ஆளத் தகுதியற்று அனைத்திலும் தோல்வியடைந்து மக்கள் முன் அம்மணமாக நிற்கும் ஓர் அரசு, தன்னை மக்களின் கோபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் ஆயுதம்தான் அரச பயங்கரவாதம். தனக்கு எதிராக கருத்து பரப்பும் யாரும் தனது ஆட்சிப் பரப்பில் நிம்மதியாக இருப்பதை எந்த மக்கள் விரோத அரசும் விரும்புவது கிடையாது. அரசு என்ன செய்தாலும் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும் அதைக் கைக்கட்டி வாய்பொத்தி ஆமோதிக்க வேண்டும் அப்படி இல்லாமல் கைகளை உயர்த்தி, அரசுக்கு எதிராக கோஷம் போட்டால், அரசு தனது கூலிப்படையான காவல்துறை மூலம் குண்டாந்தடிகளால் பேசும். தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அது உருவாக்கி வைத்திருக்கும் பாசிச சட்டங்கள் மூலம் பதிலடி கொடுக்கும். அதற்கும் மசியவில்லை என்றால், அதுவே சட்டத்திற்குப் புறம்பாக உங்கள் கதையை முடித்து வைக்கும். தன்னை காப்பாற்றிக் கொள்ள அரசு எதுவும் செய்யும், எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

bala cartoon

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் 23 ஆம் தேதி தீக்குளித்து நான்கு பேர் துடிதுடிக்க இறந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னும் கூட அந்தச் சம்பவத்தில் இருந்து மீண்டுவரமுடியாமல் சமூக அக்கறை உள்ளவர்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நெஞ்சம் பதைபதைக்க வைத்த சம்பவம் அது. உடல் முழுவதும் நெருப்போடு அந்தக் குழந்தைகள் கதறிய கதறல் பல இரவுகளைத் தாண்டியும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மனிதர்களை நேசிக்கும் சமூக அக்கறை கொண்ட யாருக்குமே இதே உணர்வுதான் நிச்சயம் இருந்திருக்கும்.

இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியதற்கு யார் காரணமோ, அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படுவது இயல்பானது. அந்த வகையில் இந்தக் குற்றம் நடக்கக் காரணமாக இருந்த காவல்துறை மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும், தமிழகத்தில் கந்துவட்டி தொழிலை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கும் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் அரசின் மீதும் விமர்சனங்கள் எழுவது இயல்பானது. அதைச் செய்துவதுதான் நேர்மையான எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் வேலை.

கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் அதைத்தான் செய்தார். கந்துவட்டி மரணங்களை கண்டுகொள்ளாமல் எவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன என்ற போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசாங்கத்தை தனது கார்ட்டூனால் அம்மணமாக்கிக் காட்டினார். சமூக வலைதளங்களில் அந்தக் கார்டூன் மிக வேகமாகப் பரவி அரசு மற்றும் அரசாங்கத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தியதை அடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் 'கந்துவட்டி காவல்தெய்வம்' சந்தீப் நந்தூரி அவர்கள் கொடுத்த புகாரின் பேரின் 05/11/2017 அன்று போரூர் அருகே உள்ள பெரியபணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மதியம் 1:30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்ததோடு அவரிடம் இருந்த கணினி, செல்போன் போன்றவைகளையும் போலிசார் எடுத்துச் சென்றுள்ளனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

cartoonist balaஇசக்கிமுத்து ஆறு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு, நான்கு பேரையும் கொன்றுவிட்டு, எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல், அதை அம்பலப்படுத்திய பாலா அவர்கள் மீது சந்தீப் நந்தூரி புகார் கொடுத்துள்ளதும், கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்நிலையங்கள் எப்போதுமே கட்டப்பஞ்சாயத்து நிலையங்கள் தான் என்பதை நிரூபித்த காவல்துறை உடனே பாலாவை கைது செய்வதும், இவர்கள் உண்மையில் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ஓர் ஏழைத்தொழிலாளி புகார் கொடுத்தால் அவனை காவல்நிலையத்தில் வைத்து மானக்கேடாக திட்டுவதையும், மிரட்டுவதையும் செய்யும் காவல்துறைக்கும், நடவடிக்கை எடுக்கச் சொல்லி மனு கொடுத்தால் அதை மயிரளவுக்குக் கூட மதிக்காத ஆட்சியருக்கும் என்ன யோக்கியதை இருக்கின்றது, புகார் கொடுக்கவும் கைதுசெய்யவும் என்று தெரியவில்லை.

