இந்தியாவின் கிழக்குக் கடற்கரை, அதிலும் குறிப்பாக தமிழகக் கடற்கரை அபாயகரமான பகுதி. தெற்கிலிருந்து வடக்கு, வடக்கிலிருந்து தெற்கு என்று கடற்கரையோர நீரோட்டம் கரையை அரிக்கும் பகுதி. மிக நீண்டு தொலைவுக்கு மணற் பரப்பால் ஆன பகுதி. கிழக்குக் கடற்கரை சமவெளிகளாலும் கடல் வெளி இடைத் தட்டை நிலத்தாலும் ஆனது. மேற்குக் கடற்கரையோ மலையோரப் பகுதிகளைப் பரவலாகக் கொண்டது. கிழக்குக் கடற்கரையின் சமவெளியின் பரப்பு 80 முதல் 100 கி.மீ வரை அகலம் கொண்டது. மேற்குக் கடற்கரையில் கடற்கரை இவ்வளவு அகலமானது இல்லை. மேற்கு கடற்கரையில் கலக்கும் நதிகள் டெல்டாக்களை உருவாக்குவதில்லை. கிழக்குக் கடற்கரையில் கலக்கும் நதிகள் டெல்டாக்களை உருவாக்குகின்றன.

cauvery shale gasஆறுகள் கொண்டு வரும் சகதி/ மணலைக் கடல் உள்வாங்கி, கரையில் ஒதுக்க உருவானதுதான் கிழக்குக் கடற்கரையின் சமவெளிப் பிரதேசம். ஒவ்வொரு ஆண்டும் ஆறு மணலைக் கொண்டு வந்து கொட்டும். கடலின் இடது - வலது, வலது -இடது நீரோட்டங்கள் அவற்றை அள்ளி அகற்றும். இவற்றிற்கு இடையிலான சமநிலைதான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடற்கரை. இந்த 50 ஆண்டுகளில் இந்த நிலையில் மாறுதல் வந்துள்ளது. அணைகள் கட்டி ஆறுகளைத் தடுத்தோம். தமிழகத்தின் அனேக ஆறுகள், பெருவெள்ளம் வந்தால் மட்டுமே கடலைத் தொடுகின்றன. இப்போது, பருவ நிலை மாற்றத்தால் ஆறுகளில் வெள்ளம் வருவதே அரிதாகிப் போயிருக்கிறது.

இதற்கிடையில், கடந்த சில பத்தாண்டுகளில் கடற்கரையில் கட்டப்பட்ட துறைமுகங்கள் மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் தமிழ்நாட்டின் கடற்கரை அரிப்புக்கு ஆளாகி வருகிறது. தமிழ்நாட்டின் கடற்கரையில் 44 சதம் அரிப்புக்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த நிலையில் புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு தமிழ்நாட்டின் கடற்கரைக்குப் பிரச்சனையைக் கொண்டுவந்து சேர்க்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் அரிப்பும் கடல் நீர் உள் நுழைவதும், கடலோர பகுதிகளில் உப்பு நீர் நிலத்தடி நீரை உப்பாக்குவதும் அதிகரித்து வருகிறது.

வளர்ச்சி ஆய்வுக்கான சென்னை நிறுவனம் (Madras Institute of Development Studies -MIDS) என்ற அமைப்பிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ். ஜானகிராமன் தலைமையிலான ஆய்வு தரும் விவரங்களைப் பார்ப்போம்.

 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அறியப்பட்ட காவிரி டெல்ட்டாவின் பரப்பு சுருங்கிவிட்டது. விளைநிலங்கள் அதிகரித்த அளவில் தரிசாகி வருகின்றன.

1971ஆம் ஆண்டின் நில மேற்பரப்புப் படத்தையும் 2014ஆம் ஆண்டின் புவியியல் தகவல் முறைமை (geographic information system -GIS) ஒப்பிட்டபோது இது தெரியவருகிறது. டெல்டாவின் பரப்பில் 20 சதம் சுருங்கிவிட்டதை அவை காட்டுகின்றன. மனிதத் தலையீடும் (விவசாயமல்லாத நோக்கங்களுக்கு- எண்ணெய் தொழில்- இதர தொழில்கள்- நகர்மயம் இன்ன பிற) பருவநிலை மாற்றமும் இந்த நிலைக்குக் காரணம். மேலும், காவிரி நீர் விவசாயத்துக்குக் கிடைக்காதது முக்கிய காரணம் என்று பேரா. ஜனக்ராஜன் சொல்கிறார்.

1971க்குப் பின்பு உப்பு நீரில் வளரும் அலையாத்திகளின் பரப்பு 14 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதில் மகிழ்ச்சி அடைய ஏதும் இல்லை. கடல் நீர் டெல்ட்டாவிற்குள் நுழைந்ததுதான் காரணம் என்கிறது ஆய்வு.

தமிழ்நாட்டின் (கடல் மட்டத்தை விட) தாழ்ந்த பரப்பில் 72 சதம் காவிரி டெல்டாவில் வருகிறது. இந்தப் பரப்பு, பருவநிலை மாற்றத்தின் காரணமாக மூழ்கும் அபாயம் நெருக்கத்தில் இருக்கிறது என்றும் ஆய்வு சொல்கிறது.

 காவிரி நதியின் மீது கட்டப்பட்ட தொடர்ச்சியான அணைகள் டெல்டாவைப் பாதிக்கின்றன. அவை கடலில் சேர வேண்டிய சகதியைத் தடுத்து மேடாகின்றன. அதேசமயம், கடற்கரைக்கு வந்து சேர வேண்டிய மணல் வராத காரணத்தால் கடற்கரைக்குள் கடல் நுழைகிறது. கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடும்போது, காவிரி டெல்டாவின் கடற்கரைக்கு வந்து சேரவேண்டிய 80 சதம் சகதி வந்து சேரவில்லை என்று ஜனக்ராஜன் சொல்கிறார்.

