(நாக்பூரில் இந்திய அமைதி மையம் நடத்திய தண்ணீர் தட்டுப்பாடு குறித்த தேசிய ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய உறையின் தமிழ் கட்டுரை வடிவம்.)

Water Problemதனிநபர்கள், தேசங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் எல்லோரும் மிகுந்த ஒற்றுமையுடன் இசைந்து ஈடுபடும் செயல் ஒன்று உள்ளது. அது, இந்த புவியின் நீரை மாசுபடுத்துவது. உலகில் யாவற்றிலும் உயிரை தோற்றுவித்தது நீர். நீர் வாழ்க்கைக்கான ஆதாரம். புறக்கணிப்பு, பேராசை, அலட்சியம், கவனமின்மை, வரம்பு மீறிய தேவைகள் என எல்லாம் குவிமையமாய் வரலாற்றின் கொடிய தண்ணீர் பற்றாக்குறைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளது. பூமியின் நீரியல் சுழற்சியை தவறாய் அனுமானித்ததன் விளைவே இந்த நிலை உருவாகக் காரணம். வளர்ச்சியின் பெயரில் வனங்கள் துடைத்தெறியப்படுவது, ஆற்றுப்படுகைகளில் அபாயகர விஷக் கழிவுகளை கொட்டுவது, நச்சுக் கழிவுகளை மண்ணில் புதைப்பது, பெரிய அணைகள் கட்டுவது, ஆறுகளின் போக்கை மாற்றுவது என இங்கே அரங்கேற்றப்பட்டது எல்லாம் சுற்றுப்புறச்சூழல் அலட்சிய செயல்களே.

அதிகப்படியான எரிபொருளை கோரும் தொழில் நுட்பங்கள் தான் தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்க்கை முறை கூட நுகர்வின் உச்சத்தை அடைந்துள்ளது. பசுமை புரட்சியின் நீர் வேட்கை கொண்ட பயிர்கள் நாட்டை பாலைவனமாக்கியுள்ளது. நிலத்தடி நீர் வளத்தின் சமன்பாட்டை குலைத்துவிட்டது.

உலகம் வேகமாக முன்னேறத் துடிக்கிறது. நகரங்களில் வாழ்பவர்களுக்கு அவகாசமே இல்லை. எல்லாம் வேகம், வேகம், துரித வளர்ச்சி நோக்கிய பயணமே. எந்த விலை கொடுத்தேனும் வளர்ச்சி வேண்டும். அந்த எந்த மனித விலையோ அல்லது இயற்கை விலையே, பம்பாய் லண்டனாக மாறத் துடிக்கிறது. புது தில்லி வாஷிங்டன்னாக மாறத் துடிக்கிறது. பூமியில் வாழும் ஒவ்வொருவரும் இந்த தொலைநோக்கற்ற துரித வளர்ச்சிக்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நடப்பு உலகின் முன் மாதிரிகளாக அளவற்ற வளர்ச்சியும், கண்காணிப்பற்ற நுகர்வும் முடிசூடி நிற்கிறது.

20 ஆம் நூற்றாண்டில் எண்ணெய் முக்கியத்துவம் பெற்றது போல், 21ஆம் நூற்றாண்டில் அந்த இடத்தை தண்ணீர் பெற்றுள்ளது. பல நாடுகளின் செல்வாக்கை தீர்மானிக்கவிருக்கும் மதிப்பிட முடியாத பண்டம். தண்ணீர் வளத்தை அபகரிக்க ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள். ஏற்கனவே நம் மண்ணில் வரிசை கட்டி நிற்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் தங்கத்திற்கும், மணப்பொருட்களுக்காகவும் படையெடுத்தனர், இன்று நிகழும் படையெடுப்பு நீருக்கானது. பன்னாட்டு நிறுவனங்களின் இந்த கொள்ளைத் திட்டங்களை அங்கீகரித்து, வாழ்த்தி மூன்றாம் உலக நாடுகள் நோக்கி அனுப்புகிறது உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும்.

