சாதிய சமூகத்தில் சாதி மீறிய காதல் என்பது கூட ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்பது தினம் தினம் காதலால் கசிந்துருகும் இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. காதல் என்பது ஒரு கொண்டாட்டமான மனநிலையாகவும், அதை வாழ்க்கை முழுவதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் காதலிப்பவர்களிடம் இருக்கின்றது. ஆனால் சாதி மீறி காதலிக்கும், அதிலும் காதலிக்கப்படும் ஆண் ஒரு தலித்தாக இருந்தால் நிச்சயம் கொல்லப்பட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் சமூகத்தில், எப்படி சாதிமீறிய திருமணங்களை செய்துகொண்டு நிம்மதியாக வாழ முடியும்? ஆனால் அரசியல் அறிவற்ற தக்கை மனிதர்களாக வாழும் இளைஞர்களுக்கு தாங்கள் செய்யும் செயலால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் தெரிந்திருப்பதில்லை. ஒரு போருக்குப் போகும் போது எதிரியைப் பற்றியும், அவனது படைகளின் வலிமையைப் பற்றியும் எந்த மதிப்பீடும் செய்யாமல் நம்மால் நிச்சயமாக ஒரு சிறந்த போர்த் தந்திரத்தை வடிவமைத்து எதிரியை வீழ்த்த முடியாது.

இந்திய சமூகத்தில் சாதி மீறிய காதல் என்பது கூட ஒரு போர்தான். இந்தப் போர் சனாதன சாதிக்கு எதிரான போர். அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் துடிக்கும் சாதிவெறியர்களுக்கு எதிரான போர். இந்தப் போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் சிறந்த மூல உத்தியைக் கையாள வேண்டும். அப்போதுதான் சாதியைக் காப்பாற்ற கையில் ஆயுதத்தோடு வரும் எதிரியை நிலைகுலையச் செய்து வீழ்த்த முடியும். ஆனால் சாதி மீறி காதலிக்கும் நம்முடைய இளைஞர்களுக்கு அதற்குள் இருக்கும் காத்திரமான அரசியல் புரிவதில்லை. சாதிக்கு எதிராகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் பெரும் போருக்குப் போகும் அவர்கள் பெரும்பாலும் நிராயுதபாணியாகவே செல்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் சாதிவெறியர்களால் எளிதாக வீழ்த்தப்படுகின்றார்கள். ஒவ்வொரு முறையும் சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும் போதும் நெஞ்சம் பதைபதைக்க முற்போக்குவாதிகள் மட்டுமே துடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மனித உயிர்களின் மேன்மையை அறியாத அற்பப்பிறவிகள் அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாமல் கடந்துபோய் விடுகின்றார்கள்.

hosur swathi murderersஒவ்வொரு சாதி ஆணவப் படுகொலை நிகழும் போதும் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் நம்முடைய இளைஞர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கின்றார்கள். அந்தத் தவறு தன்னை காத்துக் கொள்ள அரசியல் மையப்படுத்திக் கொள்ளாததில் இருந்து தொடங்குகின்றது. தற்போது நடந்த நந்தீஷ்-சுவாதி சாதி ஆணவப் படுகொலை வரை இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நந்தீஷும், அதே ஊரைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதில் நந்தீஷ் பறையர் வகுப்பைச் சார்ந்தவர்; சுவாதி வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர். இதனால் ஆத்திரம் அடைந்த வன்னியர் சாதி வெறியனான சுவாதியின் தந்தை, அவனது சகோதரர் வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர் கிருஷ்ணன், ஓட்டுநர் சாமிநாதன் ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி ஒசூரில் தங்கி இருந்த சுவாதியின் வீட்டிற்குச் சென்று குலதெய்வ கோயிலுக்குப் போகலாம் என்று அழைத்திருக்கின்றார்கள். அதை நம்பி அவர்களுடன் சென்ற நந்தீஷையும், சுவாதியையும் மிகக் கொடூரமாக அடித்துக் கொன்று அவர்களின் கை, கால்களைக் கட்டி சிம்சா ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றில் வீசுவதற்கு முன் அடையாளம் தெரியாமல் இருக்க நந்தீஷ் மற்றும் சுவாதியின் முகத்தை சிதைத்திருக்கின்றார்கள். மேலும் தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சுவாதியின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்கள். அதே போல 11.11.2018 முதல் நந்தீஷைக் காணவில்லை என்று நவம்பர் 14 அன்று அவரது சகோதரரும் ஓசூர் நகரக் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நந்தீஷின் உடையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களை வைத்தே அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதை கர்நாடக காவல்துறையினர் கண்டுபிடித்து தகவலை தமிழக காவல்துறையினருக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் தங்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே காரணம் என ஏற்கெனவே காவல்நிலையத்தில் சுவாதி புகார் அளித்திருக்கின்றார். இந்த வழக்கு சம்மந்தமாக சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால் அப்படி இருந்தும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட காதலிப்பவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பதைத்தான் நந்தீஷ்- சுவாதியின் செயல்பாடும் காட்டுகின்றது. ஏற்கெனவே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், திருமணத்திற்குப் பின் ‘சேர்த்துக் கொள்கின்றோம்... வா’ என அழைத்தால் நம்பிச் செல்வதையும், காவல்துறை தங்களைக் காப்பாற்றும் என்று நம்பி அவர்களிடம் புகார் அளிப்பதையும் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதலர்கள் அனைவருமே செய்யும் பெரிய தவறாக உள்ளது. இதை அவர்களின் அரசியல் அற்ற, சமூகத்தைப் புரிந்துகொள்ளத் திராணியற்ற சிந்தனையில் இருந்து உருவாகும் அபத்த எண்ணமாகத்தான் பார்க்க வேண்டும். பெரும்பாலான சாதிய ஆணவப் படுகொலைகள் பெற்றோர்களாலும், நெருங்கிய உறவினர்களாலுமே செய்யப்பட்டிருக்கின்றன. அதே போல பெரும்பாலான சாதி ஆணவப் படுகொலைகள் காவல்துறையின் மோசமான செயல்பாட்டால் தான் நடந்துள்ளன. உண்மை இவ்வாறிருக்க சாதி மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் திரும்பத் திரும்ப இந்த மரபான செயல்களையே செய்து தங்கள் உயிரை சாதி வெறிக்குப் பலி கொடுத்து விடுகின்றார்கள்.

