(கீழ்ப்பாக்கம் மன நலக் காப்பகத்தில் பணியாற்றியவர் அரவிந்தன் சிவக்குமார் (வயது 44). சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இவருக்கு கடந்த ஆண்டு நியூஸ் 18 தொலைக்காட்சி 'மகுடம் விருது' வழங்கி இருந்தது.

"தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர் உரிமைக்காக போராடிய தோழர் அசீப் முகமதை கட்டாயமாக பதவி விலக்கப்பட்டதைக் கண்டித்தும் நியூஸ்18ன் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் நியூஸ்18 குழுமம் வழங்கிய மகுடம் விருதைத் திருப்பித் தருகிறேன்" என்று அரவிந்தன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் மனநலப் பிரச்சினைகள், மனநல நோயாளிகளின் உரிமைகள், குடிநோய், கல்வி நிலையங்களில் நிகழும் வன்முறைகள், அவரது முன்னோடி முருகப்பா என பல செய்திகளை இந்த நேர்காணலில் சொல்கிறார். செம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், கொரோனா வருவதற்கு முன்பு நடந்த இந்த நேர்காணலைச் செய்தவர் பீட்டர் துரைராஜ்)

aravindhan sivakumarகேள்வி: நியூஸ் 18 தொலைக்காட்சியின் விருது வாங்கியதற்கு முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருதை மனநல மருத்துவர் முருகப்பா அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக சொல்லியிருந்தீர்களே ஏன்?

பதில்: அவரிடம் நான் பயிற்சி மாணவராக கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் பணியாற்றி இருக்கிறேன். ஒரு சில நோயர்களுக்கு தங்கள் பெயர் கூட தெரியாது. எங்கிருந்து வந்தோம் என்று தெரியாது. அது போன்ற சூழலில் ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் மருத்துவர் முருகப்பா அவர்கள். ஒரு பயிற்சி மாணவரைக் கூட அவர் தோல்வி அடையச் செய்தது கிடையாது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நூலகத்தில் அவர் கைப்படாத நூட்களே இல்லை என்று சொல்லலாம்.

2003 முதல் 2007 வரை மனநல காப்பகத்தின் இயக்குநராக மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார். அப்படி ஒரு இயக்குனர் அதற்கு முன்பும் இல்லை, அதற்குப் பின்பும் இல்லை. இவருடைய சேவையை யாரும் அந்தத் துறையில் நல்லவிதமாக பேசி அங்கீகரிப்பதில்லை. எனவேதான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரைப் பற்றி பேசி வருகிறேன்.

கேள்வி: அவரைப்பற்றி பேசும்போது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறீர்களே?

பதில்: பல மனநலச் சங்கங்கள் இவரைக் கண்டுகொள்ளவில்லை. தான் செய்த எதையும் அவர் செய்தியாக்கியதில்லை. தெருவில் திரியும் நோயாளிகளை ஒரு பிரபலமான என்.ஜி.ஓ. மூலம் மனநலக் காப்பகத்தில் சேர்ப்பது என்ற கொள்கை முடிவை தமிழக அரசு 2004ம் ஆண்டு எடுத்தது. இது 1987 ஆம் ஆண்டு மன நலச் சட்டத்திற்கு எதிரானது என்று துணிந்து பேசினார். அவரைப் பொருத்தவரை நோயர்நலன், உடனாளர் நலன், மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் அவர் ஓய்வுபெற்ற நாளின் போது நடந்த பாராட்டு விழாவில் அவரைப் பாராட்டி ஒரு பேராசிரியர் கூட பேசவில்லை. ஆனால் மறுநாள் பயிற்சி மாணவர்களாக இருந்த நாங்கள் விடுதியில் நடத்திய பாராட்டு விழாவில் இரவு முழுவதும் பேசிக் கொண்டு இருந்தார். மருத்துவர் சி.என். தெய்வநாயகத்தை உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். அவரும் நோயாளிகளுக்காக அரசை எதிர்த்துப் பேசியவர்; மாற்றலுக்கு ஆளானவர். ஆனால் அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது. மருத்துவர் முருகப்பா பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று யோசித்து வருகிறேன்.

கேள்வி: மனநலக் காப்பகத்தில் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

பதில்: நான் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் பணிபுரிந்தேன். குணமான பல நூற்றுக்கணக்கான நோயர்களை அவர்களுடைய உறவினர்களைக் கண்டுபிடித்து அனுப்பி இருக்கிறேன். குணமான நோயாளிகளுக்கு தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்று சொல்லத் தெரியாது. பலர் வெளிமாநிலங்களிலிருந்து சேர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பேசும் மொழி என்னவென்று தெரிந்து கொள்ளவே பல வாரங்கள் ஆன கதையெல்லாம் உண்டு.

