்ட நாட்டில் இந்த நெருக்கடியானது காலப்போக்கில் ஆளும் வர்க்கத்தின் மீது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இன்று ஆளும் வர்க்கத்தின் முன் உள்ள முக்கியப் பிரச்சினையே இவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதுதான்.

நாம் முன்பே சொன்னது போலச் சமூகத்தின் அசமத்துவத்தை எதிர்கொள்ளும் சக்திகளை வன்முறை மூலம் மட்டுமே என்றென்றும் எதிர்கொள்வது என்பது இயலாத காரியம் என்பதோடு, அது மூலதனத்தின் குறைந்த பட்ச வளர்ச்சியைக் கூடத் தடுத்து நிறுத்தும். மூலதலத்தின் வளர்ச்சியானது அமைதியான சூழ்நிலையை எதிர்பார்க்கின்றது. அதாவது இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் எந்தவிதக் கேள்வியும் இன்றி எதிர்ப்பும் இன்றி சுரண்டுவதற்கான அமைதியை எதிர்பார்க்கின்றது.

அதை ஒரு சமூகத்தின் பொது உளவியலாகக் கட்டமைக்கத்தான் ஆளும் வர்க்கம் கல்வியை ஒரு ஆயுதமாக உலகம் முழுவதும் கையில் எடுத்திருக்கின்றது. இன்று பல கல்லூரிகளில் நடத்தப்படும் மதிப்பீட்டுக் கல்வி என்பது (வேல்யூ எஜுகேசன்) இந்த வகையைச் சார்ந்ததுதான். ஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனியத்தைப் போதிப்பது.

ஏற்கெனவே பல பல்கலைக்கழகங்களில் வேத சோதிடம், வாஸ்து சாஸ்திரம், கர்ம காண்டம் போன்றவற்றைப் பாடத் திட்டமாக வைத்து அதில் முனைவர் பட்ட ஆய்வுகள் வரை அனுமதிக்கப்படுகின்றன. 2004-ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் சோதிடத்தைப் பாடமாக வைப்பதற்கு அனுமதி அளித்திருந்தது. நாடு எவ்வளவு மோசமான இருண்ட காலத்திற்குள் தள்ளப்படுகின்றது என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் இன்று மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பார்க்க வேண்டும். பார்ப்பனியம் எவ்வளவு நயவஞ்சகமானது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால் அதன் இலக்கியங்களையும் புராணப் புரட்டுகளையும் படிக்க வேண்டிய தேவை ஏற்படாதவாறு அதன் ஒட்டுமொத்தச் சூழ்ச்சியையும் இந்தக் கல்விக் கொள்கையில் அப்பட்டமாக ஆனால் அருவருக்கத்தக்க வகையில் சொல்லி இருக்கின்றார்கள்.

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை 4.13-இல் மும்மொழி கற்றல் என்பது மாநிலம், மண்டலம் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் அதே வேளையில் அவற்றில் மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. ஒன்று தாய் மொழி, மற்றொன்று ஆங்கிலம், மூன்றாவது நிச்சயமாக உங்களுக்குப் பிடித்த மொழி அல்ல. காரணம் பகுதி 4.17-இல் சமஸ்கிருதம் மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும் கல்லூரிகளிலும் ஒரு முக்கிய வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்கப் பட்டிருகின்றது.

அதே போலப் பகுதி 4.13-இல் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மூன்று மொழிகளிலும் அடிப்படைச் செயல்முறையில் தேர்ச்சி பெறுதல் தேவை என்று கூறுவதன் மூலம் முன்றாவது மொழியில் - அதாவது மாணவர்கள் மீது சங்கிகளால் திணிக்கப்பட எல்லா வாய்ப்புகளும் உள்ள சமஸ்கிருதத்தில் - தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் மீண்டும் சமஸ்கிருதத்தின் மூலம் பார்ப்பனர்கள் தவிர்த்த கோடான கோடி சூத்திர மாணவர்களின் கல்வியில் கொள்ளி வைக்கக் காத்திருக்கின்றது இந்தப் பார்ப்பனியக் கல்வி முறை.

4.26-இல் NCFSE 2020-2021-ஐ உருவாக்கும்பொழுது NCERT 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்குத் தோதான ஒரு பயிற்சியை அடிப்படையாகக் கொண்டதொரு பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து மாணவர்களும் தச்சு, தோட்ட வேலை, மட்பாண்டம் ஆகியவற்றைச் செய்யும் உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களிடம் பத்து நாள்கள் புத்தகப் பையற்ற தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்று குலக்கல்வி திட்டத்தை பார்ப்பனத் திமிரோடு கொண்டு வந்திருக்கின்றது.

