nov7 revolution day**இது உண்மை சம்பவம் தான் **
-----------------------------------

"அப்பா இன்னைக்கு parents meeting இருக்கு ..கண்டிப்பா வரனும் வராட்டி என்னை வெளியே நிற்க வைப்பாங்க.."

"சரிம்மா... அம்மாவை கூட்டிட்டுப் போ.."

"இல்ல 10.30 மணிக்குத் தான்... அப்ப வந்தா போதும்... கம்பெனிக்கு ஆளுக வந்ததும் என்னென்ன வேலை செய்யனுமிண்டு சொல்லிட்டு டீ டைம் கிளம்பி வாங்கப்பா ப்பிளிஸ்ஸ்ஸ்ஸ்... அம்மா வந்தாங்கன்னா நிறைய Complaint பண்ணுவாங்க... வீட்ட கூட்டலாம், பாத்திரம் கழுவலாம், கடைக்குப் போகலாம்... ஒரு சொன்ன பேச்சும் கேட்கமாட்டேங்குறான்னு சொல்லுவாங்க..."

சரி மீட்டிங்கில் என்னதான் சொல்லுவாங்கன்னு தெரிந்து கொள்ளலாம்னு நானே ஸ்கூலுக்கு போனேன்.

தனியார் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி. வரிசையாக இருந்த சேர்களில் ஆண்களும், பெண்களுமாக சுமார் 50 பேர்கள் அமர்ந்திருந்தார்கள். (4 & 5 வகுப்பிற்கு மட்டும் மீட்டிங்)

சரியாக 10.45க்கு கூட்டம் தொடங்கியது.

இது எனக்கு முதல் அனுபவம். அமைதியாக அமர்ந்திருந்தேன்.

பள்ளியின் தலைவரும், செயலாளரும் தலைமை வகித்தனர் (ஆண்கள்). தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியைகள் கை கட்டி நின்றிருந்தனர்... (ஆசிரியர்களிடம் மாணவர்கள் நிற்பது போல).

தலைவர் ஆரம்பித்தார், "அனைவருக்கும் வணக்கம். எப்படி இருக்கீங்க" எனத் துவங்கி குழந்தைகள் என்ன சாப்பிடனும், எப்ப சாப்பிடனும், எப்ப படிக்கனும், தூங்கனும் என்று ஆரம்பித்து குறித்த நேரத்தில் பள்ளியின் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று தன் முதல் சுற்றுப் பேச்சை நிறைவு செய்தார்.

அடுத்து பெற்றோர் தரப்பிலிருந்து கோரிக்கைகளாக "அடுத்தாண்டு முதல் 6 ஆம் வகுப்பும் இதே பள்ளியில் தொடங்கனும் சார் என்று தொடங்கி, எங்க புள்ளைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியல, எங்களுக்கு இங்கிலீஸ் சொல்லித் தர தெரியல, Home work ரொம்ப தராதீங்க, 11-12 மணிவரைக்கும் எழுதுறாங்க.,, வீட்டில TV யில் டோரா, பீம் பார்க்குறாங்க, மொபைலில் கேம் விளையாடுறாங்க, சாப்பிட மாட்டேங்குறாங்க..."

இப்போது செயலாளர் குறுக்கிட்டு "அதுக்கு நாங்க என்ன பண்ணனும்?"

"இல்லைங்க சார்... நாங்க சொன்னா கேக்க மாட்டேங்குதுக. டீச்சர் சொன்னா கேட்குதுக" (ஒரே கோரஸ்)

"சரிங்கம்மா ஆஸ்டல் (Hostel) கட்டி விடுகிறோம். புள்ளைகளைப் பெத்து PreKG-லேயே சேர்த்துட்டு நல்லா சீரியல் பார்த்து அழுவுங்க..." என்று இரண்டாவது ரவுண்டைத் தொடங்கினார் செயலர்... டீச்சர்களைப் பார்த்து உட்காருங்கம்மா என்றதும் 20 நிமிடத்திற்குப் பிறகு.