என்.ஜி.ஓக்கள் மூலமாக, சுற்றித் திரியும் நோயாளிகளை மனநலக் காப்பதில் சேர்ப்பதை முருகப்பா ஏன் எதிர்த்தார் என்பதை நான் பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். இப்படி அவர்களை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியதில் துப்புரவுப் பணியாளர்கள், உடனாளர்களின் பங்கு மகத்தானது. இந்த வேலையைச் செய்தமைக்காக என்னை பரிகசித்த சக மருத்துவரெல்லாம் உண்டு. நான் செல்பேசி, இமெயில் மூலமாகவே பல மாநிலங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், வட்டாட்சியர் என பல அரசு அலுவலர்களைத் தொடர்பு கொண்டு நோயர்களின் விலாசத்தைக் கண்டுபிடித்து இருக்கிறேன்.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ஒரிசா மாநிலம் பூரி மாவட்ட ஆட்சியர் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பீகாரில் ஒரு கிராமத்தின் பெயர் நான்கு இடங்களில் இருந்தது. நான்கு இடங்களில் இருந்தும் வட்டாட்சியர்கள் பொறுப்பாக எனக்கு பதில் அனுப்பி இருந்தார்கள். வட மாநிலங்களில் நிர்வாகம் மோசமாக இருக்கும் என்ற எண்ணத்தை இது போன்ற சம்பவங்கள் உடைத்தன. நான் அரசு வலைத்தளத்தில் உள்ள இமெயில், செல்போன் மூலமாகத்தான் தொடர்பு கொண்டேன்; அதற்கு நன்கு உதவி செய்தார்கள். இதில் என்னோடு பணிபுரிந்த தொழிலாளர்களின் பங்கு மிக உதவியாக இருந்தது. 

கேள்வி: தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் முக்கியமான மனநலப் பிரச்சினை என்ன?

பதில்: குடிதான். 25, 30 வயதுள்ள இளைஞர்களின் கல்லீரல் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நான் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சமீபத்தில்தான் மாற்றலாகி இருக்கிறேன். வெவ்வேறு விதமான பாதிப்புகளோடு நோயர்கள் வருகிறார். ஒட்டுமொத்த கிராமமே குடிக்கிறது. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இதன் பாதிப்பு அவரின் மனைவி அல்லது தாய் மீது வருகிறது. தற்கொலைக்கு இது நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக அமைகிறது.

பதின்பருவத்தில் இருப்பவர்களுக்கு early life experience என்று சொல்லக்கூடிய மகிழ்ச்சியான நினைவுகள் கிடைப்பதில்லை. புறச்சூழல் மோசமாக அமைகிறது. வன்முறை, ரணங்களுக்கு (trauma) ஆளாகிறார்கள். இந்தியாவில் மகாராட்டிராவிலும், அதனை அடுத்து கேரளாவிலும்தான் தற்கொலை மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இப்போது தற்கொலை செய்து கொள்வதில் முதல் மாநிலமாக ஆவதற்கு தமிழ்நாடு போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கிறது. எல்லா வயதினரும் தற்கொலை முயற்சி செய்து வருகிறார்கள். 

கே : ஐஐடி மாணவி பாத்திமா லதீப் மரணம் பற்றி...?

பதில் : ரோகித் வெமுலா, பாயல் தாட்வி வரிசையில் பாத்திமா லதீப் மீது நடந்தது ஒரு நிறுவனப் படுகொலை. செருப்பு கூட பள்ளிக் கூடங்களில் படித்தபோது போடாத பல மாணவர்கள் ஐஐடி, எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள் கடுமையானவை. படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு படிக்க வரும் சாதாரண, மாணவர்களின் தற்கொலை என்பது மன அழுத்தம் (depression) என்று சொல்லக்கூடிய தனிநபர் பிரச்சினை அல்ல. மன அழுத்தம் அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒருவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அதே பிரச்சினைக்கு வேறு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அது சமூகம் சார்ந்த பிரச்சினை. இப்படிப்பட்ட மாணவர்களுக்காகப் பரிந்து பேசும் ஆசியர்கள், ஆசிரியர் அமைப்புகள் அங்கு இருக்க வேண்டும். மாணவர் சங்கங்களை அந்த நிறுவனங்களில் ஜனநாயகப் பூர்வமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். சாதி அமைப்புகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டும் கவுன்சிலிங் மையங்கள் செயல்பட வேண்டும். இது போன்ற செயல்களால்தான் நிறுவனப் படுகொலைகளைத் தடுக்க இயலும். இல்லையென்றால் மரணம், நிறுவனங்களிலிருந்து இடைநிற்றல் (drop out) போன்றவை தொடரும்.

கேள்வி: ஐந்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப் போகிறார்களாமே?

பதில்: இப்போது உள்ள நடைமுறைப்படி தட்டுத்தடுமாறி மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை தேர்வாகி விடுவார்கள். அவர்களின் ஆளுமை பல இடங்களில் சுற்றுவதால் மேம்படுகிறது. ஐந்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்கும். இது ஒருவகையான வன்முறைதான்..

