வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எதிராக வேற்று சாதியினரால் ஏவப்படும் சாதி ரீதியான வன்மங்களைத் தடுப்பதற்காகவும், வன்மங்கள் இழைக்கப்படும் தருணங்களில் குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படியான துரித நடவடிக்கை எடுக்கவும், துரிதமாக புலன் விசாரணை செய்து நீதி வழங்கவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துரித நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிவாரணங்கள் வழங்கவும் வழிவகை செய்துள்ளது. ஆனால் அத்தகைய சிறப்பு வாய்ந்த சட்டத்தை இன்று கொரோனா ஊரடங்கு என்ற  காரணத்தைக் குறிப்பிட்டு அச்சட்டத்தை செயலிழக்கச் செய்துள்ளது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும். அவர்களுக்குப் புரியவில்லை கொரோனா காலத்தில்தான் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடு மிக அவசியமென்று.

கொரோனா காலத்திலும் நடந்த வன்கொடுமை சம்பவம்

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியும் 25.03.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், சூரியதாங்கல் கிராமத்தைச் சார்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்து சாதியினர் அதே கிராமத்தைச் சேர்ந்த (அருந்ததியர்) பட்டியல் சாதியினர் ஆறு பேரை சாதிப் பெயரால் இழிவுபடுத்தியும், கட்டையால் தாக்கி காயப்படுத்தியும், அவர்களின் வீடுகளைத் தாக்கியும், வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தியும், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியும், அதனைக் களவாடியுமுள்ளனர்.

காவல்துறை அருந்ததியர் பெண் மீது காட்டும் அலட்சியம்

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மூலம் தகவல் கிடைத்து வேட்டவலம் உதவி ஆய்வாளர் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 26.03.2020 அன்று வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த தனசேகர் என்பவரின் வாய்மொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உட்பட 5 நபர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார் காவல் உதவி ஆய்வாளர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வன்முறையாளர்கள் பொதுவெளியில் மானபங்கம் படுத்தும் நோக்கோடு இழிவாகப் பேசியும், அவர் நெஞ்சில் கை வைத்து தள்ளி, கட்டையால் தாக்கி தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். அப்பெண்மணி இந்தத் தகவலை தான் மருத்துவமனையில் இருக்கும்போது அளித்தும், அவரது வாக்குமூலத்தை காவல்துறை பதிய மறுத்து விட்டது. இத்தனைக்கும் அவ்வன்முறை சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்து உள் நோயாளியாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154(1)-ன் படி ஒரு பெண் தன்னை எவரேனும் மானபங்கப்படுத்தும் நோக்கோடு இழிவுபடுத்தினாலோ அல்லது தாக்கினாலோ அத்தகைய புகார்/ தகவல் குறித்து வழக்கு பதிவு செய்ய ஏதுவாக பெண் காவல் அதிகாரிதான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க இயலாத சூழ்நிலை நிலவும் பட்சத்தில் பெண் காவல் அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது வீட்டிற்கே சென்று வாக்குமூலம் பெற வேண்டும். ஆனால் இங்கே காவல்துறை அத்தகைய நடைமுறையை இதுநாள் வரை கடைபிடிக்கத் தவறி விட்டனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்பதாலும், அவர் அருந்ததியர் (பட்டியல் சாதி) சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும் அப்பெண்ணுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கிய உரிமையையும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழங்கிய உரிமையையும் அடியோடு தகர்த்து விட்டனர் காவல் துறையினர்.

துரித நிவாரணம் அளிக்கத் தவறும் மாவட்ட நிர்வாகம்

வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்ட விதிகள் 2016, விதி 12(4)-ன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு-1 அட்டவணையின்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் கிடைத்த 7 நாட்களுக்குள் வன்கொடுமை சம்பவத்திற்கு ஏற்றார்போல் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி வழங்க வழி வகுத்துள்ளது. அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 7 நாட்களுக்குள் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களின் அன்றாடத் தேவைகள் பாதிக்காத வண்ணம் உணவுப் பொருட்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கை எதையும் மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரை செய்யவில்லை.

மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்து அதன் நகல் ஒன்றினை பாதிக்கப்பட்டவருக்கு அளித்திருக்க வேண்டும். ஆனால் சம்பவம் நடந்த அன்று ஒரு சில காவல் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதோடு சரி. அது குறித்த எந்த ஆவணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகள், உடமைகள், இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டும், எந்த நேரத்திலும் வன்முறையாளர்கள் தாக்க நேரிடும் என்ற அச்சத்திலும் உள்ள அந்த ஆறு நபர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் துரித நிவாரண நிதி மற்றும் சேதமடைந்த உடமைகளுக்கான நஷ்ட ஈட்டினை விரைவில் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏன் தயங்குகிறது? எந்த அளவுக்கு கொரோனா கொடியதோ அதைவிடக் கொடியது சாதிய வன்கொடுமை என்பதை ஏன் உணர மறுக்கிறது அரசு இயந்திரங்கள்?

கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகக் கூறும் காவல் துறையினர் 25.03.2020 அன்று சூரியதாங்கல் கிராமத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் கூடி அருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மீது வன்கொடுமை செய்தபோது எங்கே போனார்கள்? ஏன் வன்முறையாளர்கள் இது நாள் வரை கைது செய்யப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கெள்ளாம் பதிலளிக்காமல் வன்கொடுமையால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி துரித நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிவாரணங்கள் வழங்க வேண்டிய திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி தனது பொறுப்பிலிருந்து விலகி இருப்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சட்டவிரோதமாக செயலிழக்கப்பட்டுள்ளது.

- சி.பிரபு, வழக்கறிஞர், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை