இன்று தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியம் பேசும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டவையாகவும், பல தேர்தல் அரசியலை புறக்கணித்தவையாகவும் இருக்கின்றன. அதே போல இவர்களில் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற இரண்டு பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்பது பிரதானமானதாக இருக்கின்றது.

பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள் தங்கள் சாதியை விட்டொழிக்க வேண்டும், மொழியால், இனத்தால் தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என்றும், பெரியாரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சாதியை வைத்து தமிழனை அடையாளப்படுத்தும் சாதிய அரசியலையும் முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் சாதி ஒழிப்பு, தமிழர் ஒற்றுமை என்ற எல்லையைத் தாண்டி முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் எதிர்க்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் உள்ளன.

seeman 644இப்படி விதவிதமாக தமிழ்த் தேசியம் பேசும் குழுக்கள் பல செயல்பட்டு வந்தாலும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் வருகைக்குப் பின்னால்தான் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடலே அறிமுகமாகி இருக்கின்றது. இப்போது அவர்கள்தான் 'சீமான் தமிழ்த் தேசியத்தை அமைத்துவிடுவார், தமிழர்கள் மட்டுமே வாழும் விடுதலை பெற்ற ஒரு தமிழ்நாட்டை அவர் உருவாக்கி, தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் மக்களை எல்லாம் இங்கிருந்து துரத்திவிட்டு சுத்தமான தமிழ் ரத்தத்திற்குப் பிறந்த, அதாவது தமிழ் பேசும் தமிழ்ச் சாதிகள் மட்டுமே ஆட்சி புரியும் நிலையை ஏற்படுத்தி விடுவார்' என்று அனுதினமும் சமூக வலைதளங்களில் மொழி சிறுபான்மையின மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களின் உண்மையான எதிரி என்பது இங்கிருக்கும் பிறமொழி பேசும் மக்கள்தானே ஒழிய சாதியத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக் காப்பாற்றும் பார்ப்பனியம் கிடையாது. ஒருவன் தீவிரமான சாதி வெறியனாக இருக்கலாம், முதலாளித்துவத்தின் ஆதரவாளனாக இருக்கலாம். ஆனாலும் தமிழ்ச் சூழலில் அவன் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இயங்க முடியும்.

ஆனால் "சீமான் இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுதானே தேர்தலில் போட்டி இடுகின்றார்; அவரால் எப்படி தமிழ்த் தேசியத்தைக் கொண்டுவர முடியும்?" என்று கேட்டால் தம்பிகள் தலையை சொறிந்து கொள்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை சீமான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்தாலே தமிழ்த் தேசிய அரசு அமைந்துவிட்டது என்று பொருள். அவர்கள் அப்படித்தான் புரிந்து வைத்திருக்கின்றார்கள். நிச்சயம் ஒரு நாள் சீமான் தலைமையில் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசு மலரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்படுகின்றது. அநேகமாக இந்தக் கட்டுரை அவர்களுக்கானதாகவே எழுதப்படுகின்றது.

சீமானின் தனித்த கருத்து நிச்சயம் தமிழர்கள் மட்டுமே ( சாதியை வைத்து தமிழர்களை அடையாளாம் காணும் அவர்களின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும்) வாழும் தமிழ்த் தேசியமாக அதாவது இந்திய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தனித் தமிழ்நாடாக இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் நிச்சயம் அவர் நாம் தமிழர் கட்சியை தேர்தல் பாதையில் ஈடுபட வைத்திருக்க மாட்டார்.

