சிறார் நீதிச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமல் சிறுவர்கள் சமூக விரோதிகள் ஆவதைத் தடுத்து விட முடியாது.  இதைச் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சமூக விரோதி ஒருவனை அரசே வளர்த்து விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.  

juvenile‘இந்த இடம் வேண்டாம், என்னைப் பெரிய ஜெயிலில் வேண்டுமானாலும் அடைத்து விடுங்கள்’ என்று அழுகிறான் ஹரிபாஸ்கர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).  அவனுடைய பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.  அந்தத் தாயின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைத் தவிர வேறெதுவும் இல்லை.  கைகளில் கண்ணாடி வளையல்கள்.  அப்பா கிழிந்த சட்டை, நைந்து போன லுங்கியுடன் வந்து நிற்கிறார்.  

‘உங்க பையன் ஹோம்ல இருந்து தப்பிச்சுப் போயிட்டான்’ னு சொன்னாங்க. அதான் எங்க போனான்னு தெரியலயே’ என்று ஓடோடி வந்தேன். நல்ல வேளை போலீஸ் பிடிச்சுக் கொண்டு வந்துட்டாங்க என்கிறார் அவர், கலங்கிய கண்களுடன்.  நிற்குமிடம் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி.   

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி என்பது சிறைச்சாலை அல்ல.  சின்ன வயதிலேயே தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களைத் திருத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் அமைப்பு.  செல்போன் திருட்டு, லேப்டாப் திருட்டு, சைக்கிள் திருட்டு என்பன போன்ற சின்னச் சின்ன குற்றங்களில் இருந்து கொலைக் குற்றம் வரை செய்ததாகப் பிடிபடும் 8 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களைகுற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவர்களை இங்கே தங்க வைப்பார்கள். போலீஸ் விசாரணை, வழக்கு, வாய்தா  என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் செங்கல்பட்டில் உள்ள சிறார் முகாமில் சேர்த்து விடுவார்கள்.  ஆக, குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பு சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் தான் இந்தப் பள்ளி.  ஆனால், இங்குள்ள சிறுவர்களின் பெரும்பாலான பெற்றோர்களைப் பொறுத்தவரையில் தன் மகன் இருக்குமிடம் சிறுவர் ஜெயில்.  இங்கு அடைக்கப்பட்டாலே மகன் குற்றவாளி தான்.  இது தான் அவர்களுக்கு இருக்கும் புரிதல்.  தன் மகன் / மகள் மீது என்னென்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, தண்டனைச் சட்டம் என்ன சொல்கிறது, அதற்கு நீதிமன்றத்தில் வாதாட முடியுமா – இது எதுவுமே அவர்களுக்குத் தெரியாது.  அவர்களைப் பொறுத்த வரையில் ‘தன் குழந்தையை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிருச்சு’ அவ்வளவு தான்!

ஹரிபாஸ்கர் மட்டுமல்ல, ஹரிபாஸ்கருடன் 32 சிறுவர்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள்.  33 பேரில் 32 பேரை உடனடியாக போலீஸ் பிடித்து விட்டது.  

குற்றங்களைச் செய்திருப்பவர்கள் பெரியவர்கள் என்றால் நேரடியாகப் போலீஸ் காவலில் வைக்கலாம்.  இங்கு, குற்றங்கள் செய்திருப்பவர்கள் சிறுவர்கள்.  அதிலும் பெரும்பாலும் சின்னச் சின்ன திருட்டு போன்ற வழக்குகள் தாம்!  இவர்களைச் சிறையில் வைப்பது சரியாகாது என்பதற்காகத் தான் இது போன்ற சீர்திருத்தப்பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.  இந்தச் சிறுவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள் என்பதற்காகத் தான் சீர்திருத்தப்பள்ளிகள் காவல் துறை வசம் இல்லாமல், சமூகநலத்துறையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன.  

சரி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை கெல்லீஸ் சீர்திருத்தப் பள்ளியில் அந்தச் சிறுவர்களை என்ன மாதிரி நடத்துவார்கள்?   இங்குள்ள சிறுவர்களின் குடும்பப் பின்னணி விசாரிக்கப்படும்.  செய்த சின்ன தப்புக்காக அவர்கள் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, சீர்திருத்தப்பள்ளிக்குள்ளேயே மன நல ஆலோசகர்கள் இருப்பார்கள்.   சிறுவர்கள் செய்த தவறு, அதற்குண்டான பின்னணி, அவர்களுடைய வயது ஆகியவற்றுக்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.  இப்படியெல்லாம் நினைத்தீர்கள் என்றால், நீங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று அர்த்தம்.  தயவு செய்து அந்தக் கற்பனைக் கோட்டை அழித்து விடுங்கள். 

பேர் மட்டும் தான் சீர்திருத்தப் பள்ளி!  கொஞ்சம் காசு திருடியவரில் இருந்து கொலை செய்தவர் வரைக்கும் எல்லாச் சிறுவர்கள் எல்லோரையும் ஒன்றாக அடைத்து விடுவார்கள்!  அவ்வளவு தான்!  ஜெயிலில் பெரிய கைதிகளுடன் இருப்பதற்குப் பதிலாக, இங்குப் பதின்ம வயதை எட்டிய சின்ன கைதிகளாக இருப்பார்கள்.  சிறைச்சாலைக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கும் வேறெந்த வித்தியாசமும் கிடையாது.  