போலி ஜனநாயக நாட்டில் கருத்துச்சுதந்திரம் என்பதை அரசை சொறிந்துவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றுதான் ஆளும்வர்க்கம் விரும்புகின்றது. அரசை விமர்சிப்பது கூட காலை நக்கி மென்மையாக விமர்சிக்க வேண்டும். இல்லை என்றால் அரசு தனது கோர முகத்தை இப்படித்தான் காட்டும். 2012ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் யோக்கியதையை தனது கார்ட்டூனால் நாறடித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் அசிம் திரிவேதி கைதுசெய்யப்பட்டார். அதே போல மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்ட்டூன் போட்ட ஜவாத்பூர் பல்ககைக்கழகப் பேராசிரியர் மகாபத்ராவும், அவரது நண்பர் சுபத்ராவும் கைதுசெய்யப் பட்டனர். இவர்கள் மீது தகவல்தொழிநுட்ப சட்டம் 66 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இதுபோன்று சமூகவலைதளங்களில் கருத்துச்சொல்வோர் மீது அரசு 66ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது சட்டவிரோதமானது என அறித்து 66ஏ பிரிவை ரத்துசெய்து ஸ்ரேயா சிங்கால் வழக்கில் உச்சநீதி மன்றம் உத்திரவிட்டது.

தற்போது பாலாவை தகவல்தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 501 போன்றவற்றில் கைது செய்து தனது ரவுடித்தனத்தை காட்டியிருக்கும் அரசு, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய, ‘ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கை போட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் தோழர் திருமுருகன் காந்தியையும், மாணவி வளர்மதியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து தனது அடாவடித்தனத்தைக் காட்டியது. அதிகாரம் கிடைக்கும் வரை மக்களின் காலில் விழுவதும், கிடைத்துவிட்டால் தன்னை மக்களுக்கு மேம்பட்டவர்களாக கருதிக்கொண்டு அதே மக்களை அடக்கி ஒடுக்கி புழு பூச்சிகளைப் போல நடத்துவதும் அரசியல் ரவுடிக் கும்பலின் தொழிற்முறையாகிவிட்டது.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் அரசு சொல்ல வரும் செய்தி இதுதான்.இனி தமிழ்நாட்டில் யாரும் இந்த மானங்கெட்ட அரசை விமர்சிக்கக் கூடாது, அவர்கள் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், சாராய கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், பான்மசாலா குட்கா கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள், கஞ்சா விற்கும் கும்பலுக்கு ஆதரவாக இருப்பார்கள் அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை சாகடிப்பார்கள், அது போன்ற குற்றகும்பலிடம் இருந்து பல நூறு கோடிகளை மாமூலாக வசூலித்து கொட்டமும் அடிப்பார்கள், அதை எல்லாம் கண்டும் காணாதது போல மெளனியாக எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும், போராளிகளும் இருந்துவிட வேண்டும். இல்லை என்றால் கைதுசெய்து உள்ளே வைத்து புத்தி புகட்டுவார்கள்.

உண்மையிலேயே எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் முதுகெலும்பு இருக்குமேயானால் இதற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெரும்பாலான எழுத்தாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆளும் வர்க்கத்திற்கு எடுபிடி வேலை பார்க்கும் நாய்களாக இருப்பதால்தான் ஆளும்வர்க்கம் அவர்களை மிகத் துச்சமாக நினைக்கின்றது. பாலா அவர்களின் கைது மிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. உண்மையிலேயே நாம் கொஞ்சமாவது இந்தப் பாவிகளிடம் இருந்து கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் போராட்டத்தை நடத்திதான் ஆகவேண்டும். அது நிச்சயம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. பொறுக்கிகளுக்கும், ரவுடிகளுக்கும், ஊழல் பேர்வழிகளுக்கும், அதிகாரத்தை வைத்துக்கொண்டு நக்கிப்பிழைக்கும் நாய்களுக்கும் எதிரான போராட்டம். இந்தச் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் எழுத்தாளனாக, பத்திரிக்கையாளனாக வந்தேன் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை நடத்தவேண்டும். ஆளும்வர்க்கத்தை நக்கிப்பிழைத்து வயிறு வளர்க்கவே வந்தேன் என்று சொல்பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

- செ.கார்கி