விடுமுறை நாட்களில் லீவு லீவாக தொங்கும் கொய்யா மரம் எனக்கு வாய்த்திருந்தது.

மற்ற நாட்களில் லீவுக்காக தொங்கும் கொய்யா பழங்கள் காண கிடைக்கும். அணிலுக்கும் குருவிக்கும் தரும் தாராள மனசு யார் கேட்பினும் சுணங்கும். ரெம்ப பிடித்த நண்பி பெரிய செல்வராணிக்கு ஒன்றிரண்டு பறித்து கொடுத்ததுண்டு.

அதுவும் என்னை கேட்காமல் கொய்யா பிஞ்சை ஏதும் பறித்து விட்டால்... மரத்தைப் பிடித்து பேயாட்டு ஆட்டி இறங்க வைத்து விடுவேன். அது மற்றவர்களுக்கு தான் கொய்யா மரம். எனக்கு என் நண்பன். இன்றைய நாளின் புரிதலுக்கு பின் அது காதலி என்று கூட சொல்லலாம்.

வீட்டுக்கு முன்னால் இருக்கும் கொய்யா மரம் நீண்ட நெடிய மரமெல்லாம் கிடையாது. ஒரு 10 அடியில்.... இரண்டு வாதுகள்..... நாலைந்து கிளைகள்.. அவ்ளோ தான். ஆனாலும் 8 வயது எளிய சிறுவன் அதனுள் ஒளிந்து கொள்ள முடியும். சனிக்கிழமை ஆகி விட்டால்.. காலை உணவை முடித்த அடுத்த நொடி நான் கொய்யா மரத்தில் தான் இருப்பேன். கால் நீட்டி வசதியாக சாய்ந்து அமர்ந்து கொள்ள தொடர் முயற்சியில் வாய்த்தது. "குட்டிப்பா பார்த்து" என்று மாமா பதறுகையில்.. நான் கீழே விழ வாய்ப்பே இல்லாத கச்சிதத்தோடு கவட்டைக்குள் காலை விட்டு.. கிளைக்குள் கையை விட்டு.. சரிந்து அமர்ந்திருப்பேன். அந்த மரத்தில் அமர்ந்தபடிதான்... தேநீர் அருந்துவது.... சிப்ஸ் தின்பது... தண்ணீர் குடிப்பது... சில நாட்களில்.. டிபன் பாக்சில் இருந்து சோரள்ளி தின்பது எல்லாமே. என்னைத்தேடி வரும் நண்பர்கள் நேராக மரத்துப்பக்கம் தான் முதலில் வருவார்கள். மரம் என்னுள் வளர்ந்த நாட்கள் அவை. நானும் மரமாகவே வளர்ந்த நாட்கள் அவை.

"குட்டிப்பையா கருவாப்ல கொஞ்சம் புடுங்கிட்டு வா" என்று பெரியம்மாவின் அல்லது அத்தையின் குரல்.........அது ஒலித்து முடிவதற்குள் கொய்யா மரத்தை விட்டு கீழே இறங்கி கோடிப்பக்கம் இருக்கும் கருவேப்பிலை மரத்தில் ஏறி இருப்பேன். அதுவும்.... நான் உச்சிக்கு சென்றாலே வளைந்து நெளியும் உயரம்தான். படபடவென நாலைந்து கொத்துக்களை பறித்துக் கொண்டு வந்து குசினிக்குள் (சமையலைறைக்குள் ) வீசி விட்டு மீண்டும் ஓடி சென்று கொய்யா மரத்தில் ஐக்கியமாகி விடுவேன். ஒரு வனமகனின் ஆதர்சம் என்னில் பூரித்திருப்பதை வந்தமரம் குருவிகள் கண்டிருக்கலாம். எறும்பூரும் வரிசைகளுக்கு வழி கொடுத்தும் நெளிந்து அமர்ந்த போதெல்லாம் எறும்பின் பரபரப்பு என்னுள் நிகழ்ந்திருக்கிறது.

மரத்தில் அமர்ந்தபடியே போகும் வரும் பேருந்துகளுக்கு சும்மா டாடா காட்டுவேன். அந்த பேருந்தில் இருந்து ஏதாவது ஒரு கை பதிலுக்கு அசையும். சில நேரத்தில் ஓட்டுநர் கையாகவும் அது இருக்கும். கை ஆட்டும் போதெல்லாம் ஹேய்......ய்ய்ய்ய்...... என்று கத்துவேன். அது கொய்யாக் காயும் இனிக்கும்.....குளிர்தேச ஹைக்கூக்கள்.