4.37-ஆனது பொதுத் தேர்வை இரண்டு சந்தர்ப்பங்களில் எழுத அனுமதிக்கின்றது. ஒன்று முதன்மைப் பொதுத்தேர்வு (Main exam) மற்றொன்று மதிப்பெண்ணை அதிகப்படுத்திக் கொள்வதற்கான தேர்வு (Improvement exam). இதன் மூலம் வசதி படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து அதிகப்படியான மதிப்பெண் பெறுவதற்கு வழி திறந்து விட்டுள்ளது.

7.10 பின்வருமாறு கூறுகிறது: அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரு தனியார்ப் பள்ளியுடன் ஒரு பொதுப் பள்ளியை இணைத்து, அந்த இணைக்கப் பெற்ற இரு பள்ளிகளும் தங்களுக்குள் சந்திக்கலாம், தொடர்பு கொள்ளலாம், கற்றுக் கொள்ளலாம், முடிந்தால் தங்களிடம் உள்ள வளங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம், தனியார்ப் பள்ளிகள் தங்களின் சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி, பகிர்ந்து, அரசுப் பள்ளிகளில் நிறுவலாம்; இதைப் போலப் பொதுப் பள்ளிகளும் முடிந்தவரை செய்யலாம்!

இதன் மூலம் அரசுப் பள்ளிக்கு சொந்தமாக உள்ள வளங்களைத் தனியார் கல்விக் கொள்ளையர்கள் சூறையாடவும் காலப் போக்கில் தனியார் பள்ளிகளே சிறந்தவை என்ற தோற்றத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தி அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிப் பள்ளியைவிட்டு நிற்கவும், அதன் மூலம் அரசுப் பள்ளிகளையே இழுத்து மூடவும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

11.9-இல் இளநிலைப் பட்டக் கல்வி பல்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டுக் காலப் படிப்பாக இருக்கலாம் என்றும் இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட பட்டயம் ('டிப்ளமோ’), மூன்றாம் ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். ஓராண்டுக் கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டுக் கல்வியுடன் வெளியேறினால் பட்டயம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்லூரியில் தொடர்ந்து படிக்க வசதியற்ற மாணவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நின்றுகொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதே போலத் தனியார் கல்வி நிறுவனங்கள் வலுக் கட்டாயமாக மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு வெளியேற்றவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த 100 பல்கலைக்கழங்களுக்கு இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும் என்று 12.8-இல் அறிவித்திருப்பதன் மூலம் பன்னாட்டு கல்விக் கொள்ளையர்கள் இந்தியாவின் கல்விச் சந்தையைக் கைப்பற்ற அகலமாகக் கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்றவாறு அதிகபட்சக் கட்டண வரம்பினை நிர்ணயிக்க வெளிப்படையான விதிமுறைகள் உருவாக்கப்படும் என்றும், இதனால் எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் 18.14 கூறுகின்றது.

மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டுத் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களுக்குத் தகுந்தாற் போலக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. கல்விக் கொள்ளையர்களைக் குளிர்விக்க இதைவிட எப்படி வெளிப்படையாக அரசு தனது பெருநிறுவன ('கார்ப்பரேட்') விசுவாசத்தைக் காட்ட முடியும்?

இது மட்டுமல்ல! 3, 5, 8-ஆம் வகுப்புகளில் உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எழுதுவார்கள் என்று கூறுவதன் மூலம் முதல் தலைமுறையாகப் படிக்க வரும் கிராமப்புற வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இடை நிற்றலுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. தச்சு வேலை, தோட்ட வேலை, மட்பாண்டம் செய்யும் வேலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்களை கிராமப்புறங்களிலேயே ஆதிக்கச் சாதிகளுக்குச் சேவை செய்யும் அடிமைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தப் பார்ப்பனிய சனாதன அரசின் நோக்கமாகும்.

மேலும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேசியக் கல்வி முகமை (NTA) மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதன் மூலம் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, படிக்கும் வசதியுள்ள பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே இனி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் என்ற நிலையையை ஏற்படுத்தி இருக்கின்றது.

 தேசியக் கல்விக் கொள்கை - 2020 மாணவர்களுக்கு உதவும் கல்விக் கொள்கையன்று.  அவர்களை அழிக்கும் கல்விக் கொள்ளை. தேனிலே நஞ்சைக் கலந்தல்ல, நஞ்சில் தேனைக் கலந்து அது உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை - 2020 என்ற பெயரில் பார்ப்பனியத்தையும் தனியார்மயத்தையும் ஒரு சேர மக்கள் மீது திணிப்பதன் மூலம் மீண்டும் பார்ப்பனிய மற்றும் சுரண்டல் பேர்வழிகளுக்கு ஏற்ற அடிமைகளை உருவாக்க அடிகோலுகிறது. இதைத் தடுக்காமல் போனால் மக்கள் இன்னும் பல தலைமுறைகள் சுயமரியாதை அற்ற அடிமைக் கூட்டமாக மந்தைகளைப் போல் வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

- செ.கார்கி