அரசியல் செய்வது என்பது மிக சிரமமான காரியமாக இருக்கலாம்; ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமான காரியமல்ல. 11 பேர் இருந்தால் போதும், நீங்கள் கட்சி ஆரம்பித்துவிடலாம். அப்படி இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1550 கட்சிகளுக்கும் மேல் உள்ளன. இவையெல்லாம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள். அங்கீகாரம் பெறாமல் 200க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் சொல்கின்றது. இது எல்லாம் 2013 ஆம் ஆண்டு கணக்கு. இப்போது இந்த நிலைமையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். இவ்வளவு கட்சிகள் இருந்தாலும் 16 சதவீத கட்சிகள் மட்டுமே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், மற்ற அரசியல் இயக்கங்கள் முழுவதுமாகவோ, பகுதி அளவிலோ எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது கிடையாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காரணம் 1150 கட்சிகள்  வெறும் 1 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருக்கின்றன.

  அரசியல் இயக்கங்கள் ஆரம்பிப்பதிலும் ஓர் அரசியல் உள்ளது. நம்மில் பெரும்பாலான மக்களுக்கு அந்த அரசியல் அவ்வளவாக கண்களுக்குத் தெரிவதில்லை. அவை அரூபமானவையாக இருக்கின்றன. ஒரு கட்சி பெற்ற ஓட்டுக்களை வைத்து அந்தக் கட்சியின் செயல்பாடுகளை நாம் மதிப்பிட முடியாது என்று வைத்துக் கொண்டாலும், ஏன் மக்கள் அந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படத்தான் வேண்டும். இத்தனை ஆயிரம் அரசியல் கட்சிகள் இருந்தாலும், அதில் சில மட்டுமே செயல்படும் அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக  மட்டுமே பயன்படுகின்றன. இங்கே கல்வி வள்ளல்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், சாராய வியாபாரிகள் , கார்ப்ரேட் சாமியார்கள் என அனைவரும் அரசியல் கட்சி ஆரம்பித்து விடுகின்றார்கள். அவர்களிடம் சேரும் கருப்புப் பணத்தை தாங்களோ, தங்களது பினாமிகளோ நடத்தும் கட்சிகளில் முதலீடு செய்கின்றனர். அதன்மூலம் தங்களது பணத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

  அரசியல் கட்சிகள் பெறும் நிதிகள் எப்போதுமே மர்மமானவை. அவை  யாரிடம் இருந்து நிதி பெற்றன, எவ்வளவு நிதி பெற்றன போன்ற தகவல்களை வெளியிடுவதே கிடையாது. இப்படி அரசியல் கட்சிகள் தங்களுக்கு வரும் பெரும் நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன்மூலம் சொத்துக்களையும், நகைகளையும் வாங்குவதாகவும் இத்தகைய கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய நிதி அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மக்களின்  நலன் சார்ந்துதான் இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது கணக்கு வழக்குகளை எப்போதுமே அந்த மக்களுக்குத் தெரியப்படுத்துவது கிடையாது.

 கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை பற்றிய தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. அதன்படி திமுக 158 கோடியே 52 லட்சம் ரூபாயும், அதிமுக 119 கோடியே 24 லட்சம் ரூபாயும், தேமுதிக 21 கோடியே 29 லட்சம் ரூபாயும், பாமக 8 கோடியே 98 லட்சம் ரூபாயும்  நன்கொடையாகப் பெற்றுள்ளன. ஆனால் இந்த நன்கொடைகள் யாரிடம் இருந்து, எவ்வளவு பெறப்பட்டன என்ற தகவல்கள் கிடையாது. தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விவரங்களை யாரிடமும் காட்டுவது கிடையாது. கட்சியின் தொண்டர்கள் தரும் நிதி என்பது இதில் பத்துசதவீதம் கூட அடங்காது. மீதி உள்ள அனைத்தும் பெரும் பணக்காரர்களிடம் இருந்து பெறப்படுகின்றது. இந்தப் பெரும் பணக்காரர்களில் கல்வி வள்ளல்கள், மணல் திருடர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள். சாராய ஆலை அதிபர்கள் , சுற்றுச்சூழலை நாசமாக்கும் பெரும்தொழில் நிறுவன முதலாளிகள் என அனைவரும் அடங்குவர். இவர்கள் தாங்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களுக்கும்  தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் இருந்து தாங்கள் பெறப்போகும் சலுகைகளுக்கும் பெரிய அளவில் நிதியை வாரி வழங்குகின்றனர். அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்ற நிதிக்கு நன்றியுள்ள நாய்களாக நடந்து கொள்கின்றன.

