இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயில மருத்துவக் கல்விக்கான நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு சதமான முறை அடிப்படையில் சுமார் 150 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற வாய்ப்போடு, தொடக்கத்தில் சிபிஎஸ்சி இந்தத் தேர்வை நடத்தியது. தற்போது போட்டித் தேர்வுகளுக்கான தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.

suicide"தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணம் மற்றும் நன்கொடை கொள்ளை வேட்டையை தடுப்பதற்காகவே நீட் தேர்வு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறையால் தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களின் கொள்ளையைத் தடுக்கலாம். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்கு வழி வகுக்கிறார்கள்" என்றெல்லாம் நீட் தேர்வுக்கு சாதகமாக பரப்புரை செய்யப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகள் இருந்தாலும், நீட் தேர்வு ஒன்றே வழி என்று கூறும் மத்திய அரசு, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களையே அனுமதிக்க வேண்டும் என்று வரையறை செய்து மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிட்டு ஊரகப் பகுதி ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவை நசுக்கி விட்டது.

ஒருபுறம் நீட் தேர்வில் 150 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலும் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டு, மாணவர்கள், அரசுக் கல்லூரிகளில் சேர்க்கை செய்து கொள்ளப்படுகிறார்கள்.

மிகச் சொற்பமான எண்ணிக்கையில் மருத்துவ கல்விக்கான இடங்களை வைத்துள்ள மத்திய, மாநில அரசுகள் தகுதித் தேர்வில் வென்ற அனைவருக்கும் மருத்துவப் படிப்பை வழங்குவதில்லை.

லட்சக்கணக்கில் தகுதியைப் பெறும் மாணவர்கள் தங்களுக்கான மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போகிறது. 720 மதிப்பெண்களுக்கு 150 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்ற நிலை நடைமுறையில் உள்ளதால் அதிக மதிப்பெண் எடுத்த, ஆனால் கட் ஆப் மதிப்பெண் எண்ணிக்கைக்குள் வராதவர்கள் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போகிறார்கள். குறைவான மதிப்பெண்ணைப் பெற்ற சிலர் அதிகக் கட்டணத்தைக் கொடுத்து தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பைத் தொடர்கிறார்கள்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒருவரால் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் போகிறது. குறைந்த மதிப்பெண் பெற்ற கோடீஸ்வர குலக்கொழுந்து ஒருவரால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடிகிறது. இதில் எங்கு இருக்கிறது தகுதி?

பழைய மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று இருந்தால் இந்த கோடீஸ்வர குலக் கொழுந்துகள் மருத்துவக் கல்லூரிகளின் தெருக்கோடிகளுக்கே வந்திருக்க முடியாது.

மருத்துவப் படிப்புக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி தான் தகுதி என்ற நிலை மாறி நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது மத்திய அரசு.

இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறைக்கு சாத்தியமற்ற நிலையில் கல்வித் துறையை மத்திய அரசு தனது பட்டியலின் கீழ் பறித்து வைத்துக் கொண்டு... மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் கடும் நெருக்கடி கொடுத்து, தான் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களுக்கே சேர்க்கை அனுமதி வழங்க வேண்டும் என்று ஆதிக்க மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நுழைவுத்தேர்வு தடைச் சட்டம் அமலில் உள்ளபோதே இந்த நீட் தேர்வு, தகுதித் தேர்வு என்கிற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே சேர்க்கை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழ்நாடு.

ஒருபுறம் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை செய்வதற்கான நடைமுறையை மாற்றிக் கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவது வன்முறையாகும்.
-----------

ஒருபுறம் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அடிக்கும் கொள்ளை கண்கூடாகத் தெரிந்தும் இந்த அரசுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பல்வேறு கல்வி முறைகளை உள்ளடக்கிய இந்தியாவில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நீட் தேர்வு நடத்துவது வஞ்சகமான செயலாகும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். 11 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளை தவிர தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டு கல்வி உரிமையைப் பறிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இந்திய மருத்துவ மருத்துவக் கவுன்சிலிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என்று வாக்குறுதி அளித்த கட்சிகளே வெற்றி வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

நீட் தேர்வை தங்கள் அரசின் சாதனையாகக் கூறிக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தங்களின் அபிலாசைகளை தேர்தல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மக்களாட்சியில் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படாமல் நீட் தேர்வை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டியது அரசுகளின் கடமை.

நீட் தேர்வுக்கான நியாயங்களாக கூறப்பட்ட
....
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியவில்லை....

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தகுதியைப் பெற்ற மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியவில்லை....

அதிகக் கட்டணம் கொடுத்து தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்று தகுதி பெற்ற பின் கட் ஆப் மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் அதிக கட்டணம் கொடுத்து தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விடவே அதிக வாய்ப்பு உள்ளது...

தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை...

தனியார் போட்டித் தேர்வு மையங்களின் கட்டணக் கொள்ளையை அரசுகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை....

போட்டித் தேர்வுகளில் சென்று படிக்க முடியாத ஏழை எளிய ஊரகப்பகுதி மாணவர்களால் மருத்துவம் படிக்க முடியவில்லை....

வேறு மாநிலங்களில் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் படித்த சிலர் தமிழ்நாட்டில் இருப்பிட முகவரியை பெற்றுக் கொண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடும் நிலை உள்ளது. இது பல்வேறு ஊழலுக்கு வழி வகுக்கிறது....

தொடக்கப்பள்ளி முதல் மருத்துவக் கனவுகளோடு வலம் வந்த மாணவர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது....

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான நீட் தேர்வை தமிழ்நாட்டில் தடை செய்வதே சரியான வழி.

- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ் வழி கல்வி இயக்கம்