எண்ணெய் வர்த்தகத்தில் 40 சதவிகிதத்தை கடந்து விட்டது தண்ணீர் வர்த்தகம். உலகின் மருந்து வர்த்தகத்தை ஏற்கனவே அது கடந்து விட்டது. தற்சமயம் அது 1 ட்ரில்லியன் டாலர்களை எட்டி விட்ட பொழுதும் அவர்கள் உலகில் 5 சதவிகிதம் நபர்களை கூட சென்றடையவில்லை. உலகில் பல நாடுகளில் எண்ணெயும், தண்ணீரும் சமமான விலையில் விற்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பால், தண்ணீர் ஒரே விலையில் விற்கப்படுகிறது. எண்ணெய் வர்த்தகத்தை ஒழுங்கமைக்க - எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது போல் தண்ணீர் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச அமைப்பு 2020க்குள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள் தங்கள் மறு பயணத்தில் தண்ணீரை சுமந்து வர ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுவாகவே எண்ணெய் கப்பல்கள் எண்ணெயை தங்கள் நாட்டிலுள்ள துறைமுகத்தில் விநியோகித்துவிட்டு, மீண்டும் பயணத்தை துவக்கும் பொழுது, பாரம் இல்லாமல் இருப்பதால் கடல் நீரை உறிஞ்சி ஏற்றிக் கொள்ளும். எண்ணெய் நிரப்பும் துறைமுகங்கள் அருகில் சென்றவுடன் அந்த கப்பலிலுள்ள கடல் நீரை நடுக் கடலில் கொட்டி விடுவார்கள். அந்த சமயத்தில் ஏராளமான எண்ணெய் கடல் நீரில் கலப்பதால், பல சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு எண்ணெய் படலம் மிதக்க, அந்த பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் எதுவும் ஜீவிக்க இயலாது. பொதுவாக வணிக துறைமுகங்களுக்கு அடியில் மரித்த கடல் தான் இருக்கும்.

கடலில் மிதக்கும் தண்ணீர் பைகள் பற்றிய ஆராய்ச்சிகள் முடியும் தருவாயில் உள்ளது. தண்ணீர் பைகள் 5 லட்சம் சதுர மீட்டர் கொள்ளளவு கொண்டவை. இந்த பைகளை சிறு கப்பல்கள் இழுத்துச் செல்லும். பெரிய டேங்கர்கள், கால்வாய்கள் என்று தண்ணீர் போக்குவரத்து பற்றிய ஏராளமான வழிமுறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. செயலிழந்த பழைய எண்ணெய் கப்பல்களை சீரமைத்தது நிரந்தர தண்ணீர் கப்பல்களாக மாற்றும் திட்டங்கள் உள்ளது. எல்லா விதமான யோசனைகள் - ஆலோசனைகள், மூன்றாம் உலக நாடுகளில உள்ள நிலத்தடி நீரை வளர்ந்த நாடுகள் நோக்கி எடுத்து செல்லும் வழிமுறைகளே. அந்த நாடுகளில் கூட இந்த தண்ணீர் அதிகப்படியாய் பணம் கொடுப்பவருக்கே விநியோகிக்கப்படும்.

பன்னாட்டு நிறுவனங்களின் கருவிழியில் பதிந்துள்ள உருவம், இந்திய மத்திய தர வர்க்கமே. இந்த மத்திய தர வர்க்கம் தான் நுகர்வு கலாச்சாரத்தின் ஒழுக்கமான பக்தர்கள். சந்தை பொருளாதார தாள வாத்தியத்துக்கு ஏற்ப தங்கள் வாழ்வை சதா மாற்ற மறவாதவரக்ள். மீடியாக்களின் எல்லா வித போலி பிரச்சாரங்களுக்கும் இவர்கள் தான் முதல் கள பலி. சந்தை ஆய்வுக்கூடச் சோதனை பன்றிகள் போல் ஆகிவிட்டார்கள்.

நகரத்தில் வசிக்கும் இவர்களே தண்ணீரின் முதல் நுகர்வோர். ஊடகங்கள் தான் திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை முதலில் துவக்கியவர்கள். நம்மை சுற்றிலும் இலவசமாய் வழங்கப்பட்ட எல்லா நீர் ஆதாரங்களையும் அசுத்தமானவை என நம்ப வைத்தார்கள். சமூகத்தில் மனிதத்துடன் வழங்கப்படும் குடிநீரை பருக மறுத்தன மனங்கள். எல்லா மனங்களிலும் பயம் பூரான் போல் ஊறத்துவங்கியது. மெதுவாக பிரயாணங்களில் தான் முதலில் தண்ணீர் பாட்டில்கள் எட்டி பார்த்தது. பின்னர் நடு வீட்டிலேயே குடி தண்ணீர் கேன்கள் சம்மணமிட்டு உட்காரத் துவங்கியது. மனித மனங்களை தகவமைப்பதில் மீடியாக்களின் பாத்திரம் அழுத்தமானது.

