தமிழ்நாட்டு மக்களின் இன்றைய பேசுபொருளாக ஆகி இருக்கின்றது கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கூத்துகள். தங்களை ஜனநாயகக் காவலர்கள் என்றும், பாசிச எதிர்ப்பாளர்கள் என்றும், முற்போக்குவாதிகள் என்றும் காட்டிக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பிஜேபியை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி ஏற்க அழைத்தது ஜனநாயகப் படுகொலை என்றும், ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதினாலேயே அவர் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் என்றும் கண்டுபிடிப்புகளை செய்து மக்களையும் அதே வகையில் சிந்திக்க கட்டாயப்படுத்துகின்றனர். இதில் ஒரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால் அதுவே முழு உண்மை இல்லை. ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதையும் தாண்டி இது தேர்தல் அரசியலின் தவிர்க்க முடியாத விளைவு என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.

yeddyurappa takes oath as CM

 ஊடகங்கள் அனைத்தும் இன்று கர்நாடகாவில் நடக்கும் கூத்துகளை ஜனநாயகத்துக்கு ஏற்புடையதா, இல்லையா என்ற தொனியில் இருந்து மட்டுமே ஆராய்ச்சியை நடத்துகின்றன. ஊடகங்களில் பேசவரும் அறிவுஜீவிகள் யாரும் அந்தப் புள்ளியைத் தாண்டி விவாதத்தை எடுத்துச் செல்வதில்லை. நிச்சயம் அவர்கள் எடுத்துச் செல்லவும் மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை தேர்தல் அரசியல் என்பது ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த வடிவம். மக்களே தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதால் இதைவிட வேறு சிறந்த வடிவம் உலகில் கிடையாது என்பதுதான் அவர்களின் ஆழ்மனங்களில் பதிந்திருக்கும் ஜனநாயகம் என்ற கருத்தைப் பற்றிய வலுவான எண்ணம். இந்த எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதன் மூலம் அவர்கள் மக்களுக்கு இந்த ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்துகின்றார்கள். அதனால் விளையும் பயன்களை இந்த ஜனநாயக விதந்தோதிகளும் கொஞ்சம் அறுவடை செய்து கொள்கின்றார்கள்.

 கர்நாடகாவில் பிஜேபி 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்று யாருக்குமே ஆட்சி அமைக்கத் தேவையான 111 இடங்கள் கிடைக்காத நிலையில் ஆளுநர் உண்மையில் நேர்மையானவராக இருந்தால் காங்கிரஸ் – மஜத கூட்டணியைத்தான் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டார் என்று கூப்பாடு போடுகின்றனர். பிஜேபி எதிர்ப்பு அரசியலில் இருந்தோ, இல்லை காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் இருந்தோ இதை நாம் பார்த்தால் ஜனநாயகக் காவலர்களின் ஜல்லியடி பேச்சுகளுக்கு நாமும் இரையாகி விடுவோம். ஒருவேளை ஆளுநர் காங்கிரஸ்காரராக இருந்தால் நிச்சயம் அவர் காங்கிரஸ் – மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பிரச்சினை ஆளுநர் யாரை அழைத்தார் என்பது அல்ல. அவர் பேயை அழைத்தாலும், பிசாசை அழைத்தாலும் அதனால் எந்த ஒரு அரசியல் மாற்றமும் கர்நாடகாவில் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதுதான் உண்மை.

 பாஜக சார்பில் தேர்தலில் போட்டி இட்டவர்களில் 208 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 17.86 கோடிகள். காங்கிரசு சார்பில் போட்டியிட்டவர்களில் 207 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 38.75 கோடிகள். இதே போல மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களின் 154 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 20.91 கோடிகள். அதே போல பாஜக வேட்பாளர்களில் 83 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 59 பேரும், மஜத வேட்பாளர்களில் 41 பேரும் குற்றப் பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் போன்றவை உள்ளன. ஆக மொத்தம் கர்நாடகத் தேர்தலில் பாஜக சார்பிலோ, காங்கிரசு சார்பிலோ, மஜத சார்பிலோ நிறுத்தப்பட்ட அனைவரும் கோடீஸ்வரர்களாகவும் , குற்றப்பின்னணி உடையவர்களாகவுமே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர்.

 ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடும் ஜனநாயகக் காவலர்கள் இதைப் பற்றி ஒருபோதும் வாயே திறப்பதில்லை. காரணம் இந்திய ஜனநாயகத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் தேர்தல் அரசியலை இன்று தீர்மானிப்பது பணமும், சாதியும், மதமும், அடியாள் பலமும் தான் என்பது இந்தப் பிழைப்புவாதிகளுக்கு தெரியாதது அல்ல. ஆனால் அதைப் பற்றி பேசினால் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க முடியாது. ஏன் எங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று கேட்கும் ஜனநாயகக் காவலர்கள், ஏன் எங்கள் கட்சி கோடீஸ்வரர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்றோ, இல்லை ஏன் எங்கள் கட்சி குற்றவாளிகளை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்றோ கேட்பார்களா? அவர்கள் கேட்கவில்லை என்றாலும் அதனுள் ஒளிந்திருக்கும் அப்பட்டமான உண்மை இதுதான்.

