சுதந்திரம் வாங்கி இந்த 60 ஆண்டுகாலமாக தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் மீனவர்களைப் பற்றிக் கவலையே படாத மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் இப்போது கடற்கரை நெடுகிலும் தடுப்புச் சுவர் கட்டவேண்டும் என்றும் மீனவர்களை கரையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் குடியமர்த்த வேண்டுமென்றும் ரொம்ப அக்கறைசாலிகளைப் போல பேசி வருகிறார்கள். மீண்டும் சுனாமி வரும் என்கிற தேவையற்ற வதந்திகளைப் பரப்பி மீனவ மக்களைத் தாங்களே கடற்கரையை விட்டு வெளியேறும் மனநிலக்கு வந்து சேரும்படியாகத் திட்டமிட்டுத் தூண்டுகிறார்கள். சுனாமி அடிக்கடி வராது. மீண்டும் வர இன்னும் நூறு ஆண்டுகளாவது ஆகும் என்கிறது விஞ்ஞானம். அப்புறம் ஏன் இந்த மிரட்டல்கள், பயமுறுத்தல்கள்? 

மீனவர்களை கட்டாயமாக வெளியேற்றி கரைகளில் சொகுசு பங்களாக்களும் ஓட்டல்களும் ரிசார்ட்டுகளும் உல்லாசப் பூங்காக்களும் கட்ட வேண்டும் என்று பணம் கொழுத்த பேர்வழிகள் நீண்ட காலமாகவே முயற்சித்து வருகிறார்கள். இப்படிச் சொல்லுவது ஆதாரமற்ற வீண் கற்பனை அல்ல.

Beach resortகடலூருக்கு அருகே உள்ள அழகான கடற்கரைப்பகுதி பிச்சாவரம். அங்கு ஒரு மீனவ கிராமம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பாக பிச்சாவரத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு எடுத்தது. மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கிராமத்தை விட்டு வெளியேறினாலும் நீங்கள் தொடர்ந்து மீன் பிடிக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அரசு ஒப்புக்கொண்டது. சில நாட்களுக்குப் பிறகு அங்கு ஒரு பெரிய தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது. பிறகு போலீஸ்படை வந்து பிச்சாவரத்தைக் காவல் காக்கத் தொடங்கியது. இப்போது மீனவர்கள் தங்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டுமானால் போலீசாரிடம் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். இரும்பு கேட்டுக்கு அருகே நிற்கும் போலீஸ்காரன் அனுமதித்தால் மட்டுமே கடலுக்குப் போக முடியும். நள்ளிரவிலும் அதிகாலையிலும் என மீன்பாடு அதிகமான நேரத்தில் கடலுக்குப் போகிற மீனவர்கள் காவலர்களைத் தேடி எழுப்பி சீட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒன்று.

அடுத்து கிழக்குக் கடற்கரை சாலையின் கதை. மீனவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். சாலைக்கும் கடலுக்கும் இடையிலான இடத்தைத் தனியாருக்குத் தரமாட்டோம், அது மீனவர்களின் அனுபவப் பாத்தியதையாகவே இருக்கும் என்றெல்லாம் அரசு வாக்குறுதிகள் அளித்தது. ஆனால் நடந்தது என்ன? கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருமுறை பயணம் செய்தாலே பார்க்கலாம். நெடுகிலும் ஓட்டல்களும் ரிசார்ட்டுகளும் தனியார் சொகுசு பங்களாக்களும் முளைத்து நிற்கின்றன. அரசு நயவஞ்சகமாக மீனவர்களை ஏமாற்றித் துரோகம் செய்துள்ளதற்கு சாட்சிகளாக இக்கட்டிடங்கள் நிற்கின்றன.

இன்னும் சிங்காரச் சென்னை என்கிற திட்டம். அந்தக் காலத்தில் படகோட்டியாகவும் மீனவ நண்பனாகவும் சினிமாவில் நடித்துப் புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது கட்டுமரங்களும் காயும் வலைகளும் மெரீனாவின் அழகைக் கெடுப்பதாகக் கூறி அவற்றை அகற்ற உத்தரவிட்டார். எதிர்த்துப் போராடிய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்களைக் ‘கண்ணீரில் மிதக்க விட்டார்.’ நாக்கைச் சுழ்ட்டிக்கொண்டு தின்பதற்கு மீன்கள் மட்டும் வேண்டும். ஆனால் மீனவர்களும் அவர்களது குடிசைகளும் கட்டுமரங்களும் வலைகளும் இருக்கக்கூடாது. அது பார்வைக்கு அசிங்கமாக இருக்கிறது. இதுதான் சிங்காரச் சென்னையின் அடிச்சரடு.

அரசாங்கத்தால் நீண்டகாலமாகச் செய்ய முடியாததை சுனாமி ஓர் நாளில் செய்து விட்டது. அவசர அவசரமாக தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதியே ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து மீனவர்களும் தங்களது குடியிருப்பு உரிமைகளை அரசுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு புது இடத்துக்கு கட்டாயமாக இடம் மாற வேண்டும். மீனவ மக்கள் புதிய இடத்துக்கான பட்டா பெற வேண்டுமானால் பழைய இடங்களை ஒப்படைக்க வேண்டும். பழைய இடத்தையும் வைத்துக்கொண்டு புது வீட்டையும் வாங்கிக் கொள்ளலாம் என்று ‘புத்திசாலித்தனமாக’ திட்டமிட்ட பல மீனவர்களின் கனவில் இடி விழுந்துள்ளது. ஒருமுறை கடற்கரையை விட்டு மீனவர்கள் வெளியேறிவிட்டால் அப்புறம் கடற்கரை அரசுக்குச் சொந்தமாகிவிடும். அப்புறம் பிச்சாவரம் கதைதான். கிழக்குக் கடற்கரைச் சாலையின் கதைதான். மந்திரிமார் எவனுடைய பேச்சையும் நம்ப முடியாது என்று பல மீனவர்கள் பேசினாலும் பிரச்னையின் தீவிரம் பல மீனவர்களுக்குப் புரியவில்லை.