முதலாளிகள் நடத்தும் ஊடகங்களுக்கு வர்க்க பாசம் இருக்கத்தான் செய்கிறது. வியாபாரமாக மாறக்கூடிய அனைத்திற்கும் தளம் அமைத்துக் கொடுத்து, தங்கள் பங்கு லாபத்தை பெற்றுக் கொள்வதில் ஊடகங்கள் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருக்கும். ஆனால் இந்த ஊடகங்கள் மக்களின் மனசாட்சியாக இருந்திருக்க வேண்டும். எல்லா பிரச்சனைகள், அரசு கொள்கைகள் என சகலத்தின் சாதக பாதகங்களை ஆராய்பவர்களாக, விவாதங்களை நடத்துபவர்களாக அல்லவா இவர்கள் இருந்திருக்க வேண்டும். மக்கள் கருத்து என்பதை கேட்டறிந்து அதைப் பிரதிபலிக்க வேண்டியவர்கள். மக்களை மூளை சலவை செய்பவர்களாக இருக்கிறார்கள்.

நகரத்து கலாச்சாரங்கள் வெகு வேகமாக மாறி வருகிறது. மிகக் குறைந்த அளவு தண்ணீரைப் பருகும் தலைமுறை உருவாகி வருகிறது. பலர் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளார்கள். இவைகள் பற்றிய பிரக்ஞை அற்ற சமூகமாக அவர்கள் வாழ்கிறார்கள். தண்ணீர் தட்டுப்பாடு கிராம விளை நிலங்களை தரிசாக்கியது. குடம் தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்கில் நடப்பார்கள் என்ற தகவல்கள் ராஜஸ்தானுக்கு மட்டுமல்ல தமிழகம் உள்பட எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்.

என்னேரம் வேண்டுமானாலும் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்றிருந்த தெரு குழாய்களில், காலை - மாலை மட்டும் விநியோகம் என்றானது. தண்ணீர் பிடிப்பதற்கு நேரம் ஒதுக்கும் கலாச்சாரம் உருவானது. பின்பு காலை மட்டும் என்றானவுடன் இடத்துக்கு ஏற்ப காலை 3, 4, 5 மணிக்கு அலாரம் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்பு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என இப்பொழுது பல தண்ணீர் குழாய்களில் காற்று தான் வருகிறது. பல நகரங்களின் அடிகுழாய்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் நடு இரவில் கூட காத்திருப்பது நகரங்களில் வழக்கமான காட்சியாகிவிட்டது. வெயிலின் உக்கிரம் ஏறும் ஏப்ரல் - மே மாதங்களில் விவரிக்க முடியாத அவலங்கள் நடைமுறையாகும். தெருக்களில் தண்ணீரில் துவங்கிய தகறாரில் ஜென்மப் பகையுடன் வாழ்பவர்கள் பலர். குடும்பங்கள் வன்மத்துடன் முறைத்துக் கொண்டு மௌனததில் உறைந்திருப்பது, நம் காலத்து அவலம்.

தண்ணீருக்காக பெண்கள் மட்டுமே வதைபடுவது என்ற நிலை மாறி, நெருக்கடி முற்றிய நிலையில் பல ஆண்கள் சைக்கிளில் குடத்தைக் கட்டுவதும், அடிகுழாய்களிலும் வந்து காத்துக் கிடக்க துவங்கியுள்ளார். கணவனும் - மனைவியும் வேலைக்கு செல்லும் சூழலில் நெருக்கடி இன்னும் அதிகம். பெண்கள் களை எடுத்துவிட்டு தோட்டத்திலிருந்து திரும்பும் வேளையில் கெஞ்சிக் கதறி ஒரு குடம் தண்ணீர் தலையில் சுமந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

