bank atm

கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவிலிருந்து ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்து, இந்தியாவை பொருளாதார வல்லரசாக்கும் வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக இதற்கு பல்வேறு தரப்பினரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

            ஆனால், மக்கள் தமது உழைப்பின் மூலம் நேர்மையான வழிகளில் சம்பாதித்து தமது கைகளில் வைத்துள்ள பணத்தை டிசம்பர் 31ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப தற்போது மக்கள் வங்கிகளின் முன்னர் காத்துக் கிடக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வரவு வந்துள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

            இந்தியா முழுக்க திரட்டப்பட்ட இந்தப் பணத்தில் ஒன்றிரண்டு தொகைகூட கருப்புப் பண முதலைகளின் பணமல்ல. அதாவது கருப்புப்பணம் வைத்திருப்பவர்களில் ஒரு சிலர்கூட தம்மிடம் உள்ள சட்டத்திற்குப் புறம்பான பணத்தை வெளிப்படையாக வெளியே கொண்டுவரவில்லை. அப்படி கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தப்பித் தவறியும் தம்மிடம் உள்ள பணத்தை வெளியே கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தனிக் கவனமே செலுத்துகிறது. இரண்டரை லட்சத்திற்கு மேல் வங்கிகளில் வரவு வைப்பவர்களுக்கு வருமான வரி 10 சதவீதம், அபராதமாக 200 சதவீதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பே இதற்கு உதாரணமாகும். அதாவது ஒருவர் ரூ. 5 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் வரவு வைத்தால் அதில் வரியாக ரூ. 25 ஆயிரமும், அபாரதமாக ரூ.50 ஆயிரமும் ஆக மொத்தம் 75 ஆயிரத்தை அரசு எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தை மட்டுமே வரவு வைத்தவருக்குத் தருமாம். இதன் பிறகும் எந்தக் கிறுக்கன் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவான்?

                கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள மத்திய அரசு கொடுத்த வாய்ப்பை கருப்புப்பண முதலைகள் பயன்படுத்தத் தவறி விட்டார்கள். எனவே இனி எந்த சந்தர்ப்பத்திலும் அந்தப் பணத்தை வெள்ளையாக்க விடமாட்டோம். அதை ஒழித்து விடுவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்து விட்டார்கள் போலும்! இதனால்தான் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் ரூ.4500வரை அடையாள அட்டையை காட்டி மாற்றிக் கொள்ளலாம் என்பதைக்கூட கையிலே மை வைத்து தடுத்து விட்டார்கள். கருப்புப் பணத்தை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் மூலம் மட்டும் தான் வெள்ளையாக மாற்ற முடியுமா? வங்கிக் கணக்கு இல்லாதவர்களை கணக்கு துவக்கும்படி நிர்பந்திக்கிறார்களே அதன் மூலம் கருப்பு, வெள்ளையாகாதா? இதை எப்படித் தடுக்க முடியும்?

                இவர்கள் சொல்வது போல் கருப்பு, வெள்ளையாக ஆகாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் கருப்புப் பணம், அரசு நமது காதில் பூ சுற்றுவதைப் போன்றும், நாம் நம்புவதைப் போன்றும் தாள்வடிவில் மட்டும் இருப்பதில்லை. அதிலும் தமது வருவாயை சட்டத்தின் கண்களில் இருந்து மறைப்பவர்கள் அவற்றை வீட்டின் தரைக்கு கீழே குழிவெட்டி புதைத்து வைத்திருப்பதில்லை.

                நிலம், மனை, வீடு, தங்கம் ஆகிய வடிவில் மாற்றம் செய்து விடுவார்கள். பங்குச் சந்தை போன்றவற்றில் சுழல விடுகிறார்கள். அதாவது தம்மிடம் உள்ளப் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும், அனைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் ஒன்றைப் பத்தாக்கி, பத்தை நூறாக்கிக் கொள்கிறார்கள்.

                உண்மையில் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருப்பவர்கள் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள்தான். நம்மிடம் இருக்கும் பணம் சட்டத்திற்கு புறம்பான, கணக்கில் காட்டாத கருப்புப் பணம் இ்ல்லை. நேர்மையான வழிகளில் சம்பாதித்து சிறுக, சிறுக சேர்த்த பணம். தனித்தனி நபர்கள் என்கிற வகையில் நாம் வைத்திருக்கும் பணத்தின் அளவு கருப்புப் பண வரம்பிற்கு உட்பட்டதில்லை. ஆனால் சாதாரண மக்கள் அனைவரையும் அவர்கள் வைத்திருக்கும் பணம் அனைத்தையும் மொத்தமாக கூட்டிப் பார்த்தால், அந்த கூட்டுத் தொகை சட்டத்திற்குப் புறம்பானதாக அரசின் கண்களுக்குத் தெரிகிறது, எனவே இந்தப் பணத்தை பறிமுதல் செய்யும் மோடியாரின் நடவடிக்கைதான் ரு.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பாகும்.

