முன்னுரை:

தணிகைச்செல்வன் மார்க்சியக் கலைஞராவார். உள்நாட்டு நிகழ்வுகள் முதல் உலகம் தழுவிய நிகழ்வுகளை உற்றுநோக்கி, கவனித்து அவைகளைப் படைப்புகளின் வழி பதிவு செய்யக் கூடியவர். தணிகைச்செல்வன் என்பது இவரது புனைப்பெயர். எத்திராஜ் என்பதே இவரின் இயற்பெயர். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள உறைக்காட்டுப்பேட்டை எனும் ஊரில் 1935 இல் பிறந்தவர். இவரின் கவிதைகள் குடியரசு, முரசொலி, நந்தன், தமிழர் கண்ணோட்டம் தாய்மண், சிந்தனையாளன், தினமணிக்கதிர், தென்மொழி, கவிதாசரண் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.தணிகைச்செல்வனின் படைப்பாக்கங்கள், தணிகைச்செல்வன் கவிதைகள்(1975) -சமூகசேவகி சேரிக்கு வந்தாள்(1978) - பூபாளம்(1989) - இந்தியாவும் நானும்(1983) - சிவப்பதிகாரம் (1986) - உலக்கையிலும் பூப்பூக்கும்(1991) - சகாராவின் தாகம்(1997)   எனும் ஏழு தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தத் தொகுதியாக தணிகைச்செல்வன் கவிதைகள் எனும் கவிதைத் தொகுதி 2001ஆம் ஆண்டு வெளிவந்துள்ளன. இந்த ஒட்டுமொத்தத் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

thanigai selvanதொல் பழங்காலச் சமூகத்தில் சைகை, சில்கை, தீப்பந்தம் போன்றவைகளின் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் பரிணாம வளர்ச்சியின் பொருட்டு மொழி உருவாக்கம் பெற்றது. மொழி எனும் ஊடகத்தின் வழியே கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. இப்பரிமாற்றம் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு எனும் தளங்களில் இயங்குகின்றன. மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடிய கருவியாக மட்டுமல்லாமல் ஒரு பயில்துறையாகவும், சமூகத்தின் - கூட்டத்தின் இருப்பிற்கான அடையாளமாகவும் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மனித உறவுகளைப் பலப்படுத்தவும் மொழி முக்கியத்துவம் பெறுகிறது. “மக்களுக்கிடையே தொடர்பு கொள்ளும் சாதனமாகவும் சமூகத்தில் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதனமாகவும் ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள உதவுவதோடு மனிதச் செயல்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியிலும் பொருளாதார உறவுகளிலும் அரசியலிலும் கலாச்சாரத்திலும் சமூக வாழ்விலும் அன்றாட வாழ்விலும் இணைந்து செயல்படுவதற்காக விளங்குகிறது. (ஜே.வி.ஸ்டாலின், மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும், 1985: ப.45)

“மொழி சமூகம் முழுவதற்கும் சேவை செய்வதற்காகவே இருக்கிறது. அதற்காகவே அது உருவாக்கப்பட்டது. மக்களிடையே தொடர்பை ஏற்படுத்தும் சாதனம் என்ற வகையில் சமூக உறுப்பினர் அனைவருக்கும் பொதுவானதாக சமூகத்தின் தனிமொழியாக, வர்க்க அந்தஸ்து வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக உறுப்பினர் அனைவருக்கும் சமமாக சேவையாற்றுவதற்காகவே மொழி இருக்கிறது.(மேலது,ப.5) எனும் கருத்தாக்கத்தின் வழியாக மொழி என்பது சமூகம் முழுமைக்கும் சேவை செய்து வருகிறது. அது தொழிலாளி, முதலாளி எனும் வர்க்கங்களுக்கு சமமாகவே வேலை செய்கிறது என்பதை அறிய முடிகிறது. மொழி பரிமாறிக் கொள்ளக்கூடிய சாதனமாகவும் அனைவருக்கும் சேவைசெய்யும் கருவியாக விளங்கினாலும் கூட ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒழிந்திருக்கும் எனும் கருத்திற்கிணங்க மொழிகளிலும் பல வர்க்கங்களைக் காண முடிகின்றன. மொழி என்பது அடிக்கட்டுமானம், மேல் கட்டுமானம்; ஆகிய இரண்டிற்கும் உரியது.(கவிதாசரண் டிசம்பர் 2002 ஜனவரி 2003 இதழ்) ஆகவே மொழி கீழ்-மேல் எனும் கட்டமைப்பில் இயங்கக்கூடியதாகவும் சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனும் சமமாக வேலை செய்கின்றது.