ஆனால் அவரது கட்சியில் இருக்கும் தம்பிகள் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலில் போதுமான அறிவற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதும், வாட்ஸ் அப், பேஸ்புக் தகவல்களையும், சீமானின் பேச்சுக்கள் பதிவேற்றப்பட்ட யூ டியூப் காணொளிகளையும் தாண்டி அவர்களின் அறிவு மட்டம் உயரவில்லை என்பதாலும் அவர்கள் பல்வேறு விதமான வண்ணக் கலவையாக தமிழ்த் தேசியத்தை பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

தமிழர்கள் ஒரு தேசிய இனமா என்றால் ஆம் என்று மிக எளிமையாக சொல்லி விடலாம். தனித்த நிலப்பரப்பு, மொழி, பொருளாதார வாழ்வு, ஒரே மன இயல்பு என அனைத்துமே கைவரப்பெற்ற ஒரு இனம் தமிழினம். அதே போல இந்தத் தமிழ்த் தேசிய இனம் இந்திய ஒன்றியத்தால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றதா என்றால் நிச்சயம் மறுப்பேதும் இன்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தனித் தமிழ்நாடு கேட்கும் அளவிற்கு சூழ்நிலை மிக மோசமாக இருக்கின்றதா என்றால் ஆம் இன்னும் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் இன்று தனித் தமிழ்நாடு கேட்கும் அளவிற்கு தெம்பும் திராணியும் உள்ள எந்த அமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.

இருக்கும் பெரும்பாலான தமிழ்த் தேசிய அமைப்புகள் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவும், பெயரளவிற்கு இந்திய ஒன்றியத்தையும், அதன் அடக்குமுறைகளை கண்டிப்பவர்களாகவுமே உள்ளார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகவும், இந்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்கும் நாசகார திட்டங்களுக்கும் எதிராகவும் இங்கிருக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். ஆனால் இது எதுவொன்றும் ஒரு தேசிய இனம் தன்னை அடக்கி ஆளும் ஒரு ஆட்சி முறையில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான தேசிய இன போராட்டம் என்ற எல்லையை இதுவரை தொட்டதில்லை.

ஏன் அப்படியான ஒரு மனநிலைக்கு தமிழ்ச் சமூகம் வரவில்லை என்பதையும், அவர்களை அப்படி வரவிடாமல் தடுக்கும் காரணிகள் எவை என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு நாசகாரத் திட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றுபட்டு போராடி, அதை வரவிடாமல் தடுத்திருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால் போராட்டக் களத்தில் சாதியைக் கடந்து ஒன்றுபடும் தமிழன் வீட்டிற்கு வந்த பின்னாலும் அவ்வாறுதான் இருக்கின்றானா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லிவிட முடியும்.

போராட்டக் களத்தில் தோழனாக தெரிபவன், வீட்டிற்கு வந்ததும் தேவனாகவும், வன்னியனாகவும், செட்டியாராகவும், முதலியாராகவும், கவுண்டனாகவும் மாறுகின்றான். போராட்டக் களத்தில் தமிழனாக இருந்தவன் அதே போராட்டக் களத்தில் தமிழனாக இருந்த இன்னொருவனை வெட்டிக் கொல்கின்றான், சாதிய ஆணவப் படுகொலை செய்கின்றான், அவனுக்கு எதிராக தீவிரமான தீண்டாமையைக் கடைபிடிக்கின்றான். இது தமிழ்நாட்டில் மட்டும் உள்ள பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பிரச்சினையாகவே உள்ளது. சாதிய மனநிலையை கடக்காத வரைக்கும் நிச்சயம் தமிழர் என்ற பொது அடையாளத்தோடு வர்க்க உணர்வு பெறுவது சாத்தியமற்றது.

சரி அப்படி என்றால் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்தினால் தமிழ்த் தேசிய இனம் விடுதலை பெற்றுவிடுமா என்றால் நிச்சயம் இல்லை. தேசிய (இன)ப் பிரச்சினை என்பது, பட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பொதுப்பிரச்சினையின் ஒரு பகுதியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பொதுப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது என்கின்றார் லெனின். இந்த அடிப்படையில் நின்று நோக்கும்போது உண்மையான தமிழ்த் தேசிய இயக்கம் என்பது சாதியப் பிரச்சினையை பட்டாளி வர்க்கப் புரட்சியுடன் எப்போது இணைக்கின்றதோ அப்போதுதான் அது அதன் உண்மையான பொருளில் தமிழ்த் தேசிய இயக்கமாக இருக்க முடியும்.

