சாதி சார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் மிக தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கும் சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் அது தன் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்தி உள்ளது. அது சாதியை மறந்து தங்களுக்குள் ஒர் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு பணிபுரியும் உற்பத்தி சார்ந்த உறவுகளில் கூட பெரிய அளவு விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரிவினைச் சுவரை அது வளர்த்து வைத்திருக்கின்றது. சாதி சங்கங்கள் எல்லா இடங்களிலும் ஊடுறுவி இருக்கின்றன. அது ஒரு பத்து பேர் இருக்கும் இடங்களில் மட்டும் தான் வேலை செய்யும் என்ற நிலை மாறி ஒருவன் தனியாக இருக்கும் போதும் அவன் தன்னை ஒரு தனித்த சாதியாக ஆதிக்க மனோநிலை கொண்டவனாக உணர வைக்கின்றது. சாதி ஒரு கருத்தாக மூளை என்ற பருப்பொருளில் உறைந்து கிடக்கின்றது. அது தன்னையும் தன்சாதி சார்ந்தவர்களையும் தவிர மற்ற அனைவரையும் தன் வட்டத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றது. மற்றவர்கள் தங்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான வெளி மிகக் கறாராக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதை மாற்றுவது என்பது மிக கடினமானதாகவே எப்போதும் இருந்து வருகின்றது. சாதி என்ற அரூப ஆனால் வலிமையான கருத்தை ஒட்டுமொத்தமாக இந்திய சமூக அமைப்பில் இருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அது வேர்விட்டு விழுதுகள் இறக்கி பெரும் விருட்சமாக பரவியிருக்கின்றது. வெட்டி வீழ்த்துவதற்கு ஏற்ற சமரசமற்ற வலிமையான தோள்கள் இங்கே மிகக் குறைவாகவே இருக்கின்றன. எண்ணிக்கையில் மிகப் பலவாக அது பெருகும் போதுதான் வேரோடும், வேரடி மண்ணோடும் நம்மால் சாதியை இந்திய சமூக அமைப்பில் இருந்து வீழ்த்த முடியும்.

ஆனால் எண்ணிக்கையில் பலவாக எப்படி நாம் சாதி என்ற கருத்தியலுக்கு எதிரான நபர்களை உருவாக்குவது?. இருக்கும் ஒரே வாய்ப்பு என்பது ஆரம்பக் கல்வியில் இருந்தே சாதி என்ற கருத்துக்கு எதிரான சிந்தனையை நாம் மாணவர்கள் மத்தியில் விதைப்பதுதான் அதற்கு தீர்வாக இருக்கும். இன்று தமிழ்நாட்டின் கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் வந்துவிட்டது. இவர்கள் அனைவரும் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல் என்ற வாசகத்தைப் படித்துத்தான் நிச்சயம் வந்திருப்பார்கள். அதுவும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு பாட நூல்களிலும் இந்த வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. அப்படி பார்த்தால் இன்று தமிழகத்தில் உள்ள 80 சதவீத மக்களிடம் தீண்டாமை சார்ந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை இதில் ஒருசதவீத மக்களிடம் கூட அப்படியான சிந்தனை முழுமையாக வந்திருக்குமா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஏன் பல ஆண்டுகள் நாம் பெற்ற கல்வி நம்மிடம் இருந்து சாதிய சிந்தனையை விரட்டியடிக்கவில்லை என்று பார்த்தால் நமக்கு ஒரு உண்மை பட்டவர்த்தனமாக தெரியவருகின்றது. அது என்னவென்றால் வெறும் புத்தகங்கள் மட்டுமே சாதியை ஒழித்துவிடாது என்பதுதான். அதையும் தாண்டி அந்த உயிரற்ற புத்தகங்களுக்கு உயிர்கொடுக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் அதற்குப் பெரிய அளவில் தேவைப்படுகின்றது. அவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருசதவீதம் கூட நம்மால் இன்றைய இளைய தலைமுறையினரிடம் சாதி ஒழிப்பு சிந்தனைகளை உருவாக்க முடியாது. ஆனால் நடைமுறை உண்மை இன்று எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் பள்ளி மாணவர்களுக்குச் சாதி வெறியை ஊட்டும் கீழ்தரமான வேலையை பார்ப்பவர்களாகத்தான் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியப் பணி அறப்பணி என்பதெல்லாம் வெற்று, பொருளற்ற வார்த்தைகளாகத்தான் இருக்கின்றன.

எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ந்த போது முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுந்து நின்று பெயர், தந்தையின் பெயர் மற்றும் அவரது வேலை எந்த ஊர் என்ன சாதி என்பதை வரிசையாக சொல்லச்சொன்னார். அனைவரும் எழுந்து நின்று எந்தக் கூச்சமும் இல்லாமல் வரிசையாக சொன்னோம். பல மாணவர்களுக்குத் தன்னுடைய சாதியின் பெயரே என்னவென்று சொல்ல தெரியவில்லை. இன்னும் சில மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பறையர், சக்கிலி என்று வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் எந்த மாணவரும் மற்ற மாணவர்களிடம் பழகுவதற்கு அது ஒரு தடையாக ஒருபோதும் இருக்கவில்லை. காரணம் எந்த சாதி தாழ்ந்த சாதி எந்த சாதி உயர்ந்த சாதி என்பதைப் பற்றி எல்லாம் எங்களில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது எதற்காக பயன்படுகின்றது அப்படி என்றால் என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆசிரியருக்கு அது நன்றாக தெரிந்திருந்தது. குறிப்பிட்ட சில மாணவர்களின் தோல்மேல் கைபோட்டு அன்போடு அவர் பேசியதும் இன்னும் சில மாணவர்களை தினம் தினம் வகுப்பறையில் காரணமே இல்லாமல் அடித்துத் துவைத்துக் காயவைத்ததற்குமான காரணங்கள் சாதியாக இருக்குமோ என்று இன்று தோன்றவைக்கின்றது.

பிறகு எட்டாம் வகுப்பில் இருந்து வேறு பள்ளியில் பயின்றேன். அது சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற ஒரு பள்ளி. எங்களது வகுப்பறை தினமும் சைக்கில் ஸ்டேண்டில் தான் நடக்கும். அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரும் என்னுடைய சாதியையோ இல்லை மற்ற மாணவ்ர்களின் சாதியையோ வெளிப்படையாக சொல்லச்சொல்லி கேட்கவில்லை. அவர்கள் என்னுடைய பெயர், என் தந்தையின் பெயர்,ஊர் போன்றவற்றை மட்டுமே கேட்டார்கள். ஆனால் நகர்புற பள்ளியில் எங்களிடமே என்ன சாதி என்று வெளிப்படையாக கேட்டு தெரிந்துகொண்ட ஆசிரியர்கள் போல் இல்லாமல் ஊர் பெயரையும், தந்தையின் பெயரையும் வைத்தே அந்த கிராமப்புற ஆசிரியர்கள் சாதியை மிக எளிதாக கண்டுபிடித்து வைத்திருந்தார்கள்.

நகர்ப்புறத்தில் படிக்கும் போது எனக்குத் தெரிந்து எந்த மாணவனும் தன்னுடைய சக மாணவனின் சாதியை எப்போதுமே தெரிந்துகொள்ள விரும்பியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு சிந்தனையே தோன்றாது. ஆனால் இந்தக் கிராமப்புற பள்ளியில் நிலை அப்படி இல்லை. அங்கே ஒவ்வொரு மாணவரும் தன்னுடன் படிக்கும் மாணவன் என்ன சாதி என்பதை நன்றாக தெரிந்துவைத்திருந்தான். வகுப்பறையில் இது நன்றாக தெரியும். கவுண்டர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அருகருகே உட்கார்ந்து இருப்பார்கள், செட்டியார் மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். நாயக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள், அதே போல தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இருப்பார்கள். இது போன்ற ஒரு அமைப்பு முறை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை பார்த்திருக்கின்றேன். இந்த முறையில் சில சமயம் மாற்றம் நேருவதுண்டு. ஆனால் அந்த மற்றம் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்காகவே இருக்கும். பள்ளியில் விளையாடுவதில் தொடங்கி மதியம் சத்துணவு வாங்கி சாப்பிடுவது வரை சாதிய கூட்டணி தொடர்ந்துகொண்டே இருக்கும். சில மாணவர்கள் தன்னுடைய சாதிக்காரன் யாரும் தன்னுடன் படிக்கவில்லை என்றால் அவன் தன்னைவிட மேல்சாதிக்கார மாணவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வான். இது ஒரு இயல்பான நிகழ்ச்சிப் போக்காகவே இருந்தது.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு நகர்புற பள்ளியைக் காட்டிலும் கிராமப் புற பள்ளியில் சாதியானது வெளிப்படையாக வேலை செய்கின்றது. அங்கிருக்கும் ஆசிரியர்கள் மிக எளிதாக சாதியைக் கண்டுபிடித்துவிடுகின்றார்கள். அதற்கு மற்றொரு காரணம் பெரும்பாலான கிராமப்புற ஆசிரியர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதுதான். மாணவர்கள் மத்தியிலும் சாதி மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றது. இயல்பாகவே அவர்கள் தங்களுடைய கிராமத்தில் எப்படி இருக்கின்றார்களோ அதே போன்றுதான் வகுப்பறையிலும் இருக்கின்றார்கள். எப்படி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களில் ஊருக்கும் வெளியே குடிவைக்கப் பட்டிருக்கின்றார்களோ அதே போலத்தான் பள்ளியின் வகுப்பறைகளிலும் அமரவைக்கப்பட்டிருக்கின்றார்கள். சாதி ஊருக்குள் இருந்து பள்ளிக்குள்ளும் நுழைந்து தனது நச்சு விதைகளை விதைத்து இருக்கின்றது.