                உண்மையில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கருப்புப் பணத்தின் பெரும்பான்மை வடிவங்களான தங்கம், நிலம், வீடு, மனை போன்ற ஆயிரமாயிரம் வடிவங்களின் மீது மோடியார் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் மோடியார் அப்படி செய்ய மாட்டார். அப்படிச் செய்தால் அது தற்கொலை ஆகிவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாட்டின் ஒரு பிரிவு கருப்புப் பண முதலைகளின் தலைவரே அவர்தானே! தன்னை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கு அவர் துரோகம் செய்வாரா என்ன! அதனால்தான் தன்னைச் சார்ந்தவர்களிடம் முன்ககூட்டியே இந்தத் தகவலை தெரிவித்து விட்டு, எதிர்க்கட்சிகளையும், அவர்களைச் சார்ந்த முதலாளிகளையும் சிக்கலில் மாட்டிவிட்டதில் மோடியாருக்கு பரம ஆனந்தம் என்பது நமக்குப் புரிகிறது.

                ஆனாலும் மோடியாரின் இந்த பரம ஆனந்தத்தை அவர் முழுமையாகஅனுபவிக்க முடியாமல் செய்து விட்டனர் எதிர்கட்சியினர். பாம்பின் கால் பாம்பறியாதா என்ன? உத்திரபிரேதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு, இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பும், தனிச்சிறப்புமான, வாக்களிப்பதற்கு மக்களுக்கு பணத்தை இப்போதே தந்து மோடியாரின் முகத்தில் கரியை பூசிவிட்டார்கள்

                கருப்புப் பணம் பெருமளவில் ரொக்கமாக இருப்பதில்லை. கையில் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் சாதாரண மக்கள்தான். அதுவும் கருப்புப் பணம் இல்லை. அப்படிப் பட்ட பணம் பல லட்சம் கோடிகள் வங்கிகளுக்கு தற்போது வந்திருந்தாலும் அதன் மூலம் வரி, அபராதம் என்கிற வகையில் அரசுக்கு எந்த வருவாயும் வரப் போவதில்லை. உண்மையாகவே கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் மோடியாரின் விருப்பத்திற்கு ஏற்ப கோயில் உண்டியலில் போட்டு விடுகிறார்கள் அல்லது எரித்து விடுகிறார்கள். எனவே எந்த வகையிலும் இதனால் அரசுக்கு எந்த வருவாயும் கிடைக்கப் போவதில்லை. அரசின் வருவாய் உயராமலேயே நாடு முன்னேறிவிடும் என்று முழங்குகிறாறே மோடியார்! அது எப்படி என்பது யாருக்காவது புரிகிறதா? புரிந்தால் எங்களுக்கும் கொஞ்சம் காது கடிங்களேன்!

                அரசுக்கு வருவாய் தராத, கோடிக்கணக்கான மக்களின் பல லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தப் பணத்தை வங்கிகள் என்ன செய்யப் போகின்றன? நம்மைப் போன்றே எரவானத்திலும், சுருக்குப்பையிலும், அண்டாவிலும், குண்டாவிலும் பதுங்க வைத்திருக்கப் போகிறார்களா? நிச்சயம் இல்லை. நம்மை பயமுறுத்தி, நிர்ப்பந்தித்து பிடுங்கிய பணத்தை வட்டிக்கு கடன் கொடுக்கப் போகிறார்கள். யாருக்கு? நமக்கா? நிச்சயம் இல்லை. முதலாளிகளுக்கு தரப்போகிறார்கள். ரூ.500.1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியாரின் அறிவிப்பின் மூலம் அரசுக்கு எந்த வருவாயும் இல்லை. ஆனால் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் ஆதாயம். முதலாளிகள் வங்கிகளில் வட்டிக்குத்தானே பணத்தை கடன் வாங்குகிறார்கள் என்று நம்மிலேயே சிலர் பிதற்றுகிறார்கள்.

                தற்போது வரை இந்திய வங்கிகளில் முதலாளிகள் ரூ.7 லட்சம் கோடி கடனாக வாங்கிக்கொண்டு நையா பைசாவைக்கூட திருப்பிக் கட்டவில்லை. தின்று ஏப்பம் விட்டுவிட்டார்கள். அப்படி கடன் வாங்கியவர்களின் பெயரைக்கூட வெளியிடாத மோடியார்தான் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக நமது காதில் பூ சுற்றுகிறார்.இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தலின்போது கண்டெய்னர் லாரிகளில் கணக்கில் வராத ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தார்களே, அந்தப் பணம் யாருடையது என்பதைக்கூட தெரிவிக்காமல் மூடி மறைத்த மோடி தலைமையிலான கும்பல்தான் கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக மார்தட்டுகிறது. கேழ்வரகில் நெய்வடிகிறது என்கிறார்கள். நம்மில் எத்துனை பேர் இதை நம்பப் போகிறோம்.

