சாகித்ய அகாதமி விருது வாங்கியுள்ள திலகவதி ஐ.பி.எஸ் விருதுகள் பற்றி தமிழ்ச் சூழலில் நாய்ச் சண்டை நடப்பதாகவும் வாங்கியது பற்றி மகிழ்ச்சி அடையவில்லை என்றும் ‘புத்தகம் பேசுது’ பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

குற்ற உணர்ச்சிதான் அப்படி சொல்ல வைத்திருக்க முடியும். எந்த நாய் குரைத்தாலும் சரி, நான் இந்த விருதுக்குத் தகுதியுள்ள, நாய்க் குரைச்சலால் தேயாத சூரியன் என்று தான் சொல்லிக் கொள்ள முடியாத நிலை அவருக்கே உறைத்திருக்கிறது. அதனால் தான் தகுதியுள்ள பலருக்கு இந்த விருது தரப்படாதது பற்றியும் தேர்வு முறை குறித்தும் அவரே அந்த போட்டியில் பேசியிருக்கிறார்.

நிறைய மொழிபெயர்த்துக் குவிக்கும் திலகவதியை மொழிபெயர்ப்புக்கான விருதுக்கு அகாதமி தேர்வு செய்திருந்தால் பெரிதாக சர்ச்சை எதுவும் எழப்போவதில்லை. சுந்தர ராமசாமி, பிரமிள், ஆ. மாதவன், கோவை ஞானி, ஆர். சூடாமணி, அம்பை, வண்ண நிலவன், வண்ணதாசன், பா.செயப்பிரகாசம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், ஜெயமோகன், கோணங்கி, தமிழ்ச்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன் என்று (என் கணிப்பிலேயே) சாகித்ய அகாதமி விருதுக்கு தகுதியுடையோர் பட்டியல் நீளமாக உண்டு. அவர்களை ஒதுக்கி விட்டு தனக்குத் தரும்போது ஒர் படைப்பாளி கூச்சப்பட வேண்டும். அந்த கூச்சத்தை நாம் வைரமுத்துவிடமோ வா.செ. குழந்தை சாமியிடமோ எதிர்பார்ப்பதில்லை. திலகவதியிடம் எதிர்பார்த்ததும் தவறு போலிருக்கிறது.

இந்த விருது கடைசியில் ஒரு மூன்று பேரின் தேர்வுதான் என்று தன் பேட்டியில் திலகவதியே நமக்கு சமாதனம் சொல்லுகிறார். தேர்வு முறை பற்றி அவர் தெரிவிக்கும் தகவல்கள் முக்கியமானவை. முதலில் ஒரு நூறு பேரிடம் கேட்டு 50 புத்தகங்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறதாம். பிறகு அதிலிருந்து 10 நூல்கள் தேர்வு. அடுத்து ஐவர் குழு தேர்வு செய்யும் ஐந்து நூல்கள், கடைசியாக மூன்று பேர் அந்த ஐந்தில் ஒன்றை முடிவு செய்கிறார்களாம்.

தகவலறியும் உரிமைச் சட்டம் வந்துவிட்ட சூழலில், நாம் கேட்க விரும்புவது யார் அந்த நூறு பேர்? அந்த ஐம்பது நூல்கள் எவை? ஐவர் குழு யார்? கடைசி மூவர் யார்? இந்த விவரங்களை சாகித்ய அகாதமி பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

எந்தெந்த நூல்கள் 50தாவது இடம் பிடித்தன என்று தெரிந்தால் ஒருவேளை அந்த 50ல் சிறந்தது திலகவதியின் கல்மரம்தான் என்று கூட நாம் ஏற்றுக் கொள்ளும் நிலை இருக்கலாம். ஐம்பதில் இடம் பெறத் தவறிய இன்னும் சிறந்த நூல்கள் இந்த காலகட்டத்தில் இருந்திருந்தால், அந்த நூறு பேர் யார், அவர்கள் பரிந்துரை ஏன் ஏற்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்யலாம்.

திலகவதி விருது தொடர்பாக மட்டுமல்ல. ஆரம்ப விருது முதலே மேற்படி தகவல்களை வெளியிடுவதே சரி. மிகக் குறைந்தபட்சம் கடந்த 20 வருட விவரங்களையாவது சாகித்ய அகாதமி வெளியிட வேண்டும். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்காக விண்ணப்பிக்க நான் தயார், கூட்டாக இன்னும் பலர் வந்தால் நிச்சயம் மகிழ்வேன். சாகித்ய அகாதமியின் விருதுத் தேர்வு விதிகளில் ஓட்டைகள் இருந்தால் அதை அடைப்பதில் படைப்பாளிகள் மட்டுமல்ல வாசகர்களும் நுகர்வோர் என்ற முறையில் உரிமையும் கடமையும் உடையவர்கள்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் நிறைய தனியார் அமைப்புகள், அறக் கட்டளைகள் மாதாமாதம் பரிசுகள் விருதுகள் அளித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சாகித்ய அகாதமி விருது அரசு அமைப்புடையது என்பதாலும் அதை ஒரு அறிவுஜீவிக்குரிய பெரும் கனவுடன் நேரு உருவாக்கினார் என்பதாலும் நான் அதற்கு முக்கியத்துவம் தருகிறேன்.

சாகித்ய அகாதமி விருதை அதற்குரியவருக்குத் தராமல் வேறொருவருக்குத் தரும் ஒவ்வொரு முறையும், இதற்கு முன்பு தான் சரியாகவே விருதளித்த படைப்பாளிகளை அகாதமி அவமானப்படுத்துகிறது. இதுவே என் முக்கியமான வருத்தம்.

(நன்றி: தீம்தரிகிட - ஜனவரி 2006)

-ஞாநி