‘'சங்க கால வாழிடமான கீழடி சிந்து வெளி நாகரீகம் போன்ற சிறப்புமிக்க ஒன்று. செழிப்பான தமிழ் நாகரீகத்தின் அடையாளம்''

இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் ஆய்வை வழிநடத்தி பின்னர் மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் நேர்காணல். இங்கே கண்டறியப்பட்டவை வரலாற்றை மாற்றி எழுதும் என்று அவர் கூறினார்.

-       சுருதிசாகர் யமுனன்
தமிழ் வடிவம்- சி.மதிவாணன்

மதுரையின் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்திய தொல்லியல் துறையினருக்குப் பெரும் புதையல் கிடைத்தது. மிகவும் விரிவான, வசதியான பண்டைய தமிழகத்தின் நகர்புர குடியிருப்புப் பகுதி அங்கு இருந்ததைக் கண்டார்கள். பற்பல பண்டைய பொருட்கள் அங்கே கிடைத்தன. அவை சங்க காலத்தியவை. கிறிஸ்த்துவிற்கு முந்தைய 4ஆம் நூற்றாண்டு துவங்கி கிறிஸ்துவிற்குப் பிந்தைய 2 ஆம் நூற்றாண்டு வரையிலான சங்க காலம் தமிழ் பண்பாட்டின் பொற்காலம் என்று சொல்லப்படும் காலமாகும்.

keezhadi

ஆய்வுக்குழுவிற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி வழிநடத்தினார். 100 ஏக்கர் பரப்பில் 102 குழிகள் தோண்டப்பட்டன. அவரின் விருப்பம் இல்லாதபோதும் கூட கூட அவர் செய்துகொண்டிருந்த வேலையிலிருந்து கௌஹாத்திக்கு மாற்றப்பட்டார். இருந்தாலும் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவோடு பேட்டியொன்று நிகழ்த்தப்பட்டது. அதன் சாரமான பகுதிகள் கீழே...

மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளி மலையிலிருந்து புறப்படும் வைகை நதி முடிவடையும் கடற்கரை அருகே உள்ள ஆற்றங்கரை வரை அதன் இரு பக்கக் கரைகளிலும் 2013-14 காலத்தில் ஆய்வு நடத்தினோம். இரண்டு பக்கக் கரையிலிருந்தும் 8 கி.மீ சுற்றளவுக்கு அந்த ஆய்வு நடந்தது. நதியின் மொத்த நீளம் 250 கி.மீ. வைகை தமிழ்நாட்டின் 5 மாவட்டங்கள் வழியே பயணிக்கிறது.

ஏறக்குறைய 500 கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 293 இடங்களில் தொல் பொருள் ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றில் பல பண்டைய வாழிடங்களாக இருந்திருக்க வேண்டும். பல வகைப்பட்ட இடுகாடுகளும் கண்டறியப்பட்டன. பல சில்லறை சிற்பங்கள் கிடைத்தன. வீரர்களைக் குறிப்பிடும் நடுகற்களும் கிடைத்தன. விரிவான கல்வெட்டுகளும், கோவில்கள் இருந்த இடங்களையும் கண்டோம்.

இந்த 293 பண்டைய வாழிடங்களை வடிகட்டி, 90 வாழிடங்களைத் தேர்ந்தெடுத்தோம். இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்தும் மிகப் பிரம்மாண்டமானது. அதுநாள் வரை, தமிழ்நாட்டில் பண்டைய நாகரீகம் இல்லை, அல்லது நதிக்கரை நாகரீகம் இல்லை என்பதுதான் கருதுகோளாக இருந்தது. இந்த வாழிடங்களை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களும் அடிப்படையில், இடுகாடுகள்தான். மேற்படி கருதுகோள்கள் தவறானவை என்று நிரூபிப்பதுதான் இந்த அகழ்வாராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டில் மிகப்பெரிய நதிக்கரை தொல்லியல் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள நாங்கள் விரும்பினோம்.

