ஒரு வழியாக சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு விட்டது. பெரும் துயரத்தை அணு அணுவாகப் பார்த்து கண்ணீர் விட கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக மக்கள் தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாற்று எதுவும் கிடையாது. இதைவிட முக்கியமான, அத்தியாவசியமான எதாவது செய்தி இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் மனித விழுமியங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும். ஊரோடு சேர்ந்து கண்ணீர்விட பழகிக் கொண்ட கண்கள் எந்தவித தயக்கமும் இன்றி கண்ணீரை சொறிந்து கொண்டிருந்தன. யார் மீது குற்றம் சுமத்துவது என அறிவுஜீவுகளுக்கு இடையே நடக்கும் தத்துவ விவாதங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. இதுவரை எதற்காகவும் கருத்து சொல்லாத, கருத்து சொல்ல விரும்பாத தத்துபித்துக்கள் கூட வலிய வந்து கசிந்துருகி கருத்து தெரிவித்தார்கள். தேசமே சுஜித்துக்காக அழுதது என்றால் மிகையாகாது!

sujith in borewellஆனால் கண்ணீர் வடிப்பதற்கும், கதறி அழுவதற்கும் குழந்தை என்ற பிம்பம் மட்டுமே போதுமா? சுஜித்துக்கள் ஏன் பரிதாப்படுவதற்கும், பரிதவிப்பதற்கும் உரிய இடத்தில் இருக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? காரணம் சுஜித்துக்களிடம் எந்தவித அரசியலும் இல்லை என்பதால்தான். இங்கே எல்லோருக்கும் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாராக, ஜீவகாருண்யம் கொண்ட பேரருளராக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அபிலாசைகள் உள்ளன. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கான தருணங்கள் அவ்வளவு எளிதில் சிக்குவதில்லை. அப்படி சிக்கினால் இந்த அற்பப் பதர்கள் தங்களின் ஆழ் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் ‘மனிதாபிமானியை’ வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து கருத்துச் சொல்ல வைத்து விடுகின்றார்கள்.

எல்லா மனிதர்களின் உள்ளேயும் சக மனிதனின் மீதான வெளிக்காட்டப்படாத அன்பும், பரிவும் புதைந்து கிடக்கின்றன. ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல் நம் மீது போர்த்தப்பட்ட அங்கிகள் தடுக்கின்றன. சிலர் அங்கிகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு அதையே தன்னுடைய வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள்தான் சாதி பார்த்து, மதம் பார்த்து, வர்க்கம் பார்த்து அனுதாபப்படுவர்கள். ஆனால் வெகு சிலரே அங்கிகளை அவிழ்த்து எறிந்துவிட்டு தன்னை மனிதனாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகின்றார்கள். அவர்கள் தான் சாதி கடந்து, மதம் கடந்து, வர்க்கம் கடந்து எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நேசிக்கின்றார்கள். அதற்கு ஒரு துயரம் வரும் போது தன்னையும் தியாகம் செய்து காக்கின்றார்கள்.

இன்று சுஜித்துக்காக கண்ணீர் வடிப்பவர்களில் பலர் அரசு பயங்கரவாதத்தால், முதலாளித்துவ பயங்கரவாதத்தால், பார்ப்பன பயங்கரவாதத்தால் பலர் கொல்லப்பட்டபோது அதைக் கைக்கட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தவர்கள்தான். இருப்பினும் இன்று அவர்களால் சுஜித்துக்காக கனத்த மனதுடன் கண்ணீர் வடிக்க முடிகின்றது. இந்த முரண்பாடுகள்தான் மனித இனம் தன்னை இன்னும் சுரண்டலின் பிடியில் இருந்தும், தன் மீது திணிக்கப்பட்ட சாதி, மதம் போன்ற குப்பைகளில் இருந்தும் விடுவித்துக் கொள்ள முடியாமல் தடுக்கின்றது.