                கடனை திருப்பிக் கட்டாத முதலாளிகளுக்கு திருப்பி, திருப்பி கடன் கொடுக்கத்தான் மோடியார் விண்ணை முட்டக் குதிக்கிறாரே தவிர கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அல்ல. மூக்கிருக்கும் வரை சளி இருக்கும். முதலாளிகள் இருக்கும் வரை கருப்புப் பணமும் இருக்கும்.

                சரி,கருப்புப் பணம் வங்கிக்கு வந்தால் அதை பிடித்துக் கொள்ளட்டும், நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. செல்லாத வெள்ளைப்பணம் கொண்டு வருபவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை ஏன் தர மறுக்கிறார்கள். சட்டப்பூர்வ பணத்தை எடுப்பதற்கு எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்? ஏடிஎம்- களில் பணம் இல்லாமல் செய்து மக்களை எதற்காக பரிதவிக்க விட வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக மக்களிடம் நுகர்வு மோகத்தைத் தூண்டிவிட்டு, அதை செயல்படுத்த கடனும் தந்து பணத்தை செலவழிக்கத் துாண்டியவர்கள், இப்போது நம் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் எதற்காக பிடுங்கிக் கொள்ள வெண்டும்?

                நாட்டிலுள்ள மொத்தப் பணப் புழக்கத்தில் 86 சதவீத பணமான ரூ.500, 1000-த்தை செல்லாது என்று அறிவித்து ஏறத்தாழ 100 கோடி மக்களின் அன்றாட வாழ்வையே எதற்காக முடக்க வேண்டும்?

                முதலாவது நாட்டிலுள்ள அனைவரையும் வங்கிக்கணக்கு துவக்க வைப்பது, இரண்டாவதாக பண பரிவர்த்தனையற்ற முறைக்கு மாற்ற நிர்ப்பந்திப்பதுதான் அரசின் நோக்கம் என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டார் அருண்ஜெட்லி. ஒரே கல்லில் இரண்டு காய்களை அடிக்கப் பார்க்கிறார்கள். ஒன்று மக்களின் சேமிப்பை முதலாளிகளுக்கு பிடுங்கித் தருவது. மற்றொன்று நாட்டின் 80 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக உள்ள அன் ஆர்க்கனசைடு செக்டார் என்று அழைக்கப்படும் முறைப்படுத்தப்படாத தொழில்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது! கோடிக் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வு முடங்கிக் கிடக்கும்போது, பண பரிவர்த்தனை இல்லாத முறையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்து மக்களும் இந்த நிலைக்கு மாறுவதற்கு மோடி அரசு மக்களுக்கு கொடுக்கும் நெருக்கடிதான் செயற்கையான பணத்தட்டுபாடாகும்.

                கருப்புப் பணம் என்றால் தாள் வடிவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரொக்கம் என்ற மக்களின் பாமரத்தனத்தைத்தான் மோடி தலைமையிலான அரசு இப்போது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர் வங்கிக்கு வந்துள்ள பணத்தின் அளவைக் காட்டி கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை வெற்றி என்று கூப்பாடு போடுகிறது. அவர்கள் கூப்பாடு போடுவது இருக்கட்டும். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை சரியானதுதான்! ஆனால் அதை செயல்படுத்தும் முறைதான் தவறு என்று எதிர்க்கட்சிகள், அறிவுத்துறையினர் மற்றும் புரட்சியாளர்கள் என்று தம்மைக் கருதுபவர்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்கள்.

ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பின் நோக்கமே கருப்பு பண ஒழிப்பிற்கான நடவடிக்கை இல்லை என்கிறபோது இந்நடவடிக்கை வெற்றியா? தோல்வியா? அதை செயல்படுத்தும் முறை சரியா? தவறா? என்ற கேள்விகளுக்கு தேவையே எழாதபோது இதற்கான விவாதங்கள் மக்களை குழப்புவதற்கும், திசை திருப்புவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பதை இவர்கள் புரிந்து செய்கிறார்களா? அல்லது புரியாமல் உளறுகிறார்களா?

வங்கிக்கணக்கில் இல்லாத பணம் அனைத்தும் கருப்புப் பணம் என்றால் மோடிக்கு வெற்றிதான்! அவற்றை தமது கைகளில் வைத்திருந்த மோடியாரின் தாயார் உட்பட அனைவரும் குற்றவாளிகள்தான்!

