modi and epsஉலகில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவும் நாடாக இந்தியா மாறியுள்ளது. நிச்சயம் பெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கொள்ளை நோய்களின் பரவல் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதும் அதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு சவாலான காரியம் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா அதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் நாமோ உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வக்கற்ற ஆட்சியாளர்கள் நம்மை கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ளச் சொன்னதன் உண்மையான பொருள் “என்னால் உன்னை காப்பாற்ற முடியாது, உன்னால் முடிந்தால் வாழு, இல்லை என்றால் சாவு” என்பதுதான்.

 இப்பொழுதெல்லாம் கொரோனா நோயாளிகள் பற்றிய செய்திகள் கூட மக்களை அச்சத்தில் ஆழ்த்தவில்லை. தினம் தினம் மரண செய்திகளை பார்த்த மக்கள் ஒரு தெளிவான மனநிலைக்கு வந்து விட்டார்கள். பட்டினி கிடந்து சாவதைவிட கொரோனா வந்து செத்தால் பரவாயில்லை என்று. இதுதான் ஆட்சியாளர்கள் மக்களிடம் எதிர்பார்த்த மனநிலை. போராடுவதற்கு மாறாக அதை தன்னுடைய விதி என்று சகித்துக் கொண்டு போகும் மனநிலை. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கவும், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் நோயாலும் பட்டினியாலும் செத்தாலும் மோடி 18 மணி நேரம் எதற்காக, யாருக்காக உழைக்கின்றார் என்பதை இன்று நாட்டின் பொருளாதார நிலையைப் பார்க்கும் யாரும் சொல்லி விடுவார்கள்..

சீனாவின் வர்த்தக மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி, இந்தியாவை உலக வல்லரசாக மாற்ற அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டு வரும் மோடி அரசு, இந்தக் கொரோனா நோய் தொற்று காலத்தை இந்தியாவிற்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்ற ‘நல்ல நோக்கத்தில்’ சீனாவில் இருந்தோ மற்ற நாடுகளில் இருந்தோ வெளியேறும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு நாசகாரத் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொழில் தொடங்க அழைத்துக் கொண்டிருக்கின்றது.

மிக மலிவான உழைப்புச் சக்தி, வளங்கள், நீர்த்துபோன தொழிலாளர் நல சட்டங்கள், போராட்டங்களை ஒடுக்கும் பாசிச அரசு கட்டமைப்பு என அனைத்தும் இருந்தாலும் பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் அவ்வளவு எளிதாக சூழலியல் சீர்கேடுகளை செய்துவிட்டு மக்களின் கோபத்தில் இருந்து தப்பிப்பது கடினம் என்ற எண்ணம் தரமற்ற காலாவதியான தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் லாபவெறி பிடித்த தொழிற் நிறுவனங்களிடம் உள்ளன. இந்த அச்சத்தைப் போக்கி இந்தியாவை கேட்பாரற்று அழிக்க, ஏற்கெனவே அரைகுறையாக இருக்கும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் நீர்த்துப் போக வைக்கத்தான் மோடி அரசு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 கொண்டு வருகின்றது.

இந்தியாவில் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச் சூழலுக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கும். இல்லை என்றால் ரத்து செய்துவிடும்.

தொழிற்சாலையை ஒட்டியுள்ள மக்கள் குறிப்பிட்ட தொழிற்சாலையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்றோ அதே போல அந்தப் பகுதிக்குத் தொடர்பில்லை என்றாலும் மக்கள் நலனின் மீது அக்கறை கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போன்றோரும் தரும் புகாருக்கு நடவடிக்கை எடுக்கும் நிலை இருந்ததை மாற்றி இனி மேல் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே புகார் தெரிவிக்க இயலும் என மாற்றி இருக்கின்றது பெரு முதலாளிகளின் அடியாளான மோடி அரசு.

அதுமட்டுமல்லாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்து திட்டங்களுக்கு சூழலியல் மதிப்பீடு தேவையில்லை என்கிறது இந்த அறிக்கை. மேலும் பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கால அளவும் 30 நாட்களிலிருந்து 20 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையும் மாற்றப்பட்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்காக என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை பறித்து, தங்களுக்கு பெருமளவில் தேர்தல் நிதி அளிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்ரேட்டுகளிடம் கொடுப்பதற்கான வழியை மோடி அரசு திறந்து விட்டுள்ளது. ஏற்கெனவே மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பெரு முதலாளிகளுக்கும், கார்ப்ரேட் சாமியார்களுக்கும் பெருமளவு நிலம் இலவசமாக தரப்பட்டதோடு அவர்கள் சுற்றுச் சூழலை நாசம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் டெல்லியில் யமுனை ஆற்றங்கரையில் 3 நாட்கள் நடத்திய உலக கலாச்சார திருவிழாவால் யமுனையின் வெள்ளச் சமவெளி பகுதியில் பல்லுயிர் சூழல் பாதிக்கப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்து விட்டதோடு, யமுனை கரையில் ஏற்படும் பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் முதல்கட்டமாக ரூ.5 கோடி செலுத்த உத்தரவிட்டது.

