வில்டியூரெண்ட் - ஒரு வரலாற்றுத் தத்துவ அறிஞர். அவர் எழுதிய The Pheasure of Philosophy’ எனும் நூலின் ஒரு பகுதியை பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன் ‘உலக மதங்கள் - ஒரு தத்துவப் பார்வை’ என்கிற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறார். மதங்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் அலசப்படும் இந்த முயற்சி வாசகர்களின் சுயசிந்தனையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

விவாதிப்பவர்கள்

ஆண்ட்ரூ : நாத்திகர்
ஏரியல் : ஏற்பாட்டாளர்
க்ளாரன்ஸ் : உலோகாயதவாதி
எஸ்தர் : யூதர்
சர்.ஜேம்ஸ் : மானுடவியலாளர்
குங் : சீனர்
மத்தேயு : கத்தோலிக்கர்
பவுல் : புரோட்டஸ்டன்ட்
பிலிப் : வரலாற்றியலாளர்
சித்தா : இந்து
தியோடர் : கிரேக்கர்
வில்லியம் : உளவியலாளர்

ஏரியல்: நண்பர்களே! விசுவாசத்திற்கு உடன் பாடாகவோ முரண்பாடாகவோ வாதிட உறுதி எடுத்துக் கொள்ளும் வீரர்களாக நாம் இந்த அற்புதமான டியூப்லிப்ஸ் மலர்க்குவியலைச் சுற்றி அமர்வோம் வாருங்கள்! ஏசுவின் விசு வாசியான மத்தேயு, மத நம்பிக்கையற்ற ஆண்ட்ரூ வாருங்கள் விவாதிக்கலாம். உங்களில் இந்த அற்புதமான அந்திவானக் காட்சியை வியந்து இரசிக்கக் கூடியவர்கள் இங்கே அமரலாம். நன்று, விவாதத்தைத் தொடங்கு வோமா?

Budharபவுல்: சரி, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ஏரியல்?

ஏரி: மதத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நான் அவ்விஷயத்தில் ஆர்வமாகவும் அதே சமயம் குழப்பமாகவும் இருக்கிறேன். ஒருவேளை அதே போன்று இன்னும் சிலரும் இருக்கலாம். மதம் எப்படித் தோன்றியது - அதன் பல்வேறு வடிவங்களின் அர்த்தங்கள் - அருமைகள் - இப்போது அது எந்த நிலையில் இருக்கிறது அமெரிக்காவில் அதற்கு என்ன நிகழவிருக்கிறது என்பவைகளைப் பற்றி நீங்கள் இப்போது விளக்கவேண்டும். மேலும் நான் அழிவில்லாத ஆன்மாவைப் பெற்றிருக்கிறேனா இல்லையா? கடவுள் உண்டா? இல்லையா? என்பவை பற்றியும் நீங்கள் கூறவேண்டும் அவ்வளவுதான்.

க்ளாரன்ஸ்: நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமானால் இதை மிகவும் சுருக்கமாகச் செய்துவிடலாம்.

ஏரி: செய்யலாம். ஆனால், நீங்கள் எவ்வெவற்றில் முரண் படுகிறீர்களோ அவற்றில் நான் அதிக ஆர்வமுள்ளவளாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் இவ்விஷயத்தில் ஒரே கருத்துடையவர்கள் அல்ல என்றறிந்தே உங்களை இங்கே கூட்டியிருக்கிறேன். அடுத்தவர்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று உறுதியாகக் கருதுகிற நீங்கள் அனைவரும் பங்கேற்கிற இவ்விவாதம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படித் தொடங்கலாம்?

ஆண்: மதம் என்றால் என்ன என்பதற்கான அவரவர்களின் வரையறைகளை விளக்குவதன் மூலம் தொடங்கலாம்.

ஏரி: ஓ! மதத்தைப் பற்றிய வரையறைகள் மிகவும் சலிப்பூட்டுபவை.

