பொதுவாகவே கைது நடவடிக்கைகள் நமக்குப் பல நேரம் வருத்தத்தையும், சில நேரம் மகிழ்வையும் தரும். நமது தோழமைகள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என்று களத்தில் கைது செய்யப்பட்டு, சிறை நடவடிக்கைக்கு உள்ளாகும்போது வருத்தமும், மனித குல விரோதிகள் கைது நடவடிக்கைக்கு ஆட்படும்போது மகிழ்வையும் உண்டாக்கும். அப்படியானதொரு சமீபத்திய கைது நடவடிக்கை மகிழ்வைத் தந்தது.

ஜனவரி 30ஆம்தேதி. ஆர்.எஸ்.எஸ் மத அடிப்படைவாதிகளால் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம். அன்றைய தினத்தில் நாடு முழுவதும் ஒரு காணொளி பரவி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது. இந்து மகா சபையின் பொதுச் செயலாளராய் இருக்கும் பூஜா பாண்டே, அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோர் உள்ளிட்ட ஒரு கும்பல், மகாத்மா காந்தியின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டுச் சிதைத்தனர். கொஞ்சங்கூட கூச்ச நாச்சமற்று, மேலதிக உற்சாகத்தோடும், மகிழ்ச்சிக் கூக்குரலோடும் அதைப் பகிரங்கமாக பொதுவெளியில் நடத்திட, அதை ஒளிப்பதிவு செய்த ஊடகங்கள் நாடெங்கும் பரப்பின. அதோடு நின்றுவிடவில்லை அந்தக் கும்பல்.

AgapPuram 4"ஆண்டுதோறும் காந்தியின் உருவப்படத்தைச் சுடுவோம்" என்று பகிரங்கமாகப் பேசினார் இந்து மகா சபையின் பூஜா பாண்டே. தற்போது அந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது நமக்கு மகிழ்வைத் தந்துள்ளது.

காந்தி என்கிற மனிதன் எப்படி ஒரு மகாத்மா என்றழைக்கப்படும் நிலைக்குப் போனார் என்பதையோ, அல்லது அவரின் மோசமான பக்கங்கள் என்ன என்பது குறித்தோ, அல்லது வரலாற்று வெளியில் அவரது சாதக பாதகங்கள் குறித்தோ இங்கு நாம் விமர்சிக்கப் போவதில்லை, கவனங் குவிக்கப் போவதில்லை. மாறாக, காந்தி மட்டுமல்ல, பெரியார், அம்பேத்கர், லெனின் போன்ற ஆகப் பெரும் ஆளுமைகளும் அவமதிக்கப்படுவதின் பின்னணி என்ன? அதனூடே உட் பொதிந்து கிடக்கும் அரசியல் என்ன? என்பதைத்தான் இந்த வார அகப் புறம் பேசுகிறது.

புத்தகச் சந்தைகளிலோ அல்லது மாநாட்டு அரங்கிற்கு வெளியே விரிக்கப்படும் புத்தக விற்பனைகளிலோ அல்லது கூட்ட அரங்கின் முன்பு கடைவிரிக்கப்பட்டிருக்கும் மேசைகளிலோ அந்த அழகிய சுவர்த்தாள் (Wall Paper) ஒன்றை நான் கண்டிருக்கிறேன். அந்தச் சுவர்த்தாளில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் எம்மை மிகவும் கவர்ந்தவொன்று.

“தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடத்தினைப் போட்டுக் கொடுப்பவர்கள் மா மனிதர்கள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

வரலாற்றுப் போக்கில் பல ஆளுமைகள் தடம் போட்டுக்கொடுத்த மாமனிதர்களாய் நம் முன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த மாமனிதர்கள் முன் முனைந்து சிரமப்பட்டுப் போட்டுக் கொடுத்த தடத்தில் நாம் பயணிப்பது சுலபம். சுகமாக நடந்து பயணிக்கலாம் அல்லது ஏதாவதொரு வாகனத்தில் விரையலாம். சொகுசாய்க் குளுகுளுவென உல்லாசமாய் மகிழ்ந்து பயணிக்கலாம். ஆனால், அந்தச் சுகமான தடத்தினை உருவாக்கிக் கொடுத்தவர்கள் சுகப்பட்டிருக்க மாட்டார்கள். எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் நாளைய சந்ததிகளுக்கான கனவுகளுடன் பாதைகளை உருவாக்கியவர்களின் வேதனைகளும் வலிகளும், தடத்தில் சுகமாய்ப் பயணிப்பவர்களுக்குத் தெரியாது.