அதே போல நீட் தேர்வுக்குத் தயாராகும் பயிற்சி மையங்களில் சாதாரண, மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் நடத்தும் விதம் மோசமானது. இப்போது மாணவர்களுக்கு வெகு சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. கஞ்சா, fevibrand, fevi quick, whitener, ஹான்ஸ் போன்றவை மிக எளிதாக கிடைக்கின்றன. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

கேள்வி: சிறைவாசிகளின் மனநலம் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் : லத்தீன் அமெரிக்க நாடுகளில் திறந்த வெளி சிறைச்சாலைகள் உள்ளன. சிறைவாசிகளோடு அவர்களின் உறவினர்களும் தங்கிச் செல்லலாம் என்பது போன்ற வசதிகள் உள்ளன.

சிறையைப் போலத்தான் மனநலக் காப்பகங்களின் கட்டமைப்பு (design), கண்காணிப்பு முறை உள்ளது. ரோல்கால், வார்டன், night patrol (இரவு ரோந்து) என்ற பல வார்த்தைகள் சிறைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான். சிறைகளில் பலர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். கொலைக் குற்றம் புரிந்த பல நோயர்கள் இன்னமும் மனநலக் காப்பகங்களில் உள்ளனர். நெருங்கிய உறவினர்களைக் கொலை செய்துவிட்டு வந்ததால் ஒரு சிலர் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை பற்றி (structural violence) யாரும் பேசுவதில்லை. நமது சமுதாயத்தை பொருத்தவரை கத்தி எடுத்துக் குத்தி இரத்தம் வந்தால்தான் வன்முறை. வெளி உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஆனால் சிறைவாசிகளின் வாழ்நாட்களின் பொன்னான காலங்கள் சிறையிலேயே கழிகின்றன. இவர்கள் வெளிஉலகை எப்படி எதிர் கொள்ளுவார்கள்?

கேள்வி: தமிழ்நாட்டில் மனநல மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன?

பதில் : போதுமான அளவு மன நல மருத்துவர்கள் இருக்கிறார்கள். மாவட்டம்தோறும் மனநலத் திட்டம் செயல்படுகிறது. (இதற்கு மனநல மேம்பாட்டுத் திட்டம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று முருகப்பா வலியுறுத்தி இருந்தார்) மருந்துகள் தாலுகா, ஆரம்ப சுகாதார மையங்கள் வரை விநியோகம் செய்யப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகளில் குடிநோயர்களுக்கு என தனியான அறைகள் கட்டப்பட வேண்டும்.

இப்போது உள்ள மன நலக் கொள்கையின்படி மனநல நோயர்களை சமூகப் பராமரிப்பு என்ற பெயரில் என். ஜி. ஓ. க்களிடம் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒருவகையில் மனநல மருத்துவத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாகும். 2017 ஆம் ஆண்டு மனநலச் சட்டபடி மனநோயாளிகளை எங்கு வைத்து பராமரிப்பது என்பதை சம்மந்தப்பட்ட நோயர்களின் கருத்து கேட்டு முடிவெடுக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் அரசு என்.ஜி.ஓ.க்களிடம் அனுப்ப அரசு முயற்சி செய்வது தவறு.

கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் 153 நோயர்கள் வாக்கு அளித்தனர். அதே போல அரசு மன நலக் காப்பகத்தில் உள்ள 800 நோயர்களில் 631 பேர் பல நாட்களாக அங்கு இருக்கின்றனர். அவர்களில் 600 பேர் கருத்து சொல்லும் அளவுக்கு தெளிவாக இருப்பவர்கள். அவர்களிடம் கருத்து கேட்டுதான் எங்கு அனுப்ப வேண்டும் என்று அரசு முடிவெடுக்க வேண்டும். நோயர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. என்ஜிஓக்களுக்கு (அரசு சாரா நிறுவனங்கள்) அந்தப் பொறுப்பு இல்லை. மனநலக் காப்பகங்களில் இருந்து நோயர்களை வெளியேற்றுவது (discharge) தொடர்பாக கொள்கை ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே பொது சமூகம்தான் அதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். மாற்றுத் திறனாளர் உரிமைகள், சர்வதேச பிரகடனங்கள் அடிப்படையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் இதற்காகப் பேச வேண்டும்.

கேள்வி: மேலை நாடுகளில் மனநலக் காப்பகங்கள் எப்படி இருக்கின்றன?

பதில்: அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் மனநலக் காப்பகங்களை மூடத் தொடங்கி விட்டனர்(deinstitutionalisation). அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு காரணம்; வலதுசாரி அரசு பொறுப்புக்கு வந்தது இன்னொரு காரணம். சமூகப் பொறுப்பு (community care) என்ற பெயரில் இதைச் செய்தார்கள். இதைத்தான் இப்போது மன நோயர்களை அதிகாரப்படுத்துவது (empower) என்ற பெயரில் என்.ஜி.ஓக்கள் வசம் நோயர்களைக் கொடுத்து தனது பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கப் பார்க்கிறது.