500 மீட்டர் பிரச்னை என்பது நாங்கள் புதுசாகச் சொல்வதல்ல. ஏற்கனவே உள்ள கடலோர ஒழுங்குமுறை விதிகளைத்தான் நாங்கள் அமுல்படுத்துகிறோம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்ன?

1991இல் இயற்றப்பட்ட அச்சட்டம் “நீண்ட காலமாக பாரம்பரிய வழக்காற்று உரிமை பெற்ற-1991 இல் ஏற்கனவே உள்ள மீன்பிடி கிராமங்களில் -கட்டப்படும் கட்டுமானம், மறு கட்டுமானம் செய்யப்படும் குடியிருப்புகள் 200 மற்றும் 500 மீட்டருக்குள்ளேயே கூட இருக்க அனுமதி உண்டு” ஆனால் அச்சட்டம் ஓட்டல்கள் ரிசார்ட்டுகள் பற்றிக் கூறும்போது “கடலோரங்களில் ஓட்டல்கள், கடற்கரை விடுதிகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறையிடம் சிறப்பு முன் அனுமதி பெற வேண்டும்” என்று ஏராளமான நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து ரிசார்ட்டுகளுக்கும் சொகுசு விடுதிகளுக்கும் எதிரான சட்டரீதியான தடுப்பு அரண்களை அச்சட்டம் ஏற்படுத்துகிறது.

ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள சுனாமி பயத்தை திட்டமிட்டு மேலும் தூண்டிவிட்டு மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு மக்களுக்குப் பச்சைத்துரோகம் செய்கிறது அரசு.

Fishermenஆகவே இப்பிரச்னை தொடர்பாக விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 500 மீட்டர் வரை ‘கடலும் கடற்கரையும் மீனவர்களுக்கே சொந்தம்’ என்கிற கோஷத்தை முன்வைத்து கடலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 101 கிராமங்களில் ஒரு மகத்தான கலைப்பயணத்தை நடத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்தது. அப்பிரச்சாரப் பயணத்தின் போது சுனாமி பற்றிய அச்சம் தேவையில்லை, கிராம சபைகளைக் கூட்டி மக்களிடம் 500 மீட்டர் பிரச்னை பற்றி விளக்கிப் பேசி கிராமங்களை விட்டுப் போகமாட்டோம் என்று ஒவ்வொரு ஊரிலும் தீர்மானம் போட்டு மக்களிடம் மனுக்களில் கையெழுத்துப் பெற்று அரசுக்கு அனுப்புவது, ஏற்கனவே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர்கள் அதை மறுத்து உடனே மனு செய்யுமாறு கோரி, கடல்மீதும் கடலோர நிலங்கள் மீதும் மீனவ மக்களுக்கு உள்ள பாரம்பரிய உரிமைகளை சட்டபூர்வ உரிமையாக்கக் கோரிப் போராட -என்று பல்வேறு மக்கள் கோரிக்கைகள் விளக்கப்பட்டன. மக்களின் மகத்தான ஆதரவோடு அப்பயணம் முடிந்துள்ளது.

இதே போன்ற இன்னொரு முக்கியப் பிரச்னை கடலோர மாவட்டங்களில் பெருகியுள்ள இறால் பண்ணைகள். சின்னங்குடி கிராமம் அழியக் காரணம் அந்த கிராமத்துக்கு இரு பக்கமும் இருந்த இறால் பண்ணைகள்தான். அப்பண்ணைகள் இல்லாதிருந்தால் அலைகளின் கடுமை குறைந்திருக்கும் என்பதை அக்கிராமத்துக்குச் செல்லும் எவரும் கண்டுணர முடியும். இறால் பண்ணைகள் அமைக்க கடல் நீரை உள்ளே கொண்டுவர வேண்டியுள்ளது. நல்ல நீரும் கடல் நீரும் கலந்த கலவைதான் இறால்மீன்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதால் கடந்த பத்து ஆண்டுகளாக கடலோர மாவட்டங்களில் வாய்க்கால்கள் வெட்டி கடல்நீர் ஊருக்குள் இறால் பண்ணைகளுக்குக் கொண்டுவரப்பட்டன. காவிரிப் பாசனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாத கொடுமையால் நல்ல விளைநிலங்கள் இறால் பண்ணைகளாக மாற விற்பனை செய்யப்பட்டன. கடல்நீர் உள்ளே கொண்டுவரப்படுவதால் பக்கத்திலுள்ள விளை நிலங்களும் வாய்க்கால் வரும் வழி நெடுகிலுமுள்ள விவசாய நிலங்களும் சீக்கிரமே உவரடித்து விவசாயத்துக்கு லாயக்கற்றதாகி விடுகிறது. இறால் பண்ணைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் கடலில் விடப்படுகின்றன. அதனால் இயற்கையான மீன் வளம் பாதிக்கப்படுகிறது. கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி அப்பகுதி மக்களுக்கு புதிய புதிய வியாதிகளை வாரி வழங்கி வருகின்றன. இப்படி மீனவர்களையும் விவசாயிகளையும் ஒருசேரப் பாதிக்கும் இறால் பண்ணைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டிப் போர்க்களம் இறங்கவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தயாராகிறது. மக்களைத் தயார்படுத்த முனைகிறது. பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களும் இறால் பண்ணை எதிர்ப்பு மாநாடுகளும் என களம் விரிகிறது.