காவிரி டெல்டாவில் பரவலாகப் பெய்ய வேண்டிய 1200 மி.மீ மழை இப்போதும் பெய்கிறது. ஆனால், பரவலாக அல்ல, சில பகுதிகளில் மட்டும் பெய்கிறது என்று ஆய்வு குறிப்பிடுகிறது. விளைவாக, ஒரு பக்கம் வெள்ளத்தில் பயிர்கள் அழிகின்றன, மற்றொரு பகுதியில் வறட்சியாலும் பயிர்கள் அழிகின்றன.

இவற்றின் விளைவாக, 1971டன் ஒப்பிடும்போது, தற்போதைய நிலையில், பயிர் செய்யப்பட்ட பரப்பில் 27 சதம் தரிசாகிப் போய்விட்டது. விளைவாக, கடல் நீர் உள் நுழைகிறது. இறால் பண்ணைகள் அதிகரிக்கின்றன. விவசாயம் சுருங்குகிறது என்று பேரா. ஜனக்ராஜன் குறிப்பிடுகிறார்.

ஏறக்குறைய இது போன்ற நிலைதான் ஆந்திராவின் கிருஷ்ணா- கோதாவரி பாசனப் பகுதியிலும் இருக்கிறது.

கிருஷ்ணா கோதாவரி ஆற்று வடி நிலத்தில் 1.5 அடி முதல் 5.4 அடி வரை கடற்கரை நிலம் கடலுக்குள் 30 ஆண்டுகளில் மூழ்கியுள்ளதாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற புவியிலாளர் கிருஷ்ணா ராவ் குறிப்பிடுகிறார். இதன் காரணமாக மண் உப்பாகி விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது என்றும் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். இதற்கான காரணம் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் மட்ட உயர்வு என்கிறார் அவர்.

அவர் மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

kg shale gas

நிலத்திலிருந்து பெட்ரோலியப் பொருட்களை எடுப்பது, புவிக்குக் கீழ் உள்ள பாறை இடைவெளிகளைப் பாதித்து, அதனால் நிலம் கீழே இறங்குகிறது என்கிறார். அவர் கிருஷ்ணா - கோதாவரி டெல்டா பரிரக்ஷன சமிதியின் உறுப்பினர். இந்த அமைப்பு கடல் நீர் உள் நுழைவுக்கு ONGC உள்ளிட்ட பெட்ரோலிய கம்பெனிகள்தான் பொறுப்பு என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கைகளை ஆய்வுகளை வெளிப்படுத்த ONGC மறுத்துவிட்டது. The Hindu பத்திரிக்கையிடம் கிடைத்த மேற்படி ஆய்வுகளின் சாரம் ''குறிப்பிடத்தக்க அளவு நிலப்பரப்பில் மாற்றம் வந்துள்ளது'' என்று ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், என்ன காரணம் என்பதைச் சொல்லவில்லை.

ஆனால், அந்த ஆய்வுகள் இரண்டு காரணங்களில் ஒன்று இருக்க வேண்டும் என்று சொல்கின்றன. ஒரு காரணம் அப்பகுதிகள் இறால் பண்ணைகளால் சூழப்பட்டவை. மற்ற காரணம், அவை எண்ணெய் துரப்பனப் பணிகள் நடத்த இடத்துக்கு அருகே உள்ளன என்பது.

 இந்த ஆய்வுகள்/ செய்திகள் ஒன்றை உறுதி செய்கின்றன. கதிராமங்கலம்/ நெடுவாசல்/ நெடுங்காடு பிரச்சனை தமிழ்நாட்டின் பிரச்சனை அல்ல... தமிழ் தேசியப் பிரச்சினை அல்ல...

இந்தியப் பரப்பைக் காவுகொள்ளும் இந்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான பல்வேறு மாநிலங்களின் பிரச்சினை..

காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோலியம் கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீடு பகுதியை  (Petroleum, Chemical and Petrochemical Investment Region -PCPIR) 2012ல் இந்திய அரசு அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை மேற்படி பகுதியின் அங்கம் என்று எடப்பாடி அரசு நேற்று அறிவித்துள்ளது. மேற்படி PCPIR பகுதியில் கிருஷ்ணா - கோதாவரி பகுதி முன்பே வந்துவிட்டது. ரிலையன்சின் வேட்டைக்காடு ஆகிவிட்டது.

இந்திய அரசை, அதற்குத் துணைபோகும் முதலாளித்துவ சார்பு தமிழக - ஆந்திர மாநில - புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகளை, அந்த அரசுகளை நடத்தும் கட்சிகளை எதிர்க்கும் இயக்கம் வேண்டும். வெறும் தமிழ்த் தேசியம் போதாது.

உணவினைப் பாதுகாக்க, வாழும் நிலத்தைப் பாதுகாக்க, மோடியின் மத்திய அரசை, துணைபோகும் மாநில அரசுகளை எதிர்த்து எழ வேண்டும். குறுகிய பார்வையை விடுத்து அனைத்தும் தழுவிய அறிவியல் பார்வையைப் பெற வேண்டும்...

கதிராமங்கலம், நெடுவாசல் மக்களுக்கு அனைத்தும் தழுவிய அறிவியல் பார்வையை, அரசியல் பார்வையை யார் ஊட்டப் போகிறார்கள்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

- சி.மதிவாணன்