அது... முதலில் நன்றாகத்தான் இருந்ததது. சாதிவெறிக்குக் களப்பலியான தியாகி இமானுவேல் சேகரன் பெயரில், பள்ளர் சமூகத்தினர் ஒன்று திரண்டு எழுச்சி கண்ட போது, அது ஒடுக்கப் பட்டோரின் சமூக, அரசியல் புரட்சியாகப் பார்க்கப் பட்டது. திராவிட அரசியல் அதிகார வர்க்கம் கூட அதிர்ந்து போனது.

அஞ்சலி செலுத்த பட்டியலினத் தலைமைகளும், தொண்டர்களும் பாகுபாடு கருதாது ஒன்று திரண்டனர்.

krishnasamy 260நாளடைவில்... இமானுவேல் சேகரனின் வீர வணக்க நாளானது "இமானுவேல் சேகரன் குருபூஜை " எனக் குறிப்பிடப் பட்டது. குருபூஜையை அரசு விழாவாகக் கொண்டாடக் கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன. ஆனால், பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டிற்கு அநியாயமாக உயிர்கள் பலியானதே நடந்தது.

பின்னர் சங்க கால மருத நில அடையாளம் , பாண்டியர் வரலாறு, இராஜராஜன் எனப் பெருமித வரலாறுகள் பள்ளர் இனத்தை மையப்படுத்திப் பரப்பப்பட்டன. குறிப்பாக, செந்தில் என்பவர் எழுதிய மீண்டெழும் பாண்டியர் வரலாறு எனும் புத்தகம் வேதப் புத்தகமாயிற்று. அதிலேயே , பிற சமூகத்தவரைத் தரந்தாழ்த்திக் குறிப்பிடுவதன் வாயிலாகத் தமது பெருமையை எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்கிற ஹிந்துத்துவச் சிந்தனைகள் வலிமையாக விதைக்கப் பட்டன.

இந்தப் போக்குகள் யாவற்றிலும் அண்ணல் அம்பேத்கரோ அவரது சிந்தனைகளோ இடம் பெறுவது கவனமாகத் தவிர்க்கப்பட்டது. அதிலும் வட நாட்டவரான அம்பேத்கரைத் தமிழ்நாட்டவரான நாம் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும் எனப் பரப்புரை மேற்கொள்ளப் பட்டது. அம்பேத்கரை அடையாளப் படுத்தினால் தாமும் தலித்தாகப் பார்க்கப் படுவோம் என, ஒரு திருகலான சிந்தனை முன்வைக்கப் பட்டது.

இந்த நகர்வுகள் அறிவுலகில் பெரிதாகக் கண்டுகொள்ளப் படவில்லை. தொடர்ந்து வன்கொடுமைகளை சந்தித்து வரும் ஒரு பட்டியலினச் சமூகத்தின் விடுதலைக்கான போக்குகளில் ஒன்றாகக் கருதிப் பலரும் இதைக் கடந்து செல்லவே முற்பட்டனர். ஆனால் ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்பாட்டில் அமித்ஷா தலைமையில் தேவேந்திரகுல மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடந்த போதுதான் இந்தப் பயணத்தின் பாதை யாவருக்கும் புரியத் துவங்கியது.

இப்போது இறுதியாக... . விஜயபாரதத்தில் கிருஷ்ணசாமி பேட்டி என்கிற அளவில் வந்து நிற்கிறது.

தனது பேட்டியில் , இந்த நாட்டை இந்தியா என்று குறிப்பிடாமல் 'பாரதம்' என்றே குறிப்பிடுகிறார் கிருஷ்ணசுவாமி. இட ஒதுக்கீடு பலன் தரவில்லை என்று அடித்து விடுகிறார் மருத்துவர். மத்திய அரசைக் குற்றம் சாட்டுவது மிகத் தவறான போக்கு என்கிறார். மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோரை "அனார்க்கிச கும்பல்கள்" என்று புறந்தள்ளுகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் பட்டியலின மாணவர்களின் மரணங்களுக்குச் சாதிச் சாயம் பூசக் கூடாது என்கிறார். உளவியல் ஆலோசனைகள் போதும் எனப் பரிந்துரைக்கிறார். இப்படி கிருஷ்ணசாமியின் பேட்டி முழுவதும் ஆச்சரியம் தருவதாயுள்ளது.

இப்போது ஊடகத்திலும் தோண்றி, தனது நிலைப்பாடுகளை உறுதி செய்திருக்கிறார் மருத்துவர் கிருஷ்ண சாமி.