பிலிப்: நான் ஒருமுறை மதத்தைப் பற்றிய வரையறைகளைத் தொகுத்தேன். அவற்றில் சிலவற்றை என்னால் நினைவுகூர இயலும். ஸ்க்லி யர்மேக்கர் சொல்கிறார்: மதம் என்பது, `எல்லாமறத் தன்னையிழந்த தலைவனைச் சாரும் பேருணர்வு’ என்று, ஹேவ்லாக் எலிஸ் சொல்கிறார், `உலகொடு ஒட்ட ஒழுகும் உள்ளுணர்வு’ என்று. `உலகப் பெரும் சக்திகளோடு நம்மைத் தொடர்பு படுத்துபவையே மதம், என்பார் கில்பர்ட் முர்ரே ஸ்பெங்கிலர், `புலன்கடந்த மெய்நெறியை வாழ்நெறியாய்க் கொண்டு வாழ்ந்து அனுபவிப்பதே மதம். அதாவது, இருப்பு நிலை கடந்த தாய் என்றும் உளதாய், இல தாய், உணரும் பொருளதாய் உள்ள இறையுலகு பற்றிய சிந்தனை என்று விளக்குகிறார். `மறைபொருளுக்குக் கீழ்ப்படிவதே அது என்று பேராசிரியர் ஷாட்வெல் நினைக்கிறார். மனிதனின் தன்னுணர்வு சார்பான வாழ் விருப்பு நிலையின் அதிசய மெய்ம்மையின் போற்றுதலுக்கான குறியீடே மதம் என்று வரையறுக்கிறார் எவரெட்டீன் மார்ட்டின். ``நமது ஆற்றல்களின் சுதந்திரச் செயற்பாட்டைத் தடை செய்யும் மனவுறுத்தல்களின் தொகுதி’ என ரெய்னாச் விளக்குகிறார்.

மத்தேயு: இதுதான் நான் இதுவரை கேட்ட எல்லா வரையறைகளிலும் மிகவும் வன்மமானதும் கேலிக்குரியதும் ஆகும்.

வில்லியம்: இவையெல்லாம் தெளிவற்ற வரையறைகளுக்குச் சில எடுத்துக் காட்டுகள்.

பிலிப்: டைலரின் வரையறை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று கருதுகிறேன். அவர், `மதம் என்பது மாயசக்திகளின் மீதுள்ள நம்பிக்கை’ என்று எளிமையாக வரையறுக்கிறார்.

சர்.ஜே: ஆனால், சில கடவுள்கள் முதற்பொருளாகக் கருதப்பட்டு, நம்பிக்கை மட்டும் போதாது, அவற்றிற்கு நீங்கள் வழிபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கருதப்படுகிறதே!

Templeபிலிப்: மதத்தை நீங்கள் எப்படி வரையறை செய்வீர்கள் ஜேம்ஸ்?

சர்.ஜே.: இயற்கையின் போக்கையும், மனித வாழ்க்கையையும் கட்டுப்படுத்துவதாகவோ அல்லது இயக்கு வதாகவோ நம்பப்படும் மனித சக்திக்கும் மேலான சக்தியோடு நல்லிணக்கம் செய்து கொள்வது.

ஏரி: அதாவது இயற்கை சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளை வழிபடுதல் என்று கூறுகிறீர்கள்.

சர்.ஜே.: ஆம்! நான் கூறியதைச் சுருக்கமாகச் சொல்லியமைக்கு நன்றி.