ஒரு பக்கம் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் போராடும் நாம், மக்களிடம் கருத்தியல் தளத்தில் சாதிய மனநிலைக்கு எதிராகவும், சாதி மீறிய திருமணத்திற்கு ஆதரவாகவும் தீவிரமான பரப்புரை செய்யாமல் விட்டதே இளைஞர்கள் இது போன்று ஏமாறுவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. ஒவ்வொரு முறை சாதி ஆணவப் படுகொலை நடக்கும் போதும் அறிக்கை விடுவதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மட்டுமே நிச்சயம் போதுமானதாக இனி இருக்கக்கூடாது. அதையும் தாண்டி சாதி ஒழிப்புப் பணியில் நேர்மையாக அர்ப்பணிப்போடு செயல்படும் அமைப்புகள் இளைஞர்கள் மத்தியில் ‘காதலுக்கு ஆதரவான சக்திகள் தாங்கள்தான் என்பதையும், தங்களை நம்பி காதலர்கள் வந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதோடு முழுப் பாதுகாப்பும் தருவோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் பணியையும் தீவிரமாகச் செய்ய வேண்டும். சாதி ஒழிப்புக்கு புறமண முறையே தீர்வு என்கின்றபோது சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து வைப்பதை தீவிரமாக ஓர் இயக்கமாக முற்போக்கு அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

அப்படி செய்யும் போது மட்டுமே இளைஞர்கள் தங்களுக்கானவர்களாக முற்போக்கு அமைப்புகளைப் பார்ப்பார்கள். சாதி மறுப்புத் திருமணம் என்பது அதன் உள்ளடக்கத்திலே மிகப் புரட்சிகரமானது என்பதை நாம் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம் போன்றவை ஆயிரக்கணக்கான சாதி மறுப்புத் திருமணங்களை செய்து வைத்திருக்கின்றன. ஆனால் பொதுவாக இது எல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை என்பது வேதனையானது. எனவே இனிமேல் சாதிமறுப்புத் திருமணங்களை அனைவரும் அறியும்படி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் இதை நிச்சயம் நம்மால் இன்று சாத்தியப்படுத்த முடியும்.

இதன் மூலம் காவல்துறையை நம்புவதைவிட, உறவினர்களையும், நண்பர்களையும் நம்புவதைவிட முற்போக்கு இயக்கங்களை நம்பிச் சென்றால் நிச்சயமாக நம்மையும், நம் காதலையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற வலுவான எண்ணம் இளைஞர்களுக்கு ஏற்படும். தன்னிச்சையாக திருமணம் செய்துகொண்டவர்களே பெரும்பாலும் சாதிவெறி பிடித்த நாய்களால் வேட்டையாடப்படுகின்றார்கள். ஆனால் முற்போக்கு அமைப்புகள் செய்து வைத்த சாதி மறுப்புத் திருமணங்களில் சம்மந்தப்பட்ட காதலர்கள் மீது கைவைக்கும் தைரியம் சாதி வெறியர்களுக்கு ஏற்படுவதில்லை. காதலர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை இது போன்று முற்போக்கு அமைப்புகளிடம் விட்டுவிடுவது சாதி ஒழிப்புப் பணியில் அவர்களின் பொறுப்பை இன்னும் கூடுதலாக்க உதவும்.

மேலும் நந்தீஷ்- சுவாதி கொலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் “இந்தப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கவை. நாகரிக சமுதாயத்தில் இத்தகைய படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நான் பல்வேறு தருணங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இனி வரும் காலங்களில் இத்தகைய படுகொலைகள் நடக்காமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளையும், சீர்திருத்தங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அறிக்கை விடுகின்றார். ஆனால் சாதிய ஆணவப் படுகொலை தமிழகத்தில் நடக்கும் போதெல்லாம், ராமதாசின் முகமே அனைவருக்கும் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வருகின்றது. தான் முன்னெடுத்த சாதிவெறி அரசியலால் அரசியல் அநாதையாக மாறிப் போன ராமதாசு, இன்று வெட்கமே இல்லாமல் மீண்டும் தனது வேடத்தை மாற்றிக் கொள்ள முயல்கின்றார் என்பதைத்தான் இந்த அறிக்கை காட்டுகின்றது. நந்தீஷையும் சுவாதியையும் கொடூரமாக கொலை செய்த வன்னிய சாதிவெறியர்கள் அந்தச் சாதிவெறியையும் கொலைவெறியையும் ராமதாசிடம் இருந்தே பெற்றார்கள். இனியும் பெறுவார்கள் என்பதுதான் உண்மை. ராமதாசின் இந்த அறிக்கை என்பது அவரின் அரசியல் நாடகத்தில் ஒரு பகுதியாகவே நாம் பார்க்க வேண்டும்.

எனவே முற்போக்கு அமைப்புகள் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான போரில் அதற்கு எதிரான அனைத்து பிற்போக்கு சக்திகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதுடன் சாதி மீறிய திருமணங்கள் நடத்தி வைப்பதை ஓர் இயக்கமாக முன்னெடுத்து இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

- செ.கார்கி