தமிழ்மொழி - தமிழினம் - தமிழ்நாடு குறித்த கருத்தாக்கம்:

இனக்குழு வாழ்விலிருந்தே சமூகமயமான தோற்றப் பின்புலத்தில் தான் மொழி இயங்கியல் தன்மை கொண்டதாக உருவாகிறது.இவ்வியங்கியல் தன்மை இயற்கைப் பருப்பொருள் சார்ந்தும் மானுட சமூகச் சிந்தனை சார்ந்தும் வெளிப்படக் கூடியது. தாய்வழிச் சமூகப் பின்னணியில் தான் மொழி தோற்றம் கொள்கிறது. ஆதலால்தான் தாய்மொழி எனும் சொல் வழக்கு வழங்கி வருகிறது. அனைத்து மொழிகளுக்கும் தாயாக விளங்கும் மொழி தமிழ்மொழி எனும் கால்டுவெல்லின் கருத்து அனைத்து மொழி இலக்கியம்,இலக்கண மரபு, சொல் வழக்காறுகள் இவைகளை மய்யப்படுத்தியே தாய்மொழி தமிழ்மொழி என்று சொல்கின்ற மரபு உருவாகியிருக்கக் கூடும்.

தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. இக்கட்டமைப்பு பொருள்முதல் வாதத்தையும் கருத்து முதல்வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சங்ககாலத்தில் மொழி குறித்த கருத்தாக்கம், பக்தி இலக்கியக் காலகட்டத்தில் தமிழ்மொழி குறித்த அடையாளம், காப்பியக்காலங்களில் மொழி குறித்த கருத்தாக்கம், இக்காலப் படைப்பிலக்கியங்களில் மொழி குறித்த கருத்தாக்கம் என மொழி குறித்த கருத்தியல் உருவாக்கம் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இதில் வைதீகமரபில் உருவான பக்தி இலக்கியங்களிலும் நிறுவனப்படுத்தப்பட்ட சமய மரபுகளிலும் தமிழின் அடையாளம் கருத்து முதல்வாதத்தை முன்மொழிவதோடு ஆன்மீகக் கருத்தினைப் பரப்புவதற்கான ஊடகமாக மொழியைத் தன்வயப்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. தமிழ் மொழி- தமிழினம்- தமிழ்ப் பண்பாட்டுத் தளங்களில் மொழி குறித்த அக்கறை மொழியின் வழியாக ஒரு கருத்தியலை உருவாக்குதல் என்கிற பொருளில் மொழி குறித்த பார்வை காலந்தோறும் படைப்பிலக்கியங்களில் மாற்றமடைந்துள்ளன. இச்சூழலில் தனித்தமிழ் இயக்கப் பின்னணியில் மொழியின் இயங்குதளம் விரிவடைந்ததோடு மக்கள் மத்தியில் மொழி உணர்வும், இனவுணர்வும் ஏற்படலாயிற்று. தனித்தமிழ் இயக்கம் ஒன்று உருவாக, பிறமொழி ஆதிக்கமும் காரணகர்த்தாவாகும்.

இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் வைதீக சமய உருவாக்கத்தினூடாக மொழிகுறித்த அடையாளக் கருத்தியலை கட்டமைப்பதற்கு மொழியின் பங்கு அவசியமாக இருந்திருக்கிறது. இச்சூழலில் தோன்றிய மணிப்பிரவாள நடை தோன்றியதன் மூலமாக தமிழ்மொழிக்குள் பிறமொழி கலப்பு மிகுதியாக உருவாகியுள்ளதைப் பார்க்க முடிகின்றது. அந்த வகையில் மொழி, பேச்சு வழக்கு மொழி, எழுத்து வழக்கு மொழி, பிற மொழி கலந்த சொல்லாக்கம் எனத் தமிழ் இலக்கியங்கள் வழியாக மொழி குறித்த புரிதலை அறிய முடிகிறது. இந்தச் சூழலில்தான் வைதீக அடையாள உருவாக்கத்திற்கு எதிராக தனித்தமிழ் அடையாள உருவாக்கம் முன்மொழியப்பட்டது. அந்த வகையில் தனித்தமிழ்ச் சிந்தனைப் புலத்தின் தொடர்ச்சியாகவே தணிகைச்செல்வனின் கவிதையாக்கங்கள் முழுக்க முழுக்க தமிழினம், தமிழ் மொழி, தமிழ் நாடு எனும் கொள்கையை முன்வைக்கின்றது.