ஏரி: இக்கேள்விக்கு இது வரையில் லூக்ரிடியஸைத் தவிர நன்றாக யாரும் பதிலளிக்கவில்லை. `அச்சமே உலகில் முதலில் கடவுள்களை உண்டாக்கியது’. மனிதனின் ஆரம்ப கால வாழ்க்கை ஆயிரக்கணக்கான அபாயங்களால் சூழப்பட்டிருந்தது; இயற்கையாகவே இறப்பு என்பது அவர்களுக்கு அரிதாகவே இருந்தது. முதுமைப் பருவம் அடைவதற்கு மிகமிக முந்தியே வன்முறைகளாலோ, நோய்களாலோ அவர்கள் அழிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். நாகரிகமடையாத ஆதி மனிதன் காரண காரியத் தொடர்புகளைப் புரிந்து கொள்ள முடியாத பொழுது, அவன் தன் சொந்த உடலின் இயக்கத்தையே மாதிரியாகக் கொண்டு ஒவ்வொரு இயற்கைப் பொருளுக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது - அதுவே அப்பொருளின் செயற்பாட்டிற்குக் காரணம் என்று தானாகவே காரணம் கற்பித்துக் கொண்டான். காற்றினால் பாதையின் குறுக்கே பறந்து செல்லும் காகிதத்தைப் பார்க்கின்ற ஒரு நாயின் கண்களில் அச்சத்தையோ ஆச்சரியத்தையோ நீங்கள் கண்டிருப்பீர்கள் அல்லவா? அது காற்றைக் காணமுடியாது; நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன் அங்கே - அந்த காகிதத்திற்குள் ஒரு ஆவி இருக்கிறது. அதனால் தான் அது நகர்கிறது என்று அது கற்பனை செய்து கொள்கிறது. அது ஓர் மதச் சார்புள்ள நாய். அது ஒரு பழமையான ஆன்மீகவாதி. இப்படித்தான் மதம் தொடங்கியது.

ஏரி: இதை நாம் நம்பலாமா சர்.ஜேம்ஸ்?

சர்.ஜே: அது உங்கள் விருப்பம். ஆண்ட்ரூ தொடக்கக் கட்டம் என்று குறிப்பிட்டது உண்மையில் இரண்டாவது கட்ட வளர்ச்சியாகும். அதிசயங்களை நிகழ்த்தும் பெரும் சக்திகளை அந்தக் கட்டத்தில் மால்னீஷியத் தீவினர் `மனா’ (Mana) என்றும், அமெரிக்க இந்தியர்கள், `மனிதோ’ (Manitou) என்றும் வழிபட்டனர். அந்தச் சக்திகள் ஆவி நிலையில் தனித்தனியே பல பொருள்களில் நிரம்பியிருந்தனவாகக் கருதப்பட்டன.

சித்தா: அந்த ஆரம்பகால நம்பிக்கைகள் மிகவும் ஆழமானவை. எல்லாப் பொருள்களும் ஆற்றல்களே என்ற நவீன விஞ்ஞானத்தின் மீதுள்ள இன்றைய நம்பிக்கையிலிருந்து அவை வேறுபட்டவை அல்ல.

சர்.ஜே.: இந்தப் பழைய நம்பிக்கைகள் இன்றளவும் நம்மிடம் பல வடிவங்களில் இருக்கின்றன. ஒரு காலத்தில் மலைகள், ஆறுகள், பாறைகள், மரங்கள், வானம் ஆகியவைகள் `மாய சக்தியின் வெளிப்புற வடிவங்களாக’க் கருதப்பட்டன. இன்னமும் நாம் இந்த இயற்கைச் சக்திகளை உருவகிக்கத்தான் விரும்புகிறோம். கிரேக்கர்கள் வானத்தை `யுரேனஸ்’ (Uranos) கடவுளின் உடலாகவும், நிலவைச் `சிலேன்’ (Silence) என்ற பெண் கடவுளாகவும், பூமியைக் `கேயா’ (Gaea) என்ற பெண் கடவுளாகவும், கடலைப் `பொசெய்டன்’ (Poseidon) என்ற கடவுளாகவும் கருதினர்.

தியோ: அய்யா! இவை யெல்லாம் கற்றறிவாளரான கிரேக்கருக்குச் சொல்லப்பட்ட புனைந்துரைகள் மட்டுமே.

