கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தீவிரமாகி நான்காவது ஊரடங்கை நோக்கி நாடு போய் கொண்டு இருக்கும் சூழலில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசின் இந்த முடிவு குழந்தைகளுடன் மக்களுடனும் தொடர்பு மற்றும் அக்கறை அற்ற நிலையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு போல் உள்ளது. இது குழந்தைகள் மீது அரசே நிகழ்த்தும் பெரும் வன்முறையே.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நமது அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு போதுமான உணவு தினமும் கிடைக்கிறதா என்பதே கேள்வி. பத்தாம் வகுப்பு குழந்தைகள் வளரிளம் பருவத்தினராய் இருப்பார்கள். அவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும். நம் நாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் இருப்பதாக ஏற்கனவே பல புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கிறது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து சோர்வாக இருப்பதையும் பாடத்தை கவனிக்க முடியாமலும் நமது பள்ளிக் குழந்தைகள் இருப்பதைக் கண்டறிந்து பல ஆசிரியர்கள் அவர்கள் முன்முயற்சியிலும் தன்னார்வலர்களை இணைத்தும் காலை உணவிற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இப்போதைய ஊரடங்கில் அப்படி ஒரு வாய்ப்பையும் நம் பிள்ளைகள் இழந்து இருப்பார்கள்.

sengottaiyan 10th examநம்முடைய அரசுப் பள்ளி பெற்றோர்கள் பெரும்பாலும் தினசரி பணிகளுக்கு சென்று வரும் தினக்கூலிகளாகத் தான் உள்ளனர். இந்த ஊரடங்கில் அவர்கள் பணிகள் இன்றி அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயில் அங்கங்கே தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவிலும் கால் வயிறு அரை வயிறு உண்டு வருகின்றனர். அத்தகைய சூழலில் குழந்தைகளுக்கு சத்தான சரிவிகித உணவு கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்க அவர்கள் எப்படி தேர்விற்கு தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்? எப்படி வந்து தேர்வுகள் எழுதுவார்கள்?

சாதாரணமாகவே குடும்ப வறுமை காரணமாக பெற்றோருடன் அவர்கள் ஈடுபடும் பணிகளில் குழந்தைகளும் பங்கேற்பதும், மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தளங்களைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளி பெற்றோர்கள் சிறுசிறு கடைகள் போடுவதும், அதில் குழந்தைகள் பங்கேற்பதும், சில கிராமப் புறங்களில் வாரச் சந்தை போடும் போது பெற்றோரோடு குழந்தைகள் போவதும், ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் வருடத்தில் சில மாதங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு தேயிலை தோட்டங்களுக்குச் செல்லும் போது உடன் பள்ளி செல்லும் குழந்தைகளும் போய்விடுவார்கள். கடற்கரைப் பகுதிகளில் பெற்றோர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது குழந்தைகள் அவர்களோடு செல்வதும் உண்டு. இவை போன்ற காரணங்களால் சில நேரங்களில் இடைநிற்றல் ஏற்படுவதும் உண்டு. பின் ஆசிரியர்கள் முயற்சி எடுத்து மீண்டும் பள்ளிக்கு வர வைப்பதும் அன்றாடம் நடக்கும் செயல்களாக உள்ளன. அப்படித் தான் கொங்கடை மலைப்பகுதியில் குழந்தைகள் கரும்பு வெட்டும் பணிக்குச் சென்று உள்ளதாக கல்வி மற்றும் களப் பணியாளர்கள் பதிவு செய்து உள்ளனர். மேலும், இந்த ஊரடங்கில் பல்வேறு காரணங்களுக்காக பல குடும்பங்கள் வேறு மாவட்டம்/ மாநிலம் சென்று இருப்பார்கள்.

குழந்தைகள் ஒரு பக்கம் புத்தகம் ஒரு பக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க அவர்கள் எப்படி தேர்வுக்குத் தயார் செய்வார்கள்? மேலும், வரும் ஜூன் 30-ம் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ், மெயில், புறநகர் என அனைத்துப் பயணிகள் ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அப்படி இருக்க வறுமையின் காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் ஊரடங்கு காலத்தில் வேறு மாவட்டம் மற்றும் மாநிலம் சென்று உள்ள குழந்தைகள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சொந்த மாவட்டங்களுக்கு எப்போது எப்படி வருவார்கள்?

பொதுவாகத் தேர்வு என்றால் குழந்தைகளுக்கு அச்சம் இருக்கும். பொதுத் தேர்வு என்றால் கூடுதல் அச்சம் இருக்கும். இப்போதைய சூழலில் கிட்டத்தட்ட 40 நாட்கள் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் திடீரென்று எப்படி தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்? பொது தேர்வு என்றால் நாற்பது நாட்களுக்கு மேல் சிறப்பு தயாரிப்புப் பயிற்சி பள்ளிகளில் நடக்கும். தனியார் பள்ளிகளில் இணைய வழிக் கல்வி தற்போது நடந்து வருகிறது. விளிம்பு நிலையில் உள்ள, மலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வி தற்போது சாத்தியம் இல்லை. அப்படி இருக்க இந்தக் குழந்தைகளை எப்படி தேர்விற்கு தயார் செய்வது?