சரி ... இனி சில புனைவுகளையும் உண்மைகளையும் ஆராய்வோம்.

குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலம் சங்க காலத்தில் பகுக்கப்பட்டது உண்மை. ஆனால் இந்த ஐவகை நிலப்பகுதியும் சரியாகத் துண்டு போட்டு பிரிக்கப்பட்டதல்ல. மாறாக, தமிழகம் முழுவதும் வெவ்வேறு நிலப் பகுதிகளாக மாறி மாறி அமைந்தவை.

அதாவது, அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் , வங்கக் கடல் என ஒரு நெடிய பகுதி நெய்தலாக இருக்கிறது எனக் கொண்டால், தமிழகத்தில் எங்கெல்லாம் ஆறுகள் ஓடி செழிப்பாக விவசாயம் நடந்ததோ அந்நிலங்கள் எல்லாம் மருத நிலங்கள். அம்மருத நிலங்கள் எங்கும் எக்குடிகள் எல்லாம் விவசாயம் செய்தனரோ அக்குடிகள் எல்லாம் உழவர்கள் தான்.

பள்ளர்களும் உழவுத் தொழிலுடன் தொடர்புடையோர். ஆனால் உழவுத்தொழில் செய்த சங்ககாலத் தமிழ்க்குடிகள் எல்லாம் பள்ளரல்ல.

மல்யுத்தம் செய்த குறிப்புகள் வரலாற்றில் உண்டு. மற்போர் என்பது உடல் வலிமையை மட்டும் நம்பி நிகழ்த்தப்படுவது. இவ்விதப் போட்டி . . அக்கால தமிழகத்தின் பல அரசாட்சிப் பகுதிகளில் நடத்தப்பட்டது. அதில் ஈடுபட்டவர்கள் மல்லர்கள் எனவும் வென்றோரை மாமல்லன் எனவும் வாழ்த்துவதுண்டு. மாமல்லபுரம் இன்றைக்கும் உண்டு. இவற்றை வடபகுதியில் வன்னியர் சொந்தம் கொண்டாடுவது தனிக்கதை. அது போலவே அதே பொருளில் மள்ளன் என்கிற வார்த்தைப் பயன்பாடுமுண்டு. ஆனால் , இவை யாவும் இன்றைக்குக் காணப்படும் சாதி இனக்குழுக்களைக் குறிப்பதல்ல. இது மட்டுமல்ல சங்க காலத்தில் இடம் பெறும் மறவர் என்று சுட்டப்படும் வீரத்திற்கான பொதுத் தமிழ்ச் சொல்லும் இன்றைய ஒரு சாதி இனக் குழுவைச் சுட்டுவதாக மாறியிருப்பது கவனிக்கத் தக்கது.

அதாவது, போர்புரிந்த அத்தனைத் தமிழ்க்குடியும் மறத்தமிழர்கள் தான் எனக் கொள்ள வேண்டும். தடாலடியாக, சங்ககாலத் தமிழர் நீட்சியாகத் தமிழ்ச் சாதிகள் தங்களை நிறுவிக் கொள்ள சாதித் தமிழ்த்தேசிய சிந்தனைகள் முக்கியக் காரணமாக உள்ளன என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்வது நல்லது.

உண்மையில்... ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் குறிக்கப் படும் சங்க கால வாழ்வியலை, இத்தனை நூற்றாண்டுகளாக நிகழ்ந்த சமூகக் கலப்புகள், மாறிவந்த மன்னராட்சிகள், போர் அழிவுகள், குடிகளின் இடப் பெயர்வுகள் , சிதைவுகள் என எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்வதைப் புறக்கணித்து விடுகின்றனர்.

தேவையெல்லாம் ஒரு வரலாற்றுத் தொன்மமே என்கிற மூர்க்கமானத் தேடலில் இன்றைய தமிழ்ச் சாதிக் குழுக்கள் பலவும் இவ்வாறாக அடையாள மீட்டெடுப்பு என்கிற பெயரில் இந்த வேலையைச் செய்து வருகின்றன.

ஹிந்து சாதிய மனநோய்ப் படிநிலையில் ஷத்திரியப் பதவியில் தம்மைப் பொறுத்திக் கொள்ளும் வெறியில் முனிவர்கள் யாகம் செய்த அக்னியில் தமது குலம் உதித்ததாகவெல்லாம் கதைகள் புனையப் படுகின்றன.

கொடுமை யாதெனில், இது போன்ற ஆண்ட சாதிப் பெருமிதவாதக் கதைகள் யாவற்றையும் போட்டி போட்டு இணைய வெளியெங்கும் பரப்புவது படித்த வர்க்கமே.