சர்.ஜே: ஆனால் ஒரு சராசரி கிரேக்கருக்கு இவைகள் எல்லாம் உண்மைகள்தான் இல்லையா? ஆனால், இவ் விஷயத்தில் எல்லா நாட்டு மக்களும் ஒரே மாதிரியானவர்களே. ஆரம்ப கால ஜெர்மானியர்களுக்கும், ஸ்காண்டிநேவியர்களுக்கும் காடுகள், பேய்களும் பூதங்களும் இராட்சதர்களும், குள்ளத் தெய்வங்களும், பறவையின் சிறகுகளும் நகங்களும் கொண்ட கோரப் பெண்ணுருவ அரக்கியர்களும், வனத்தெய்வங்களும், அடிநிலக் கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களும் நிறைந்து அடர்ந்து அச்சத்தை ஊட்டுவதாகத் தோன்றின. இந்த விவரங்களை ``ரெய்ன் கோல்டும் பியர் ஜெண்டும்’’ (Rheingold and Peer Gynt) என்ற நூலில் காணலாம். அயர்லாந்தின் விவசாயிகள் இன்றளவும் தேவதைகள் மீதும் அவற்றின் செயல்விளைவுகளின் மீதும் நம்பிக்கை வைத்து அச்சத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அய்ரிஸ் மறு மலர்ச்சி இலக்கியங்களிலிருந்து தேவதைகள் பற்றிய கதைகளை நீக்கிவிட்டால் உரைநடை மட்டுமே எஞ்சும்.

சிவந்த மனிதர்களான தங்களைப் பாதுகாக்கும் தேவதைகள் வாழும் மரங்களை வெள்ளை மனிதர்கள் வெட்டி விடுவதால்தான் தங்களுக்குத் துன்பம் நேருகிறது என்று அமெரிக்க இந்தியர்கள் சில நேரங்களில் கருதுகிறார்கள். மொலுக்கா தீவுகளில் பூத்துக் குலுங்கும் மரங்கள் குழந்தையுடன் உள்ள பெண்ணைப் போன்று பாவிக்கப்பட்டு அவைகளுக்குச் செய்யும் அதே சடங்குகளோடு கொண்டாடப்படுகின்றன. கூச்சலோ அமைதியின்மையோ அவற்றின் அருகில் அனுமதிக்கப்பட வில்லை. ஏனெனில், `என் செய்ன்டே’ (enceinte) என்ற அச்சத்திற்கு ஆட்பட்ட பெண்களைப் போன்று அவைகள் பழங்களைப் பருவத்திற்கு முன்பேயே உதிர்த்து விடக்கூடும் என்று மக்கள் நம்பினர். அமெய்னா நாட்டில் நெல்வயல்கள் பருவத்திற்கு வரும்பொழுது காதைத் துளைக்கும் சப்தங்கள் அனைத்தும் அவற்றினருகில் தடை செய்யப்பட்டிருக்கும். இல்லாவிடில், அவைகள் கருச்சிதைவு அடைந்து முழுமையாக வளர்ச்சி அடையாமல் பதராகிப் போகும் என்று நம்பப்படுகிறது. சிறப்புப் பூசனைக்குரிய தனிமரங்கள் நிறைந்த வனங்கள் கால் நாட்டில் இருந்தன. இங்கிலாந்தில் ட்ரூயிட்ஸ் இனத்தவர்கள் ஓக் மரத்தின் புற்களை மதச் சடங்குகளோடு கூட்டுவார்கள்.

ஏரி: அங்கு இன்றளவும் சில சமயச் சடங்குகள் இப் புற்களோடு தொடர்பு உடையனவைகளாக இருக்கின்றன இல்லையா? மேற்கொண்டு சொல்லுங்கள் ஜேம்ஸ்.