நகரத்தின் இந்த நெருக்கடியை காசாக்க மெதுவாக தண்ணீர் லாரிகள் எட்டிப் பார்த்தது. அரசாங்கமே பல இடங்களில் லாரிகள் மூலம் தான் இன்றளவிலும் தண்ணீர் விநியோகம் செய்கிறது. தண்ணீர் லாரிகள் எழுப்பும் ஹாரன் சத்தம் கனவுகளிலும் கேட்கிறது. தண்ணீர் லாரிகளின் கீச்சொலி பூமியின் சாவு மணி போல் ஒலிக்கிறது. தண்ணீர் கேன்களை வாகனங்களில் கட்டிக் கொண்டு வியாபாரிகள் வறண்ட நாக்குடன் அலைகிறார்கள். தண்ணீரின் மீது ISI முத்திரைகள் குத்தப்படுகின்றன. மக்களின் அடிப்படை தேவையான தண்ணீருக்காக குரல் கொடுத்து போராடிய உலகின் முதல் தண்ணீர் வீராங்கனை லீலாவதி வெட்டிக் கொல்லப்படுகிறார். அவரது ரத்தம் வறண்டு போன தெருக்களில் கருத்து ஓடுகிறது. தண்ணீருக்காக மனு எழுத பேனாவை பற்றிய விரல்கள், துண்டு, துண்டாய் ரத்தத்தில் மிதக்கிறது. அவரது உடலிலிருந்து பாய்ந்த ரத்தம் மதுரை மாநகராட்சியின் தண்ணீருடன் கலந்து இன்றளவும் ஓடுகிறது. லீலாவதி தன் வாழ்வை அர்பணித்து பெற்றுத் தந்த தண்ணீர் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. சோதனை நீரோட்டம் நடக்கிறது. 5000 குடம் தண்ணீரை பெண்கள் லீலாவதி வெட்டப்பட்ட இடத்தில் ஊற்றுகிறார்கள் இது தண்ணீரின் கண்ணீர்.

Water Problemதண்ணீர் தனியார் மயம் மற்றும் பல நாடுகளின் நீர் மேலாண்மை விசயங்களில் உலக வங்கியின் தலையீடுகள் துவங்கியவுடன் உலகம் புதிய எழுச்சிமிக்க எதிர்ப்பலைகளை சந்தித்தது. நர்மதா அணைக்கட்டு சர்ச்சையை உலக பரப்புக்கு எடுத்துச் சென்றார் மேதா பட்கர். அவர் உருவாக்கிய நர்மதா பச்சாவோ ஆந்தோலன் இன்று உலகின் பெரும்பகுதி மக்கள் அறிந்த வலிமை மிக்க எளிய அமைப்பு. உலக வங்கியின் தலைமை அதிகாரிகளை ஒரு காலத்தில் கலங்கச் செய்தவர் மேதா பட்கர். அடுத்தடுத்து இந்தியாவின் பல பாகங்களில் தண்ணீர் எழுச்சி இயக்கங்கள் தோன்றியது. சுந்தர்லால் பகுகுணா, அன்னா ஹசாரே, பிளாச்சிமடா சுவாமிநாதன், சிவகங்கை அர்ச்சுணன் என பல தண்ணீர்ப் போராளிகளின் எளிய குரல்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கனவுகளை சிதறடித்தது. உலகம் முழுவதிலும் தோன்றிய தண்ணீர் எதிர்ப்பு இயக்கங்களில் அறிவுப்பூர்வமான அணி திரட்டல் நடந்தது.

பொலிவியாவின் கோக்கபம்பாவில் அந்த நகரத்தின் தண்ணீர் விநியோகம் பெக்டல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அவுகஸ் டெல் டுனாரிக்கு வழங்கப்பட்டது. தண்ணீர் கட்டணம் அங்குள்ளவர்களின் சராசரி வருமானத்தில் பாதியை விழுங்கியது. ஆஸ்கர் ஒளிவேராவின் தலைமையில் அந்த நகரத்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு பெக்டெல் நிறுவனத்தை விரட்டியடித்தனர். அந்த நகரத்தின் தண்ணீர் விநியோகம் மக்கள்வசம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல் பிரான்சு நாட்டில் கிரெநேபல் நகரத்து தண்ணீர் விநியோகம் சூயஸ் வசம் இருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட இயக்கங்களும் வழக்குகளும் மக்களுக்கு ஆதரவாய் தீர்ப்பை வழங்கியது. அந்த நகரத்தின் அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கங்கள் வென்று முதல் கையெழுத்தை சூயஸ் நிறுவனத்தை அப்புறப்படுத்தும் கோப்பில் கையெழுத்திட்டன.

