கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க் கிழமை (25/04/2006) சிறிலங்காவின் இராணுவத் தளபதியைக் குறி வைத்து நடாத்தப் பட்ட குண்டுத் தாக்குதல் சமாதானப் பேச்சு வார்த்தைகளைச் சீர்க்குலைக்கும் நடவடிக்கையாகவும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணக் கருத்தை உருவாக்கு முகமாகவும் நடத்தப்பட்டது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளால் இக்குண்டுத் தாக்குதலுக்கான தொடர்பு உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இக் குண்டுத் தாக்குதலால் நன்மையடையக் கூடிய சக்திகள் யார் என்பதை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதியுச்சப் பாதுகாப்பு வளையத்தில் இராணுவத்தின் உயர் பதவி வகிக்கும் ஒருவரைத் தேடிச் சென்று அழிப்பது என்பது அதுவும் நீண்ட நேரம் காத்திருந்து அவர் பகலுணவுக்காக வெளிவரும் வரை காத்திருந்து தாக்குவது என்பது பல காரணங்களுக்காக நம்பகத்தன்மை அற்றுப் போகின்றது.

1. இவ்வாறான உச்சப் பாதுகாப்பு வளையத்தை அண்மிக்க முதலே பல வீதித் தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் தாண்டி வர வேண்டியதிருக்கும். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அதி சக்தி வாய்ந்த குண்டினைப் பொருத்திய தற்கொலைக் குண்டுதாரி இத்தனை சோதனைச் சாவடிகளையும் தாண்டி குண்டுகளுடன் வருவது என்பது ஒரு நகைச்சுவையே.

2. தற்கொலை நோக்கிற்காக வந்தவர் இராணுவத் தளபதி வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கியது என்ற கூற்று. அதி உச்சப் பாதுகாப்பு பிரதேசத்தில் தேவையற்று நிற்பது சந்தேகத்தை உண்டாக்கும். அதுவும் ஒரு தமிழ்ப் பெண் நிற்பது உடனடிக் கவனத்தைப் பெறும். சாதாரண சிங்களப் பொதுமக்களே சந்தேகப்பட்டு காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

இந்த இரண்டு காரணங்களாலும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதல் என்பது விடுதலைப் புலிகளே மறுப்பது போல அடிபட்டுப் போகின்றது. அப்படியென்றால் இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் பயனடையப் போவது யார்? இவ்வகையான ஒரு குண்டுத் தாக்குதலால் தமிழர் தரப்பை விட சிங்களத் தரப்பில் பயனடையப் பலர் காத்திருக்கின்றார்கள்.

முதலாவது மகிந்த ராஜபக்ஸ. பேச்சு வார்த்தைகள் தொடரப் படவேண்டும் என்ற சர்வதேச நெருக்குவாரமும் அதற்கு எதிரான தோழமைக் கட்சியான ஜே.வி.பி கொடுத்துக்கொண்டிருக்கும் பயமுறுத்துதல்களும் அவரை நிம்மதியிழக்கச் செய்திருக்கின்றது. பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றால் குறைந்த பட்ச அதிகாரத்தையேனும் தமிழர் தரப்புக்குக் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கும் அவரால் சிங்களத்தின் காவலன் என்ற பெயரைத் தக்க வைக்க முடியாத நிலமை ஏற்படும். அதனால் சூனியமாகும் அரசியல் எதிர்காலம். இதனை தவிர்த்துக் கொள்ள திட்டமிட்ட வகையில் ஆரம்பிக்கப் பட்ட திருமலை இனக்கலவரம் பிசுபிசுத்துப் போக புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்திருக்கலாம்.