லெனின், "ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடிய, தூக்கியெறிவதாக இருக்கக் கூடிய தேசிய விடுதலை இயக்கங்களை தவறாமல் ஆதரிக்க வேண்டும்" என்கின்றார். "ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலைப் போராட்டத்தை, பாட்டாளி வர்க்க கட்சிகள் தனது நேரடி நடவடிக்கைகள் மூலம் ஆதரிக்காமல் போனால் தேசங்களின் சமத்துவம் பற்றிய அவற்றின் பிரகடனங்கள் பொருளற்றதாகவும் நாணயமற்றதாகவுமே இருக்கும்" என்கின்றார்.

இந்திய தேசியத்தில் இருந்து விடுதலை கோரும் தமிழ்த்தேசியம் என்பது தற்போதைய சூழ்நிலையில் அதன் உண்மையான பொருளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சாதிக்கு கருத்தியல் அடித்தளமாய் இருக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்டிருக்கின்றதா என்று பார்த்தால் நிச்சம் இல்லை என்று சொல்லிவிட முடியும். எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பையும், பார்ப்பன எதிர்ப்பையும் தங்களது அரசியல் செயல்தந்திரங்களாக கொண்டிருக்கும் எந்த ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியும் இது போன்ற தமிழ்த் தேசிய இயக்கங்களை ஏற்று அங்கீகரிக்க முடியாது. அடிப்படையில் இனவாத, சாதியவாத அரசியலில் மூழ்கிக் கிடக்கும் இந்த அமைப்புகள் ஒருவகையில் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கே வேட்டு வைப்பவையாகும்.

தமிழகத்தில் சாதிய உணர்வு கெட்டிப்படுவதற்கு இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் பெரும்பங்காற்றி இருக்கின்றன. இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பல சாதிவெறி பிடித்த நபர்கள் எல்லாம் தங்களை தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் நிலைதான் இயல்பாய் இருக்கின்றது.

எனவே இங்கிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் எதையும் தேசிய விடுதலை இயக்கங்கள் என்று நிச்சயம் அங்கீகரிக்க முடியாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையைக்கூட வலியுறுத்தி எந்த ஒரு போராட்டத்தையும், அதற்கான மக்கள் திரளையும் கட்டியமைக்கத் திராணியில்லாத இந்த அமைப்புகள்தான் தமிழ்த் தேசியம் என்ற கற்பனைக் கோட்டையை கட்டி வைத்திருக்கின்றன. ஏன் அவை அவ்வாறு இருக்கின்றன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். அவை சாதியத்தை ஏற்றுக் கொண்டவையாகவும், ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதாகவும் உள்ளன. எனவே இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டே தமிழ்த் தேசியம் பேசும் புரட்டர்களை சிறிதளவாவது அறிவும் நேர்மையும் இருக்கும் நபர்கள் புரிந்துகொண்டு அது போன்ற ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளிடம் இருந்து விடுபட வேண்டும்.

உலகில் உள்ள எல்லா அறிவியல், அறவியல் கருத்துக்களும் கம்யூனிசத்தில் உள்ளது. அதை இந்திய சமூகத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தும், பயன்படுத்திக் கொண்டிருக்கும் அமைப்புகளும் உள்ளன. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பன பாசிச எதிர்ப்பை தன்னுடைய செயல்தந்திரங்களாகக் கொண்ட அமைப்புகள். எனவே சமூக மாற்றத்தில் உண்மையான அக்கறை உள்ள நேர்மையானவர்கள் நிச்சயம் இது போன்ற செயல்தந்திரத்தைக் கொண்டிருக்கும் அமைப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படுவார்கள். சாதியத்தையும் முதலாளித்துவ அடிவருடித்தனத்தையும் விட்டொழிக்க மனதற்ற பிழைப்புவாதிகள்தான் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் பிற்போக்கு தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

- செ.கார்கி