அதிலும் இங்கிருக்கும் சிறுவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை வகுப்பைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுடைய பெற்றோருக்குத் தன் மகனுக்கோ மகளுக்கோ தேவையான சட்ட உதவியை எப்படிப் பெறுவது என்று கூடத் தெரியாது.  சும்மாவே நம்முடைய நீதிமன்றங்களில் வழக்குகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.  அதிலும் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுடைய வழக்குகள் என்றால் அவை முடிவுக்கு வருவதற்குள் வருடக் கணக்கில் ஆகிவிடும்.  வழக்கு முடிவதற்குள் சின்ன தப்புக்காக உள்ளே போன சிறுவன், உள்ளே இதே போல் வருடக் கணக்கில் இருக்கும் பிற சிறுவர்களுடன் இணைந்து பெரிய திருடன் ஆவதற்கான அத்தனை தகுதிகளுடன் வெளியே வருவான்.  பிறகென்ன – அரசின் அலட்சியத்தால் வருங்கால சமூக  விரோதி ஒருவர் ரெடி!  

குற்றம் ஏதும் செய்யாத மாணவர்கள் படிக்கும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளிலேயே முதல் ஆண்டு மாணவர்களை ‘ராகிங்’ செய்வது என்பது எழுதப் படாத விதியாக இருக்கிறது.  சீர்திருத்தப்பள்ளி மட்டும் ‘ராகிங்’கிற்கு விதிவிலக்காகி விடுமா என்ன?  சின்னத் தப்புக்காக உள்ளே நுழையும் சிறுவர்களின் பாக்கெட் மணியை சீனியர் சிறுவர்கள் வாங்கிக் கொண்டு விடுவது, பீடி, சிகரெட் வாங்கித் தரச் சொல்வது, குடிக்கச் சொல்வது, எனப் பல்வேறு பிரச்சினைகளைச் சிறுவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.  சீனியர் மாணவர்களை மீறி நடந்து கொண்டால் டியூப் லைட்டால் அடிப்பது போன்ற கொடூர தண்டனைகள்!  

சின்ன வயதிலேயே சமூகத்தில் குற்றவாளிப் பட்டம், உள்ளே வந்தால் சீனியர் சிறுவர்களின் தவறான நடவடிக்கைகள், தண்டனைகள் என்று மனம் வெதும்பி ‘எப்படியாவது அங்கிருந்து தப்பி அப்பா அம்மா இருக்கும் இடத்தைப் பார்த்து ஓடி விட வேண்டும்’ என்று நினைக்கும் சிறுவர்களும் இதில் அதிகம்.  இப்படித் தான் இப்போதும் நடந்திருக்கிறது.  உள்ளே இருந்த சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையைப் பயன்படுத்தி, 33 சிறுவர்கள் இல்லத்தை விட்டுத் தப்பி ஓடியிருக்கிறார்கள்.  சிறுவர்கள் தப்பி ஓடுவதும் பின்னர் விரட்டிப் போய்ப் பிடிப்பதும் முதல் முறையல்ல.  கடந்த நவம்பர் மாதம் 8 பேர், அக்டோபரில் 17 பேர், ஜுலையில் 14 பேர் எனக்  கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஏழு முறை இப்படிச் சிறுவர்கள் தப்பிப்பது நடந்திருக்கிறது.  

மொத்தமுள்ள 73 சிறுவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆலோசகர்.  பள்ளி மாணவர்களுக்கே 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் (20:1) விகிதத்தை வலியுறுத்தும் நிலையில், சீர்திருத்தப் பள்ளியில் 73 சிறுவர்களுக்கு ஒரே ஒரு ஆலோசகர் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று.  73 சிறுவர்களில் ஆலோசகரால் யாரிடம் பேச முடியும்?  யாரைத் திருத்த நடவடிக்கை எடுக்க முடியும்?  

8 வயதில் குற்றம் செய்யும் ஒரு சிறுவனுக்கு அவன் செய்வது குற்றம் என்பதையே இன்னொருவர் உணர்த்தித் தான் புரிய வைக்க வேண்டும்.  73 பேரை வைத்துக் கொண்டு இதை எல்லாம் எப்படிச் செய்வது?  சீர்திருத்தப் பள்ளி என்பது ஏதோ அரசு நடத்தும் விடுதி போல இயங்கிக் கொண்டிருக்கிறது.  புரிகிறதோ, புரியவில்லையோ சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்பதற்காகத் திருக்குறள் வகுப்புகள் மட்டும் விடாமல் நடத்தப்படுகின்றன.  

kid in cuffs

ஆலோசனை கொடுக்கிறோம் என்கிற பெயரில் கல்லூரி மாணவர்கள் சிலரை வைத்து வகுப்புகள் எடுக்கிறார்கள்.  அவர்களும் கல்லூரி மாணவர் தரத்திலேயே வகுப்புகள் எடுப்பதால் பல நேரங்களில் அங்கிருக்கும் சிறுவர்களுக்கு அது புரிவதே இல்லை.  

என்ன செய்ய வேண்டும் அரசு?

அடுத்த தலைமுறை கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத் தான் இந்தச் சீர்திருத்தப்பள்ளிகளும் கூர்நோக்கு இல்லங்களும்.  எனவே, அந்த நோக்கம் சரிவர நிறைவேற அரசு என்ன செய்ய வேண்டும் என இத்துறை வல்லுநர்கள் நினைக்கிறார்கள்?  

இப்படிச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.  வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கை என்பதால் அரசு இதில் மெத்தனம் காட்டாமல் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும்.  சமூகப் பாதுகாப்பு என்பதும் சமூக நலம் என்பதும் அரசின் கைகளில் இருக்கின்றன.  சிறார்களைத் திருத்தும் சமூகப் பாதுகாப்பா, மெத்தனமாக இருந்து சமூக விரோதிகளா – எதைக் கையில் எடுப்பது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.  

- முத்துக்குட்டி