 நீங்கள் வேட்பாளரை வேட்பாளராக மட்டுமே பாருங்கள் - அவர்கள் கோடீஸ்வரர்களாக குற்றப்பின்னணி உடையவர்களாக, சாதியவாதிகளாக, மதவாதிகளாக இருக்கின்றார்களா என்றெல்லாம் பார்க்கக்கூடாது என்பதுதான் ஜனநாயகத்தை என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்வதற்கான வழி. மக்களும் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாமே தெரியும். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. சாதியும், மதமும், பணமும், பிழைப்புவாதமும், காரியவாதமும் அவர்களின் மனங்களை நச்சுப்படுத்தி அவர்களை கோடீஸ்வர்களின் அடிமையாகவும், குற்றவாளிகளின் நண்பனாகவும், சாதிய மதவாதிகளின் உற்ற துணைவனாகவும் இருக்க சம்மதிக்க வைத்துள்ளது. குடிநோயாளிகளை மீட்டெடுப்பதை விட இவர்களை மீட்டெடுப்பது இன்று பெரும் சவாலாக உள்ளது.

 மக்களின் மனங்களை மாற்றி அமைக்காமல் எந்த ஒரு சமூக மாற்றத்தையும் நம்மால் எப்போதுமே சாத்தியப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. மக்களின் மனங்களை சாதிக்கு எதிராகவும், மதத்திற்கு எதிராகவும், தங்களைக் கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும் இதை எல்லாம் நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட கடவுளுக்கு எதிராகவும் நாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆர்.எஸ்.எஸ் இந்தியா முழுவதும் மக்களிடம் முதலில் சாதியைப் பற்றியும், மதத்தைக் பற்றியும் ஒரு பெருமித உணர்வை ஏற்படுத்தி மக்களை ஆன்மீக அடிமைகளாகவும் பார்ப்பனியத்தை விதந்தோதுபவர்களாகவும் மாற்றி, அதன் பயன்களை பிஜேபி மூலம் அறுவடை செய்து கொள்கின்றது. இன்று இந்தியா முழுவதும் அதன் ஆதிக்கம் பெருகுவதற்கு அது பண்பாட்டு ரீதியாக மக்களிடம் அதற்கான கருத்தியலை ஏற்க வைத்ததுதான் காரணமாகும்.

 உண்மையில் பிஜேபியின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால் மக்களிடம் பண்பாட்டுத் தளத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி அது எப்படி மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைய விடாமல் சாதியாகப் பிரித்தாள்கின்றது என்பதையும், புராணப் புளுகுகளை மூளையில் செலுத்தி மக்களை முட்டாள்களாக மாற்றுகின்றது என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்தப் பணியை தமிழ்நாட்டில் பெரியாரிய இயக்கங்கள் இன்றும் தீவிரமாக முன்னெடுப்பதால்தான் தமிழ்நாட்டில் பிஜேபியை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்ளாத சூழ்நிலை நிலவுகின்றது. எங்கெல்லாம் பார்ப்பனியம் ஆழமாக வேறூன்றுகின்றதோ, அங்கெல்லாம் மிக எளிதாக பிஜேபியால் வெற்றிபெற முடிகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 ஆனால் ஜனநாயகக் காவலர்கள் இதை ஒட்டுமொத்தமாக மறுதலித்துவிட்டு பிஜேபிக்கு எதிரான ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பிஜேபியின் வளர்ச்சியை முறியடிக்க முடியும் என சப்பைக்கட்டு கட்டுகின்றார்கள். பிஜேபி என்ற அரக்கனின் உயிர் பார்ப்பனியத்தில் நிலை கொண்டிருப்பதை இந்தப் பிழைப்புவாதிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு மறைக்கின்றனர். தேர்தல் அரசியலில் நின்றால் பொறுக்கித் தின்ன முடியும் என்று நினைப்பவர்களும், கார்ப்ரேட்டுகளின் பாதம் தாங்கிகளும், தங்கள் அறிவை முதலாளிகளுக்கு விற்பனை சரக்காக விற்று பெரும் பொருளீட்டலாம் என்று நினைப்பவர்களும், மக்களை கொள்ளையடித்து வாழ இந்த அமைப்புமுறைதான் சிறந்தது என நினைப்பவர்களும் தான் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் தேர்தல் அரசியலை அதன் அத்தனை அயோக்கியத்தனங்களுடனும் ஏற்றுக் கொண்டு மக்களிடம் பரப்புரையும் செய்பவர்கள்.

 அதனால் கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் கர்நாடக மக்களின் வாழ்நிலையில் எந்தப் பெரும் மாற்றமும் நேர்ந்துவிடப் போவதில்லை. கோடீஸ்வரனில் பிஜேபி கோடீஸ்வரன், காங்கிரஸ் கோடீஸ்வரன், மஜத கோடீஸ்வரன் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. அதே போல குற்றவாளியில் பிஜேபி குற்றவாளி, காங்கிரஸ் குற்றவாளி, மஜத குற்றவாளி என்ற வேறுபாடெல்லாம் இல்லை. அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. நம்முடைய பணி இதை ஆதரிப்பதல்ல. இந்த சீரழிவுகள் எல்லாம் இல்லாத சாமானிய மக்களுக்கான பாட்டாளிவர்க்க அரசை அமைப்பதே. பாட்டாளிகளை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவதே. அதற்கு மக்களிடம் பொதுவுடமை அரசியலையும் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலையும் நாம் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு விடிய விடிய உட்கார்ந்து உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிடும் என்று நம்புவதோ, கர்நாடகாவில் செய்தது போல கோவாவிலும், மணிப்பூரிலும், மேகாலயாவிலும் ஆளுநர் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என குரல் கொடுப்பதோ நேர்மையான பொதுவுடமைவாதிகளின் செயலாக இருக்க முடியாது. நம்முடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்து கிடக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

- செ.கார்கி