மேலும் இது சம்மந்தமாக அமைக்கப்பட்ட குழு “தோராயமாக 300 ஏக்கர் சமவெளி நிலம் யமுனைக் கரையின் வலது புறத்திலும், கிழக்கத்திய கரையில் சுமார் 120 ஏக்கர் நிலமும் பல்வேறு அளவுகளில் சுற்றுச் சூழல் அழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய பௌதீக ரீதியான மீட்புக்கு சுமார் 29 கோடியும், உயிரியல் ரீதியான மீட்புக்கு 13 கோடி ரூபாயும் செலவாகும். இவற்றை நிறைவேற்ற பத்தாண்டுகள் தேவைப்படும்” என்று அறிக்கை அளித்தது. முன்னதாக 4 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு வாழும் கலை அறக்கட்டளை ஏற்படுத்திய ‘மிகப் பெரிய பரந்துபட்ட சேதத்திற்கு’ ரூ.100-120 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல மோடியின் ஆஸ்தான அடிமைகளில் ஒருவரான பாபா ராம்தேவுக்கு பாஜகவை போல விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள்.

2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளிடமிருந்து பெல் நிறுவனத்துக்காக கைப்பற்றப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை  மகாராஷ்ட்ராவை ஆண்ட பா.ஜ.க வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு பதஞ்சலி நிறுவனத்திற்காக ஒதுக்கியது. அது மட்டுமல்லாமல் பதஞ்சலி நிறுவனத்திற்காக சந்தை மதிப்பில் பாதி, பத்திரப் பதிவுச் செலவுக்கு 100 சதவிகித சலுகை, குறிப்பிட்ட காலம்வரை இலவச மின்சாரம், அதன் பின்னர் ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் சலுகை விலையில் மின்சாரம் மற்றும் ஜி.எஸ்.டி வரிச் சலுகைகள் போன்றவற்றையும் வழங்கியது. ஏற்கெனவே 230 ஏக்கர் நிலத்தை பதஞ்சலி நிறுவனத்தின் உணவு மற்றும் மூலிகை தொழிற் கூடத்துக்காக மகாராஷ்டரா அரசு ஒதுக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல யானையின் வலசை பாதைகளை மறித்து ஜக்கி பல நூறு ஏக்கர் நிலங்களை ஆட்டைய போட்டு ரிசாட்டுகளையும், வில்லாக்களையும் கட்டிவைத்து சுற்றுச் சூழலை நாசப்படுத்தி யோக என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்க அவருக்கு துணையாக இன்று வரை நின்று வருவது மோடி அரசும் அதன் அடிமை அதிமுகவும்தான்.

இது மட்டுமல்ல இந்திய ஆளும் வர்க்கம் சாமானிய மக்களை எப்படி பலி ஆடுகளாக பார்க்கின்றது என்பதற்கு போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷ வாயு கசிவு தொடங்கி தற்போது கூடங்குளம் அணுமின் நிலையம் வரை நாம் பலவற்றையும் பார்த்துதான் வருகின்றோம். கார்ப்ரேட்டுகளின் கைக் கூலிகளாக செயல்படும் ஆட்சியாளர்கள் எதற்கும் அஞ்சாத கொடியவர்கள் என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இவை எல்லாம் கார்ப்ரேட்டுகளை தாஜா செய்ய போதாது என்பதால்தான் இன்று மோடி அரசு அப்பட்டமாக சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை மூலம் தனது முதலாளித்துவ அடிமைத்தனத்தின் கோர முகத்தை காட்டி இருக்கின்றது. நிலம் நீர், காற்று, வானம் என அனைத்துமே முதலாளிகளுக்கே சொந்தம் அதை அழிப்பதற்கு அவர்களுக்கும் அவர்களை நக்கிப் பிழைக்கும் அடிமைகளான தங்களுக்குமே உரிமை உள்ளது என சுயசார்பு பேசும் வேடதாரிகளின் அரசு அப்பட்டமாகவே சொல்கின்றது.

இனி பொதுமக்களோ இல்லை சமூக ஆர்வளர்களோ வீதிக்கு வந்து “எங்கள் மண்ணை அழிக்காதே, எங்கள் சந்ததியை கொல்லாதே என முழக்கமிட்டால், போராடினால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் கேட்பாரின்றி நாட்டில் நடக்கும். ஆட்சியாளர்கள் இப்படியான சம்பவம் நடந்ததே தங்களுக்கு தெரியாது, தொலைக் காட்சியில் பார்த்துத்தான் தாங்களே தெரிந்து கொண்டதாக உங்களிடம் சொல்வார்கள். கொலை செய்யப்பட்ட உங்களின் உடல்கள் ஒரு செத்த நாயை போல இழுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்படும். போராடுபவர்களுக்கு என்ன நேரும் என்பதை இந்த அரசு உங்களுக்கு புரியும் மொழியில் சொல்ல முற்படும்.

இன்று கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள சொன்ன ஆட்சியாளர்கள் நாளை நஞ்சாகிப் போன சுற்றுச் சூழலோடும் வாழ நம்மை பழகிக் கொள்ள சொல்வார்கள். இனி நீங்கள் உயிரோடு வாழ வேண்டுமா இல்லை சாக வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம், அரசுக்கும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு மட்டுமே உள்ளது. கேள்வி கேட்காமல் மோடிக்காக நாம் அனைவருமே இனி உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டும், அதுதான் உண்மையான தேசபக்தி. சங்கிகளின் உலகில் நம் தேச பக்தியை நிரூபிக்க நமக்கு வேறு எந்த வழியும் இல்லை.  நாம் அனைவரும் கொரோனா வைரசிடமிருந்து கூட தப்பித்து விடலாம் ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மோடி தற்போது வெட்டிக் கொண்டிருக்கும் சவக்குழியில் இருந்து தப்பிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

- செ.கார்கி