இக்குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து திருமலையில் விமானக் குண்டு வீச்சு. அதிக சென்சிற்றிவ் ஆன பிரதேசமாக வேகமாக உணர்ச்சித் தீ பற்றிக் கொள்ளக் கூடிய மூவின மக்களும் செறிந்து வாழும் திருமலை தெரிவு செய்யப்பட்டமை இதை உறுதிப்படுத்துகின்றது. நான்காம் ஈழப் போரில் சிங்களம் திருமலையை தமிழர் தரப்பிடம் இழந்து விடலாம் என்ற பயம். அல்லது திருமலையில் அதிக கவனத்தை வைத்திருக்கும் அன்னிய சக்தியின் தூண்டுதல் காரணமாயிருக்கலாம்.

இரண்டாவது ஜே.வி.பி. இழந்த அரசியல் செல்வாக்கை மக்களிடம் இனவாதத் தீயைக் கக்கி மீட்டுக் கொள்ளல். மகிந்த அரசிற்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்து பேரம் பேசும் வலுவை அதிகப் படுத்தல். நோர்வேக்கு எதிரான வெளியேற்றக் கோஷம் 7 அமைச்சுப் பதவிகள் வரை மகிந்த ராஜபக்கஸவால் கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றும் ஆட்சிமாற்றத்தை வேகப்படுத்த இராணுவத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறும் வகையில் மகிந்தவுக்கு ஆதரவான இராணுவத் தலமையை அகற்றுதல்.

சமீப காலமாக ஜே.வி.பி இன் அங்கத்தவர்கள் இராணுவத்தில் பெருமளவில் ஊடுருவியிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது - மக்கள் அரசியலால் முடியாது எனினும்- புரட்சிகர அரசியல் மாற்றத்தை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை.

இரண்டு முறை தோல்வியடைந்த புரட்சியை மூன்றாவது முறையும் முயற்சிக்கப் பின் நிற்க மட்டார்கள். மூன்றாவது விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத் தடையை ஊக்கப் படுத்தி இலங்கைத் தீவில் தமிழர் போராட்டத்தை நசுக்கி தமது ஆதிக்கத்தையும் நலனையும் எதிர்பார்த்திருக்கும் அன்னிய சக்தி அல்லது சக்திகள்.

நான்காவது தொடரும் போரினால் ஆயுதவிற்பனையை ஊக்கப்படுத்தி கொழுத்த பணம் சம்பாதிக்க முயலும் ருசி கண்ட ஆயுத வியாபாரிகள் மற்றும் இடைத் தரகர்கள். இந்த நான்கு தரப்பின் தலையீடும் சதியும் இத்திட்டமிட்ட குண்டு வெடிப்பில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற உறுதியான சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே விடுதலைப் புலிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டு தமிழ் மக்களின் மீது விமானத் தாக்குதல் நடாத்தப் பட்டது. இத்தகைய விமானத் தாக்குதல் விடுதலைப் புலிகளை ஆத்திரமடைய வைத்து போரைத் துவங்குவதை சம்பந்தப்பட்ட தரப்பு எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. பொறுப்புள்ள அரசாங்கம் மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டு போட்டுத் தாக்குவதில் காட்டிய அவசரத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் யாரும் கண்டிக்கவில்லை.

தமிழர் தரப்பைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு வலிந்த போரினையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற வலிந்த சந்தேகத்தை இது ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளின் பொறுமை இவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது. இதனால் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைய கொழும்பைச் சுற்றியோ அல்லது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களிலோ வலிமையான இன்னுமொரு குண்டு வெடிப்பு இடம் பெறலாம். வழமை போல அதுவும் விடுதலைப் புலிகளின் தலையில் சுமத்தப்பட சர்வ தேசம் மெளனம் காத்து நிற்கும்.

ஆனால் இம் முறை மேற்கு நாடுகளில் இக்குண்டு வெடிப்பு பற்றி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்பதை கவனமாகத் தவிர்த்து "பெண் தற்கொலைதாரி" என்றே செய்தி வெளியிட்டமை அவர்களுக்கும் இதே சந்தேகம் இருக்கின்றதுஎன்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இவ்வளவு இருந்தும் சர்வதேச சமூகம் வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? இந்த சதியை அம்பலப் படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் மண்னில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் இருக்கின்றது.

-
இளந்திரையன்