"இங்க பாருங்க இந்தப் பள்ளிக்கூடம் பெரிய முதலாளிகளோ, அரசியல்வாதிகளோ நடத்தல. ஒரு ட்ரஸ்டு( Trust) மூலமா தான் நடத்துறோம். நான் ரிட்டையர் சப் கலெக்டர், ( ற்றியில் பட்டையுடன் குங்கும போட்டும், கையில் சிவப்பு, மஞ்சள் கயிறு). தலைவர் ரிட்டையர் DSP, (நெற்றி, கை சுத்தமாக இருந்தது) உறுப்பினர்களாக இருப்பவர்களும் அரசாங்கத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்கள் தான்" என்று 30 நிமிடம் கதைவிட்டுக் கொண்டே இருந்தார்...

எங்கள் சைடில் 4-5 பேர் கொட்டாவி விட்ட சவுண்டு கேட்ட பிறகு தான், அவர் பேச்சை நிறுத்தி ஆசிரியைகளைப் பார்த்து "நீங்க சொல்லுங்கம்மா" என்றார்..

ஆசிரியைகள் பெரிய கோரிக்கை எதுவும் கூறாமல் "குழந்தைகளை காலையில் ஏதாவது சாப்பிட வைத்து அனுப்புங்க., இங்கு வந்ததும் வயிறு வலிக்குது, மண்டை வலிக்குதுன்னு சொல்லுவாங்க அப்ப தண்ணி குடிக்கச் சொல்லிட்டு காலையில் என்ன சாப்பிட்டன்னு கேட்டா குழந்தை சாப்பிடலைன்னு சொல்லும்... அவங்களுக்கு பசிக்குதா? வயிறு வலிக்குதான்னு தெரியாதுல்ல."

"பிஸ்கட் கொடுத்துவிடாமல் பழங்கள் கொடுத்து விடுங்க, சாப்பிட ஸ்பூன் கொடுங்க, Home work is must in every day. Pls watch your child's dairy when reached on home..." என தங்களின் ஆங்கில அறிவை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் போது ஒருவர் இடைமறித்து, "4வது படிக்கும் தன் மகனுக்கு தமிழ் எழுத்துகளை கூட்டிப் படிக்க தெரியலைங்க ட்டீச்சர்" என்றார்.

இடைமறித்த தலைவர் "ஏங்க தமிழ் ஒரு பாடம் மட்டும் தான். மற்ற பாடங்கள் எல்லாம் ஆங்கிலம் தானே. உங்களுக்குத் தெரிந்த தமிழைக்கூட சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா..?"ன்னு ஆரம்பித்து நாட்டில் GSTயால் தொழில் செய்ய முடியாமல் போன பிஸ்கட்ஸ் கம்பெனிகளைப் பற்றி தெரிந்து கொண்டதால், அவர் "கொய்யாப் பழம், பப்பாளி பழம், ஆப்பிள் மற்றும் கடலை மிட்டாய், எள்மிட்டாய், பயறு வகைகளை Snacks-ஆக கொடுத்துவிடுங்க" என்றார்.

இடையில் புகுந்த சப் கலெக்டர் (ஓய்வு) "புள்ளைகளை யோகாவுல சேர்த்து விடுங்க., காலை 5 மணிக்கே எழுப்பி வாங்கிங் கூப்பிட்டுப் போங்க, காலையில் 5 நிமிசம், மாலையில் 5 நிமிசம் சாமி கும்பிட டைம் ஒதுக்கி சாமி கும்பிட்டுவிட்டு Home work மற்றும் படிக்கச் சொல்லுங்க" என்று ஜக்கி வாசுதேவாட்டம் சங்கியா மாறிட்டார்.

இப்போது துணைக்குப் பெற்றோர்கள் பக்கமும் நிறைய நபர்கள் சேர்ந்து கொண்டு, கல்வியும் நாடும் யோகா குருக்களால் சுவாஹா ஆவதைப் பற்றித் தெரியாமல் யோகா செய்வதின் நன்மைகளைப் பற்றி சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர்.

சிலர் கம்பெனியில் இரவு வேலைக்குப் போய்ட்டு வந்து தூங்கி எழுத்திருக்கவே காலை 7 ஆகும், திரும்ப 8.30க்கு கம்பெனி போகனும், வாங்கிங் எங்கிட்டு கூப்பிட்டுப் போறது என்ற உழைப்பின் சோர்வை இயல்பாக வெளிக்காட்டினார்.