எந்த ஓரு ஆசிரியரும் எனக்குத் தெரிந்து சாதிக்கு எதிராகவோ இல்லை மதத்திற்கு எதிராகவோ, கடவுளுக்கு எதிராகவோ பேசியதில்லை. அவர்கள் இயல்பாகவே சாதிய உணர்வோடுதான் எப்போதுமே இருந்தார்கள். சில மாணவர்களை வெளிப்படையாக சாதியின் பெயரைச் சொல்லியே அழைப்பார்கள். ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தும் கழிப்பறைகளைச் சில மாணவிகள் மட்டும் தினமும் காலை பள்ளிக்கு வந்தவுடன் சுத்தம் செய்வார்கள். இதை எல்லாம் நம்மால் நகர்புற பள்ளியில் பெரும்பாலும் பார்க்க முடியாது. ஒப்பிட்டளவில் சாதி நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் கிராமப்புற பள்ளிகளில் தீவிரமாக செயல்படுகின்றது.

ஆசிரியர்கள் சாதிய கண்ணோட்டத்துடன் இருக்கும் போது அங்கு படிக்கும் மாணவர்களும் நிச்சயம் சாதிய கண்ணோட்டத்தில் தான் இருப்பார்கள். என்ன தான் புத்தகங்களில் சாதிக்கு எதிரான சிந்தனைகளை நாம் வைத்திருந்தாலும் அது மாணவர்களை மறு வார்ப்பு செய்ய இந்த சாதிவெறி படித்த சனாதன ஆசிரியர்கள் விடமாட்டார்கள். அவர்கள்தான் வகுப்பறையில் சாதியை உயிர்ப்போடு வைத்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் சமூக மாற்றம் வேண்டும். சாதி அற்ற, மதமற்ற ஒரு பகுத்தறிவோடு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னமெல்லாம் இருப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகத்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியர்களுக்கே பகுத்தறிவு இல்லை என்றால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களுக்கு எப்படி பகுத்தறிவு இருக்கும்.

அதுவும் சாதிசார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் எழுர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களும் தன்னை அத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்புகின்றார்கள். வகுப்பறையைச் சாதி வெறி அரசியல் போதிக்கும் இடமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகே உள்ள முதனை கிராமத்தில் அமராவதி என்ற பத்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி அப்படித்தான் வன்னிய சாதிவெறிபிடித்த ஆசிரியரால் கொன்றுபோடப்பட்டிருக்கின்றாள்.

அங்குள்ள இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தனலட்சுமி, மதிபெண் குறைவாக எடுத்த காரணத்தால் அமாரவதியை சாதிப் பெயரை சொல்லி சக மாணவர்கள் மத்தியில் கேவலமாக திட்டியிருக்கின்றார். இதனால் அவமானம் அடைந்த அமராவதி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். ஆசை ஆசையாய் படிக்கவந்த அந்த மாணவியை தன்னுடைய வன்னிய சாதி வெறி திமிரால் அநியாயமாக தற்கொலை செய்துகொள்ள தூண்டியுள்ளார். ஆனால் இதுவரை காவல்துறை அந்த ஆசிரியையை கைது செய்யாமல் வன்னிய சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகின்றது. அமராவதியின் தந்தை முருகன் ஒரு மாற்றுதிறனாளி ஆவார். தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றிவருகின்றார். அமராவதியின் தாய் செம்பாயி கூலித்தொழிலாளி ஆவார். இப்படி ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியிலும் தன்னுடைய குழந்தைகளை படிக்கவைத்து எப்படியாவது மேல்நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று போராடிய அந்த ஏழை பெற்றோர்களின் கனவில் வன்னிய சாதிவெறி பிடித்த அந்த மிருகம் மண்ணை அள்ளி போட்டிருக்கின்றது. இந்த மிருகம் இன்னமும் ஆசிரியராக நீடிக்க அனுமதித்தால் இன்னும் எத்தனை தலித் மாணவர்களை கொன்று போடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. அரசின் நிலைப்பாடே தலித் மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டி அடிப்பதை நோக்கியே அமைந்திருக்கின்றது. அதுவும் தலித்விரோதி எடப்பாடியின் ஆட்சியில் இனி இது போன்ற சம்பவங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