பன்னாட்டு தர்மங்கள் அபத்தமானவை. இயற்கையில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அதை சந்தைப்படுத்துங்கள். சந்தை தீர்ப்பை, தீர்வை வழங்கும். வசதி படைத்தவர்கள் தரையைத் தோண்டி நிலத்தில் பெரிய தொட்டிகளை கட்டினார்கள், தண்ணீர் தரகர்கள் பணத்தைப் பெற்று சேவை செய்கிறார்கள். வசதி இல்லாதவர்களும் குழாயடியே வீடானது.

இந்தியாவில் பல மாநிலங்களுள் இன்றளவும் தீரா பிரச்சனை, தண்ணீர் பங்கீடு சார்ந்தவை. தமிழகம், கர்நாடகம் இடையிலான காவேரி பிரச்சனை, கேரளா - கர்நாடகா இடையிலான காபினி பிரச்சனை, கர்நாடகா - ஆந்திரா அல்மாட்டி பிரச்சனை, ஆந்திராவுக்குள் மாவட்டங்களிடையேயான கிருஷ்ணா நதி பிரச்சனை, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மத்தியில் பல பிரச்சனைகள்.

அரசாங்கத்தின் கட்டுக்குள் கொணர முடியாத தண்ணீர் சர்ச்சைகள் பின்னனியில் இருக்க, குடிநீர் விநியோகம், தனியார் பாசனம் என அரசாங்கங்கள் தங்கள் பொறுப்புகளிலிருந்து பின்வாங்கத் துவங்கியது. மகாராஷ்டிராவில் 1700 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் உலக வங்கியின் நிதியுதவியுடன் தனியார்வசம். திருப்பூர், தில்லி, மும்பை என அநேக நகரங்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனங்கள் வசம். கங்கை முதல் தாமிரபரணி வரை பல ஆறுகளை அரசாங்கம் விற்பனை செய்து வருகிறது. பல ஆற்றுப் படுக்கைகளை வேலியிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் ஏந்தி பாதுகாத்து வருகிறார்கள். பல கிராம மக்கள் ஆற்றுக்குச் சென்று கைகளில் தண்ணீர் அள்ளிக் குடிக்கும் உரிமையை இழந்து விட்டனர்.

நாக்பூரில் வெப்பம் 45 - 48 டிகிரிக்கு ஏறுமுகத்தில், வெயில் காலங்களில் மக்கள் சாலைகளில மயங்கி விழுவது வாடிக்கையான விஷயம் அங்கு. எல்லோரும் முகமூடி அணிந்துதான் (கும்சா) செல்கிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு அந்த நகரத்திலும் கிராமபுறத்திலும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் நாடு முழுவதிலும் நீர் விளையாட்டு பூங்காக்கள் மனமகிழ் என்ற பதங்களில் கீழ் துவக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அதிசயம், ப்ளாக்தண்டர் என்று அழைக்கப்படும் இந்த பூங்காக்கள் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீரை விழுங்குகிறது. இந்த பூங்காக்களை சுற்றியுள்ள விளைநிலங்கள் தரிசாகவும், குடிநீர் கிடைக்காமல் தவிக்கிறது. தண்ணீரை வைத்து அங்கு கோடிக்கணக்கில் ரூபாயை ஈட்டும் கேளிக்கைகள் அரங்கேறுகிறது. மக்கள் துன்புறும் தருணங்கள், சூழ்நிலைகளை தகவமைத்து காத்திரமான பங்களிப்பு ஆற்ற வேண்டிய அரசாங்கங்கள் பெரு நகரங்களின் கோல்ப் மைதானங்களுக்கு தண்ணீர் தடையற்று கிடைக்கிறதா என்பதை கவலையோடு கண்காணிக்கிறது.

வகுப்பறைகள் மாணவர்களை சூழலின் நண்பர்களாக மாற்றத் தவறிவிட்டது. கல்வி பெற்று வெளியேறும் சமூகம் தான் எல்லா சுற்றுப்புற அலட்சிய செயல்களை வழிநடத்தி செல்கிறது. அரசாங்கத்தை அதன் தவறான செயல்களுக்காக தண்டிக்கும் அதே சமயம் வகுப்பறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே வருங்கால தலைமுறை புதிய விழுமியங்களுடன் முன்னகர இயலும்.

அ.முத்துக்கிருஷ்ணன்