rights girlsமனிதக் கௌரவம் மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படை மனித உரிமைக் கொள்கைகளை மறுக்கும், அத்துடன் சமூகத்தின் மதிப்பீட்டில் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் நிலையைச் சிதைக்கும் இலக்கு வைக்கப்பட்டப் பேச்சு வெறுக்கதக்க பேச்சு என வரைவிலக் கணப்படுத்தலாம்.

வெறுக்கத்தக்க பேச்சானது இனம் சார்ந்தோ, மதம்சார்ந்தோ, தேசியம் சார்ந்தோ, வம்சாவளிச் சார்ந்தோ, பால்நிலைச் சார்ந்தோ இடம் பெறலாம் (united Nations Strategy and plan of action on hates speech 2019). 

பால் நிலைமையப் படுத்திய வெறுப்பு பேச்சானது அன்றாட வாழ்வில் இயல்பாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். 1948 ம்ஆண்டு, அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படையில் சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள். இருப்பினும் சட்டங்கள் நடைமுறைக்குச் சாத்தியமானவையா என்பது கேள்விக்குறியே! சாதாரணமாக பெண்களை மையப்படுத்தி வெறுப்பு பேச்சு பிரயோகிப்படுவதனை காணலாம். அந்த வகையில் இக்கட்டுரை வெறுக்கத்தக்க பேச்சு வெறுக்கதக்க குற்றம் என்பதனை வாழ்வியல் அனுபவங்களின் ஊடாக அனுகி ஆராயப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டப் பெண் செயற்பாட்டாளர் ஒருவர் (covid 19) அசாதாரணச் சூழ்நிலையின் போது பெண்கள் எதிர் நோக்கிய வன்முறைகள் மற்றும் குறித்த அசாதாரணச் சூழலில் பெண் அமைப்புக்கள் வன்முறைக்கு எதிராகச் செயற்பட முடியாத நிலைக் குறித்து தனது ஆதங்கங்களை நேர்காணல் ஒன்றில் வழங்கியிருந்தார். அந்த செயற்பாட்டாளரது ஆதங்கமும் பால் நிலைப் படுத்தப்பட்ட வெறுப்பு பேச்சினது தீவிரத் தன்மையுமே இந்த எழுத்துருவாக்கத்திற்கு அடிப்படை எனலாம்.

torture girls“பெண் என்றது அடிமை, அவக்கு என்ன என்டாலும் செய்யலாம் என்கின்ற ஒரு Patriarchal கோட்பாட்டுக்குள்ள போயிட்டம் நாங்கள். இப்ப மன்னார் லரண்டு கிழமைக்குள்ள நடந்த சம்பவம். நாங்கள் யாருமே வெளியால போகேலாது பிரச்சினை என்ன என்டா women’s Groups எங்களுக்கு Pass (ஊரடங்கு காலப் பகுதியில் வெளியில் நடமாடுவதற்கானஅனுமதி) இல்ல அப்ப அந்த பொலிஸ் பெரியவர் பாதிக்கப்பட்ட பெண் எங்களை நாடி வந்தபோது அந்த பெண்ணை அந்த ஆணோட அனுப்பி போட்டாங்க.

வரக்குள்ளயே அவங்களுக்கு கண்ணுள்ள எல்லாம் குத்தி கண்ணெல்லாம் ஒருமாதிரி கலங்கிதான் வந்தா. பிறகு Police அவங்கள reunification ஆம் அவங்க செய்யுறாங்களாம். reunification என்டு இணைச்சுவிட்டு அந்த பெண்ணுக்கு பெலிட்டால அடி அடி என்டு அடிச்சி உடம்பு முழுக்க காயம். அவங்கள கொண்டு போய் Hospital-லபோட்டனாங்கள். நாங்க போய்ட்டு police  இல சொன்னம் நீங்க செய்யுறது பிழை, அப்பிடி என்டு சொல்லி. அப்ப அவங்க எங்களுக்கு pass தரக்குள்ள என்ன சொன்னாங்கஎன்டு சொன்னா நீங்க பெண்கள் நிறுவனம் ஆணையும் பெண்ணையும் பிரிச்சுவைக்கிறதுதான் உங்கடவேலை”