உண்மையில் இது கண்ணீர் வடிப்பதற்கான நேரமல்ல. நாம் எங்கே தவறு செய்தோம் என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம். நாம் பழம் பெருமைகளில் புதைந்து கிடக்கின்றோம், நம்மால் செவ்வாயிக்கும், சந்திரனுக்கும் ராக்கெட் அனுப்ப முடிவதைக் கொண்டாட முடிகின்றது, ஆனால் மலக்குழியில் இறங்கி தினம் தினம் தொழிலாளர்கள் சாகும்போது ஏன் நம்மால் அதற்கொரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை? ஏன் அதற்கு வெட்கப்பட முடியவில்லை? காரணம், தான் பேண்ட மலத்தையும், தான் போட்ட குப்பையையும் அள்ளுவதற்கென்றே சில மனிதர்கள் கடவுளால் இந்த உலகில் படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற திமிர்த்தனமான சிந்தனையில் நாம் வாழ்கின்றோம். போன பிறவியில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவியில் ஒருவன் ஏழையாகவும், பணக்காரனாகவும் வாழ்வதற்குக் காரணம் என்று சுரண்டல் பேர்வழிகளை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கின்றோம். இந்தத் தார்மீக ஒழுக்கமற்ற இரட்டை சிந்தனைதான் நம் இந்திய சமூகத்தை விடாமல் தொடர்ந்து சிதைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை யார் எல்லாம் ஆதரிக்கின்றார்களோ, யார் எல்லாம் ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள்தான் தொடர்ச்சியாக இது போன்ற சிந்தனைகளை பரப்புரை செய்பவர்களாகவும், அதை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணிப்பவர்களாகவும் உள்ளார்கள். அதே போல யார் எல்லாம் பிழைப்புவாதிகளாகவும், அற்பவாதிகளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள்தான் அது போன்ற சிந்தனைகளை தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த கருத்தியல் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஏன், ஏதற்கு என்ற கேள்விகளைக் கூட அற்பவாத நோக்கில் இருந்து கேட்கவே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். நம்மால் ஒரு போதும் பிரச்சினையின் மையத்தை நோக்கி பயணிக்கவே முடியாது. மனிதனால் செய்ய முடியாத மிக நுண்ணிய அறுவை சிகிச்சைகளைக் கூட, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் இன்று செய்து முடிக்கின்றன. ஆனால் அதே மனித கண்டுபிடிப்புகளை எள்ளி நகையாடும் மிகக் கீழ்த்தரமான சிந்தனைகளையும் நாம் கொண்டாடுகின்றோம். நம்மால் கம்ப்யூட்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதில் கம்ப்யூட்டர் ஜோதிடம் பார்க்க முடிகின்றது. நம்மால் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதை வைத்து பஞ்சாங்கம் அச்சடிக்க முடிகின்றது. நம்மால் ரஃபேலைக் கண்டிபிடிக்க முடியவில்லை. ஆனால் அதில் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்ய முடிகின்றது. அதற்காக நாம் கூச்சப்படவில்லை, குற்ற உணர்வும் கொள்ளவில்லை. நாம் அறிவியல் சிந்தனைகளை முளையிலேயே காயடிக்கின்றோம் என்ற தன்னுணர்வுக்கு இன்னும் வந்து சேரவில்லை.

இது வருத்தப்படுவதற்கான நேரம் இல்லை, சிந்திப்பதற்கான நேரம். மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொண்டு வெட்கம் கெட்ட முறையில் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விமர்சிக்க வேண்டிய நேரம். இவர்களிடம் உண்மையில் நம்மைக் காப்பதற்கான எந்தத் திட்டமிடலும் இல்லை, எந்தக் கண்டுபிடிப்புகளும், அதை நோக்கிய திட்டங்களும் இல்லை. ஊழல் செய்வதற்கும், ஊரை அடித்து உலையில் போடுவதற்கும், முதலாளிகளின் காலை நக்கிப் பிழைப்பதற்கும் திட்டமிடவே இவர்களிடம் நேரமில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சாமானிய மனிதனின் உயிரைப் பற்றி இவர்கள் எதற்காக கவலைப்படப் போகின்றார்கள்?.

இதே நிலைதான் நாளை அணுமின் நிலையங்களிலோ, இல்லை நியூட்ரினோ, மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விபத்து ஏற்பட்டால் நடக்கும். நாம் பார்ப்பன பயங்கரவாதம், முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் கொடுங்கரங்களில் மாட்டிக் கொண்டுள்ளோம்.

நம்மால் நம்மையும் நம் மக்களையும் காத்துக் கொள்வதற்கான வழிகளை அறிவியல் பூர்வமாக சிந்திக்க முடியாமல் போனால், நாளை ஒரு கும்பல் யாகம் நடத்தினால் சுஜித்தை காப்பாற்ற முடிந்திருக்கும் எனக் கிளம்பும். நாமும் மூளையைக் கழற்றி தூர எறிந்துவிட்டு அந்தக் கும்பலின் பின்னால் சென்று அதையே வழி என்று நம்புவோம். இதை ஏதோ நகைப்புக்காக சொல்லவில்லை. அறிவியல் சிந்தனைகளை மழுங்கடித்து, இந்த மக்களை இன்னும் சிந்திக்கும் திராணியற்ற முட்டாள் கூட்டமாகவே வைத்திருக்கும் நிலையை எண்ணி கனத்த மனதுடனேயே எழுதுகின்றோம். இந்த முதலாளித்துவ, பார்ப்பனக் கும்பல்களும் அதன் அடிவருடிகளும் இன்னும் எத்தனை சுஜித்துக்களை கொல்லப் போகின்றார்களோ தெரியவில்லை.

- செ.கார்கி