சமூகத்திற்கு முன் இரண்டே பாதைகள் தான் உள்ளது.

1) சோசலிச வளர்ச்சிப் பாதை

2) முதலாளிய (ஏகாதிபத்திய) பாதை

modi ops and epsஇந்த இரண்டைத் தவிர நாம் தேர்வு செய்ய மூன்றாவது பாதை என்ற ஒன்று இல்லை. எனவே சோசலிச வளர்ச்சிப் பாதையிலிருந்து மயிரிழை விலகினாலும் அது முதலாளியப் பாதையில் தான் போய் முடியும்.

இந்த வரலாற்று விதியை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொண்டு சோசலிசத்திற்காக கிஞ்சிற்றும் சமரசமின்றிப் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என தெளிவுபட எடுத்துக் கூறியுள்ளார் இலெனின்.

இந்த அளவுகோலின்படி சோவியத் நாட்டில் ஸ்டாலின் மறைவிற்குப் பின் (1952) சோசலிசப் பாதைக்கான போராட்டம் திசை மாறியது.

மாவோ மறைவிற்குப் பின் (1976) சீனாவில் சோசலிசப் பாதைக்கான போராட்டம் திசை மாறியது.

1990களில் சோவியத் நாடு என்ற அமைப்பையே சீர்குலைத்து சமாதி கட்டினார் கோர்பாச்சேவ்.

1990களுக்குப் பிறகு உலகத்தின் ஒரே செல்திசை முதலாளியத்தின் சந்தைப் பொருளாதாரமே என பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது.

உலக வர்த்தகக் கழகம்- WTO போன்ற பொருளாதார அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டது.

உலக வங்கி, IMF-பன்னாட்டு நிதியம் போன்ற நிதி மூலதன ஆதிக்க அமைப்புகள் உலக நாடுகளின் அரசியல், பொருளியல், பண்பாட்டு வாழ்வியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக வெளிப்படையாகவே செயல்படத் தொடங்கின.

இந்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் அனைத்தும் சந்தைப் பொருளியலுக்கான அரசியல், பொருளியல், பண்பாட்டு கட்டுமானங்களை மிக வேகமாக வளர்த்தெடுத்தன.

ஒரு மனிதனை சந்தைக்கான (நுகர்வுக்கன) மனிதனாக வளர்த்தெடுப்பதே கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களின் நோக்கமாக்கப்பட்டது.

நிறவெறி, சாதிவெறி, மதவெறி போன்ற ஜனநாயகத் தன்மைக்கு எதிரான பாசிச உளவியல் வளர்க்கப்பட்டது.

இந்தச் சூழல்தான் தமிழீழத்தின் விடுதலைக்குப் போராடிய தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அழிக்கக் காரணமானது.

சந்தைப் பொருளியலுக்காக உருவாக்கப்பட்ட இந்திய உளவியல் ஒரு பார்ப்பனிய அடிப்படை கொண்ட இந்து பேராதிக்க உளவியலாக வளர்த்தெடுக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்டுகள் இந்திய பெருந்தேசியத்திற்குப் பலியாகி தேசிய இனங்களின் இறையாண்மையை மறுக்கும் வல்லாதிக்க மனநிலை கொண்டவர்களாக இயங்கி வருகின்றனர்.

சமூக நீதி, தேசிய இன உரிமைகள் என்ற ஜனநாயக முழக்கத்தை முன்வைத்து எழுச்சி பெற்ற பெரியாரிய இயக்கமும் சந்தைப் பொருளாதாரத்தின் பெருவெள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டது.

சமூக நீதிக் கோட்பாடு பேசும் திமுக, அதிமுகவினரே கல்விச் சந்தையில் பெரும் கார்பரேட்களாக வளர்ந்து நிற்பதைப் பார்க்கிறோம்.

காங்கிரசோடும், பாஜகவோடும் அவர்கள் போட்ட கூட்டணிகளும் இந்த அரசியல், பொருளியல் காரணிகளின் விளைவேயாகும்.