தமிழ் மொழி புத்தகங்களில் வாழ்வதில்லை மனிதர்களின் உயிரோடு கலந்ததாக மொழி விளங்குகிறது எனத் தணிகைச்செல்வன் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

தமிழின் உயிர் புத்தகத்தில் வாழ்வதில்லீங்க- வாழும் / தமிழர்களின் உயிரிலே தான் தமிழும் வாழுங்க (2001:ப.41)

ஓர் இனத்தை அழிக்க அம்மக்கள் பேசும் மொழியைச் சிதைத்தால் அந்த இனம் அழிந்து விட நேரிடும். மொழியினையும் மனிதர்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. மக்கள் வேறு, மொழி வேறு இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக தணிகைச்செல்வன் கவிதையில் கூறுகிறார்.

தமிழனெல்லாம் செத்துப்போனா தமிழிருக்காது-நம்ம/தமிழரெல்லாம் வாழ்விழந்தா தமிழ் சிறக்காது/ (மேலது, 41)

மேற்காணும் கவிதையின் மொழி குறித்த கருத்தாக்கத்தை முத்துசிவன் கவிதைக் கருத்தாக்கத்தோடு ஒப்புநோக்கும் வகையில் அமைந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது.

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை / தாய்மொழியைப் பாராட்டி வீழ்ந்த நாடுமில்லை என்று முத்துசிவன் கூறுகிறார். ஒரு நாட்டின் வளர்ச்சியும் மொழியின் வளர்ச்சிநிலையை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கவேண்டும். மொழிச்சிதைவால் தேசிய அடையாளமும் அழிவைநோக்கிச் செல்வதை இக்கவிதைப் புலப்படுத்துகிறது.

தமிழினம் உரிமைக்காகப் போராடும்போது அரசு எந்திரம் அடக்குகின்றதைத் தணிகைச்செல்வன் கவிதையில் பதிவு செய்துள்ளார். திரும்பிப்பாரு தமிழனோட வேதனைகளை- அவன் / செத்ததாதனால் செத்து வரும் ஏழைத் தமிழை!/திருவொற்றியூரத் தமிழினிலே உரிமையைக் கேட்டான்- ஆனால்/துப்பாக்கி மொழியாலே அவங்களைச் சுட்டான். / அன்று மாண்டான் தொழிலாளி அரவங்காட்டிலே - அவன்/அன்றாடம் பேசியது எந்த மொழியலே? / தஞ்சையின் பூந்தாழங்குடி பக்கியாரு? - அவரு/சாகும் வரை தமிழில் தானே கூலி கேட்டாரு? (மேலது,ப.42) தமிழின உரிமைக்காகப் போராடினால் தமிழர்களை அழிக்கின்றனர். திருவெற்றியூர், அரவங்காடு, பூங்தாழங்குடி எனும் ஊர்களில் கூலித் தொழிலாளிகளைக் கொன்று தொலைத்ததற்கு எதிராக தணிகைச்செல்வன் கவிதைகளின் வழி சாடுகிறார்.

அரசியலில் தமிழின் நிலை

அரசு, தமிழ்மொழி மாநாடு தொடர்ந்து நடத்துவதன் மூலமாக மொழியை வைத்து ஆதாயம் தேடிக் கொள்கிறது. தமிழ்மொழியில் பேசும் தமிழரைப் பட்டினி போட்டு மொழிகுறித்த மாநாடு நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்று உரைக்கிறார் தணிகைச்செல்வன்.

