corona kumbakonamகொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தஞ்சாவூரின் மதுக்கூர் ஒன்றிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், அதனை ஒட்டி இருக்கிற திருவாரூர் மாவட்ட கிராமங்கள் சிலவற்றிலும் இந்த ஊரடங்குக் காலம் எவ்வாறு இருக்கிறது என்பதை முன்வைத்தே இப்பதிவு.

1

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் பிரதமர் சொல்லியபடி, “விளக்கேத்தி வச்சி சாமி கும்புட்டா கொரானா வராதாம்” என்று வீடுகளில் விளக்கேற்றி வைத்துவிட்டு “நாந்தான் விளக்கேத்தி வச்சிருந்தேன்ல. கொரானால்லாம் வராது” என்று பாட்டிகள் தெருவில் திரிந்த வேடிக்கைகள் நடந்தன.

சில இடங்களில், முன்னரே திட்டமிட்டும் பெரிய கோயில்களில் நடத்த முடியாத சில திருமணங்கள், தெருவில் இருக்கும் சிறிய கோயில்களில் மணியோசையையே மங்கள வாத்தியமாகக் கொண்டு நடந்து முடிந்தன.

ஊரடங்கு தொடங்கிய பிறகு கிராமப்புறங்களில் யாருடைய சாவுக்கும் கூட்டம் கூடுவதில்லை. சில மணி நேரங்களில் தூக்கி விடுவதால் அந்தத் தெருவில் உள்ளவர்கள் மட்டும்தான் சாவுகளுக்குப் போகிறார்கள்.

2

கடைகளில் காய்கறிகள் விலை மட்டும்தான் குறைவாக இருக்கிறது. ஆனால் மளிகைப் பொருட்கள் விலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. சில பொருட்கள் கிடைப்பதும் இல்லை. வரிசைகளில் கால் கடுக்க நின்றால்தான் பொருட்கள் கிடைக்கின்றன.

அதிகாலையிலேயே வழக்கமாக ஊரில் உள்ள டீக்கடைகள் திறந்துவிடும். வயதான பலருக்கும் அங்குதான் பொழுது விடிகிறது. இந்தக் கடைகளில் காலை 9 மணிவரை இட்லி விற்பார்கள். அதோடு மட்டுமல்ல வயல் வேலைக்கு வந்தவர்களுக்கு நிலத்துக்காரர்கள் காலையில் மாலையில் டீ வடை வாங்கித் தருவது வழக்கம். ஆக இந்த டீக்கடைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் கடைகளை வெளிப்படையாகத் திறக்க முடியவில்லை. யாராவது போட்டுக் கொடுத்து விட்டால் காவல்துறை வந்து மிரட்டி மூடச் சொல்கிறார்கள். கொல்லைப் புறத்தில்தான் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது.

கன்னியாக்குறிச்சி என்னும் ஊரில் ஒரு டீக்கடையினை காவலர்கள் அடித்து நொறுக்கி விட்டனர் என்ற செய்தி இப்பகுதிகளில் பரவியதன் பின் டீக்கடைக்காரர்கள் அச்சத்தோடுதான் கடைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் திறக்கின்றனர். பெரும்பாலான கடைகளில் மறைமுக வியாபாரம்தான்.

கிருமி நாசினி, முகக்கவசம் எல்லாம் மருந்தகங்களில் விற்பனைக்கே இல்லை. நாட்டு மக்களுக்குத் தூய்மை குறித்து அறிவுரை சொல்கிறார்கள். ஆனால் தேவையான முகக்கவசங்கள் இன்னும் கிராமப்புறங்களை முழுமையாக வந்தடையவில்லை. கிருமி நாசினி பற்றி சொல்லவே வேண்டாம். துணிகளில் முகக்கவசங்களைத் தைத்து சிலர் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் துண்டை கட்டிக் கொண்டுதான் பலரும் வெளியில் வருகின்றனர்.

ஊருக்குள் இருக்கும் பெட்டிக்கடைகள்தான் கூலி வேலைக்குச் செல்லும் மக்களுக்குக் கைகொடுப்பவை. இந்தப் பெட்டிக்கடைகளில் எல்லாப் பொருட்களும் விலை மிக அதிகம். இரண்டு மடங்காக லாபம் வைத்து இதுதான் நேரம் என்று விற்பனை நடைபெறுகிறது.

வயதானவர்கள், உணவை விட அதிகமாக சார்ந்திருக்கின்ற வெற்றிலைப் பாக்கு, புகையிலை முதலானவை மிகக் கடுமையான விலைக்கு விற்கப்படுகின்றன. பீடி சிகரெட் கடும் தட்டுப்பாடு. ஒன்றுக்கு இரண்டு மடங்கு விலை. ஆனாலும் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் கடுமையான விலைக்கு விற்கப்படுகின்றன. பெரிய கடைகள் உள்ள ஊர்களில் கூட பிஸ்கட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. வந்தாலும் விரைவில் விற்றுப் போய்விடுகிறது. குழந்தைகள் நாள் முழுக்க வீட்டில் இருப்பதால் தின்பண்டங்கள் தவிர்க்க முடியாதவை.. பெற்றோர்களுக்கு இது பெரிய சிக்கல். இதற்கென்று தனி செலவாகிறது.