திரும்ப டீச்சர்கள் ஆரம்பித்தனர்...

"இனி மேல் 5வதுக்கும் பப்ளிக் எக்ஸாம்னு அரசு சொல்லிட்டாங்க. அதனால நீங்க இன்னும் அதிக நேரம் புள்ளைங்க படிப்பில் கவனம் செலுத்தனும், Pratical mark 40 எங்க கையில் உள்ளது. அதனால் Projectகளை Correct-டா செஞ்சு கொடுங்க.. சீரியல் பார்ப்பதை நிறுத்திட்டு பாடத்தையெல்லாம் படிக்கச் சொல்லுங்க, ட்டியூசன் அனுப்புங்க" என்று கோவைத் தமிழில் நிறைய *ங்க* போட்டார்கள். எல்லாரும் கன்னத்தில் வச்ச கையை எடுக்காம பேசின டீச்சர் வாயைக் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்...

எனக்கு அப்போதெல்லாம் புதிய கல்விக் கொள்கை, நீட் கோச்சிங் சென்டர், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் பற்றிய நினைப்பால் உட்கார முடியாமல் எழுந்து பேசலாம் என்று நினைத்தேன். அப்போது பார்த்து இடைவேளை விட்டார்கள்.

அனைவருக்கும் பிஸ்கட் கொடுத்து காபி கொடுத்தனர். 10 நிமிட இடைவெளியில் திரும்ப ஆரம்பிக்கும்போது தலைவர் DSP (ஓய்வு) "பீஸ் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காட்டி டீச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது" என்றார். தலைமை ஆசிரியர் குறுக்கிட்டு "மொத்தமுள்ள 394 பேரில் (UKG - V) 40 பேர் தரவில்லை" என்றார் ..

என் மனதுக்குள் அடங்கொப்புறானே இந்த ரெண்டு பேரோட பென்சன் பணமே போதுமே... அங்குள்ள மொத்த டீச்சர், ஆயாம்மா, வாட்ச் மேன் அய்யா சம்பளத்திற்கு ( மொத்தம் 14 பேர்) என்னமோ 10,000/-க்கு மேல் சம்பளம் கொடுப்பது போல பீலா விட்டுக் கொண்டிருக்காரேன்னு கடுப்பாகி கிளம்ப நினைத்தேன்...

பெற்றோர் சைடிலிருந்து திரும்ப பிள்ளைகளுக்கு இதைச் செய்யனும், அதைச் செய்யக்கூடாது என்பதை "சொல்லிக் கொடுங்க 5 மணி வரை டியூசன் எடுங்க விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் ஆடல் சொல்லிக் கொடுங்க" என்று ஆரம்பித்தனர்.... தலைமை ஆசிரியை தலைவர் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர் "நாங்க தான் ஆண்டுவிழா நடத்தி பரிசு தருகிறோம், பள்ளியில் Test நடத்தி கிப்ட் தருகிறோம்" என்றார்.

கல்வி வியாபாரிகளைப் போல வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தாரோ என்னவோ "மத்த School-லில் நடத்துவது போல எதிர்பார்த்தீர்கள் என்றால், இனி நாங்களும் நன்கொடையாக 40-50 ஆயிரம் வாங்குனாத்தான் முடியும்" என்றார்... ஏங்க தாராபுரம் ரோட்டில் 5 ஏக்கர் இடம் வாங்கி பெரிய்ய்ய்ய்ய காம்பவுண்டு போட்டு கட்டியுள்ள பள்ளிக்கூடம் எப்படி சார்ன்னு கேட்க தோணுச்சு...

அப்போது சென்ற ஆண்டு ஆண்டு விழாவின் போது இதே தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் எவ்வளவு நபர்கள் வருவார்கள், அவர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு சேர் உண்டா, கழிவறை உண்டா, குடி தண்ணீர் உண்டா என்று பார்க்காமல் தன் சாதி சங்க மண்டபத்தில் விழா நடத்தி, மானஸ்தன் மோடி போல போட்டோவிற்கும், வீடியோவிற்கும் போஸ் கொடுத்தது தான் ஞாபகம் வந்தது...