புதுச்சேரியின் அருகே உள்ள அரிக்க மேடு மற்றும் நாகப்பட்டினம் அருகே உள்ள காவிரிப்பூம்பட்டினம் ஆகியவை நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. அங்கெல்லாம், நதிக்கரை நாகரீகம் இருந்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், கிடைக்கவில்லை. 2005ல் மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும், முதலில் நம்பிக்கை கொடுத்த போதும், கடைசியில், புதைக்கும் இடம் என்றாகிப் போனது.

வைகைக் கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 இடங்களில் இருந்து கிடைத்த சான்றாதாரங்களை ஆய்வு செய்தபோது, வாழிடங்களுக்கான அறிகுறிகள் கிடைத்தன. இறுதியாக, நாங்கள் கீழடியில் கவனம் செலுத்த முடிவு செய்தோம். அங்கே நாங்கள் நல்ல முறையில் உருவாக்கப்பட்ட செங்கற்களைக் கண்டோம். இது நகர்புர நாகரீகத்தின் அடையாளம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இந்த அடையாளம் இதுவரை தமிழ்நாட்டில் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலை, ஆகச்சிறந்த அகழ்வாராய்ச்சி பகுதி என்று நாங்கள் தேர்ந்தெடுத்த கீழடியில் மாறியது. மற்ற இரண்டு இடங்களில் ஒன்று சித்தர் நத்தம். இது மதுரையிலிருந்து 40 கிமீ வடக்கில் இருக்கிறது. மற்ற இடம் மாறநாடு. அது மதுரையிலிருந்து 35 கிமீ தென்கிழக்கில் இருக்கிறது. இந்த மூன்று இடங்களையும் ஆய்வு செய்து கீழடியைத் தேர்ந்தெடுக்க ஓராண்டு காலம் ஆனது.

நம்மிடம் அதி உன்னதமான கவிதைகள் கொண்ட சங்க இலக்கியம் இருக்கிறது. ஆனால், அவ்விலக்கியத்தில் குறிப்பிடப்படும் சங்கம் இருந்ததற்கான தொல்பொருள் ஆதாரம் எதுவும் நம்மிடம் இல்லை. இது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விடுபாடாகும். பண்டைய காலத்திலிருந்து தொடர்ந்து வாழிடமாக இருந்த வைகைக் கரையில் கவனம் குறித்த அகழ்வாராய்ச்சி எதுவும் இல்லாதது அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். சங்க காலத்தின் தலைநகரமாக மதுரை இருந்தது உங்களுக்குத் தெரியும். எனவே, பண்டைய தமிழ் நாகரீகத்திற்கான ஆதாரத்தைத் தேட வேண்டுமானால் நாட் இங்கே தேடவேண்டும் என்பதுதான் தர்க்க ரீதியாக சரியானதாக இருக்கும்.

கீழடி பகுதி ஏறக்குறைய மாற்றம் அடையாததாக இருந்தது. அதாவது, கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி தென்னந் தோப்பாக இருந்தது. அங்கே வளர்ச்சி நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதால் பாதிப்புகள் ஏதும் இல்லை. மதுரைக்கு அருகே உள்ள பல வாய்ப்புள்ள பகுதிகளில் கட்டுமானத்திற்காகத் தோண்டுவால், அல்லது சாலை போடுவதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக கீழடி இருந்த காரணத்தால், அங்கு இப்பிரச்சனைகள் இல்லை.

விரிவான அகழ்வாராய்ச்சிகள் செய்வதற்கு மாநில தொல்லியல் துறைகளிடம் நிதி வசதி இருக்காது. இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India-ASI) பெங்களூரு அலுவலகம் 2001ல் திறக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கென்றுதான் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது. எனவே, இப்பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான நிதி ஆதாரம் ASI யிடம் இருக்கிறது.

முதலில் நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டிய பகுதியை அளந்தோம். இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 119 மீட்டர் உயரத்திலிருந்தது. இந்த மேட்டின் உயரம் 123 மீட்டர். அதில் 3.5 மீட்டருக்கு வண்டல் படிவுகள் இருந்தன. அதன் சுற்றளவு 4.5 கிமீ. இப்பகுதியில் இப்படியொரு வாழிடத்தைக் காண்பது மிகவும் அரிதானதாகும்.