நாலரைக் கோடி தமிழைப் பட்டினி போட்டு! யாரோ / நாலவர்கள் பேசுறாங்க மாநாடு கூட்டி / உலகத் தமிழ் மாநாடுன்னு திரை எதுக்குத்தான் - நம்ம / உள்ளூர்த்தமிழ் சுடுகாட்டை மறைப்பதற்குத்தான் (மேலது,43) “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது மாணவர்கள் மும்மொழி கற்றனர். பின்னர் கழகங்களின் ஆட்சியில் இருமொழி கற்றார்கள். நாளை அல்லது மறுநாள் தேசியக் கட்சிகள் தனித் தனியோ கூட்டாகவோ ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் மீண்டும் மும்மொழிகள் கற்க வேண்டும். கற்பனையன்று, நேற்று நடந்தது, நாளை நடைபெறக்கூடிய ஒன்று, கட்சிகளைப் பொருத்து கல்வியின் அடிப்படை அம்சங்களே மாறும் சாபக்கேட்டை எதிர்நோக்குவது தமிழகம் மட்டும் தான்” என்று வா.செ. குழந்தைசாமி குறிப்பிடுகிறார் (தினமணி,தலையங்கச் செய்தி,7.10.2003, ப.6).

இக்கருத்தின் வழியாக இந்தியும் ஆங்கிலமும் கற்பது என்பது வேறு அதை ஆட்சிப் பீடத்தில் ஆட்சி செய்வது என்பது வேறாகும். இம்மொழிகள் தொடர்ந்து ஆட்சி செய்தால் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்துக்குரிய மொழியாக தமிழ்மொழி ஆகி விடுமேயொழிய, தடையற்ற வளர்ச்சி நிலையை அனைத்துத் துறைகளிலும் பெற முடியாது என்பதை தணிகைச்செல்வன் கவிதைகள் வழியாக அறிய முடிகின்றன. மும்மொழி கல்விக் கொள்கையின் மூலமாக தமிழ்த் தேசியத் தகுதியை இழந்து, மொழி வளர்ச்சியின்றி அழியக்கூடும் என்பதை தணிகைச்செல்வன் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

ஆண்டு வரும் வர்க்கங்கள்/ஆள் மாற்றி ஆள் ஏற, / வேண்டும் என்றால் இங்கே / வேண்டுமாம் மும்மொழிகள். (த.செ.க,ப. 154)

ஆட்சியாளர்கள் தமிழ்மொழி தன்னிறைவு அடைவதற்கான வழிவகை செய்யாமல் ஆங்கிலமும் தமிழும் எங்கள் இரு கண்கள் என்றெண்ணி இருக்கும் ஆட்சியாளர்களின் எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார் தணிகைச்செல்வன்.

இரு கைகளிலும் / இரு சங்கிலிகள் / இன்றும் இருந்தன!.(மேலது,ப.264)

தணிகைச்செல்வன் கவிதைகளின் வழியாக தமிழ், தமிழினம், தமிழ்நாடு பற்றிய இருப்பினையும் இழப்பினையும் இயல்பினையும் நடப்பியல் பாங்கோடு ஆழமாகவும் செறிவானதாகவும் மொழிவழித் தேசிய எழுச்சியையும் கவிதைகளின் வழிக் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கத்தை முன்வைத்துள்ளதை அறியமுடிகின்றன.

மொழிக் கொள்கை:

மத்திய மாநில அரசு தன் சுயாட்சியை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை மும்மொழி கொள்கை. இருமொழிக் கொள்கை எனும் கொள்கையை முன்மொழிந்தது, இதனால்.தேசிய இனம் சார்ந்த மொழிகளின் வட்டாரத்தன்மை, தேசியத் தன்மையின் சுயத்தை இழக்கநேரிடும். தேசிய அடையாளங்களை முன்மொழியும் பொழுது மொழிவழி அடையாளமாக கட்டமைப்பும் மொழியை முதன்மைப்படுத்த வேண்டிய தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேசிய அடையாளத்தை முன்வைப்பது என்பது அந்தந்த தேசிய இனத்தின் மொழியை முதன்மைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அப்படி இல்லாமல் மும்மொழிக் கொள்கை இருமொழிக் கொள்கை என்று உருவாக்குவதன் மூலம் ஒரு மொழி சிதைக்கப்படுவதையும் அழிக்கப்படுவதையும் கவிதைகளின் வழியாகப் பாவலர் தணிகைச்செல்வன் இருமொழி மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறார். மும்மொழியும் இரு மொழியும் / மொழிக்கொள்கை நம் நாட்டில்; / அம்மிக்கல் ஒரு கொள்கை; / குழவிக்கல் மறு கொள்கை ; / நம் மொழியோ மசாலாவாய் / நடுவில் அறைபடுவதனால்/சும்மா சொல்லக்கூடாது ; தமிழ்த் / துவையல் வெகு பிரமாதம்.(மேலது,ப.154)