மேற்குலகின் அத்தனை நவீனக் கண்டுபிடிப்புகளையும் முழுவீச்சில் பயன்படுத்தும் இவர்களது மூளை, புராணக் குப்பைகளையும் , புனைந்த வரலாற்றுச் சாயல் கதைகளையும் ஏற்கும் அளவுக்கு மழுங்கிப் போகக் காரணம் , ஹிந்துச் சமூகம் பரப்பி வைத்திருக்கும் சாதி மனநோயால் அலைக்கழிக்கப் படுவதாலேயே ஆகும்.

இந்திரனை மருத நிலத்துத் தெய்வமெனக் குறிக்கின்றனர். எனில் விவசாயம் செய்த அத்தனை உழவுக் குடிகளும் இந்திரனைச் சொந்தம் கொண்டாடலாம். இந்திரனின் குலத்தவர் எனக் கூறிக் கொள்ளலாம்.

ஆனால் , அப்படிச் சொந்தம் கொண்டாடாமல் தேவர் தலைவன் தேவேந்திரன் ஒதுக்கப்படக் காரணமுண்டு.

ஐம்புலன்களின் இயக்கத்தின் மீது தனது கட்டுப்பாட்டையும் விழிப்புணர்வையும் கொண்டவன் ஐந்திரன். அவனே இந்திரன். தியான வழிப்பட்ட சமயப் பாதையை முன்வைத்த புத்தனின் பெயரே இந்திரன். . !

ஹிந்து மதம் , தான் கற்பனையாக உருவாக்கிய தேவர்களுக்குத் தலைவனாக இந்திரனை. . தேவேந்திரன் என உள்வாங்கி, ரம்பா, மேனகா, ஊர்வசி யின் நடனத்தில் ஆழ்ந்திருப்பவனாகவும், முனிவர்களின் மனைவியர் மீது காமம் கொண்டு அலைந்தவனாகவும் திரித்து, புத்தனை இழிவு படுத்தியது

சங்க இலக்கியமோ. . தலைவியை விட்டுப் பரத்தையை நாடிச் சென்ற தலைவன் பற்றியப் பாடல்களை ஊடலும் ஊடல் நிமித்தமும் என மருதநிலப் பாடல்களாக முன்வைக்கிறது. அவ்வாறான மருத நிலத்தவர்க்குத் தெய்வமாக "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" எனும் மருத நிலப்பகுப்புக் கொண்டு, வேந்தன் என்பவன் இந்திரனே எனக் குறிக்கின்றனர்.

எது எப்படியாயினும், இந்தச் செய்திகளைக் கவனித்தால் ஒரு தொடர்பு நன்கு புலப்படுகிறது . வேளாண் தொழில் செய்தோரையும் , ஐந்திரனான புத்தரையும் ஒரு சேர இழிவு செய்த வரலாறே அது.

கிருஷ்ணசாமி ஒரே நேரத்தில் சங்ககால மள்ளர் குடி வரலாற்றையும், ஹிந்துத்துவம் முன் வைக்கும் தேவேந்திரப் பதவியையும் இணைத்து, பள்ளர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறார். அதுவே அமித்ஷா க்களுக்கு மிகவும் பிடித்தமானதாகி விட்டது.

வேதங்களில் தேவேந்திரனே முக்கியக் கடவுளாகக் கருதப் படுகிறான். தேவேந்திரன் என்பவன் பிரம்மா சிவன் விஷ்ணு என்கிற முக்கடவுளுக்குக் கீழானவன். இந்து புராணங்களின் படி பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் அவர்களது வாரிசுக் கடவுள்களுக்கும் கீழாகவே தேவேந்திரனது அதிகாரம் உள்ளது.

இவ்வாறான பல காரணங்களால் இன்றைய சாதி இந்துச் சமூகங்கள் எதுவும் தேவேந்திரனைத் தமது முக்கியக் கடவுளாக வரித்து வழிபடுவதில்லை.

ஆனால்... . 'தேவர்'களுக்கெல்லாம் தலைவன் தேவேந்திரன் எனும்போது அதில் ஒரு பெருமிதம் வந்து விடுகிறது. இதிலிருந்துதான் தேவேந்திர குலம் எனும் பெயர் வருவிக்கப் பட்டது.