நமது பாதங்கள் என்னவோ மண்ணில் பதிந்திருந்தாலும், நமது ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் தேவைகளும், நுகர்வு வெறி கொண்டு அந்தர வெளியில் ஆனந்த மிதவையில் இலகுவான இறகினைப் போல மிதந்தலைகிறோம். மாறாக, நம் காலடிகளுக்குக் கீழிருக்கும் வேர்களை அதன் விலாசங்களை அவற்றின் வியர்வைகளைக் கண்டறிவதேயில்லை. பெரும் சோகம் தடங்களைப் போட்டுக் கொடுத்தவர்களை அந்தத் தடங்களுக்குக் கீழேயே ஆழ அழுத்தி மிதித்துப் புதைத்து விடுகிறோம்.

காலக் கர்ப்பத்தில் அனைத்து மனித உயிரிகளும் சமதையாகத்தான் உருக்கொள்கின்றன. இந்தப் புற உலகில் உள்ள ஆதாரங்களைச் சுகிக்கின்றன. தமது முயற்சியால் தனக்குத் தேவையானதை சமைத்துக் கொள்கின்றன. அப்படியானதொரு உயிரிச் சமதையில், ஆளுமைகள் மட்டும் எப்படிக் கருக் கொள்கின்றன? உருக் கொள்கின்றன?

மார்க்சிய வகுப்பெடுத்தலின்போது சொல்லுவோம். "பாட்டாளியாய் இருப்பதென்பது வேறு. பாட்டாளி வர்க்கமாய் வாழ்வதென்பது வேறு", "தானொரு வர்க்கமும், தனக்கான வர்க்கமும்". அதுபோலவேதான், மந்தையாய், மனித உயிரியாய், மனிதக் கூட்டத்தில் இருப்பதென்பது வேறு. மனிதனாய் வாழ்வதென்பது வேறு. அந்த மனிதனுள்ளிருந்து மாமனிதனாய் உருவெடுப்பது வேறு. என்ன அந்த வித்தியாசம்?

தன்னைப்போல் சக மனிதனும் சமம் என்கிற அடிப்படைப் பேருணர்வு. சக மானுடத்தின் மீதான அளப்பரிய, ஆழமான பேரன்பு. வற்றாது ஊற்றெடுக்கும் மானுட நேசிப்பு. சக மானுட வதைகளைக் காண்கையில், வாதைகளைக் காண்கையில், ஈரக்கசிவும், நேய நெகிழ்வும் இவைகள்தான். இந்த எண்ணங்கள்தான் மந்தையாய் மனித உயிரியாய் மனிதக் கூட்டத்தில் இருக்கிற ஒருவனை மனிதனாகச் சமைக்கிறது.

அந்த மனிதன் எப்போது மாமனிதன் ஆகிறான் என்றால், மானுடத்திற்கெதிராக இழைக்கப்படும் செயல்களுக்கு, தொடுக்கப்படும் அடக்குதல்களுக்கு, ஒடுக்குதல்களுக்கு, வன்கொடுமைகளுக்கு... எதிராய் பெருங்கோபம் கொள்வதோடு மட்டுமல்ல, பிரச்சனையின் மூலம் கண்டுபிடித்து, அதற்கு தீர்வு கண்டுபிடித்து, இதற்கெல்லாம் மூலமாய் இருக்கும் தத்துவங்களை, கருத்தியல்களை அம்பலப்படுத்தி அதற்கு மாற்றாய் புதிய பாதை கண்டு, அதைப் பரப்புரை செய்து, இறுதி லட்சியத்தை அடையும்வரை சமரச‌மின்றிக் களமாடி, வெற்றிக் கனிகளை மாந்த குலத்திற்கு வழங்குகிறவர்களைத்தாம் நாம் மாமனிதர்கள் என்கிறோம். அத்தகைய மாமனிதர்களைத்தான் நாம் ஆளுமைகள் என்கிறோம்.

அந்த ஆளுமைகள் எதை எதிர்த்துப் போராடி, யாரை எதிர்த்துப் போராடி, எந்தத் தத்துவங்களை எதிர்த்துப் போராடி, எந்தக் கருத்தியல்களை எதிர்த்துப் போராடி, வெற்றி பெற்றார்களோ... அந்த ஆளுமைகளிடம் தோற்றவர்கள், இழந்த தனது ஆதிக்கத்தை, அதிகாரத்தைப் பெற, மீண்டும் மீண்டுமாய் முயற்சிதான் செய்வார்கள். அவர்களின் தீரா ஆதிக்க வெறி, அதிகார வெறி எங்கெல்லாம் சின்னஞ் சிறு இடைவெளிகள் கிடைக்குமோ அங்கெல்லாம் ஊடுருவி மீண்டும் முளைக்கத் தொடங்குவார்கள்.