 பெரும் பணக்காரர்கள் அரசியல் கட்சி தொடங்குவது எப்படி ஆச்சரியமான செய்தி இல்லையோ, அதே போல அரசியல்வாதிகள் பெரும்பணக்காரர்களாய் மாறுவதும் ஆச்சரியமான ஒன்றல்ல. சரி, மக்கள் நலன் சார்ந்து இவர்கள் செயல்படுவது கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக செயல்படுகின்றனர். அப்படி செயல்படாமல் போனால் அடுத்த தேர்தலில் அவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை மக்களிடம் இழக்க நேருமே! அதற்காகவேணும் அவர்கள் சில சில்லரை  நன்மைகளைச் செய்கின்றார்கள். ஆனால் அதுகூட வரம்பிற்குட்பட்டதுதான். உலகவங்கி, பன்னாட்டு பெரும்தொழில் நிறுவனங்கள், இந்திய தரகுமுதலாளிகள் போன்றோரின் நலனுக்கு உட்பட்டதுதான்.

 சரி, பெரிய அரசியல் கட்சிகள் தங்களுக்கான நிதி ஆதாரத்தை இது போன்ற கீழ்த்தரமான மனிதர்களிடம் இருந்து முறையற்ற வகையில் நன்கொடை என்ற பெயரில் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் பல சிறிய லெட்டர் பேட் கட்சிகள் என்ன செய்யும்? அவர்களுக்கு  யார் நிதி கொடுப்பார்கள்? அவர்களுக்கும் நிதி என்பது ஒருபோதும் பெரிய பிரச்சினையாக இருப்பதில்லை. அந்தச் சிறிய அரசியல் கட்சிகளின் தன்மைக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் ஏற்ப இந்த நிதி கிடைக்கின்றது. அவை சாதி ரீதியான கட்சிகளாகவும், மத ரீதியான கட்சிகளாகவும், மொழி ரீதியான கட்சிகளாகவும், இன ரீதியான கட்சிகளாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப இந்த நிதி அரசு சாரா தொண்டு நிறுவனங்களாலும், உள்நாட்டு முதலாளிகளாலும், இன்னும் சில சமயங்களில் அரசின் உளவுப்பிரிவு போன்றவற்றாலும் வழங்கப்படுகின்றன.

 மக்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அடையாள அரசியல் செய்வதற்கு இதுபோன்ற லெட்டர்பேட் கட்சிகள் பயன்படுகின்றன. இதன் மூலம் மக்கள் மத்தியில் நிரந்தரமாகப் பிளவை ஏற்படுத்துவதற்கும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் கோபங்களைச் சிதறடிப்பதற்கும் அவை பெரிய அளவில் உதவுகின்றன. பெரிய அரசியல் கட்சிகள் இது போன்ற அடையாள அரசியல் செய்யும் கட்சிகளுடன் எப்போதும் ஓர் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதை நீங்கள் பார்க்க முடியும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தேவர் சாதி அமைப்புகளுடனும், நாடார்சாதி அமைப்புகளுடனும், கவுண்டர் சாதி அமைப்புகளுடனும், வன்னியர் சாதி அமைப்புகளுடனும், இன்னும் பல்வேறு மத ரீதியான அமைப்புகளுடனும் நல்ல தொடர்பில் இருப்பதை நாம் பார்க்கமுடியும். இது ஒரு புறம் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத நூற்றுக்கணக்கான அமைப்புகளின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமான முறையில்தான் பெரும்பாலும் இருக்கின்றன.