சர்.ஜே: நன்று! இதே ஆன்மீகம் விண்மீன்களோடும் தொடர்புபடுத்தப்பட்டது. ஒவ்வொரு விண்மீனும் ஒரு வழிகாட்டும் ஆவிக்கு வீடாகக் கருதப்பட்டது. பாபிலோனியர்கள் ஏழு கிரகங்களைத் தெய்வத்தன்மை வாய்ந்தவைகளாகப் பிரித்து அவற்றின் பெயர்களை வாரத்தின் ஏழு நாட்களுக்கு இட்டனர். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் இவற்றை இன்றளவும் நாம் தன்னுணர்வின்றி போற்றுகின்றோம். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் டைவ்ஸ் (Tives), ஓடின் (Wadin), தோர் (Thor), ஃபிரிகா ஆகிய ஸ்காண்டிநேவியக் கடவுள்களைச் சிறப்பிக்கின்றோம். அதே நாட்களில் பிரான்ஸ் நாட்டினர் ரோமானியக் கடவுள்களான மார்ஸ் (Mars), மெர்க்குரி (Mercury), ஜோவ் (Jove), வீனஸ் (Venus) ஆகியவற்றை வணங்குகின்றனர். இந்த வகைக் கிரகங்களின் ஆவிகளே மனித இனத்தின் விதியை ஆளுகின்றன என்ற கருத்தின் அடிப்படையில் பாபிலோனிலிருந்து சோதிடயியல் வெளிப்பட்டது. இன்றுவரை நம்முடைய செய்தித்தாள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய சோதிடக் கணிப்புகளை விற்பனை செய்கின்றன. நாம் விசித்திரமான, போராட்டமான, மகிழ்ச்சியான மனப்போக்குகளைப் பற்றிப் பேசும் பொழுது சோதிட மொழியைப் பயன்படுத்துகிறோம். பல இனத்தவர்கள் சந்திரகிரகணத்தின்போது சந்திரனைத் தாக்கும் தீய ஆவிகளை விரட்டும் பொருட்டு ஒரு மிகப் பயங்கரமான ஒலியை எழுப்புவார்கள். அனக்ஸாகரஸ் என்பவர் `சூரியன் என்பது கடவுளல்ல - அது ஒரு நெருப்புக் கோளம்’ என்று கூறியதற்காக ஏதென்ஸ் நகரத்தவரால் நாடு கடத்தப்பட்டார். கிறித்துவ மதத்தில் இந்த ஆவிகள் தேவதைகளாகக் கருதப்படுகின்றன. கெப்லர் ஒவ்வொரு கோளும் ஒரு வழிகாட்டியாக ஒரு தேவதையைப் பெற்றிருந்தது என்று நம்பியதாகத் தெரிகிறது. புனிதர்களின் தலையைச் சுற்றியுள்ள ஒளி வட்டமானது பெரும்பாலும் சூரிய வழி பாட்டின் அடையாளமேயாகும். ஜப்பானிய பேரரசர் (மிக்காடோ) (Mikado) இன்றும் சூரியக் கடவுளாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஒரு ஆவி குடியிருக்கிறது என்ற நம்பிக்கையே ஆன்மீகம் என்றும், இந்த ஆன்மீகமே மதத்தின் தொடக்ககாலக் கரு என்றும் நாம் உறுதியாகக் கூறலாம்.

பிலிப்: படைப்பாற்றல் சின்னமாகக் குறியை வழிபடுதல் இந்தத் தொடக்க கால ஆன்மீகத்தின் ஒரு வடிவம் அல்லவா?

Lord Sivaசர்.ஜே: ஆமாம்! உயிர்மங்களைப் பற்றிய நவீன ஆய்வு முறைப்படி இனப்பெருக்கத்தின் உட்செயல்களைப் பற்றி நாம் அறிந்துள்ளது போல் ஆதிமனிதன் அறிந்திருக்கவில்லை. அவன் அதன் வெளிப்புற அமைப்பை மட்டுமே அறிந்திருந்தான். அவன் செயல்களைப் புரிந்து கொள்ள இயலாத காரணத்தால் அவன் அதற்குத் தெய்வத்தன்மை கற்பித்து, அதற்குள்ளே படைப்புச் சக்தி மிக்க ஆவிகள் இருப்பதாக நினைத்து அதனை வழிபாட்டிற்குரியதாக ஆக்கிவிட்டான்.