இந்த இடத்தில் ஒரு நுட்பமான வேறுபாட்டை உணர்ந்துகொண்டு, தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு மேற்செல்லுவோம்.

பொதுவாக எதிர் எதிர்களுக்கான போராட்டத்தில், ஒன்றினை ஒன்று அழிக்கும் செயல்தான் பிரதானமாய் இருக்கும். இதனை நாம் வரலாற்று நெடுகிலும் விளைந்த போர்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். புறத்தில் தெரியும் பருப்பொருளாக இருக்கிற ஒருவரை ஒருவர் மோதி உடலங்களைச் சிதைப்பதன் மூலம், தரிப்பதன் மூலம், உயிர்களைப் போக்கி அழித்தொழிப்பதன் மூலம் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும் நிலை ஒன்று.

அடுத்த நிலை, தூலத்தில் துலக்கமாகத் தெரியாத, கட்புலனுக்காட்படாத, கண்களுக்குத் தெரியாத, தத்துவங்கள் கருத்தியல்களின் மீதான போர். இதில் புறத்தில் தெளிவாகத் தெரியும் மனிதர்களை அழித்தொழிப்பதில்லை. மாறாக, அவர்களின் மூளைகளுக்குள் மெல்லப் புகுந்து, பரவிப் படர்ந்து, தங்கள் தத்துவங்களின், கருத்தியல்களின் தாக்கத்தினைச் செலுத்தி, அதன்மூலம் மாற்றுக் கருத்துள்ள மனிதனை, மாற்று நிலையிலுள்ளவனை, தன்பக்கம் வென்றெடுப்பது என்பதொரு நிலை.

இதற்குச் சரியான உதாரணம் தந்தை பெரியார். அன்று தமிழகத்தைப் பற்றிப் பரவி, சுற்றிச் சூழ்ந்து கவ்வியிருந்த, பார்ப்பனிய ஆதிக்கம், அதிகாரம். மக்கள் திரளினரில் வெறும் மூன்றே மூன்று விழுக்காட்டினராய் இருந்தவர்கள், மீதியுள்ள தொன்னூற்றேழு விழுக்காட்டு மக்களைப் புறந்தள்ளி, சமூக விலக்கம் செய்து, ஆட்சியை, அதிகாரத்தை, கல்வியை, வேலைவாய்ப்பை என எல்லாவற்றிலும் ஏகபோகம் கொண்டு, கபளீகரம் செய்து, ஆதிக்கம் அதிகாரம் செய்து ஆண்டுவந்த நிலையை, அவலத்தை, மாற்றி... எல்லோருக்கும் எல்லாம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், மேல் கீழ் என்கிற பேதத்தினை அகற்றி, எல்லோரும் சமம் என்கிற சுயமரியாதையினை ஊட்டி, இன உணர்வு கொள்ளவைத்து, சனாதனத்தின் மீது இடையறாது தொடர்ந்து போர் தொடுத்தார். எப்படி?

நாம் இதுவரை வரலாற்றில் கண்டு வந்த பொதுவான நியதி என்பது, ஆதிக்க இனத்துக்கு எதிராக அடக்கப்படும் ஒடுக்கப்படும் இனங்கள், தங்கள் விடுதலைக்காக எழுந்து நின்று எழுச்சியோடு போராடி, தமக்கான விடுதலையைச் சமைத்துக் கொள்ளும். இது மாந்த குல வரலாற்று நியதி. இந்த நியதிப் போக்கில், பெரும்பாலும் இத்தகைய இன விடுதலைப் போக்கில், எழுச்சியின்போது ஆதிக்க இனம் பெரும்பாலும் அழித்தொழிக்கப்படும். இவ்வாறான, ஆதிக்க இன அழித்தொழிப்பின் மூலம் அடக்கப்பட்ட இனம் தனக்கான விடுதலையைச் சாத்தியமாக்கிக் கொள்ளும்.

ஆனால், வித்தியாசமாக இங்கு எழுந்த எழுச்சி என்பது, தந்தை பெரியார் ஏற்படுத்திய எழுச்சி என்பது, பார்ப்பன ஆதிக்க மனிதர்களை அழித்தொழிக்கவில்லை, உயிர்க் கொலைகள் புரிவதில்லை. மாறாக, அந்த பார்ப்பன இனத்தின் ஆதிக்கத்தை மட்டுமே அகற்றிட வேண்டும் என்று போராடியதே தவிர, அந்த ஆதிக்க இனத்தையே அழித்தொழிக்க ஏற்பட்டதன்று.