  தமிழ்நாட்டளவில் எடுத்துக் கொண்டால், இங்கே திராவிட அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புக்கள், பொதுவுடமை அமைப்புகள், சுற்றுச் சூழல் சார்ந்த அமைப்புக்கள் இன்னும் பல்வேறு குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காக மட்டுமே போராடும் பல அமைப்புகள்  உள்ளன. இதிலேயும் செயல்படும் அமைப்புகள், செயல்படாத அமைப்புகள் என பல உள்ளன. இவற்றில் செயல்படும் அமைப்புகளை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். நாம் தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அதை புறக்கணிக்கும் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டை கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் பாதையில் நின்று சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றின் மூலமே மக்களுக்கான சேவையைச் செய்ய முடியும் என உறுதியாக நம்புபவை தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகள். அவை அரசு என்ற அமைப்பை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவை; அதன் வன்முறைகளைக் கேள்வி கேட்காதவை அல்லது வரம்பிற்குட்பட்டு கேள்வி கேட்பவை. ஆனால் தேர்தல் பாதையைப் புறக்கணிக்கும் அமைப்புகள் சட்டமன்றத்திற்கு வெளியே, நாடாளுமன்றத்திற்கு வெளியே தான் மக்கள் பிரச்சினைக்கான தீர்வு உள்ளது என உறுதியாக நம்புபவை. அவை அரசு எந்திரத்திற்கு எதிராக எப்பொழுதும் போராடத் தயங்காதவை.

  ஆனால் இவைகளில் எத்தனை அமைப்புகள் தாங்கள் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்து களத்தில் இறங்கி செயல்படுகின்றன என்பதுதான் அதன் எதிர்காலத்தையும், மக்களிடம் அதற்கு உள்ள ஆதரவையும் காட்டுவது. இப்போது கடவுள் எதிர்ப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு  போன்ற கொள்கைகளை கடைபிடிக்கும் ஓர் அமைப்பு என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் ஒரு பக்கம் சாதி ஒழிப்பை பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் ராமதாசையும், பாஜக வையும் ஆதரிக்கின்றார்கள் என்றால் அது போன்ற அமைப்புகள் விரைவில் மக்கள் முன் அம்பலப்பட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காணாமல் போகும். ஏனெனில் அது கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது, எதிரானது. பொறுக்கித் தின்பதற்காக மக்களை ஏமாற்றுவது. ஆனால் துரதிஸ்டவசமாக பல அமைப்புகள் அப்படித்தான் உள்ளன.

எடுத்துக்காட்டுக்கு ஒன்றைப் பார்ப்போம்.  “நகரத்தாருக்குரிய அடையாளங்கள் எனச் சிலவற்றை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அவை நேர்மை, ஆழமான பக்தி, சிக்கனம், அறக்கொடை திட்டமிடுதல் ஆகும். இந்த அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமென்றால் நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்திலிருந்து தள்ளி வைத்துவிடவேண்டும்” இப்படி பேசிய ஒருவனை நாம் என்னவென்று சொல்வோம், சாதிவெறி பிடித்த அயோக்கியன் என்று சொல்வோம். சூடு சுரணை உள்ள மார்க்சியவாதியாகவோ, பெரியாரியவாதியாகவோ இருந்தால் ஒரு படி மேலே போய் காறித்துப்புவோம். அதுதான் தான் கொண்ட கொள்கையில் சரியாக இருப்பவனின் செயல். மேலே சொன்ன அந்த கீழ்த்தரமான சாதிவெறி பிடித்த வரிகளுக்கு சொந்தக்காரர் பழ. கருப்பையா ஆவார். 20/03/2011 ‘ஆட்சி வந்தாச்சு’ இதழில் வெளிவந்த கட்டுரையில் இது உள்ளது. இதை சொல்லும் போது பழ.கருப்பையா அதிமுகவின் இலக்கிய அணிப் பொறுப்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

   அதிமுக ஒரு சீரழிந்துபோன கட்சி என்பதால் அதில் உள்ள அடிமைகள் என்ன சொன்னாலும் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் இப்போது அதே பழ.கருப்பையா  திமுகவில் இருக்கின்றார். ஆனால் திமுகவை  சில முற்போக்கு அமைப்புகள் தங்களது பிழைப்புவாதத்திற்காக ஆதரிப்பதால் அவருக்கு ஒரு குறைந்த பட்சம் ஒரு முற்போக்கு முகமூடி தேவைப்படுகின்றது. இந்த இடத்தில் தான் சில மானங்கெட்ட  பொறுக்கித் தின்னும் முற்போக்கு அமைப்புகள் தேவைப்படுகின்றார்கள். எப்படி என்றால் ஊரே காறித்துப்பும் ஒரு செட்டியார் சாதிவெறியனை, சுயமரியாதை திருமணங்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவனை அழைத்துவந்து மேடையேற்றி அவனை முற்போக்காக பேசவைத்து அவனுக்கு ஒரு முற்போக்கு முகமூடியை வழங்குவது. சமீபத்தில் பார்ப்பன கம்யூனிஸ்ட் கட்சி மேடை ஒன்றில் பழ. கருப்பையா தோன்றி “வர்க்க ஒற்றுமைதான் சாதியை ஒழிக்கும்” என்று பேசினார். அப்படி என்றால் மேலே சொன்ன கருத்தை பழ.கருப்பையா மாற்றிக் கொண்டுவிட்டாரா?, அப்படி எங்கேயாவது அவர் சொல்லியிருக்கின்றாரா? நமக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் எப்படி பழ.கருப்பையா ஒரு சாதி எதிர்ப்பு போராளி என்று கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்? இவனை அழைத்துவந்து பேசவைத்தே தான் ஆகவேண்டும் என்ற தேவை ஏன் வந்தது?. இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கட்சி ஆரம்பிப்பதன் நோக்கம் மக்களுக்கானதா இல்லை அந்த மக்களை வைத்து பிழைப்பு நடத்துவதற்காகவா என்பதை இதன் மூலம் கண்டுகொள்ள வேண்டும்.

