தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழை செம்மொழியாகக் கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்தது. அதேபோல் பழமை வாய்ந்த சம்ஸ்கிருதத்தையும் செம்மொழியாக அறிவிக்க வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது - என்று அக்டோபர் 27 ஆம் நாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்து, அந்தச் செய்தி அக்டோபர் 28 வெள்ளிக் கிழமை பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்ஸ்கிருதத்தை செம்மொழியாக அறிவிப்பதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அதிகாரப்பூர்வமாக அம்முடிவு அறிவித்து உறுதி செய்யப்படவில்லை. இந்த அறிவிப்பால் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஆளும் கூட்டணிக் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ். கூட்டணிக் கட்சிகள் இரு தரப்பிலுமே எந்தச் சலனமுமே ஏற்படவில்லை. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் ஒரு நூற்றாண்டுக் காலமாகப் போராடி, கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி நூறு விழுக்காடு வெற்றிபெற்று, பல நிர்ப்பந்தங்களுக்குப் பிறகே தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் - சம்ஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று எவன் இங்கே அழுதான்? செம்மொழிக்கான தகுதி, சம்ஸ்கிருதத்துக்கு உண்டா? ‘தகுதி’ என்பது வெகு காலம் இருந்தது என்பது மாத்திரம்தானா? ‘மம்மிகள்’ கூட பல ஆயிரம் ஆண்டுகள் இருந்திருக்கின்றன. சம்ஸ்கிருதம் மொழி என்கிற வகையில் உலகுக்கு வழங்கிய பயனுள்ள படைப்புகள் எவை?

ஆபாசக் குப்பைகளையும், மூட நம்பிக்கைக் கழிவுகளையும் தவிர சம்ஸ்கிருதத்தில் உன்னதம் என்ன இருக்கிறது? மனித இனத்தை இழிவு செய்யும் பல கேவலமான கருத்துக்கள் சம்ஸ்கிருத வேத - ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. அபத்தமான, அசுத்தமான, ஆபத்தான கருத்துக்களின் உறைவிடமான ஒரு மொழியைச் செம்மொழி என்று கூறுவோர் நேர்மையுணர்ச்சியற்றவர்களாகவே இருக்க வேண்டும்.

சம்ஸ்கிருதம் ‘தேவ பாஷை’ என்று சொல்லப்படுமானால், அது தேவர்கள் - அல்லது கடவுள் கூட்டத்தின் விவகாரம். கடவுள்களின் மொழிக்கு மனிதர்கள் மானியம் வழங்குவது அதிகப்படியான ஆணவம். இம்மாதிரியான விவாதங்களுக்கு அப்பால், வியப்புக்கும், கண்டனத்துக்கும் உரிய விவகாரமும் இருக்கிறது. சம்ஸ்கிருதம் செம்மொழி என்று இதுவரை அரசால் அறிவிக்கப்படவில்லை என்கிற உண்மையே இப்போது தான் தெரிகிறது. ஆனால் - இதுநாள் வரையிலும் சம்ஸ்கிருதம் செம்மொழி என்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு, இந்திய மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டது மாதிரி இந்திய மக்களின் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருக்கிறது.

செலவு என்று சொல்வது கூடத் தவறு. அரசால் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று அதன் பிறகு அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் போதுதான் செலவு என்று ஆகும். செம்மொழி என்று அறிவிக்கப்படாமல், அரசின் திட்டத்திலேயே அறிவிக்கப்படாமல் நிதி போகிறது என்றால், அது திருட்டு, மோசடி, தேசத் துரோக நடவடிக்கை என்று கருதப்பட வேண்டும்.

செம்மொழி என்று அறிவிக்கப்படாத ஒரு மொழிக்காக அரசாங்க கஜானா கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்ளை பல ஆண்டுகளாகவே பல ஆட்சிகளாலும் கண்டுக் கொள்ளப்படவில்லை. இந்த முறைகேடான, மோசடியான, பகிரங்கக் கொள்ளைக்குக் காரணமானவர்கள் யார்?

அனாதையாய் மரித்துப் போன ஒருவரை அடக்கம் செய்வதற்காக அந்தப் பிணத்தைச் சாலையோரம் போட்டுப் பணவசூல் செய்வதையே கேவலமாகக் கருதுகிறோம். ஆனால், செத்துப் போன ஒரு மொழியைப் பிழைக்க வைக்கப் போகிறோம் என்று ஒரு நாட்டின் செல்வத்தையே கொள்ளையடிப்பவர்களை எப்படி மன்னிப்பது? சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக என்று திருடப்பட்ட பணத்தை மீட்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்ஸ்கிருத கொள்ளைக் கூட்டம் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். எந்தவிதப் பதற்றமோ, அச்சமோ இல்லாமல் பகிரங்கமாக நடந்த ஊழலை, கொள்ளையை, மோசடியை அனுமதிக்கும் ஒரு நாடு எந்த ஊழலையும் ஒழித்துவிட முடியாது.

- இளவேனில்