ஆதிக்க இனத்தைப் பூண்டோடு அழித்தொழிப்பது என்பது காட்டு விலங்காண்டி நிலை. குறைந்தபட்சம் அந்த ஆதிக்க இனத்தின் தலைமையை மட்டுமாவது அழித்தொழிப்பது என்பது அடுத்து வந்த நாடு பிடிக்கும் போரியல் நிலை.

ஆதிக்க இனத்தை அல்ல, அதன் தலைமையை அல்ல, மாறாக அந்த ஆதிக்க இனத்தின் ஆதிக்க குணாம்சத்தை மட்டும் அகற்றிவிட்டு, தம் உரிமையை, தன்னுரிமையை நிலைநாட்டிக் கொள்வது என்பது ஒரு முதிர்ந்த நாகரிக நிலை. மட்டுமல்ல, பொதுமை நிலை. இந்த நயத்தகு மாந்த நேய நாகரிக நிலையைத் துவக்கத்திலேயே கைக் கொண்டு வெற்றிக் கனிகளைப் பறித்தெடுத்தார் தந்தை பெரியார்.

periyar ambedkhar 350ஆக, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மட்டும் அகற்றி, அதிகாரத்தை அனைத்துப் பிரிவு மக்களுக்குமாக பரவலாக்க, தந்தை பெரியார் தொடுத்த நயத்தகு மாந்த நேய நாகரிகப் போரின் வெற்றியைத்தான் இன்று நாம் சுகமாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றும் இம் மண்ணில் ஆகப் பெரும் ஆளுமையாக பெரியார் வீற்றிருப்பதற்கு, விளங்குவதற்கு இதுதான் காரணம். நம் மண்ணின் ஆளுமையான பெரியார் போலவேதான், அண்ணல் காந்தியார், அறிவர் அம்பேத்கர் இதைத்தான் செய்தார்கள், கற்பித்தார்கள், ஒன்று சேர்த்தார்கள், போராடினார்கள், வெற்றிக் கனிகளைப் பறித்தார்கள். அதனால்தான் ஆளுமைகளாக உயர்ந்து நிற்கிறார்கள்.

அந்த ஆளுமைகள் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி, சனாதனத்தை எதிர்த்துப் போராடி, சனாதனத் தத்துவங்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்களோ... அந்த ஆளுமைகளிடம் தோற்ற சனாதனம், இழந்த தனது ஆதிக்கத்தை, அதிகாரத்தைப் பெற, மீண்டும் மீண்டுமாய் முயற்சிதான் செய்கிறது.

சனாதனத்தின் தீரா ஆதிக்க வெறி, அதிகார வெறி எங்கெல்லாம் சின்னஞ் சிறு இடைவெளிகள் கிடைக்குமோ, அங்கெல்லாம் ஊடுருவி, மீண்டும் முளைக்கத் தொடங்கும். அவர்களின் போர் உத்தி என்பது நம்மைப் போன்ற நயத்தகு நாகரிக நேய உத்தி அல்ல. மாறாக கொலை உத்தி. காந்தியில் தொடங்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் வரை பட்டியல் நீளும்.

வரலாற்றின் மனித குல விடுதலைக்கான ஆளுமைகளை அவமதிப்பதன் மூலம், சிதைப்பதன் மூலம், நம்மைக் கோபமூட்டி, கலகத்தை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தி, அதன் சாக்கில் ஆளையே அழித்தொழிப்பது என்பதுதான் அதன் உத்தி. அதற்கான தருணங்களை, சமயங்களை, பொழுதுகளை வடித்தெடுப்பதற்கான முன்னோட்டச் செயல்பாடு, முன் உத்திச் செயல்பாடுகளில் ஒன்று... வரலாற்றில் ஆகப் பெரிய பிம்பங்களாய் உயர்ந்து எழுந்து நிற்கும் ஆளுமைகளை, ஒரு குறுகியச் சிமிழுக்குள் அடைப்பது என்கிற உத்தி.

நம் ஆளுமைகளிடம் தோற்றுப்போய் இன்று மீண்டெழுந்து நிற்கிற அதிகார வர்க்கம், அந்த ஆளுமைகளின் விழுமியங்களைக் குறைத்து, சுருக்கி, ஒரு சிறு சிமிழுக்குள் அடக்கி, அடக்கிய அந்தத் தோற்றத்தை, பிம்பத்தைக் கட்டி எழுப்புவதில், உருவாக்குவதில், பரப்புவதில், பொதுப்புத்தியில் ஏற்றுவதை, மிகச் சரியாகவே செய்து வருகிறது.

