cisco systemsசாதியின் கோரத் தாண்டவம் அமெரிக்காவிலும் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இது முழுக்க முழுக்க இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த சாதி இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்காக (High skilled employees) சென்றவர்களில் 90 விழுக்காட்டினர் உயர்சாதி இந்துக்கள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. (நன்றி: WGBH NEWS) அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த பணிகளில் வேலை செய்கிறார்கள். மீதமிருக்கும் மக்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட துறையை பின்னணியாகக் கொண்டு ஆய்வுக்காகவோ, அல்லது மேற்படிப்பு படிப்பதற்காகவோ சென்றவர்கள்.

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தற்காலிகமாக குடியேறிய நபர்களையே (IT guys) சார்ந்து இருக்கிறது. இவர்கள் இந்தியாவில் தாங்கள் கையாண்டு வந்த சாதிய நெறிமுறைகளை நிழல் போல் பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்கா வரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த சாதிய சிந்தனை அவர்களின் வீடுகளோடு நின்று விடவில்லை. அது அவர்கள் வேலை செய்யும் இடம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடன் குழுவில் பணியாற்றும் நபர் தாழ்த்தப்பட்ட சாதி என்று தெரிய வந்தவுடன், அவருடன் இணைந்து வேலை செய்வதைத் தவிர்த்து இருக்கிறார்கள். அவருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்று இருக்கின்றன.

சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சாதியப் பாகுபாடு பல அமெரிக்கர்களை புருவம் உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள San Jose என்ற இடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு ஆதிக்க சாதி இந்துக்களால், தலித் ஒருவரின் பணி மற்றும் சம்பள உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்களுக்கு அதிகப்படியான H-1b விசா வழங்கும் முக்கிய 20 நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் பணியாற்றி வந்த தலித் பொறியாளருக்கு (இளைஞர் பெயர் குறிப்பிடப்படவில்லை) அவரது மேல் அதிகாரிகளாக இருக்கும் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கும்பலா (Ramana Kompella) இருவரும் சாதிய ரீதியான துன்புறுத்தல்களை, மனோரீதியான அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறார்கள். உடன் வேலை செய்யும் சக பணியாளர்கள் மீதும் சாதிய வன்கொடுமை செய்ததாக, 'Civil Rights act of 1964 California's Fair Employment and Housing act' என்ற சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கலிபோர்னியா அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது நடந்தேறிய மறுதினமே அனைத்துப் பத்திரிகைகளும் இதை ஒரு முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள். ஆனால், இதனை முற்றிலுமாக நிராகரித்து இருந்தது சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம்.

அமெரிக்காவில் இயங்கி வரும் நிறுவனங்களில், இனம், நிறம், பாலினம், மதம் இதன் அடிப்படையில் துன்புறுத்தப் பட்டால் அல்லது பாகுபாடு காட்டப்பட்டால், அது குற்றமாகும். இதற்கெல்லாம் அங்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், இதில் சாதிய ரீதியான துன்புறுத்தல் (Caste discrimination) இடம் பெறவில்லை. பல பத்திரிகைகள் இந்தியாவில் சாதியப் படிநிலை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை விரிவான கட்டுரைகள் மூலம் எடுத்துக் காட்டி இருந்தார்கள். இந்தியாவில் இந்து மதத்தால் கடைபிடிக்கப்படும் சாதியக் கட்டமைப்பில் மேல் அடுக்குகளில் இருப்பவர்கள் உயர்ந்தவர்களாகவும், அடிமட்டத்தில் இருப்பவர்கள் தாழ்ந்தவர்களாகவும் பிரித்து காணப்படும் வேறுபாடுகள், அமெரிக்காவிலும் இந்திய வம்சாவளியினர் மூலம் இன்றளவும் கையாளப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.

அமெரிக்காவில் நிகழும் சாதி ரீதியான துன்புறுத்தல்களைக் கண்காணித்து வரும் 'Equality labs' என்ற அமைப்பு, 2018ல் நடத்திய ஓர் ஆய்வில் 67% தலித்துகள் தங்களது பணியிடங்களில் சாதிய துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிறது. முறையே பல்கலைக்கழகங்களில் மூன்றில் ஒருவர் (தலித்) சாதிய துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் இந்த சாதிய மனநிலை அவர்களின் வீடுகளில் மட்டும் இல்லாமல், பணி செய்யும் இடங்கள் மற்றும் கல்விக் கூடங்களிலும் தலைதூக்கி நிற்கிறது. Caste based discrimination என்பது அமெரிக்காவில் இல்லை என்ற சிந்தனை பெருவாரியான அமெரிக்க மக்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் 'Brandeis University' என்ற பல்கலைக்கழகம் சாதிய ரீதியான துன்புறுத்தலை Anti discrimination policy -ல் இணைத்திருக்கிறார்கள். அதாவது, "Brandeis believes that since cast identity if so intertwined with many of the legally recognized and protected characteristics, discrimination based on a person's caste is effectively the same," என்கிறது அவர்களின் புதிய வழிகாட்டுதல் கொள்கைகள்.