குடும்பத்திற்கு ஒருவர், வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் வெளியில் செல்லலாம் என்று அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்த இரண்டு நாட்களும் ஒரு மணிவரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் மதியம் ஒரு மணிக்குள் பொருட்களை வாங்க வேண்டும். இதற்காக வேலைக்குப் போகும் மக்கள் ஒருநாள் வேலையை விட்டுவிட்டு கடைக்குச் செல்ல வேண்டியிருப்பது அவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய வேதனை.

மோடி பேசுவதையோ எடப்பாடி பேசுவதையோ ஊரடங்கு தொடங்கியபோது உற்றுக் கேட்டதுபோல் இப்போதெல்லாம் கிராமப்புற மக்கள் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. எத்தனை நாளைக்கு சும்மாவே இவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு இருக்க முடியும் என்பது அவர்கள் பக்கம்.

ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் விலை மலிவாக இருக்கும் காய்கறிகளை வாங்கி வந்து பைகளில் போட்டுக் கொடுத்துவிட்டு ஒரே ஒரு முகக்கவசத்தை (அதுவும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய USE AND THROW MASK) வழங்கி விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு போகும் நிகழ்வுகளும் ஊர்தோறும் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன.

3.

எனக்குத் தெரிந்த பால்காரர் ஒருவரின் அப்பா சமீபத்தில் இறந்து போய்விட்டார். பக்கத்து ஊர்தான் என்றபோதும் இருபது நாள்களுக்கு மேலாகியும் தகவல் தெரியவில்லை. வழியில் ஒரு நாள் பார்த்தபோது விசாரித்தேன். “முடியாம இருந்தாங்க சார். டாக்டரு யாருமே இல்ல. இருந்துருந்தா காப்பாத்திருக்கலாம். டாக்டரு யாரையுமே பாக்க முடிலயேன்னு அதுலயே ரொம்ப மனசொடஞ்சி போயிட்டாரு அப்டியும் தஞ்சாவூரு கொண்டு போனோம். காப்பாத்த முடில” என்று வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.

நோயாளிகளின் இந்த மனத்துயர் அவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. கிராமங்களில் இருப்பவர்கள் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கோ நகரங்களுக்கோ தங்கள் மருத்துவத்திற்காகச் செல்வார்கள். அவர்கள் சென்று வருவது ஒரு துயர் என்றால் அங்கு போய் மருத்துவம் பார்க்கும் வசதியின்மை என்பது மற்றொரு துயர்.

பாலோஜி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அம்மா இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துவரங்குறிச்சி என்னும் ஊரில் வசித்து வந்தார். அவருக்குத் திடீரென்று முடியாமல் போய்விட்டது. தன்னுடைய கணவரிடம் மிக வருந்திப் புலம்பி, டிவிஎஸ் எக்செல்லை இரவலாக வாங்கிக் கொண்டு அச்சத்தோடு பார்க்கப் போனார்கள். அதுவும் பத்துநாள் கழித்து. இதுபோல் கவனிப்பாரற்ற முதியோர்களின் பாடு பெரும்பாடுதான்.

என் மாமியாருக்கு இப்படித்தான் திடீரென்று நெஞ்சு வலி. கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எக்கோ பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் ஆனால் பரிசோதனை செய்ய எங்குமே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகுதான் ஒரு இடத்தில் எக்கோ பார்க்க முடிந்தது. இதற்கிடையில் அவருக்கு பிழைப்போமா என்கிற சந்தேகமே வந்துவிட்டது. இந்த நாட்களில் தொலைதூரத்தில் ஒரு கிராமத்தில் இருந்த என் மனைவி பட்ட பாட்டினை நான் மட்டுமே அறிவேன்.

அவசர கால பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டாதால் பலரும் உளவியல் பாதிப்புகளைச் சந்தித்துள்ளார்கள். கும்பகோணத்திலிருந்து ஒருவர் தன் மனைவியை மிதிவண்டியிலேயே பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற செய்தி கூட அண்மையில் வந்தது.

மகராஷ்டிர மாநிலத்தில் மூச்சுத்திணறல் வந்த 27 வயதுடைய 9 மாத கர்ப்பிணிக்கு, உடனடியாக முதலுதவி செய்ய வாய்ப்பில்லாமல், மருத்துவமனைகள் அடைக்கப்பட்டிருந்த சூழலில், மருத்துவம் பார்க்க 70 கிலோமீட்டர் (நலசோபாராவிலிருந்து மும்பை) அலைந்தே இறந்து போயிருக்கிறார். குழந்தையும் இறந்திருக்கிறது. இதற்கு விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியிருப்பதாகவும் ஏப்ரல் 11 சனிக்கிழமை தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுக்கவே கிராமப்புற மக்கள் மருத்துவமின்றித் தவித்து வருகின்றனர் என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

குழந்தைகளுக்கு வருகிற சாதாரண காய்ச்சல் கூட பெற்றவர்களைப் பீதி அடைய வைக்கிறது. விளையாட்டில் காயம்படுதல் தொடங்கி வெயில் கால வேனல் கட்டிகள் அது இது என்று பல நோய்கள். கிராமப்புற தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சென்று வருவதற்கே கடும் சிரமப்படுகிறார்கள்.