பல பள்ளிகளில் தேர்வு மையம் வேறு பள்ளியாக இருக்கும். அது புதுச் சூழலாக இருக்கும். அதைக் குறித்த அச்சம் இயல்பாக ஏற்படும். சாதாரண நாட்களில் அவற்றைக் குறித்து ஆசிரியர்கள் முன்கூட்டியே பேசி குழந்தைகளை தயார் செய்திருப்பார்கள். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை. நேரடியாக புதுத் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைப்பது குழந்தைகளை அனைவரும் சேர்ந்து வன்முறைக்குள் தள்ளுவதாகும். பெரியவர்களாகிய நாமே கூட்டத்தில் பேசப் போக வேண்டும் என்றால் பத்து இருபது நிமிடங்கள் முன்பே போய் நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளுவோம். அப்படி இருக்க பிஞ்சுக் குழந்தைகளை புது சூழலுக்கு தற்போதைய பேரிடர் காலத்தில் அனுப்பி வைப்பது நல்லது இல்லை. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே கூறியது போல் நம் அரசுப் பள்ளி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு உள்ளனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களை நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். அப்படியிருக்க நமது குழந்தைகளை எப்படி தேர்விற்கு அனுப்புவது?

ஊட்டச்சத்து குறைபாடு, புத்தகம் கையில் இல்லாத சூழல் எப்போதும் இருக்கும் தேர்வு குறித்த அச்சம், பேரிடர் கால அச்சம் இதனுடன் கூடுதலாக இந்த காலகட்டத்தில் தான் நாம் ஜெயஸ்ரீயை இழந்தோம். ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு குழந்தை தான். இப்படி எத்தனை பத்தாம் வகுப்பு குழந்தைகள் பல்வேறு வன்முறைகளை சந்தித்தார்கள் என்பது எல்லாம் தற்போது நமக்குத் தெரியாது. இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் பாலியல் வன்முறைகளை குழந்தைகள் சந்தித்து தான் வருகிறார்கள். குழந்தைகள் என்ன மாதிரி எல்லாம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அவர்களை ஆற்றுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தான் அரசு இப்போது சிந்திக்க வேண்டும். அதைத் தவிர்த்து பொதுத் தேர்வு நடத்துவது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

மேலும், ஒருவேளை தேர்வு நடைபெற்றால் நோய் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்குப் பல பணியாளர்கள் தேவைப்படுவார்கள். ஏற்கனவே தொற்றோடு போராடி மக்களைக் காப்பாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்பரவுப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை. அவர்களுக்கு போதிய முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் போன்றவை அரசு தரவில்லை. அப்படி இருக்க தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கு ஆசிரியர்களுக்கு இதர ஊழியர்களுக்கு எனப் பெரும் எண்ணிக்கை உள்ள நபர்களுக்கு எப்படி அரசு பாதுகாப்பு தரும்? எப்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நம்பி தேர்விற்கு அனுப்புவார்கள்?

நோய் தீவிரமாகப் பரவும் நான்காவது ஊரடங்கை நோக்கி நாம் சென்று இருக்கும் இந்த காலகட்டத்தில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும். கிட்டத்தட்ட 10 லட்சம் குழந்தைகள் தேர்வு எழுத வேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர்கள் உட்பட இதர பணியாளர்கள் ஒரு லட்சம் பேர் பணியில் ஈடுபட வேண்டும். இங்கே சமூக இடைவெளி தனிநபர் இடைவெளி எப்படி கடைபிடிப்பது? மிக எளிதாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதை விடவும் உயிர் முக்கியம் ஆனது அன்றோ?

எவரின் மனநிலையும் அறியாது யாரிடமும் கருத்து கேட்காமல் தேர்வு அறிவிப்பு வன்முறையான செயல் தான். நெருக்கடிக்கு ஏன் ஆளாக வேண்டும்? கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டு உள்ளனர். பெற்றோர்கள் சிலர் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு எப்படி பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்புவது? நோய்த் தொற்று வராதா? மோசமான பேரிடர் காலத்தில் அவர்களை எவ்வகையில் தேர்விற்கு நாங்கள் தயார் படுத்துவோம் எனப் பல கேள்விகள் கேட்கின்றனர். இந்தச் சூழலில் எந்த அளவு அச்சம் வரும்? இவற்றை கல்வித் துறையும் அரசும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதம். இந்த நெருக்கடி காலத்தில் தேர்வு நடத்தினால் தேர்வுக்கு மாணவர்களின் வருகையும், தேர்ச்சி விகிதமும் குறையும். எனவே பேரிடர் காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்வை ரத்து செய்வதே சிறந்தது. தேர்வு நடத்தாமல் குழந்தைகளை மேற்படிப்பிற்கும் இதர தொழில்நுட்பக் கல்வி படிப்பிற்கும் எப்படி சேர்க்கப்பட வேண்டும் என்பதை நாட்டின் கல்வியாளர்களிடம் அரசு கலந்து உரையாடி முடிவு செய்ய வேண்டும்.

பஞ்சாப் மாநிலம் தேர்வை ரத்து செய்து உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் மீதமுள்ள மேல்நிலைப்பள்ளி தேர்வை ரத்து செய்து விட்டு அதற்கு உள் மதிப்பீட்டு மதிப்பெண்ணை (internal assessment) வைத்து சமன்படுத்துவதாக அறிவித்து உள்ளது. CBSE board இன்னும் எந்த அறிவிப்பும் கூறவில்லை. அப்படி இருக்க தமிழக அரசு அவசரம் காட்டி வருகிறது. நம்முடைய கோரிக்கை உயிரைப் பணயம் வைத்து தேர்வு நடத்த வேண்டாம் என்பதே.

- முத்து ராணி, ஒருங்கிணைப்பாளர், குழந்தைகளை கொண்டாடுவோம்