எப்போதாவது... குசினி பக்கம் இருக்கும் மரத்தில் பழங்கள் பறிக்க ஏறுவதுண்டு. இது கொஞ்சம் உயரமான மரம். மிக கவனமாகவேதான் ஏற வேண்டும். நண்பன் வெள்ளைப்பாண்டி படு வேகமாக ஏறி பழங்கள் பறித்து போடுவான். இந்த மரத்து பழங்களை எல்லாருக்கும் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு என் மரத்தில் கை வைத்தால் தான் கவலை அளிக்கும். இதுவும் எங்கள் மரம் தான். ஆனாலும் அத்தனை நெருக்கம் இல்லை. இது சிவப்பு கொய்யா பழங்கள் கொண்ட மரம். என் மரம் வெள்ளை பழங்கள் கொண்டவை. இப்போது நினைத்தாலும் இரண்டின் ருசியும் பல்லிடுக்கில் எச்சில் ஊற வைக்கும்.

ஒருமுறை ஒரு பெரிய அண்ணனிடம் எக்குத்தப்பாக சண்டையிட்டுக் கொண்டு வந்து நானும் வெள்ளைப்பாண்டியும் சிவப்பு கொய்யா மரத்தின் கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது... சிவப்பு சரித்திருங்கள். கடைசி வரை எங்களை கண்டு பிடிக்கவே முடியவில்லை. நாங்கள் மரத்தின் மீதேறி ஒளிந்து கொள்வோம் என்று யாரும் கொய்யாக்காய் அளவுக்கு கூட நினைக்கவே இல்லை.

இலைகளின் அடர்த்தியோடு கீழே இருந்து பார்த்தால் நிழலின் சிதறடிப்பில் காய்த்து தொங்கும் கோட்டோவிய மரத்தைக் காண முடியும்.

பெரும்பாலும் உருளிக்கல் போன்ற எஸ்டேட்டுகளில்... அவரவர் வீட்டுக்கு முன் பின்....றோஸ் தோட்டங்கள்...... கொய்யா மரங்கள்......பலா மரங்கள்.... டேலியா பூக்கள்....பட்டர் ப்ரூட் மரங்கள்....என்று ஒரு சிறு தோட்டம் பராமரிக்கப்படும். அது இயற்கையின் வழியாக வந்த கற்றல். எங்கள் தாத்தா கூட ஒரு தோட்டம் பராமரித்தார். அங்கே பச்சை மிளகாய்.. .. .கத்திக்காய்....... பீன்ஸ்.....கேரட்...... என்றெல்லாம் விளைவிப்பார். இன்றும் கூட பலா மரம் இரண்டிருக்கிறது.

ஆனால் கொய்யா மரங்கள் ஒரு கட்டத்தில் வெட்டப் பட்டு விட்டன. நான் அங்கிருந்திருந்தால் வெட்ட விட்டிருக்க மாட்டேன். மச்சானுக்கு அதை கவனிக்க முடியவில்லை. வெட்டி விட்டார். போகும் போதே வா என்று கிளையாட்டி வரவேற்கும் என் கொய்யா மரம் இல்லாத அந்த வாசலில் நான் வெற்று மனிதனாக நிற்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.

ஆனாலும்... அந்த குட்டிப்பையன் அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் கால ஓவியத்தை என்னால் பார்க்க முடிகிறது. சுமையில்லா ஆயிரம் கைகள் பற்றிய அற்புத நிழலோவியமாக என்னுள் விரவிக் கிடக்கிறது. எல்லா காற்றுக்கும் அசைந்தாட தெரியும் அதற்கு என் மூச்சுக் காற்றுக்கும் அசைந்தாடத் தெரியும். காலம் உள்ள வரை ஒரு அசரீரியாக நான் சுமந்தலையும் கொய்யா மரத்தை நான் வேறெங்கும் நட்டு விட முடியாது. குருவிக்கும் அணிலுக்கும் எனக்கும் சேர்த்து இன்னமும் பழுத்துக் கொண்டிருக்கும் கொய்யா பழங்களின் வாசங்களைத்தான் வார்த்தைகளாக இங்கே உங்களுக்கு பறித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...

- கவிஜி