2014-15ல் இரண்டு இடங்களை அகழ்ந்து பார்த்தோம். ஒன்று கிழக்குப் பகுதி. மற்றொன்று ஓரளவு ஆற்றுக்கு அருகே உள்ள பகுதி. நாங்கள் தோண்ட ஆரம்பித்த உடன் அழகான மண் பாண்டங்கள் கிடைத்தன. மிகவும் குறுகிய காலத்தில் கட்டுமானங்களைக் கண்டோம்.

நாங்கள் வட்டக் கிணறுகளைக் கண்டோம். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. ஏனென்றால், அது நகர நாகரீகத்தைக் குறிக்கிறது. நகர நாகரீகத்தில்தான் மனிதர்கள் கிணறு தோண்டுவார்கள். கிணறு இருப்பது நேரத்தை மிச்சப்படுத்த உதவும். ஆற்றுக்கோ, ஏரிக்கோ சென்று நீர் எடுத்துவருவது தேவையற்றதாகும். நகைச்சுவையாகச் சொன்னால், மனித சோம்பேறித்தனத்தின் கண்டுபிடிப்பு கிணறுகள் என்று சொல்லலாம்.

அதை விடுங்கள். கிணறுகள் சிறு தொழில் நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானவை. அதன்பின் கிணறுகளையும், தளங்களையும், விரிந்த செங்கல் தரைகளையும் கண்டோம். மிகத் தொன்மையான கலைப் பொருட்கள் கிடைத்தன. தந்தத்தால் செய்யப்பட்ட தாயக் கட்டைகள் கிடைத்தன.

2015ஆம் ஆண்டில் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான முதல் கட்டத்தில் 43 அகழ்வுகள் மேற்கொண்டோம். அவை 4 அடி அகலம் 4 அடி நீளம் உள்ளவை. இதற்கிடையில் பல அறிஞர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.

2016ல் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆய்வில் 59 அகழ்வுகளை மேற்கொண்டோம். மொத்தம் 102 பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதுதான் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரும் அகழ்வாராய்ச்சி ஆகும். இரண்டாம் கட்டத்தில் நகர்புர நாகரீகத்திற்கான, இன்னும் சிறந்த ஆதாரங்களைக் கண்டோம். சுடப்பட்ட களிமண் குழாய்களால் கட்டப்பட்ட சிக்கலான கழிவு நீர் அமைப்புகள் வெளிப்பட்டன. செங்கல்லால் உருவாக்கப்பட்ட பெரிய மேடைத் தளங்களைக் கண்டோம். ஆறு உலைக் களங்கள் இருந்தன. இவை உற்பத்தி தொழில் நடந்தமைக்கான சான்றுகள் ஆகும்.

சங்க காலத்தில் நகர்புர நாகரீகம் எதுவும் இல்லை என்ற கருத்தாக்கம் தவறு என்று இது நிரூபிக்கிறது. (இவ்வளவு காலம் கழித்து இந்த நிரூபணம் வருவதற்கான) பழியை நாம் நம் தலையில்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கடந்த காலத்தில், ஸ்தூலமான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள நாம்தான் தவறிவிட்டோம். ஆதாரங்கள் அங்குத்தான் கிடந்துகொண்டிருந்தன. நாம்தான் கண்டுகொள்ளவில்லை.

வைகைக் கரையின் இருபக்கமும் உள்ள 90 பகுதிகளையும் ஆய்வு செய்தால், இன்னும் கூடுதல் வாழிடங்களை நாம் கண்டடைவோம் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன். அவை இன்னும் பழமையானவையாக, ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாக இருக்கும். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட மாமதுரையும், அது துடிப்பான நாகரீகத்தின் மையமாக இருந்தமையும் மிகவும் நுணுக்கமாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், மிகுந்த கவனத்துடன் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தமாக நாங்கள், 74 தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளைக் (inscriptions) கண்டோம். அவை கிறிஸ்துவிற்கு முந்தைய 200 ஆண்டுடன் ஒத்துப்போகின்றன. மற்றொரு முக்கியமான செய்தி என்னவென்றால் இவை மண்பாண்டங்களில் காணப்பட்ட எழுத்துகள். மன்னர்கள் எழுத்துப் பொறிப்புகளை உருவாக்கும் போது அவை கற்களில் எழுதப்படும். அல்லது கோவில்களில் இருக்கும். மண் பாண்ட எழுத்து உங்களுக்கு ஓர் கதையைச் சொல்லும். அந்தக் கதை என்ன தெரியுமா? சாதாரண மனிதனுக்கும் கல்வி அறிவு இருந்தது என்பதுதான். இது மாபெரும் நாகரீகத்திற்கான மற்றொரு சாட்சியமாகும்.