பொதுவாக பெண்கள் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தம் குரலை எழுப்பும் போது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட நியமங்களுக்கு எதிரானது என கட்டமைப்பு கருதுவது ஏன்? பால் நிலைமையப்படுத்திய வெறுக்கத்தக்க பேச்சுக்கு ஆணாதிக்க சிந்தனையயே அடிப்படை எனலாம். வெறுக்கதக்க சொற்களும் அவை பிரயோகிக்கப்படும் மொழிகளும் வேறுபடலாம். ஆனால் இலக்கு வைக்கப்படும் தரப்பினராக பெண்களே உள்ளனர்.

பால் மற்றும் பால் நிலைத் தொடர்பில் தனிநபர் சார்ந்தச் சமூக மயப்படுத்தல்களில் காணப்படும் பிரச்சினையே பால் மற்றும் பால்நிலைச் சார்ந்தத் தரப்படுத்தலுக்கு காரணமாகின்றது. மனித கௌரவம், சமத்துவம், சமூக நீதி ஆகிய மூன்று அம்சங்களும் ஒவ்வொரு மனிதனது இருப்பிற்கு அவசியமானது. ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அதிகாரப் போக்கு மற்றும் சமூகத்தில் ஊடுறுவி நிற்கும் பாரம்பரிய கதைகள் என்பவற்றால் ஒவ்வொரு தனிமனிதனும் வார்த்தெடுக்கப் படுகின்றான்.

கடந்தக் காலத்தில் ஓவ்வொரு தனி நபர்களும் அவர்கள் கடந்து வந்த பாதைகளும் அனுபவங்களும் நபருக்கு நபர் வேறுபடும். அந்த அனுபவங்களும் சூழ்நிலைகளுமே அவர்களது வாழ்வியலை வடிவமைப்பதாய் அமையும். இருப்பினும் பால் நிலை சார்ந்த ஒடுக்குமுறை என்பது பொதுவாக சமூகம் கற்றுத் தரும் பாடமாகவே அமைகின்றது.

பெண்கள், ஆண்கள் தொடர்பாகச் சமூகம் கொண்டிருக்கக் கூடிய நோக்கு நிலைகள் சிறுபிராயத்திலே வார்த்தெடுக்கப்படுகின்றது. ஆணாதிக்க மற்றும் அதிகாரப் போக்கை வெளிப்படுத்தும் வகையிலான சமூகப் மயப்படுத்தலை அதிகம் காணலாம். சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட புராணங்கள் இதிகாசங்கள், கலைகள், பழமொழிகள் தொடக்கம் பெண் பிள்ளைகளை வளர்க்கும் முறைகளில் கூட வெறுப்புப் பேச்சினை அடையாளங் காணலாம்.

பயன்படுத்தப்படுகின்ற தூசன வார்த்தைகள் பெரும்பாளானவைப் பெண்களின் அங்கத்தை மையப்படுத்தியே காணப்படுகின்றது. சமூகத்தில் பால் மற்றும் பால்நிலைத் தொடர்பான நோக்கு நிலையில் மாற்றம் அத்தியாவசியமானது. பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம் சட்டப் பிரச்சினை அல்ல சமூகப் பிரச்சினை என நாம் உணரும் போது தான் அத்தாக்கத்தில் வெளிவர இயலும்; .ஆகையால் பால் நிலைமையப்படுத்திய வெறுக்கதக்க பேச்சு வெறுக்கதக்க குற்றம் என்ற புரிதல் சமூக மயப்படுத்தலில் அவசியம்.

- சண்முகரத்தினம் திவியா