இன்றைய சூழலில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்திய நிலையில் வட்டார, தேசிய மொழி வழியான அடையாளம் பின்னுக்குத் தள்ளப்படுவது பார்க்க முடிகிறது. ஒரு தேசிய இன முன்னுரிமை கொடுப்பது என்பதுதான் தேசிய இனத்தின் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்பதை தணிகைச்செல்வன் கவிதைகள் வழியாக அறிய முடிகிறது. ஒரு நாடு ஓர் மொழி என்கிற தன்மையில் பொதுமொழி என்பது எல்லாம் தமிழ் மொழியை சிதைக்கக் கூடியது என்று கூறுகிறார் தணிகைச்செல்வன். பொதுமொழி என்பதான / போர்வையில் புகுந்து கொண்டு / புதுமொழி ஒன்று இங்கே / பன்மொழி இனங்களின் தம் / முதுகில் சவாரி செய்ய (மேலது.ப.366) எனப் பதிவு செய்துள்ளார்.

அன்னையின் குடியில் / அன்னியர் நுழைந்தால் / அன்னையின் உடலில் / ஆயிரம் புண்கள்/ கண்ணைக் கிழ்த்தன / அந்நிய மொழிகள் / கழுத்தை நெரித்தன / ஆங்கிலக் கைகள் (மேலது.ப.500) எனும் கவிதை, அந்நிய மொழிகளால் தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.

பொருளாதாரத் தளத்தில் மொழி

விவசாயம் செய்பவரின் மகன் விவசாயத் தொழில் செய்பவராகவும், செருப்பு தைப்பவரின் பிள்ளைகள் அதே தொழில் செய்பவராகவும், சலவைத் தொழில் செய்வோர் தம் பிள்ளைகளை அதே தொழில் செய்ய வைப்பதும் இவ்வாறு காலங்காலமாக மரபுரீதியாக பரம்பரைத் தொழிலை செய்தவர்கள் இழிதொழிலிருந்து மீளமுடியாத முரண்களை இச்சமூகம் பெற்றுள்ளது. இம்மரபின் அதிகாரப் பிடியில் இருந்து விடுபடும் போதும், பொருளாதாரத் தன்னிறைவு பெறும்பொழுதும் சாதியத்தை வேரறுக்கக்கூடிய சூழல் கல்வி வழியாக ஏற்படுவதும் உழைப்பாளர்கள் பேசும் தமிழ்மொழி நன்னிலை அடைய முதலில் உழைப்பாளர்கள் நல்லநிலை அடைய வேண்டும் என்பதை தணிகைச்செல்வன் தன் கவிதையில் பதிவு செய்துள்ளார். தமிழின விடுதலை என்பது வர்க்க ரீதியான விடுதலையை முன்வைக்கக் கூடியதாகப் பதிவு செய்துள்ளார்.

உழவர்கள் குழந்தையும்/உழைப்பவர் குழந்தையும் / உலகின் முதல்வராய் / ஓங்கி வளர்ந்திட அறிவியல் முதலாய் / உலகியல் முற்றும் / அன்னைத் தமிழில் / ஊட்டுவ தெப்போ? (மேலது, ப.501 எனத் தணிகைச்செல்வன் கேள்வி, தொழிலாளாகளின் விடுதலையை மையப்படுத்திய பொதுவுடைமை சமூகம் மலர சோசலிச ஆட்சியால் தான் உழைப்பாளர்களுக்கும் விடுதலை சாத்தியப்படும் என்பதோடு, மொழிச் சிக்கலுக்குத் தீர்வாக அனைத்துத் துறைகளிலும் ஆட்சிமொழியாக அன்னைத்தமிழ் மொழியை நடைமுறைப் படுத்துவதோடு தொடக்கம் முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்மொழிக் கல்வியைக் கொண்டுவர அரசு எண்ண வேண்டும் என்பதை தணிகைச்செல்வன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

அன்னைத் தமிழில் வேரும் நீரும் அன்னைத் தமிழில் ஒளியும் காற்றும் அன்னைத் தமிழில் உயிரும் மெய்யும் (ப.503) என அனைத்திலும் தமிழ் என்பதை முன்மொழிகிறார் தணிகைச்செல்வன்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் / மங்காத வர்க்கப்போரென சங்கே முழங்கு என தணிகைச்செல்வன் பாரதிதாசன் கவிதையான எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் / மங்காத தமிழென்று சங்கே முழங்கு எனும் கவிதையை மாற்றுத்தளத்தில்,மொழி குறித்த பார்வையை, மொழி குறித்த விடுதலையை, வர்க்கப் பார்வையாக, கவிதை அமைந்துள்ளது.