இங்கு பொதுப்புத்தியில் தந்தை பெரியார் என்றால் சாமி கும்பிடாதவர், சாமி சிலைகளை உடைப்பவர், கடவுள் நம்பிக்கை கொண்டோரைப் பழிப்பவர் என்கிற தோற்றத்தை, பிம்பத்தைக் கட்டி எழுப்பி, பரப்பி, ஓர் ஒற்றைப் பிம்பத்தைப் பொதுப் புத்தியில் நிலைப்படுத்தியிருக்கிறது. சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை, நவீன அறிவியற் சிந்தனைகள், ஓய்வொழிச்சல் இல்லா போராளி என்றெல்லாம், ஆகப் பெரும் ஆளுமை கொண்ட தந்தை பெரியாரின் பொதுப் பிம்பம்... அவர் சாமி கும்பிடாதவர் என்பது மட்டுந்தான்.

அறிவர் அம்பேத்கர் என்றால், சட்டப் புத்தகத்தை எழுதியவர் என்பது மட்டும்தான். சட்ட மேதை அவ்ளவுதான். ஆனால், ஆயுள் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்காய், சாதிக்கு எதிராய், சாதியை அழித்தொழிப்பதற்காய் எழுதியும் பேசியும், வாய்ப்புக் கிடைத்த களங்களில் எல்லாம் போராடியும் வந்த அறிவர் அம்பேத்கர் வெறும் சட்ட மேதை மட்டுமே. இந்திய அரசியல் சட்டத்தை இயற்றியவர் மட்டுமே.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று இந்தப் பூவுலகையே ஒரு பொன்னுலகாய் மாற்றிடத் துடிக்கும் செங்கொடி உயர்ந்தால், அது புரட்சிக்காகவெல்லாம் ஒன்றுமில்லை, வெறும் கூலி உயர்வுப் போராட்டம் என சிறுமைப்படுத்திடும், காட்சிப் படுத்திடும்.

ஆக, இங்கு ஆளுமைகளின் பிம்பம் வேறு விதமாகக் காட்டப்படுகிறது, கட்டமைக்கப் படுகிறது, சிறுமைப்படுத்தப் படுகிறது. இது சனாதனத்தின் செயல் தந்திர உத்தி.

அடுத்த உத்தி, நம்மைத் தனித் தனியே பிரித்து நிற்க வைப்பதுதான். இங்கு தலித் அரசியல் வெளிகளில் தந்தை பெரியார் எதிரியாகக் கட்டமைக்கப்படுவதும், சாதி எல்லாம் மேற்கட்டுமானம் தோழர், வர்க்கமொன்றே அடிக்கட்டுமானம் என்று தத்துவார்த்த மயிர் பிளக்கும் வாதங்களை மேற்கொள்ள வைப்பதுமாய், சனாதனத்தை, சனாதனத் தத்துவத்தை, சனாதனக் கருத்தியல்களை அழித்தொழிக்க, களத்தில் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டிய போரியல் ஆற்றல்களை, தனித்தனியே பிரித்தாளுவது என்கிற உத்தி.

இதில் ஆகப் பெரிய சோகம் என்னவென்றால், நம் தோழமை ஆற்றல்களே இதற்குப் பலியாவதுதான். பலியாகிக் கிடப்பதுதான். ஆக, சனாதனம் தொடுக்கும் போரின், செயல்தந்திர முன்னோட்ட உத்திதான்... காந்தியாரின் உருவப்படத்தைச் சுடுவதும், அறிவர் அம்பேத்கர் சிலைகள் சிதைக்கப்படுவதும், தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவதும், அவர் படத்தைக் கீழேபோட்டு அதன்மீது ஏறி நின்று, சிறுநீர் கழித்து, அவமதித்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் போன்ற ஆளுமை அவமதிப்புகள்... சனாதனம் தொடுக்கும் போரின் செயல் தந்திர உத்திகள்.

சனாதனத்தின் மூல, செயல் தந்திர உத்திகளை உணர்ந்துகொண்டு, தெளிந்துகொண்டு, ஏற்கெனவே நம் ஆளுமைகள் போட்டுக் கொடுத்த தடங்களின் வழியே தோழமை ஆற்றல்கள் களம் காண வேண்டும். சாதி ஒழிந்த சமதர்ம உலகைச் சமைத்திடல் வேண்டும்.

- பாட்டாளி