அந்த எழுத்துப் பொறிப்புகளில் கவிதை போன்ற தமிழ் பெயர்கள் இருந்தன. அவற்றில் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. அந்த மக்களுக்கு இலக்கியம் பற்றியும் தெரிந்திருந்தது. மண் பாண்டங்களில் பெயர் எழுதுவதென்பது, உடமையாளர் யார் என்பதைக் குறிப்பதற்கான முறையாகும். அந்தப் பழக்கம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.

ஒடிசாவின் ஹத்திக்கும்பாவின் காரவேலா எழுத்துப் பொறிப்புகள் கிறிஸ்துவிற்கு முந்தைய 130 ஆண்டைச் சேர்ந்தவை. அந்த சமயத்தில் மாபெரும் தமிழ் கூட்டாட்சி அமைப்பு (confederation) இருந்தது என்று அந்த எழுத்துப் பொறிப்பு சொல்கிறது. கூட்டாட்சியாக அமைந்த தெற்கத்திய மன்னராட்சி ஒன்றை, கலிங்கத்தின் காரவேலா உடைத்தது பற்றி அது சொல்கிறது. அப்படியென்றால், அது ஓர் நகர நாகரீகமாக இருந்திருக்க வேண்டும். தெற்கின் நாகரீகமாக, அரசாட்சியாக இருந்திருக்க வேண்டும். இதனை மறுப்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன என்று வடக்கே உள்ள அறிஞர்கள் சொல்வது வழக்கம். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பு அப்படியான ஆதாரத்தை நாம் அளிக்க முடிந்திருக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகம் போல, கங்கை சமவெளி நாகரீகம் போல, வைகை நதி நாகரீகமும் பல்கலப்பானது (complex) ஆகும். நாங்கள், இரண்டு கட்ட அகழ்வுகளை மேற்கொண்டுள்ளோம். இது சிந்து சமவெளி நாகரீகத்தை விட பழமையானது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால், இந்தப் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்வது இன்னமும் நிறைவு பெறவில்லை. நாங்கள் வெறும் நான்கு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே தோண்டியுள்ளோம். அதுவும் ஒரே ஒரு பகுதியில். இந்த பகுதி(யில் நாகரீகத்திற்கான அடையாளம்) 6.5 மீட்டர் ஆழம் வரை போகிறது.

மேலும், கீழடியின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்குப் பகுதி இன்னமும் ஆய்வு செய்யப்படவில்லை. இது நமக்கெல்லாம் கொண்டாட்டமான நேரம். இந்த அகழ்வாராய்ச்சிகள் இந்த விசேஷமான பகுதியின் செழிப்பான கடந்த காலத்தை வெளிக் கொண்டுவரும்.

மூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை (proposal) நான்தான் உருவாக்கினேன். அதற்கான அனுமதியும் எனக்குக் கிடைத்தது. தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை (status report) தாக்கல் செய்யப்படவில்லை என்று காரணம் காட்டி ஏற்பட்ட தாமதத்தைத் தாண்டி, மார்ச்சில்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மிகத் தீர்மானகரமான அகழ்வாராய்ச்சிக் கட்டத்தின் மத்தியில் என்னை, துரதிருஷ்டவசமாக, மாறுதல் செய்துவிட்டனர். நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். இருந்தாலும், அகழ்வாராய்ச்சியை புதிய குழுவினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், இன்னும் சிறந்த, இன்னும் பழமையான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்.

(scroll.in வலைமனையில் வந்த கட்டுரையின் சற்று சுருக்கப்பட்ட வடிவம்.)