பஞ்சாப், காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் விடுதலைக் குரலை இந்தியப் பேராதிக்கவாதிகள் நசுக்கி அழித்து விட்டனர்.

இந்திய வல்லாதிக்க அரசு தனது கோரக் கைகளை இலங்கை வரை நீட்டி அங்கு நிறுவப்பட்டிருந்த தமிழீழ அரசையே அழித்து ஒழித்தது.

காசுமீரின் இறையாண்மையை இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்து வல்லாதிக்க ஆணவம் பேசுகின்றன.

மக்களின் ஜனநாயக உரிமைகளை அடியோடு பறிக்கும் பாசிச சட்டங்களான தேசிய புலனாய்வு முகமை திருத்தச்சட்டம் (NIA), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டம் (UAPA) போன்ற கொடூரச் சட்டங்களை ஒரு சில கட்சிகளைத் தவிர அனைவரும் ஆரவாரமாக ஆதரித்தனர். அதே போலத்தான் ஒரு சமூகத்தையே வார்ப்பிக்கும் கல்விக் கொள்கையை இந்த அரசு தனது கார்பரேட், பார்ப்பனிய நலனுக்கு ஏற்ப கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து பல ஜனநாயக சக்திகள் மிக ஆழமாகப் பேசி வருகின்றனர்.

என்னதான் பேசினாலும் "அடித்தளத்திற்கு ஒத்திசைவான மேல்கட்டுமானம் தவிர்க்க முடியாது" என்ற மார்க்சின் மிகச் செறிந்த பொருளார்ந்த கருத்தை உள் வாங்கி பார்க்க வேண்டியுள்ளது.

அதாவது சந்தைக்கான உற்பத்தி நிறுவப்பட்ட பின், இந்திய தேசியவாதம் (பார்ப்பனியம்) நிறுவப்பட்ட பின் அதற்கான கல்வியை உருவாக்குவது தவிர்க்க முடியாது.

ஆக இன்று நம் முன்னே நிகழ்ச்சி நிரலாக்கப்பட்டுள்ள எல்லாச் சிக்கல்களும் அதற்கே உரிய சமூக வளர்ச்சிப் போக்கினூடே வளர்ந்து வந்துள்ளது.

இந்திய சமூக அமைப்பில் பார்ப்பனியத்தோடு சமரசமும், சோசலிசத்தைக் கைவிட்டு நேரு காலத்திய முதலாளியப் பாதையை இந்தியாவின் சோசலிசப் பாதை என மடைமாற்றம் செய்து உருவாக்கிய அரசியல் பொருளியல், பண்பாட்டுக் காரணிகளுமே இன்றைய நிலைமைகளுக்குக் காரணம்.

ஒரு மிகச் சரியான வலதுசாரி பார்ப்பனிய சித்தாந்தக் கட்சியான பாரதிய ஜனதா இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலைமைகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.

இறுதியாக சமூகத்தின் முன் இரண்டு பாதைகளே உள்ளது

1) ஏகாதிபத்தியத்தின் அழிவுப்பாதை
2) சோசலிசத்தின் வளர்ச்சிப்பதை

இதில் ஒன்றைத் தேர்வு செய்து அதற்காகப் போராட வேண்டும். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏகாதிபத்திய உற்பத்தியோடும், பார்ப்பனிய இந்திய பெருந்தேசியவாதத்தோடும் தம்மை முரணின்றி இணைத்துக் கொண்டவர்கள் என்பது வரலாறு.

சமூக நீதி, சாதி ஒழிப்பு, தேசிய இன உரிமைகள், உழைக்கும் மக்கள் உரிமைகள் என்ற கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் தேசிய இனங்களின் இறையாண்மை கொண்ட சோசலிசப் பாதைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியை வரலாறு வழங்கவில்லை.

- கி.வே.பொன்னையன்