tazeem khan aligarh studentபாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கும், இந்தியாவிற்கும் எதிரானது என்று கூறி இந்தியா முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் கடந்த டிசம்பர் 15ம் தேதி அலிகார் முஸ்லிம் கல்லூரியிலும், ஜாமியா கல்லூரியிலும் போலீசார் நடத்திய வன்முறை பல்வேறு கண்டனங்களை எழுப்பியது.

அந்த வன்முறையில் பாதிக்கப்பட்டோரிடம் அல்ஜசீரா செய்தி நிறுவனம் மேற்கொண்ட உரையாடல்கள், பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து வந்தன.

இந்த வன்முறையில் இரண்டு கைகளிலும் பெரிய காயங்கள் அடைந்த தசீம் கான் இரண்டு கைகளிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தாலும் கூட, தற்போதும் மிக உறுதியாக இந்த சட்டங்களுக்கு எதிராக இருப்போம் என்கிறார். கைகளின் மீது போடப்பட்டிருக்கும் கட்டுகளில் கூட AMU reject CAA, we will fight என்று எழுதப் பட்டிருக்கிறது.

ஆனால், இன்னும் சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முஹம்மது தாரிக் (26) வேதியியல் முனைவர் மாணவர் - போலீசார் நிகழ்த்திய தாக்குதலில் இவரது வலது கையை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரால் இனி வலது கையின் மூலமாக எதையும் எழுதவோ, வேலை செய்யவோ முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தாரிக்கின் இந்த நிலை காரணமாக தற்காலிகமாக அலிகாரில் துணைப் பேராசிரியருக்கான வேலை வழங்கப்படும் என அலிகார் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதுபோல் இன்னும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தசிம் கான் சொல்லும் போது, போராட்டத்தில் போலீசார் வன்முறையைத் தொடங்கிய பிறகு நாங்கள் பலர் கல்லூரி வளாகத்திற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு கழிவறையில் ஒளிந்து கொண்டோம்.

ஆனால், போலீசார் கதவுகளை உடைத்துக் கொண்டு எங்களை குற்றவாளிகளை அடிப்பது போல் அடித்தார்கள். நீங்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டியது தானே! என்று சொல்லி இழுத்துச் சென்றார்கள். நாங்கள் அலிகாரில் படிப்பதால் எங்களை அடிக்கிறார்களா அல்லது முஸ்லிம் என்பதற்காக அடிக்கிறார்களா என்று விரக்தியுடன் கேட்கிறார் தசிம்கான்.

- அபூ சித்திக்