                நுாறு ரூபாய் கருப்புப் பணத்தில் அரசியல்வாதிகளிடம் ரூ.3.00-ம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடம் ரூ.33.00-ம், பல தரப்பட்ட முதலாளிகளிடம் ரூ.64.00 –ம் இருப்பதாக உலக அளவிலான ஆய்வு ஒன்று சொல்கிறது.

bank deposit

                மோடியாரின் கருப்புப்பண வேட்டையில் இவர்கள் எவரிடமும் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யவில்லை. கருப்புப் பணத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாத நுாறு கோடிக்கும் மேலான மக்கள் நவம்பர் 8ம் தேதி நள்ளிரவிலிருந்து இன்று வரை உயிர் வாழும் உரிமையை கூட இழந்து நிற்கிறோம் என்பதைக்கூட அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியொரு கோர நடவடிக்கையை உலகின் வேறு எந்த நாட்டிலாவது செய்ய முடியுமா என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். ஏற்கனவே, உலகில் பத்து நாடுகளில் கருப்புப் பண ஒழிப்பு என்றபெயரில் நடப்பில் உள்ள பணம் செல்லாது என்று அறிவித்துப் பார்த்தார்கள்.இப்படி அறிவித்த சில நாட்களிலேயே அந்நாடுகளில் பெரும் கலவரங்கள் வெடித்தன, வேறு வழியின்றி தமது நடவடிக்கைக்காக அந்த நாட்டு அரசாங்கங்கள் மக்களிடம் மன்னிப்புக் கோரின, பணம் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றன.

                உலகின் மற்ற நாடுகளில் மக்களை கொடுமை செய்வது இருக்கட்டும். இந்த நாட்டிலேயே பசுவின் மந்தையில் பிறந்ததால் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளையை கொடுமைப்படுத்துவதை அனுமதிக்காது என்கிறது உச்ச நீதிமன்றம். காளையின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த நாட்டில் நமது உரிமைக்கு உத்திரவாதம் தருவது இருக்கட்டும். நமக்காக பரிந்து பேசக்கூட எவருமில்லை!

                உரிமைகளை பெறுவதில் காளைகளுக்கும், நமக்கும் இப்படியொரு வேறுபாடு இருந்தாலும், இருவருக்கும் இடையில் ஒரு வலுவான ஒற்றுமையும் இருக்கத்தான் செய்கிறது. அது தாங்கள் மந்தைகள் என்பது காளைகளுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது என்பதுதான் அது!

                இதுவரை நாம் பார்த்த வகையில் மோடியின் நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்பு இல்லை என்பதை தெரிந்துக் கொண்டோம். இதன் மூலம் கள்ளப்பணமாவது ஒழியுமா? தீவிரவாத செயல்களாவது குறையுமா? இதற்கான பதிலை மத்திய அரசே சொல்லிவிட்டது, நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்தப்பணத்தில் பாதிப்பணம் கள்ளப்பணம் என்றும், இந்த கள்ளப்பணத்தை பாகிஸ்தான் அச்சிட்டு இந்தியவிற்குள் அனுப்புவதாக மத்திய அரசு சொல்கிறது. அதே பாகிஸ்தான் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு இந்தியாவிற்குள் அனுப்புவதற்கு எத்தனை நாட்களாகி விடப் போகிறது? புதிய ரூபாய் நோட்டுகளில் மிகவும் சிக்கலான புடைப்பு தொழிட்நுட்பத்தை இந்திய அரசாங்கம் பயன்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். அந்த புடைப்பு தொழிட்நுட்பம் இந்தியாவில் உள்ள தனிநபர்களுக்கு தெரியவே தெரியாது , தெரிந்து கொள்ளவும் முடியாது என்ற மோடியாரின் வாதத்தை ஒரு வகையில் நாமும் ஏற்றுக்கொள்வதாக வைத்துக் கொள்வோம்! ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு அந்த புடைப்பு தொழிட்நுட்பம் தெரியாது என்ற வாதத்தை மோடியின் ஆவிபிடித்தவர்களால் மட்டும்தான் நம்ப முடியும்.

எனவே கருப்புப்பண ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு என்பதெல்லாம் இந்நடவடிக்கையால் இந்நாட்டில் உயிர்வாழும் உரிமையைக்கூட இழந்துபோன நூறு கோடி மக்களாகிய நம்மை திசை திருப்புவதற்கான தந்திரமே தவிர வேறல்ல. இந்த தந்திரத்தை அவர்கள் இன்று, நேற்றா கையாள்கிறார்கள். கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறார்கள்.

- சூறாவளி