ரொக்கமாகப் பொதிந்துள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே ரூ.500, ரூ1,000 பணத் தாள்களைச் செல்லாது என அறிவித்ததாகக் கூறும் பிரதம மந்திரி, ரூ.2,000 பணத் தாளைப் புதிதாக வெளியிட்டு இருப்பது ஏன்? ஏன்? ஏன்?

வருங்காலத்தில் கருப்புப் பணத்தை மறைத்து வைப்பதற்கு அதிக வசதி செய்து கொடுக்க வேண்டும் அல்லவா? ஹி ஹி ஹி!

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதைப் பதுக்கி வைப்பவர்களுக்கு அதிக வசதி செய்து கொடுப்பது ஏன்? ஏன்? ஏன்?

இதெல்லாம் அரசியலில் சகஜமுங்க. ஹி ஹி ஹி!

பிரதமரின் செல்லாக் காசுத் திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ரூ.2,000 பணத் தாள் வெளியிடப்பட்டது, கருப்புப் பணம் பதுக்கி வைப்பதற்கு வசதி செய்து கொடுப்பதற்குத் தான் என்று விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் மக்களிடையே ஏற்படுத்தி இத்திட்டத்திற்கு எதிராக மக்களை அணி திரட்டாதது ஏன்? ஏன்? ஏன்?

கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டு முதலாளித்துவக் கட்சிகள் அரசியலை நடத்த முடியாது. ஹி ஹி ஹி!

கம்யூனிஸ்ட் கட்சிகளும் ரூ.2,000 பணத் தாளை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று தான் கூறுகிறார்களே ஒழிய, இது கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கு வசதி செய்து தரும் திட்டம் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருததையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லையே ஏன்? ஏன்? ஏன்?

அக்கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றும், அவை முதலாளித்துவத்தை எதிர்ப்பவை என்றும் கற்பனை செய்து கொண்டால், அதற்கு அக்கட்சிகள் பாவம் என்ன செய்ய முடியும்? அவா எல்லாம் நம்மவா. ஹி ஹி ஹி!

கருப்புப் பணத்தை ஒழிக்கும் எண்ணமே இல்லாத போது, அப்படி இருப்பதாகக் கூறிக் கொண்டு ரூ.500, ரூ1,000 பணத் தாள்களைச் செல்லாததாக்கி மக்கள் அனைவரையும் துன்பப் படுத்துவது ஏன்? ஏன்? ஏன்?

மிகச் சிறிய அளவு ஊழல் செய்து, மிகச் சிறிய அளவில் கருப்புப் பணத்தை வைத்து இருப்பவர்களை மிரட்டி, அடிமைகளாக்கி அவர்களைக் கேடயமாகவும், கவசமாகவும் வைத்துக் கொண்டு மிகப் பெரிய அளவில் கருப்புப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்குத் தான். ஹி ஹி ஹி!

குட்டி ஊழல்வாதிகளை அடிமைப் படுத்துவது சரி! இதனால் சிரமப்படும் பெரும்பான்மையான சாதாரண மக்கள் இதற்கு எதிராகப் போராடுவார்களே என்று தோன்றவில்லையா? ஏன்? ஏன்? ஏன்?

அவர்களுடைய மனநிலையைச் சோதிக்கத் தான். அவர்களும் ரூ.2,000 பணத் தாளை மாற்ற முடியவில்லையே என்று தான் புலம்புகிறார்களே ஒழிய, ஏன் ரூ.2,000 பணத் தாளை வெளியிட்டீர்கள் என்று பொங்கி எழவில்லையே? இது இத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு ஏமாற ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதைத் தனே காட்டுகிறது? ஹி ஹி ஹி!

சரி! உடனடியாகப் பொங்கி எழவில்லை. இன்னும் சிறிது நாட்களில் பொங்கி எழுந்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கவில்லையா? ஏன்? ஏன்? ஏன்?

அப்படிப் பொங்கி எழுந்து விட்டால், இத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, செய்த தவறை ஒப்புக் கொண்டு, தன் திட்டத்தைத் தானே திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரே தலைவர் என்று பிரதமரின் புகழைத் துதி பாடுவோம். ஹி ஹி ஹி!

- இராமியா