  ஒரு பெரியாரிய அமைப்பு என்றால் நாம் மேற்கூறியது போல அது மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரங்களையும், பெண்ணுரிமை, மத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்துதான் ஆகவேண்டும். அதே சமயம் இந்த கொள்கைகளுக்கு எதிரான சக்திகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசியல் களத்தில் இருந்து அவர்களை விரட்டி அடிக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களுடன் கள்ள உறவை வைத்திருந்தோம் என்றால் நாம் துரோகிகளாக தான் மக்கள் முன் அடையாளப்படுத்தப்படுவோம். அரசியலில் நேர்மையைக் கடைபிடித்தல் என்பது ஒரு அடிப்படை தர்மம்.

 தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, அதைப் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி அவை பெரும்பாலும் தொடங்கப்பட்டதன் நோக்கமே பொறுக்கித் தின்பதற்காகதான் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துகொண்டு ஆரம்பிக்கப்பட்டவைதான். ஆனால் அதை மக்களை உணரவிடாமல் அவை செய்துவிடுகின்றன. கிரிக்கெட்டில் மேச் பிக்சிங்  நடந்திருப்பது தெரியாத சாமானிய மக்கள் அதை ஆராவரித்து கைத்தட்டி மகிழ்வதைப் போன்றதுதான் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் செயல்பாடு. அவர்கள் தங்களை ஏமாற்றுகின்றார்கள், தங்களது வாழ்வாதாரத்தை அழிப்பதற்காகத்தான் அவர்கள் அரசியல் கட்சி நடத்துகின்றார்கள் என்பதை அந்தச் சாமானிய மக்கள் உணர்வதில்லை. அவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், லெனின் என அனைவரையும் அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். போலி எது, நிஜம் எது என பிரித்து உணர முடியாத வகையில் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

 அரசியல் இயக்கங்களின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. சரியான கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து சரியான அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் இதன் உட்பொருள். அதற்கு நீங்கள் தொடர்ச்சியாக அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எவன் சாதி எதிர்ப்பு பேசிவிட்டுச் சாதிவெறியர்களுடனும், மத எதிர்ப்புப் பேசிவிட்டு மதவெறியர்களுடனும், கைகோர்க்கின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதுபோன்ற தீய சக்திகளை அடையாளம் கண்டு துரத்தி அடிக்க வேண்டும். உங்களது போராட்ட உணர்வையும், புரட்சிகர உணர்வையும் மையப்படுத்தி, அதைவைத்து சாதிவெறி சக்திகளையும், மதவெறி சக்திகளையும் புனிதப்படுத்துவதற்கென்றே சில இயக்கங்கள் இங்கே வலைவிரித்து காத்திருக்கின்றன. உங்களுக்கே தெரியாமல் நீங்கள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருப்பீர்கள். அதை உணரும்போது உங்களது தலைவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாய், மாஃபியாக்களாய் மாறியிருப்பார்கள். எனவே தோழர்களே உங்களுக்கான அரசியல் அமைப்பு எது என்பதை  நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உற்று நோக்குங்கள், கூர்ந்து கவனியுங்கள், பின்பு தேர்ந்தெடுங்கள். தவறு செய்தால் தலைவனாக இருந்தாலும் தண்டியுங்கள். ஒரு நேர்மையான மக்கள் நலன் சார்ந்து இயங்கும் அமைப்பை அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களிடமும் தான் இருக்கின்றது.

-          செ.கார்கி