வானத்தில் உள்ள இந்திர அவையில் வாயு, அக்னி, காமன் , வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் தலைவனாக தேவேந்திரன் இருக்கிறான். ஆனால்... தென் மாவட்டங்களில் ஒடுக்கும் ஆதிக்க சாதியாக இருக்கும் முக்குலத்தோர் 'தேவர்' பட்டத்தையும், ஒடுக்கப் படும் பட்டியல் இனம் தேவர்களின் தலைவன் 'தேவேந்திரனது' பட்டத்தையும் எடுத்துக் கொண்டது ஒரு சுவாரஸ்ய முரண்.

உத்திகளும் கூட ஒப்பு நோக்கத் தக்கவையே.

மறவர் - மள்ளர் (எடுத்துக் கொண்ட சங்க காலத் தொன்மம்)

தேவர் - தேவேந்திரர்(சூட்டிக் கொண்ட பட்டம்)

பாண்டியர், சோழர்- பாண்டியர், சோழர் (வரலாற்றுப் பெருமிதக் கற்பிதம்)

முத்துராமலிங்கம் குருபூஜை - இமானுவேல் சேகரன் குருபூஜை. (வழிபாட்டு மனநிலைகள்)

எனினும் இந்த போட்டிகள் இறுதியாகச் சங்கமிக்கும் இடம் ஹிந்துத்துவமாக இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

"அருந்ததி" என்கிற பெயரும் இதுபோலவே ஒரு புராணப் பின்னணி கொண்டதுதான்.

தேவேந்திரன், அருந்ததி உள்ளிட்ட ஹிந்து புராணப் பெயர்களை முதன் முதலில் தேர்வு செய்தவர் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பது ஆய்வுக்குரியது.

பட்டியலினத்தவர் தம் சமூகப் பெயர்களை மாற்றிக் கொள்வதன் பின்னால் உணரப்படும் உளவியல் அமைதியை நாம் மறுக்கவில்லை. அதே வேளை வரலாற்று மீட்டுருவாக்கம் என்கிற பெயரில் புராணக் கதையாடல் நிகழ்வதையும் கவனமாக உற்று நோக்க வேண்டியுள்ளது.

பட்டியலினக் குழுக்கள் ஷத்திரியராகத் தம்மை நிறுவிக் கொள்ள முயன்றால் , ஒடுக்கப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டை இத்தனை ஆண்டு காலம் என்ன உரிமையில் எடுத்துக் கொண்டீர்கள் என்கிற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை உடன் எழுந்து விடுகின்றது.

இதற்காகவே விஜயபாரத்தில், சாதி ரீதியான இட இதுக்கீடு பலன்தரவில்லை என டாக்டர் கிருஷ்ண சாமி மழுப்புகிறார் என்றுக் கருத இடமிருக்கிறது.

தம்மை ஷத்திரியராக உணரும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட குழுக்கள் எவராயினும் அடுத்த கணமே தம்மை இட ஒதுக்கீட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதுடன், தமது மக்களிடம் போய் தமது ஆண்ட சாதிப் பெருமிதங்களை எடுத்துக் கூறி, இட ஒதுக்கீடு போன்ற சாதாரண ஏற்பாடுகளை முற்றாகப் புறக்கணிக்கக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

முன்னாள் மன்னர் பரம்பரைகள் போயும் போயும் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவதா என்ன. ?

ஆக... வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பு வேண்டும்.. பட்டியலினத்தோர்க்கான ஒதுக்கீட்டுத் தொகுதிகள் மூலம் அரசியல் அதிகாரம் வேண்டும்... கல்வி, அரசு வேலை, பதவி உயர்வுக்கு பட்டியலின இட ஒதுக்கீடு வேண்டும் . ஆனால் ... அண்ணலின் சிந்தனைகள் வேண்டாம் என பட்டியலினத்தவர் எவரேனும் கூறினால் அது நிச்சயம் சரியான பார்வையல்ல.

அவ்வகையில்... பள்ளர் சமூகத்தைச் சார்ந்த களப்போராளி இமானுவேல் சேகரனார் ஏன் கிறித்துவ மதத்தவராக கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதினின்று சிந்திக்கத் துவங்க வேண்டும்.

எல்லா காலகட்டத்திலும் மதமாற்றம் ஏன் பட்டியலின மக்களின் முக்கியத் தேர்வாக இருந்து வந்திருக்கிறது என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

ஆகவே... சரியான திசை வழிப் போக்கில் , அண்ணலின் கோட்பாடுகளைப் பயில்வதும் ஹிந்துத்வாவின் கரங்களுக்குள் சிக்காமல் பட்டியலின விடுதலைக்காக; திட்டமிட்ட நகர்வுகளுக்காகத் திரள்வதுமே தேவையாக இருக்கிறது.

- ஜீவகன்