தீர்வு

“தமிழ்த் தேசியத்தின் தன்னுரிமைப் போருக்கு முன்னுரிமை தந்தாக வேண்டும்.” (1998:பா,74) என்று தணிகைச் செல்வன் கூறும் கருத்திற்கு ஏற்ப தன் கவிதையிலும் முன்வைத்துள்ளார் தணிகைச்செல்வன். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழுக்கு எதிரான பகைவர்களை எதிர்த்துப் போராடுவதில் தான் தமிழும் தமிழினமும் வாழும் இல்லாவிட்டால் இவ்விரண்டும் சாக நேரிடும் என்பதை, தமிழர் எல்லாம் சேர்ந்து தமிழ் பகைவனை எதிர்த்தால் / தமிழருக்கு வாழ்வு சேரும் தமிழ் வாழும் / இல்லாவிட்டால் தமிழ் சாகும் தமிழர் சாவர் (த.செ.க.,ப. 207) என்றும்,தன்னுரிமைத் தமிழ்த்தேசம் / சமைக்கின்ற களப்போரே / ஜனநாயப்புரட்சி (மேலது,ப.503) என்றும் என்று தணிகைச்செல்வன் கவிதைகள் வழியாக மொழியினத்தின் விடுதலையை முன்வைத்துள்ளன.

முடிவுரை:

மனிதர்களின் அன்றாட வாழ்வில் புழங்கும் பிறமொழிச் சொற்களையும் அவை மாற்றப்பட வேண்டும் என்பதையும் தணிகைச்செல்வன் கவிதைகளில் முன்வைத்துள்ளார். குக்கிராமங்களில் இருக்கக் கூடியவர்கள் கூட ஆங்கிலப் பள்ளியில் தன் குழந்தையைப் படிக்க வைக்க விரும்புவதை கவிதைகளின் வழி எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார். பிறமொழிக் கலப்பால் தமிழ்மொழி வளர்ச்சி நிலை அடையாது. தமிழர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய உணவு, உடை போன்றவைகளில் மனிதர்கள் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றார் போல் ஆடை அணியாமலும், உணவு உண்ணாமலும் மேற்கத்தியச் சூழலில் உருவான உடைகளையும் உணவுகளையும் தம் வழக்கத்தில் உள்ளதைக் கடுமையாகச் சாடுகிறார். மக்கள் தொடர்பு சாதனங்களான தொலைக்காட்சி இதழ்கள் போன்றவைகளில் தமிழ்மொழிச் சிதைவை கவிதைகளில் எடுத்துரைக்கிறார்.

தணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி வழியான அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் மொழியின் இயங்குதலைக் குறிப்பிடுகிறார். குழந்தைப் பருவம் முதல் தாய்மொழியிலேயே கல்வி கற்றுத் தர வேண்டும் என்பதைக் கவிதையில் புலப்படுத்துகிறார். அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழியே ஆட்சிமொழியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் தமிழினம் உழைப்பின் வழியாக பண்பாட்டு அடையாளங்களே மக்கள் விடுதலையை உருவாக்க மொழியால் ஒன்றிணைந்த தன்மையை உருவாக்க வேண்டும் என்பதை தணிகைச்செல்வன் கவிதைகளின் வழியாக கருத்து புலப்படுகின்றன.

துணை நூல்கள்:

  1. தணிகைச்செல்வன், 2001, தணிகைச்செல்வன் கவிதைகள், தணிகை நூலகம், சென்னை.
  2. தணிகைச்செல்வன், 1998, தலித்தியம், தமிழியம், இந்தியம், அலைகள் வெளியீடு, சென்னை.
  3. ஜே.வி.ஸ்டாலின், (தமிழில் வி.பா.கணேசன்), 1985, மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும், சென்னை புக்ஸ், சென்னை.

- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர். தமிழ்த் துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்- 625 514.