கடைசியாக தலைவர் "தவறாமல் பீஸ் கட்டுங்க, காலை 9 மணிக்குள் ஸ்கூலுக்கு அனுப்புங்க, தவறாமல் சனிக்கிழமை லீவு போடாமல் என்ன ஆனாலும் பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பனும், இல்லாட்டி 50ல் ஆரம்பித்து படிப்படியாக அதிகப்படுத்தி ப்பைன் கட்டணம் போடலாம்" என்றுள்ளதாகவும் கூறினார்.. சார் அதுக்கு GST உண்டான்னு யாரும் கேட்கலை..!

நிறைய பேர் பிள்ளைகளின் ஆதார் ஜெராக்ஸ் கொடுக்கல, பெர்த் சர்ட்டிபிகேட், சாதிச் சான்றிதழ் கொடுக்கல, இதெல்லாம் Must என்றார். கொடுக்காதவங்க கையைத் தூக்குங்க எனக் கூறினார். நான் ஒருவன் மட்டுமே கை தூக்கிய ஆள். இதற்கு மேலும் பேசாட்டி நாம வந்ததிற்கு அர்த்தமில்லை என்றெண்ணி எழுந்து,

"சார் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்கவில்லை / வாங்க மாட்டேன். மதத்தைப் பற்றியும் கூறவில்லை. நான் கைப்பட கடிதம் கொடுத்துள்ளேன். அரசின் GO-வும் கொடுத்துள்ளேன். ஏற்கனவே இரண்டு மகள்களையும் கல்லூரி வரை அவ்வாறே படிக்க வைத்துள்ளேன்" என்றபோது அனைவரும் என்னையே பார்த்தனர்.

"அது எப்படிங்க முடியும்? 10th, +12 Exam எப்படி எழுதுவது? Employment officeல் எப்படி பதிவது?" என்று எப்படி? எப்படி? என்ற 'படி'கள் நிறைய வந்தது. அத்தோடு அந்த இரண்டு கெஜட்டேடு அதிகாரிங்களாக இருந்து பச்சை மையில் கையெழுத்து போட்டு மக்களை நிர்வாகம் செய்த ஓய்வு பெற்றவர்கள்... "எங்கள் 33-35 வருட அனுபவத்தில் சொல்றோம் இப்படி சாதி வேண்டாம் - மதம் வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, நாளைக்கு உங்க மகள் அரசு வேலைக்குப் போக முடியாது" என்றார்...!

பெற்றோர் சைடிலும் ஒரே மயான அமைதி...!

"அதெல்லாம் பிரச்சனையே இல்லை சார்.. நான் பாத்துக்கிறேன்... எனது விருப்பம் எனது மகளை படிப்பறிவு பெறுவதற்காக மட்டுமே பள்ளிக்கூடம் அனுப்புகிறேன். மற்ற அறிவை சமூகம் கற்றுக் கொடுக்கும். சாதி - மதம், ஆதார் கட்டாயம் என்றால் அரசு வேலை கட்டாயம் தருவதாக யார் உத்தரவாதம் தருவது? Home work, project இதெல்லாம் பிள்ளைகள் யாரும் விரும்பல. பெற்றோர்கள் தான் வேறு வழி இல்லாம Project செய்கிறார்கள். ஆகையால் அதிலெல்லாம் எனது மகள் கடைசி தான். ஆனா வேறு விசயத்தில் எனது மகள் கிரேட்" என்றேன்.

(மனதுக்குள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதோ பாரு வானம் OPSயைக் காணோம் ... 5 ரூபா லேசு மோடி ஒரு......., தோழர் கோவனின் குண்டாசே குண்டாசே...பாடல்களை முழுவதும் பாடுவதும், பாட்டி வைத்தியம் சொல்வதும், நெல்லை இசக்கிமுத்து தன் மகள்களுடன் கந்துவட்டி கொடுமை தாங்காமல் கலெக்டர் அலுவலகத்தில் தீயில் கருகிய நிகழ்வின் போது போஸ்டர் ஒட்ட இரவு பசை காய்ச்சிக் கொடுத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது)

அவ்வளவு தாங்க Parents Meeting-யை முடித்துக் கொண்டனர்..

நவம்பர் 7ம் முடிந்து போச்சு..

- தருமர், திருப்பூர்