உலகம், நாடுகள் மற்றும் நகரங்கள் தோறும் அழகிப் போட்டிகள் நடத்தி, அழகிகளைக் தேர்ந் தெடுப்பது என்பது இப்போது சிலருக்கு மிகவும் அத்தியாவசிய மானதொரு தேவையாகி விட்டது. ‘இவர்தான் அழகி’ என்று தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருப்பது போலவே, “இவர்தான் அழகியா?” என்று வாய் பிளந்து வியப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.

பக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது சிரித்து மகிழ்ந்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சமூக மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அழகிப்போட்டி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது.

இவர் கொய்யாத்தோப்பு அழகி... இவர் கொண்டித்தோப்பு அழகி என்று அடையாளம் காட்டி அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த அழகிப் போட்டியாளர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.அழகிப் போட்டிகள் நடைபெறுவதும், இது ஆபாசம் என்று பெண் உரிமை இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் முடிவற்றதொரு தொடர்கதையாகி விட்டது. அழகிப் போட்டி ‘ஆபாசமானது’ என்று சொல்வதைவிட ‘அவசியமற்றது’ என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அழகிப் போட்டி எப்படி நடத்தப்படுகிறது?

போட்டிக்கு வந்த பெண்மணிகளின் நடை, எடை, உடை, பல்வரிசை, பளபளப்பு, அளவான அங்கங்கள், அவற்றின் அசைவுகள் போன்றவற்றைத் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு ஒரு குழு (நடுவர் குழுவாம்!) ஆராய்கிறது. அதன் விளைவாக ஒரு பெண்மணி அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி, அறிவாளியாகவும் இருந்தால் தான் அழகியாக அவர் முழுமை பெறுவார் என்கிற அகில உலக அழகி சட்டப்படி, அந்தப் பெண்மணியிடம் உலகில் உள்ள எல்லாக் கேள்விகளுக்கும் விடையறிந்த அந்த நடுவர்கள் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கு அந்தப் பெண்மணி சரியாகப் பதில் சொல்லிவிட்டால், அவர் அழகியாக அறிவிக்கப்படுவார்.

ஒரு பெண்மணி மிகப் பெரிய விஷயஞானியாக இருந்து மூக்கு மட்டும் சற்று வளைந்திருந்தாலோ, அல்லது மூக்கும் மேனியும் அளவாக இருந்து நடுவர்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் இருந்தாலோ அவர் அழகியாக மாட்டார். மதுரையில் ஒரு அழகிப் போட்டி நடந்தது. அழகியாகக் களத்தில் குதித்த பெண்மணியிடம், “சந்திரனிலிருந்து பார்த்தால் தெரியும் உலக அதிசயம் எது?” என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதில், ‘சீனப் பெருஞ்சுவர்’ என்று கேள்வி கேட்ட அழகிப் போட்டி நடுவர் உட்பட நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (அது யார் பரப்பிய வதந்தியோ) உண்மை அதுவல்ல. சந்திரனில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவரும் தெரியாது. சினிமாத் தியேட்டரும் தெரியாது என்று வானவியல் விஞ்ஞானிகள் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள்.

எதற்காக இதைக் குறிப்பிடுகிறோம் என்றால், அழகிப் போட்டி நடுவர்களின் அறிவாற்றலைத் தீர்மானிப்பதற்காகத்தான். அதிலும் மதுரையில் நடந்த அழகிப் போட்டியின் நடுவராக இருந்து மேற்குறிப்பிட்ட கேள்வியையும், “கிளியோபாட்ரா குடித்த பால் எது?” என்பன போன்ற இன்னும் சில கேள்விகளையும் கேட்டவர், திண்டுக்கல் நகர அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராம்.

மற்ற எந்தத் தேர்வுகளிலும் காணக்கிடைக்காத பல கொடுமைகளை அழகிப் போட்டிகளில் மட்டும் காணலாம். உதாரணமாக, இந்த வருடம் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானி அடுத்த வருடமும் விஞ்ஞானியாகத்தான் இருப்பார். ஆனால் இந்த வருடம் அழகியாகத் தேர்வு பெற்றவர் அடுத்த வருடம் அழகியாக முடியாது. காரணம் போட்டி நடத்துபவர்கள் அழகிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். பழைய அழகி அனேகமாக சோப்பு, சீப்பு விற்கும் வியாபாரிகளின் விளம்பரப் பொம்மையாக மாற்றப்பட்டிருப்பார். அல்லது பாசமுள்ள தங்கையாக, மோகம் கொண்ட காதலியாகத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்.

இந்த அழகிப் போட்டிக் கலாசாரம் என்பது, கண்ணுக்குத் தெரியாத பல்வேறு வகையான சீர்கெட்ட சிந்தனைகளைத்தான் விளைவித்துக் கொண்டிருக்கிறது. “இவர் தான் அழகி! இவர்தான் அழகி!” என்று உரத்து ஒலிக்கும் கூச்சலைக் கேட்டு லட்சோப லட்சம் பெண்கள் தங்களை அறியாமலேயே ஒரு தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். அழகிகளைப் பற்றியே கனவு கண்டு அதில் சஞ்சரிப்பவர்கள், அந்தக் கனவுகளிலேயே மூழ்கிச் செயலிழந்து போகிறார்கள். சில ஆண்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, “நீ என்ன உலக அழகி உஞ்சியம்மாளா?” என்று ஒரு கேள்வி கேட்டு தனது மனைவியைத் துல்லியமாகப் புண்படுத்தும் போக்கும் நிலவத்தான் செய்யும். சமூகப் பிரச்சினைகளை முன் வைத்து மக்களுக்காகவும் பெண் இனத்திற்காகவும் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கும் சமூக அக்கறையும் அறிவும் நிறைந்த பல பெண்மணிகள் இந்த அழகிப் போட்டிகளின் சகதியால் மறைக்கப்படுகிறார்கள்.

சோடா விற்கவும் சோப்பு விற்கவும் நாம் பயன்படுத்தப் படுகிறோம். நமது அழகை விஞ்ஞானி வேடம் போட்டுக் கொண்ட வியாபாரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். இறக்கும்வரை நம்முடன் இருந்து நம்மை உண்மையாய் அடையாளம் காட்டப் போவது நமது அறிவும் ஆற்றலும்தான். நம்மை முன்வைத்து ஒரு கலாச்சாரச் சீர்கேடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அழகு நம்மிடம் இல்லாமல் போயிருந்தால் எப்படி வாழ்வோமோ அப்படி வாழ்வதுதான் உண்மையான அழகு என்பதையெல்லாம் உணராமல் மேடையேறுகிறார்கள் என்பதைத் தவிர, அழகிகள் மீது நமக்கு எந்த வருத்தமும் இல்லை.

இந்த அழகிப் போட்டிக் கலாச்சாரம் சமூக நோக்கில் பயனற்றதும் உலக அளவில் தடை செய்யப்பட வேண்டியதுமாகும். வைசூரி எனும் பெரியம்மை நோயை மருத்துவ விஞ்ஞானிகள் ஒழித்து விட்டது போல, அரசுகள் அழகிப் போட்டி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், அதோ குழாயடிப் பானைவரிசையில் மஞ்சள் நிற பானைக்குப் பக்கத்தில் நிற்கிறாரே அவர்தான் கோபால் நகர் அழகி! அதோ ரேஷன் கடையில் கோதுமை மூட்டைமேல் உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் அய்யனார் தெரு அழகி! என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கவே மக்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.

- ஜெயபாஸ்கரன்