சாதியை ஒழித்தல் என்பது அதற்கான கல்வியோடு ஆழமாக சம்மந்தப்பட்டது. கல்வி கற்பிக்கும் இடங்கள் சாதிவெறி பிடித்த ஆசிரியர்களின் கூடாரங்களாக மாறியிருக்கும் சூழ்நிலையில் முற்போக்குவாதிகளின் பார்வை தற்போது கல்வி நிலையங்களை நோக்கி திரும்பவேண்டி இருக்கின்றது. நம்மால் பழுத்துபோன பழம் பெருச்சாளிகளை மாற்றுவதைவிட இளம் தளிர்களை வென்றெடுப்பது மிக எளிதானது. சாதி, மதம், கடவுள் போன்றவற்றிற்கு எதிரான சிந்தனைகளை நாம் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தோம் என்றால் அந்த மாணவர்களுக்கு இயல்பாகவே அது நம்பிக்கையும், வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், சாதி, மதத்திற்கு எதிராக எதிர்த்துப்போராடும் மனவலிமையும் கொடுக்கும். தனலட்சுமி போன்ற சாதிவெறியர்களை வகுப்பறையிலேயே அம்பலப்படுத்தும் துணிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இது ஒரு பக்கம் என்றால் அரசு சில நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். சென்ற ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த மு. கருணாகரன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி மற்றும் மதரீதியான மோதல்களை தடுக்கும் நோக்கத்தோடு பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை,கல்வித்துறை போன்றவை இணைந்து மேற்கொள்ள வேண்டிய சில நெறிமுறைகளை வழங்கினார். நிச்சயம் அது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால் மிக சிறப்பாக இருக்கும்.

“அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்திலும். தினந்தோறும் காலை வகுப்புகள் தொடங்கும் முன் கட்டாயம் கூட்டு வழிபாடு நடத்தப்பட வேண்டும். இதில், பொன்மொழிகள், திருக்குறள், பழமொழி, முக்கியச் செய்திகளை எடுத்துக் கூறி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களது கைகளிலோ, கழுத்திலோ சாதி, சமூக, இனரீதியான அடையாளப்படுத்தும் கயிறுகள்,டாலர்கள் அணிவதை தடை செய்ய வேண்டும். சட்டைக்குள் அத்தகைய அடையாளத்தை வெளிப்படுத்தும் பனியன் அணியவும் அனுமதிக்கக் கூடாது. பள்ளிகள் முழுமையாக ரகசிய கேமரா கட்டுப்பாட்டில்கொண்டு வந்து மாணவர்கள் தேவையற்ற இடங்களில் கூடுவதையும், வகுப்பு நேரங்களில் வெளியே செல்வதையும் தடை செய்ய வேண்டும். மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். எந்த ஆசிரியராவது மாணவர்களை சாதி, மத, இனம் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனரா என்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் சுற்றுச் சுவர், வகுப்பறை சுவர், குடிநீர்த் தொட்டி ஆகியவற்றில் தேவையற்றவாசகங்கள், விமர்சனங்கள், படங்கள் இருப்பதை அழிக்க வேண்டும். வாரந்தோறும் ஒருமுறை தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர், அலுவலர் கூட்டத்தை நடத்தி பள்ளி நலன், மாணவர்கள் நலன் குறித்து விவாதிக்க வேண்டும். யோகா, தியானம் கற்றுத்தரப்படவேண்டும். சாதிய உணர்வுடன் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் கொண்டாட்டங்களுக்குப் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள், பேருந்துகள் நிறுத்தப் பகுதிகளில் மாணவர்கள் சாதி, மத ரீதியாகஅணி சேர்வதை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்”. (நன்றி:தினமணி)

இதிலே கூட்டுவழிபாடு, யோகா, தியானம், கண்காணிப்பு கேமரா பொறுத்துவது போன்றவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் மற்ற அம்சங்கள் உண்மையில் மிக சிறப்பானவை. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இது செயல்படுத்தப்பட அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பிஜேபியின் பினாமி அரசு இதைச் செய்யுமா என்பது பெரிய கேள்விதான்.
மாணவர்களும் ஆசிரியர் தங்களிடம் சாதி பெயரை சொல்லச் சொல்லி கேட்டாலோ இல்லை சாதி பெயரைச் சொல்லி திட்டினாலோ அல்லது சாதிய பாகுபாட்டுடன் நடத்தினாலோ மனம் தளராமல் அருகில் உள்ள பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களிடம் தாங்களாகவோ இல்லை பெற்றோரின் துணையுடனோ தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். சாதிவெறி பிடித்த கழிசடைகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க இது உதவும். எந்தவகையிலும் சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் பள்ளியில் நிம்மதியாக வேலை செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நம்முடைய கடுமையான போராட்டத்தால் அதுபோன்ற சாதிவெறிபிடித்த கீழ்த்தரமான மிருகங்களை நாம் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

- செ.கார்கி