அமெரிக்காவில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் இதுதான் முதன் முதலில் 'சாதிய துன்புறுத்தல்களும் குற்றமாகும்' என்று தங்களது செயல் திட்டங்களில் ஒன்றாக இணைத்து இருக்கிறார்கள். இது மிகுவும் வரவேற்கத்தக்கது. இதையே பிற பல்கலைக்கழகங்களும் கடைபிடிக்கும் பட்சத்தில், சாதிய வன்முறைகள் குறைவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருக்கும்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சாதி என்பது என்னவென்று தெரியாமல் தான் இருக்கிறது. அவர்களுடன் பயிலும் சக மாணவர்களை சாதியக் கண்ணோட்டத்துடன் யாரும் அணுகுவதில்லை. ஆனால், இதே நிலை அவர்களின் குடும்பங்களில் இருப்பது இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் (அப்பார்ட்மெண்டில்) ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக அழைக்கப் பட்டிருந்தோம். சுமார் நூறு பேர் கலந்து கொள்ளக் கூடியதாக இருந்த அந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய அறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கேக் வெட்டிய பின்னர் உணவு உட்கொண்டு, பின் நாங்கள் கொண்டு சென்றிருந்த பரிசுகளை அக்குழந்தையிடம் கொடுக்கச் சென்றிருந்தோம்.

இங்கு நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் நமது ஊரைப் போலவே மொய் வாங்கும் கலாச்சாரம் இருக்கிறது என்பது வேடிக்கையாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பரிசுகளை பெற்றுக் கொண்டபின் நமது பெயரையும் தெரிவிக்குமாறு ஒருவர் தனியாக ஓரிடத்தில் அமர்த்தப்பட்டு இருந்தார். பரிசுகளை வாங்கிய பின்னர் 'நீங்கள் எந்த கம்யூனிட்டி' என்று கேட்டார். அவரின் கேள்வி சற்றே வியப்பளித்தது. கம்யூனிட்டி என்றால் என்ன என்று ஒரு நொடியில் சிந்தித்துப் பார்த்தேன் 'ஓ…. ஒருவேளை நாம் வசிக்கும் அபார்ட்மென்ட்டைத் தான் அப்படி கேட்கிறார்' என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் இந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கிறேன் என்று என்னுடைய பெயரையும் எடுத்துக் கூறினேன். அவர் உடனே, "இல்லை எங்கள் சாதியினர் வழங்கும் பரிசுகளுக்கு தனியாக ஒரு புத்தகத்தில் எழுதி வருகிறோம்" என்றார்.

இந்த மனநிலை இவர்களுக்கு எங்கிருந்து வந்தது. 'அமெரிக்கா Free country' என்பதை பல அமெரிக்கர்கள் சொல்ல நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த நாடு உங்களுக்கு / நமக்கு எல்லாம் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது. அது அமெரிக்காவின் குடிமக்கள் ஆனாலும் சரி, இங்கு வேலைக்காக குடியேறிய ஊழியர்கள் ஆனாலும் சரி, எல்லோருக்கும் ஒரே விதி தான், எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். இங்கு அதிகப்படியான சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக 'சாதியும் எங்கள் கலாச்சாரத்தில் ஒன்றுதான்' என்று புகுத்தி, நிழல் போல் சாதியையும் கூடவே இழுத்து வந்திருக்கிறார்கள் இந்திய வம்சாவளியினர். ஒருபுறம் நிறவெறி தலைவிரித்தாடும் அமெரிக்காவில் மறுபுறம் இந்திய துணைக் கண்டத்தின் சாதியும் மேலோங்கி நிற்பது என்பது மிகவும் ஆபத்தானது. சாதியப் பாகுபாடுகள் அடிப்படையில் குற்றம் என்று சட்டங்கள் கடுமையாக வரும்போது தான் coding எழுதும் உயர் சாதி ஏழைகள்/பரம்பரையினர் திருந்துவார்கள்.

- பாண்டி