உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டுபவர்களிடமிருந்து, சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கம், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே புரட்சி.

               இந்தப் புரட்சியானது, தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், நம் சந்ததிகள் என அனைவருக்கும் நல்வாழ்வைத் தரக் கூடியது.

               outsourcingவேலைவாய்ப்பு என்பது, எக்காலத்திலும் இளைஞர்களின் வாழ்வியல் நிலையை மேம்படுத்த இன்றியமையாதது. வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு மனிதனுக்கு, தன் குடும்பத்தை நடத்த பொருளாதாரம் என்பது மிக முக்கியம். வேலைவாய்ப்பின்றி அத்தகைய பொருளாதாரச் சூழலை அடைவது என்பது சிரமமானது. அரசியல் அமைப்பு சாசனத்தில், கூறப்பட்டுள்ள பொருளாதாரச் சமூக நீதியை அடைய, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது ஆளும் அரசுகளின் கடமை. வேலைவாய்ப்பின் மூலமே, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வறுமை ஒழியும். அதன் மூலம் சமூகமும் மேம்படும். அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

               அரசுத்துறையோ, தனியார் துறையோ தொழிலாளர்களுக்கு இக்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில், ஊதியமும், பணிப் பாதுகாப்பும் அளிப்பது முக்கிய கடமையாகும்.

               இன்றைய சூழலில், தனியார் துறைகளில் உள்ள அசாதாரண நிலையைப்போல, அரசுத் துறைகளிலும், தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் பணியிடங்களை குறைந்த அளவு மட்டும் நிரப்பி விட்டு, மறுபக்கம் இருக்கும் பணியிடங்களை சத்தமில்லாமல் காலி செய்யும் அழிவு நோக்கம் இன்றைய ஆளும் வர்க்கத்தின்; அடையாளமாக மாறிப்போயிருக்கிறது.

               இதற்கெல்லாம் விதிவிலக்கான கேரளத்தை ஆளும் உழைக்கும் மக்களின் இடதுசாரி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய்.18000ஃ- வழங்க சட்டமியற்றி அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இதர மாநிலங்கள் அதைப் பற்றி வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறது.

               சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதவர்கள், தாமிரபரணி ஆற்றின் நீராதாரத்தை பாதுகாக்க மனமின்றி, புஷ்கர விழா நடத்த மட்டும் முன்னனியில் நிற்பவர்கள், இவ்விரண்டு விவகாரத்தையும் மதப் பிரச்சனையாக மாற்ற முயலும் அற்ப அரசியல்வாதிகளும், பிற்போக்கு சிந்தனையாளர்களும், ஏனோ உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பற்றி மட்டும் ஒருநாளும் கவலைப்படுவதில்லை. இன்றைய கேரளத்தின் மக்கள் ஜனநாயக அரசைப்போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இத்தகைய மதவாதிகளுக்கு ஈடுபாடு இல்லை.

               ஒரு மனிதன் வாழ, ஜாதியோ மதமோ தேவையில்லை. வேலைவாய்ப்புதான் தேவை என்பதை அறியாத மத்திய ஆளும் வர்க்கம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வேலைவாய்ப்பை இல்லாமல் செய்து, டிஜிட்டல் இந்தியாவை பீடித்திருக்கும் நோய் போல, இறுதிக்கால நடைபோடுகிறது.

               மத்திய மற்றும் மாநில அரசுகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை தகுதியுள்ள, வேலைக்காக காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களைக் கொண்டு நிரப்ப மனமில்லாமல், உழைப்பு சுரண்டல் எனும் ஒரே நோக்கில், தனியார் ஏஜென்சிகளுக்கு வேலைவாய்ப்பை ‘ அவுட்சோர்சிங்” எனும் முறையில் குத்தகைக்கு விடும் பழக்கம் இன்று சீர்கெட்ட நிர்வாகத்தின் வழக்கமாகிவருகிறது.

               இத்தகைய அவுட்சோர்சிங் எனும் வெளி ஆதாரப்பணி தனியார் ஏஜென்சிகளுக்கு கொழுத்த லாபத்தை அளித்து, ஏஜென்சிகளிடம் கொத்தடிமை போல், சொற்பமான சம்பளத்துக்கு வேலை பார்க்கும், இளவயது ஆண்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை ஆதாரமில்லாமல் சேதாரமாக்கி வருகிறது.

               உழைக்கும் இளைஞர்களின் உடல் உழைப்பையும், மூளை உழைப்பையும் வியர்வையாக பிழிந்தெடுத்து, தொழலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சியாக அதிகாரம் செய்கிறது ‘அவுட்சோர்சிங் முறை”.

               மத்திய அரசுத் துறைகளிலும், இரயில்வேயிலும், பொதுத்துறை வங்கிகளிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளிலும், காவல்துறை பணியிடங்களும், சுகாதாரத் துறையிலும் பெருமளவில், அதாவது லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன.

               அவற்றில் 5 வருடத்திற்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை இல்லாமல் ஆக்கும் தவறான வேலையை செவ்வனே செய்து வருகிறது ஆளும் மத்திய அரசு.

               புதிதாக ஏதும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கும் நிர்வாகத் திறனற்ற ஆளும் வர்க்கம் இருக்கும் பொதுத்துறை வங்கிகளையும் இணைப்பு என்ற பெயரில் இல்லாமல் செய்யும் பிற்போக்குத்தனமான பணியை செய்து வருகிறது.