தமிழக கிராமப்புறங்களில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பாடுதான் திண்டாட்டம்.

4.

கிராமப்புறங்களில் விவசாய வேலைகள் ஊரடங்கு தொடங்கிய நாள் முதலாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ச்சியான வேலை இல்லாவிட்டாலும் வேலைகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன. கடலை ஆயவும், மருந்தடிக்கவும், களை எடுக்கவும், நடவுக்கும் கும்பல்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளியிலிருந்து ஆட்கள் வேலைக்கு வர முடியாது என்பதால் உள்ளூர் வேலை முழுக்கவும் இவர்களுக்குத்தான்.

மேய்ச்சலுக்குப் போகும் ஆடு, மாடுகளுக்கு ஊரடங்கு போட முடியாதல்லவா? ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள் தினந்தினம் போய்த்தான் ஆக வேண்டும். இந்தப் பணிக்கும் என்றைக்கும் ஊரடங்கு போட முடியவில்லை..

பார்க்கப் போனால் காலையில் ஒரு நாட்டிலும், மாலையில் ஒரு நாட்டிலும் இருந்து கொண்டிருந்த நமது பிரதமருக்குதான் இது முழுமையான நாடடங்கு.!

கிராமங்களில் ஆண்களைப் பொருத்தவரை அவர்களுக்கு இருந்த மிக முக்கியமான துயர் ‘கடை’ திறக்காததுதான். கெட்டவார்த்தையால் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தவர்கள், திட்டித் தீர்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்தக் 'குடிமகன்'கள்தான். டாஸ்மாக் கடை திறக்காததால் வேலைக்குப் போகும் பணமும் அப்படியே இப்போதுதான் வீடு வருகிறது என்று பெருமூச்சு விடுகிறார்கள் கிராமத்துப் பெண்கள்.

உழைக்கும் மக்களில் பெண்கள் பலரும் வெட்டிச் செலவுகள் செய்பவர்கள் இல்லை. சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள். கிராமங்களில் வாடகைக்கு என்று யாரும் இருப்பதில்லை. குடிசையாக இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு வீடு இருக்கிறது. ஆகையால் வாடகைப் பிரச்சினை இல்லை. நாலு கோழியாவது, ஒரு ஆடாவது வைத்திருக்கிறார்கள். வீட்டுக்குப் பின்புறம் அல்லது ரோட்டோரங்களிலாவது காய்கறிகள் எதாவது போட்டிருக்கிறார்கள். ஒரு முருங்கை மரம் போதும் அல்லது ஒரு சுண்டைச் செடி காய்த்துக் கொட்டிவிடும். அரசை விட அவர்கள் இவற்றைத்தான் நம்புகின்றனர்.

அரசு சட்டென்று எதுவும் தந்துவிடாது என்பது அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. அரசு தருவதையெல்லாம் எதிர்பார்த்து அவர்கள் இல்லை. வந்தால் லாபம். சும்மா கிடைத்தால்தான் என்று நம்பிக் கொண்டு இருப்பதும் இல்லை. இதுதான் கிராமத்து ஏழை மக்கள்.

இதுநாள் வரை ஏழை மக்கள்மீது எந்த அரசும் சிறுசிறு உதவிகளன்றி பெரிதாக எதுவும் செய்திராத காரணத்தினால் அரசைச் சாராமல் இருந்து கொள்ளவும் பழகித்தான் வைத்திருக்கிறார்கள். அதாவது யாரையும் நம்புவதிற்கில்லை. இந்த மனநிலைதான் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும்போதும் வந்து விடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வேலை பார்த்ததற்குரிய கூலி கிடைத்தாலும் அதிகமான விலையேற்றத்தால் ஒன்றுக்கு இரண்டாய்க் கொடுத்து வாங்குகிற வகையில் இவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

இதுபோன்ற இக்கட்டுகளில் அரசுதான் நிவாரணம் தர வேண்டும்; நிவாரணம் என்பது பிச்சையல்ல, அரசின் கடமை என்கிற அடிப்படை அரசியல் புரிதலின்மைதான் இந்த மனநிலைக்குக் காரணம். மக்களாட்சி முறை இம்மக்களிடத்தில் நம்பிக்கையை விதைக்கவில்லை என்பது வேதனைக்குரியது மட்டும் இல்லை, வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது மக்களாட்சியின் தோல்வி. இவர்களின் அறியாமை விடுபடும்போதுதான் உண்மையான அனைவருக்குமான மக்களாட்சி மலரும்.

- பொ.முத்துவேல்