சித்தா: இது பொருத்தமான மதமாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அமைப்புகளில் வேறு எங்கும் இல்லாத உயிர்ப்பும் வளர்ச்சியும் பற்றிய அதிசயங்கள் தோன்றுகின்றன. அவைகள் படைப்புச் சக்தியின் நேரடியான - கண் கூடான உருவங்கள். இனப் பெருக்கத்தின் சின்னங்களான `லிங்கமும்’ `யோனியும்’ இன்றும் எங்கள் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய மந்திர சக்தி மிகுந்த பொருட்களாகக் கருதி வழி படுகின்றனர்!

பிலிப்: எகிப்தியர்களின் தொன்மையான குறிப்பேடுகள் படைப்பாற்றல் குறி வழிபாட்டைத் தங்களுடைய பழமையான சமயமாகக் குறிப்பிடுகின்றன. ரோமானியர்களும்கூட பிள்ளைப்பேறு பெறுவதற்காக லிங்க வடிவ தாயத்துக்களை அணிந்திருந்தனர். லிபரேலியா, பாக்கனேலியா மற்றும் பல விழாக்களின் போதும் அவர்கள் தெய்வத்தன்மை வாய்ந்த இனப்பெருக்க மறைபொருளைக் கொண்டாடினார்கள். ஹிராபாலிஸ் என்ற இடத்திலுள்ள ஆப்ரோடைட் (Aphrodite) கோயிலின் முன்னே நின்று கொண்டிருக்கும் ஏறத்தாழ 200 அடி உயரமான மிகப்பெரிய தூண்களை தூசியன் என்பார் படைப்பாற்றல் குறிகளே என்று குறிப்பிடுகிறார்.

ஆண்: அனைத்து வழிபாடுகளும் - குறைந்தபட்சம் பெண்களிடத்தில் - ஒரு காதல் உணர்விற்குக் கட்டுப்பட்டதே என்று நம்புகிறேன். புனிதத் தெரசாவின் கருத்து விளக்கங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே காம உணர்வுகளோடும் கற்பனைத் தோற்றங்களோடும் தொடர்புடையனவாகவே இருந்தன. ரேஃப் எப்லிங்கையும், ஹெவ்லாக் எலிசையும் நாம் நம்புவோமானால், அவர்கள் சொல்வது போல ஏனைய புனிதர்களிடத்திலும் இத்தன்மை உள்ள உண்மையை உணரலாம். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த உணர்ச்சிகளில் ஒன்றில் மட்டும் என் அனுபவங்கள் சிறைப்படுத்தப்பட்டதால் நான் இத் துறையில் நேரடியாக எதுவும் பேச இயலாது.

சர்.ஜே: உண்மையில் மத உணர்வில் சிற்றின்பத்தின் பங்கும், தொடக்க கால மதத்தில் படைப்பாற்றல் குறி வழிபாடும் மிகைப்படுத்தப்பட்டு விட்டன. மரவழி பாடு, சதுரத்தூபி, மே கம்பங்கள், தோல் நுணியகற்றும் சமயச் சடங்கு ஆகியவை படைப்பாற்றல் குறி வகையின என்பது விவாதத்திற்கு உரியதாகும்!

தியோ: இனப்பெருக்கத்தைக் கொண்டாடும் இத்தகைய பழமையான சமயச் சடங்குகள் பாலினப் பெருக்கம் என்பதைவிட மதச் சடங்காகவே இருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிறித்துவ மதத்தின் காலங்களில் - ஏறத்தாழ மார்டி கிராஸ் வாழ்ந்த காலங்களில் இவற்றிற்கான அனுமதிகள் அதிகமாக வளர்ந்தன. உண்மையில் இது சிற்றின்பச் சார்பான நடவடிக்கை என்று கருதுவதற்கு மாறாக, அது புனிதத் தன்மையும், எல்லாவற்றையும்விட மிக மேன்மையும் வாய்ந்ததாகக் கருதலாம்.

ஆண்: அதே அளவு தேவையற்றதாகவும் கருதலாம்.

ஏரி: ஆக, மதத்தின் தோற்றத்தில் முதற்பங்கு வகிப்பது ஆன்மீகமே. சரி! அடுத்தது என்னவென்பதைக் காண்போமா சர்.ஜேம்ஸ். 

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)