               ஆண்டுக்கு பலகோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று, வாய்ப்பந்தல் போட்டவர்கள், இன்று அனைத்து வேலைவாய்ப்புகளையும், தனியார் ஏஜென்சிகளிடம் தாரைவாhத்து, வேலைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலை செய்கின்றனர். தனியார் மயம், உலகமயத்தோடு இன்று அவுட்சோர்சிங் மயமும் சேர்ந்து கொண்டுள்ளது.

               மத்திய அரசுக்கு, சற்றும் சளைக்காத தமிழக அரசும், போட்டி போட்டுக் கொண்டு, வேலைப்பளுவை அதிகமாக்கி, அரசு ஊழியர்களையும், அரசு வேலையை அவுட்சோர்சிங் வேலையாக்கி, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களையும் வதைத்து வருகிறது. 8 மணி நேர வேலை என்பதெல்லாம் அரசு அலுவலகத்தில் கூட நடைமுறையில் இல்லை இன்றைய நாட்களில்.

               சில ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப, ஆண்டுக்கு பலமுறை தேர்வு நடத்தி அதில் விண்ணப்பக்கட்டணமாக பல கோடி ரூபாய் இலாபம் சம்பாதிக்கின்றனர் ஆளும் அரசுகள்.

               குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்களிலும், கணினி இயக்குபவர் என்ற பெயரில், தொகுப்பூதிய முறையில், குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்களை நியமனம் செய்து, நிரந்தர வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நிரந்தரமாக காத்திருக்க வைக்க முயற்சிக்கிறது தமிழக அரசு.

               தற்போது பள்ளிக்கல்வித் துறையில், 1400 -க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடமாக நிரப்பாமல், அதனை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூபாய்.7500- சம்பள விகிதத்தில், தற்காலிகமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கை அனைத்து தரப்பினராலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக நீதிமன்றம் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு இம்முறையிலான ஒப்பந்த முறைக்கு தடைவிதிக்க வேண்டும்.

               ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலைக்காக காத்திருக்கும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கோபமும், ஏமாற்றமும் எந்த புஷ்கரணி தீர்த்தத்தில் ஆட்சியாளர்கள் நீராடினாலும் விடாது.

               அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை, தொகுப்பூதிய முறை என்று பல வழிகளில் அரசு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, பெருமளவில் உழைப்புச் சுரண்டல் நடைபெற வழி செய்கிறது.

               இத்தகைய நடைமுறைகளை எதிர்த்து, உழைக்கும் வர்க்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்போது, அரசு ஊழியர்களை மக்களுக்கும், வேலையில்லா இளைஞர்களுக்கும் எதிரிபோல முன்னிறுத்தி அவதூறு பிரச்சாரம் செய்யும் உத்தியை ஆளும் வர்க்கம் கடைப்பிடிக்கிறது.

               இத்தகைய ஆளும் வர்க்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட, தொழிலாளி வர்க்கப் பிரதிநிதிகள் போதுமான எண்ணிக்கையில் மத்திய, மாநில சட்டமியற்றும் அவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படாததும், முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

               மக்களுக்கும், வேலைக்காக காத்திருப்போருக்கும், ஆளும் அரசுகளின், தவறான நிர்வாகத்தை சுட்டிக்காட்டும் வண்ணம், புதிய அரசாணை என்ற பெயரிலே, அரசாங்க வேலைவாய்ப்பை பறிக்காதே என்ற முழக்கத்துடன் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற அரசு ஊழியர் - வாலிபர் - மாணவர் - ஆகியோர் கலந்துகொண்;ட மனிதச் சங்கிலி போராட்டம், உழைக்கும் வர்க்கத்தின் அடிமைச்சங்கிலியை உடைத்தெறியும் புதிய வியூகத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

               உழைக்கும் வர்க்கம் இத்தகைய போராட்டங்களோடு நின்றுவிடாமல், சமுதாயத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் புரட்சிகரமான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, மனித சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் மேம்பட வழி பிறக்கும்.

               அவுட்சோர்சிங் போன்று காலங்காலமாக, உழைக்கும் மக்களுக்கு பல சோதனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பழங்காலத்தில் பண்ணையடிமைகளாக இருந்த உழைக்கும் மக்களுக்கு சாணிப்பாலும், சவுக்கடியும் கொடுத்த இந்த முதலாளித்துவ அடிவருடி ஆளும் வர்க்கத்தின் அடாவடிகள் இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறாகும். அத்தகைய நிலைக்கு மீண்டும் இந்த உழைக்கும் வர்க்கம் சென்றுவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு டிஜிட்டல் இந்தியாவின் குடிமக்களாகிய அனைவருக்கும் உண்டு. இத்தகைய சூழ்நிலையில், ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து, உழைக்கும் மக்கள் இந்நாட்டை ஆளும் காலம் வெகுதூரத்தில் இல்;லை என்பதை உரக்க சொல்வோம் உலகத்திற்கு.

               வேலைவாய்ப்பை உருவாக்கி, மக்களை வாழவைக்க வழிசெய்ய வேண்டிய அரசுகள், வேலையில் இருப்பவருக்கும், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இடையே பொறாமையை உண்டாக்கி, வேற்றுமையை விதைக்கும் செயல்களை வேரறுக்க, ஒற்றுமை என்னும் ஆயுதம் ஏந்திடுவோம். உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள். உலகின் எந்த மூலையிலும், எந்தவொரு தொழிலாளிக்கும் உரிமைகளைப்பெற்றுத்தரவும், பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும் அரணாய் இருப்போம்.

               "நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே, நேருக்கு நேர் நின்று பார்ப்போம்”.              

- சுயம்புலிங்கம் பாலகணேஷ், மாதவன்குறிச்சி – 628206